வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வட்டி குறைப்பும் எதிர்பார்ப்பும்

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்கு இணை ரிசர்வ் வங்கிதான்

News image
Updated On :25 ஜனவரி 2015, 10:26 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்கு இணை ரிசர்வ் வங்கிதான் என்று கூறினால் அது மிகையாகாது. கடந்த இருபது மாதங்களாக, பொது மக்கள், மத்திய நிதி அமைச்சர், தொழில் கூட்டமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த "வட்டி குறைப்பு அறிவிப்பு' ஜனவரி 15-ஆம் தேதி (நாட்டின் பல பாகங்களில் அன்று விடுமுறை நாள்!) ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.

 ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) கால் சதவீத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது.

 வழக்கமாக நிதி மற்றும் கடன் கொள்கை அறிவிக்கப்படும்போதுதான் குறுகிய கால கடனுக்கான வட்டி மாற்றம் குறித்தும் அறிவிக்கப்படும். வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வு நடைபெறவிருக்கும் நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது பலருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதே உண்மை.

 இதனையடுத்து, குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, 2014 டிசம்பர் மற்றும் 2015 ஜனவரியில் சில குறியீடுகள் வெளியாயின. நவம்பரில் தொழிற்சாலை உற்பத்தி 3.8 சதவீதம் உயர்ந்தது.

 சில்லறை விலை அடிப்படையில் நுகர்வோர் விலை குறியீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) டிசம்பர் மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்திருந்தது. இது நவம்பர் மாதத்தில் 4.38 சதவீதமாக மட்டுமே இருந்தது. பணவீக்கம் சரிந்தது.

 ஆக, தொழிற்சாலை உற்பத்தி அதிகரிப்பு, பண வீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக சரிவடைந்தது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சாதகமாக நிலைபெற்றது போன்ற பல குறியீடுகள் வெளிவந்தன.

 வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வட்டி குறைப்பு நிச்சயமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது என்பது உண்மையே. ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு படி மேலே சென்று அல்லது ஒரு படி முன்னால் வந்து வட்டி குறைப்பை 18 நாள்கள் முன்கூட்டியே அறிவித்திருக்கிறார் என்பதுதான் சிறப்பு.

 இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில், இந்திய பங்குச் சந்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி கண்டது என்பது கவனிக்கத்தக்கது. வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்ட ஜனவரி 15-ஆம் தேதி மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 729 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 259 புள்ளிகளும் அதிகரித்தன.

 கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த ஆளுநர் ரகுராம் ராஜன் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை இங்கு நினைவுகூர வேண்டும்.

 "இந்த டிசம்பர் மாதத்திலும் பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்குமேயானால், புத்தாண்டின் தொடக்கத்திலேயே கூட வட்டி குறைப்பு நிகழ வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

அவர் சொன்னதைச் செய்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

 ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆன பிறகு அறிவிக்கப்பட்ட முதலாவது வட்டி குறைப்பு அறிவிப்பு இது!

 தொழில் - வர்த்தகத் துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த வட்டி குறைப்புக் கோரிக்கையை இப்போது ரிசர்வ் வங்கி நிறைவேற்றியுள்ள நிலையில், மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்திட தன் பங்குக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்திட வேண்டும் என்றும், அதைப் பொருத்துதான், எதிர்காலத்தில் வட்டி குறைப்பு மேலும் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

 மீண்டும் பண வீக்கம் தலைதூக்காமல் கண்காணித்தல்; நிதிப் பற்றாக்குறையை, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 4.1 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துதல் ஆகியவை அவற்றில் தலையாயவை எனலாம்.

இவை தவிர, தொழில்துறை விரிவாக்கத்துக்கு இன்றியமையாத அளிப்புகள் (சப்ளை சார்ந்தவை), மின் உற்பத்தி மேம்பாடு, நிலம் கையகப்படுத்தும் வழிமுறை, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, நிலுவையில் உள்ள உற்பத்தித் திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்குதல் ஆகியவையும் கவனிக்கப்பட வேண்டும்.

 வரி வசூலித்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாத நிலையில், பிப்ரவரியில் நடைபெற உள்ள டெலிகாம் அலைக்கற்றை ஏலம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

 பிப்ரவரி 28-ஆம் தேதி வர உள்ள புதிய பட்ஜெட்டில் அரசின் புதிய கொள்கைகள் பற்றிய அறிவிப்புகள் மட்டுமல்லாமல், நிதி நிலையை நிலைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்படும்.

 இந்நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள கால் சதவீத வட்டி குறைப்பு மிகக் குறைவுதான் என்றாலும் கூட, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புதிய திருப்பமாக இது அமைந்துள்ளது என்கிற வகையில் இது ஒரு நல்ல செய்தியே.

