பெற்றால்தான் பிள்ளையா?
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட குழலினும்,


"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட குழலினும், யாழினும் இனிய மழலைச் சொல்லைக் கேட்க, ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்குவோர் பலர்.
திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்தக் காலத்தில் பெரும்பாலான தம்பதியர் ஜோதிடரை நாடுவது, பரிகாரம் செய்வது, சஷ்டி விரதம் இருப்பது, அரச மரத்தைச் சுற்றுவது, கோயில் கோயிலாக வலம் வருவது போன்றவற்றிலேயே நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
மகப்பேறின்மை சம்பந்தமாக மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் உண்டாக உண்டாக, குழந்தைக்காக ஏங்கும் தம்பதியர் நவீன மருத்துவ முறைகளை முயற்சி செய்து பார்க்க ஆரம்பித்தனர். அதில் பலர் வெற்றியும் காண்கின்றனர்.
ஆனால், இப்படி எல்லாவிதமான முயற்சிகளும் பலிக்கவில்லை என்ற நிலையில், தங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையை, ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதன் மூலம் சில தம்பதியர் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
தங்களுக்குப் பிறக்காத ஒரு குழந்தையைத் தங்கள் குழந்தையாக "பாவித்து' வளர்ப்பது என்பது நமது புராண, இதிகாசக் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. கிருஷ்ணர், கர்ணன், ஆண்டாள், சகுந்தலை, சீதை போன்றவர்கள் பெற்றவர்கள் அல்லாது மற்றவர்களால் வளர்க்கப்பட்டவர்களே.
நமது நாட்டில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர், குறிப்பாக ஹிந்துக்கள் தங்கள் குலம் தழைக்க வேண்டும். தங்கள் சொத்துக்கு வாரிசு வேண்டும். தங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய பிள்ளை வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காகவே பெரும்பாலும் தத்தெடுத்தார்கள்.
அப்படி தத்தெடுத்தவர்கள், ஆண் குழந்தையையே, அதுவும் தங்கள் உறவு வட்டாரத்திலிருந்தேதான் தத்தெடுப்பார்கள். ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க சமூக மாற்றம், குழந்தை இல்லாத பல தம்பதியர், பெற்றவர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை விரும்பி தத்தெடுக்க ஆரம்பித்துள்ளதாகும்.
இப்படி இவர்கள் ஊர், பெயர், குலம், கோத்திரம் தெரியாத ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து குழந்தைப் பாசமே மேலோங்கி நிற்கிறது.
மேலும், இப்படி ஆதரவற்ற ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதில், தங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறுவதுடன், ஆதரவற்ற குழந்தைக்கு வாழ்வளிக்கிறோம் என்ற உயர்ந்த லட்சியமும் நிறைவேறுகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்வளிக்கும் இத்தகைய தத்தெடுப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உலகெங்கிலும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது.
தத்தெடுப்பது சம்பந்தமாக நமது நாட்டில் தற்சமயம் மூன்று சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை, 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஹிந்து பராமரிப்பு மற்றும் தத்தெடுப்புச் சட்டம் (Hindu Maintenance and Adoption Act, 1956), 1890-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் குழந்தைகள் சட்டம் (The Guardians and Wards Act of 1890), 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு, 2006-ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட சிறார் நீதி (கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (பட்ங் ஒன்ஸ்ங்ய்ண்ப்ங் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் (The Juvenile Justice (Care and Protection) Act 2000).
ஹிந்து பராமரிப்பு மற்றும் தத்தெடுப்புச் சட்டத்தின் கீழ் ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண, புத்த மதத்தைச் சார்ந்த திருமணம் ஆன தம்பதியர் அல்லது தனியாக வாழும் ஆணோ, பெண்ணோ குழந்தையைத் தத்தெடுக்கலாம். சிறார் நீதி (கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் அமலுக்கு வரும் வரையில், ஹிந்துக்கள் அல்லாதவர்கள், அதாவது இஸ்லாமியர், கிறிஸ்தவர், பார்ஸி வகுப்பைச் சார்ந்தவர்கள் 1890-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் குழந்தைகள் சட்டத்தின் கீழ் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.
குழந்தை 18 வயதை அடையும் வரையில் பாதுகாவலர்களாக மட்டுமே இவர்கள் இருக்க முடியும். சட்ட ரீதியாக பெற்றோர்களாக முடியாது. அக்குழந்தைக்கு சட்ட ரீதியான உரிமைகளும் கிடையாது.
மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஓரளவு மாற்றியமைத்து, ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் வெறும் பாதுகாவலர்களாக மட்டும் அல்லாமல் பெற்றோர்களுக்கான உரிமைகளையும் பெற வழிசெய்யும் வகையில், 2006-ஆம் ஆண்டு சிறார் நீதி (கவனிப்பு - பாதுகாப்பு) சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தில்லியில் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வழிதுறை ஆணையம் (CARA-Central Adoption Resource Authority), குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான வழிமுறைகளை நிர்ணயித்து, உள்நாட்டு, வெளிநாட்டு தத்தெடுப்புகளைக் கண்காணிக்கிறது.
மத்திய அமைச்சகத்தின் கீழ் சுயாட்சி உரிமையுடன் செயல் படும் இந்த ஆணையம், எல்லா மாநில தத்தெடுப்பு வழிமுறை நிறுவனங்களையும் (State Adoption Resource Agency), சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும் இணைக்கும் ஓர் அமைப்பு.
இந்த மத்திய ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து மட்டுமே, புறக்கணிக்கப்பட்ட அல்லது ஆதரவற்ற குழந்தையை சட்ட ரீதியாக தத்தெடுத்துக் கொள்ள முடியும். மத்திய தத்தெடுப்பு வழிமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சில, உள்நாட்டுக்குள் மட்டுமல்லாது வெளிநாட்டிலிருந்து வரும் தேவைகளையும் கவனித்துக் கொள்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.
ஆதரவற்ற குழந்தை இல்லங்கள், குழந்தை கவனிப்பு அமைப்புகளை (Child Care Institutions) வந்தடையும், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே இந்த மத்திய தத்தெடுப்பு வழிமுறை ஆணையத்தின் குறிக்கோள்.
நமது நாட்டில் பிறந்த குழந்தை, நமது கலாசாரத்தில் வாழ வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு, உள்நாட்டுத் தத்தெடுப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என்ற வரிசையில் தத்தெடுப்புக்கு குழந்தைகள் கொடுக்கப்படுகின்றன.
அண்மைக்காலம் வரையில், நமது நாட்டில் தத்தெடுப்பவர்கள் ஆண் குழந்தைகளையே விரும்பினார்கள். அதன் காரணமாக ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்பொழுது பெண் குழந்தைகளை விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும், நமது நாட்டில் பொதுவாக யாருமே குறைபாடுள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருவதில்லை. குறைபாடுள்ள குழந்தைகளை வெளிநாட்டினர் விரும்பி தத்தெடுக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே தங்களுக்கென்று குழந்தைகள் இருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதில் நிறைவு காண்கிறார்கள் பல வெளிநாட்டினர். இந்தியாவிலும் இந்த மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.
திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கையில்லை என்று திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் (Living together) தம்பதியர் நமது நாட்டில் சட்டப்படி தத்தெடுக்க முடியாது.
ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகத் தனியாக வாழும் ஆணோ, பெண்ணோ குழந்தையைத் தத்தெடுக்
கலாம்.
தனியாக வாழும் ஆண்களுக்கு பெண் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கிடையாது. அவர்கள் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க முடியும். ஒரு குழந்தையை வளர்க்கும் அனுபவத்தைத் தாங்களும் பெற வேண்டும் என்று தனியாக வாழும் இவர்கள் நினைக்கிறார்கள்.
தத்தெடுக்கும் குழந்தை தங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பார்கள் என்றும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குவார்கள் என்றும் இவர்கள் எதிர்பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
தனியாக வாழும் ஆண்கள் தத்தெடுப்பது மிக அபூர்வம். முன்னாள் உலக அழகியும், திரைப்பட நடிகையுமான சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பலருக்கு இவர் முன்னுதாரணமாக விளங்குகிறார்.
மத்திய தத்தெடுப்பு வழிமுறை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த ஐந்தாண்டுகளில் 26,295 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் 2,032 குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுத்துள்ளனர். அமெரிக்காவிலிருந்துதான் அதிகமான பேர் தத்தெடுக்க இந்தியாவுக்கு வருகிறார்கள்.
ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் வரையில் தத்தெடுப்புக்கு வழங்க வேண்டும் என்றும், செவ்வனே செயல்படாத தத்தெடுப்பு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி அண்மையில் கூறியுள்ளார்.
ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லங்களில் மறுவாழ்வு கிடைப்பதற்காகக் காத்திருந்தும், தத்தெடுக்க விரும்புபவர்கள் காத்திருந்தும், தத்தெடுப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் அதன் வழிமுறைகளிலுள்ள சிக்கல்களும், தாமதங்களுமே. தத்தெடுப்பதை எளிமையாக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மைக்காலம் வரையில், நமது நாட்டில்
தத்தெடுப்பவர்கள் ஆண் குழந்தைகளையே விரும்பினார்கள். அதன் காரணமாக, ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால்,
தற்பொழுது பெண் குழந்தைகளை விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...