 பெரும் தொழில் நிறுவனங்கள், இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்தி, தொழில் விரிவாக்கத்துக்கும், புதிய தொழில் உருவாக்கத்துக்கும் தங்கள் பங்குக்கு சுய முயற்சியில் சொந்த முதலீடுகளைத் திரட்ட முற்பட வேண்டும்.

 இது ஒரு புறம் இருக்க, இந்த வட்டி குறைப்பு அறிவிப்பு, வீட்டுக் கடன் பெற்றுள்ள, இனி பெறுவதற்குத் திட்டமிட்டுள்ள மத்தியதர மக்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?

 வீட்டுக் கடனுக்கான வட்டி நிச்சயமாகக் குறையும். ஏற்கெனவே பல வங்கிகள் வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டன. புதிதாக வீட்டுக் கடன் வாங்க இருப்பவர்கள் தவிர, ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களில் ஒருசாராருக்கும் வட்டி குறையும். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தபட்ச அடிப்படை வட்டி (ஆஹள்ங் தஹற்ங்) என்ற ஒன்று உள்ளது. இது பணம் திரட்டுவதற்கு வங்கிகள் தரவேண்டிய வட்டி. நிர்வாகச் செலவு மற்றும் தங்கள் லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் "குறைந்தபட்ச அடிப்படை வட்டி' நிர்ணயிக்கப்படுகிறது. எல்லா வங்கிகளும், ஒரே வகை கடன் வாங்கும் வாடிக்கையாளர்களிடையே ஒரேவித வட்டி வசூலிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

 வீட்டுக் கடனுக்கான வட்டி, இந்த "குறைந்தபட்ச அடிப்படை வட்டி'யை விட சற்றே அதிகமாக இருக்கும். எனவே, எந்த அளவு "குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம்' குறைகிறதோ அந்த அளவு வீட்டுக் கடனுக்கான வட்டியும் குறையும். புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தவிர, ஏற்கெனவே "மாறும் தன்மை உடைய வட்டி விகித'த்தில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும் வட்டி விகிதம் குறையும்.

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறைந்ததால், நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு, வட்டி குறைய வாய்ப்பில்லை.

 2015-ஆம் ஆண்டில் வட்டி மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது 7.75 சதவீதமாகக் குறைந்துள்ள வட்டி விகிதம், மேலும் குறைந்து 7 சதவீதம் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

எனவே, புதிதாக வீட்டுக்கடன் பெறுவதற்குத் திட்டமிட்டிருப்பவர்கள், சில மாதங்கள் பொறுத்திருந்தால், அந்தப் பொறுமை அவர்களுக்கு நன்மை பயக்கும். ஆம், அவர்கள் கணிசமான அளவு வட்டிச் செலவை மிச்சப்படுத்தலாம்.

 வட்டி விகிதத்தில், ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் இடையே உள்ள  வித்தியாசத்தைக் கருத்தில்கொண்டு, குறைந்த வட்டி வசூலிக்கும் வங்கிக்கு தங்கள் கடனை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட யோசனை பொருந்தும்.

 தொழில் - வர்த்தக சம்மேளனங்கள், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம், ஆடை ஏற்றுமதியாளர்கள் மேம்பாட்டுக் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் ரிசர்வ் வங்கியின் "வட்டி குறைப்பு' அறிவிப்பை வரவேற்றுள்ளன.

 இந்த வட்டி குறைப்பால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நம்ப முடியாத சோகம். எப்போதெல்லாம் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதமும் குறைகிறது.

 ஏற்கெனவே, பல வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டியை கால் சதவிகிதம் முதல் அரை சதவிகிதம் வரை குறைத்துள்ளன. இதனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கும் வட்டியை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களும், ஓய்வூதியம் பெறுபவர்களும், இல்லத்தரசிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

 சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதிய அளவுக்கு இல்லாத நம் நாட்டில், மூத்த குடி மக்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், இல்லத்தரசிகளின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்ள, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சிந்தித்துத் திட்டமிட வேண்டிய தருணம் இது.

 வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இதற்கான வழிமுறைகள் அறிவிப்பட்டால், சிறப்பாக இருக்கும்.

 அதேநேரத்தில், தொழிற்சாலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் சாதகமாக, பிப்ரவரி 3-ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதி மற்றும் கடன் கொள்கையில், குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை மேலும் கால் சதவிகிதம் முதல் அரை சதவிகிதம் வரை கட்டாயம் குறைத்திட வேண்டும் என்பதே எல்லோரது புதிய எதிர்பார்ப்பும் ஆகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.