மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புவிசார் குறியீடு பலவிதம்

திருப்பதி லட்டுக்கும் ஹைதராபாத் ஹலீம் பிரியாணிக்கும் என்ன சம்பந்தம்? மதுரை மல்லிகைக்கும் குண்டூர் மிளகாய்க்கும் என்ன சம்பந்தம்?

News image
Updated On :23 மார்ச் 2015, 7:06 pm

 பழ வகையோ, பட்டு வகையோ, மிளகாய் வகையோ,
 மல்லி வகையோ அழியாமல் காக்கவேண்டும்.
 கைத்திறன் சம்பந்தப்பட்டது என்றால் அதற்கு
 உரிய ஊக்கம் அளிக்க வேண்டும். நிலத்தோடு
 விளைபொருள் தொடர்பு உள்ளது என்றால்
 அந்த நிலம் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

திருப்பதி லட்டுக்கும் ஹைதராபாத் ஹலீம் பிரியாணிக்கும் என்ன சம்பந்தம்? மதுரை மல்லிகைக்கும் குண்டூர் மிளகாய்க்கும் என்ன சம்பந்தம்? தொடர்பு இருக்கிறது - இவை நான்கும் பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீடுகள் (Geographical Indications). அதாவது, பதிப்புரிமை, காப்புரிமை போல இதுவும் அறிவுசார் சொத்தில் ஒரு வகை.
 புவிசார் குறியீடுகளின் பதிவு பாதுகாப்பு குறித்து ஒரு சட்டம் இருக்கிறது (Geographical Indications of Goods (Registration and Protection) Act 1999). நம் நாட்டின் புவிசார் குறியீடுகள் பல பதிவு செய்யப்படாமலும் பாதுகாக்கப்படாமலும் தொலைந்து போய்விட்டன.
 இயற்கையான பொருளோ, விவசாயப் பொருளோ, உற்பத்திப் பொருளோ ஒரு பிரதேசம், ஒரு பகுதி, ஒரு நிலப்பரப்பில் தோன்றி அல்லது உற்பத்தி செய்யப்பட்டு அந்த இடத்திற்கே சொந்தமான குணத்தையோ, பெயரையோ சிறப்பம்சத்தையோ குறிப்பது எதுவோ அது தான் புவிசார் குறியீடு.
 பாரதத்தை ஒரு சுற்று வந்தோமானால் எத்தனையோ புவிசார் குறியீடுகள். நம் கைத்தறிகள், கைவினைப் பொருள்கள், பழ வகைகள் எல்லாமே இதில் அடங்கும்.
 கிழக்கில் இருந்து துவங்குவோமா? டார்ஜிலிங் தேநீர் பருகி பின் நாகா மிளகாய், மூகா பட்டு தாண்டி வங்கக் கடலோரமாக தெற்கு நோக்கி பயணம் செய்தோமானால் ஒடிசா இகட் புடவை, பிறகு குண்டூர் மிளகாய், கத்வால் புடவை என்று வந்து, தஞ்சாவூர் ஓவியம், பவானி ஜமக்காளம் இவைகளின் கைநேர்த்தியைக் கண்டு, இப்பொழுது மேற்கு திரும்பி அரண்முலா கண்ணாடியில் முகம் பார்த்து, மைசூர் ஊதுவத்தியின் நறுமணத்தை முகர்ந்து வடக்கு நோக்கிச் சென்றால் சோலாப்பூர் போர்வை, சூரத் சரிகை, பிறகு கோட்டா சேலை என்று காஷ்மீரின் பச்மீனா சால்வையுடன் முடிப்போம். இன்னும் எத்தனை எத்தனையோ.
 பதிவு செய்யப்பட்ட குறியீடுகளில் சிலவற்றை மட்டும் தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.. மாம்பழத்தில் ஹிம்ஸôகர், அப்பேமிதி போன்ற பல, பட்டு வகைகளில், காஞ்சிபுரம், தர்மாவரம் பாகல்பூர், சம்பா, சேலம் வெண்பட்டு, ஆரணி, பனாரஸ் முதலியன, பொம்மை வகையில் சன்னபட்டினம், கொண்டபல்லி, தஞ்சாவூர் பொம்மை, ராஜஸ்தான் கத்புத்லி என்று ஒரு வரிசை, மல்லியில் மூன்று வகைகள் என்றால் மிளகாயில் மூன்று வகைகள், ஒடிசாவின் படசித்திரங்கள், வர்லி சித்திரங்கள், மைசூர் சித்திரங்கள், அரிசியில் நவரை, காலாநமக், சீரகசாலை என்று பல, கைத்தறி வகைகள் நான் சொன்னேன் என்றால் வரிசை நீண்டு போகும்.
 வெங்கடகிரி, தன்யாகாலி, ஜாம்தானி, மங்களகிரி இன்னும் எவ்வளவோ. பத்தமடைப் பாயும் உண்டு, நாச்சியார்கோயில் குத்துவிளக்கும் உண்டு. மதுரை சுங்கடி என்று கேட்காதீர்கள் அதுவும் உண்டு.
 பத்தமடைப் பாயை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு விளையும் ஒரு வகை கோரைப் புல் தான் அதற்கு ஆதாரமான பொருள். பட்டு போல மிருதுவாகவும் எளிதில் மடித்து வைக்கக்கூடியதுமான இந்தப் பாய் எப்படி செய்வது என்ற ரகசியம் அதை நெய்யும் ஒரு சில இஸ்லாமிய குடும்பங்களுக்கு மட்டுமே தெரியும்.
 அவர்களில் புகழ் பெற்ற பீர் முகம்மது என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். தொழில் மீது அவருக்கு பக்தி, பெருமை அதே நேரம் அடக்கம். சம்ஸ்கிருதம் தெரியும் என்று சொன்னதாக நினைவு. எத்தனை அழகான பாய்கள், வண்ணங்கள் சேர்ப்பதில் என்ன நேர்த்தி, இது வெறும் நெசவு இல்லை; இது ஓர் அற்புதக் கலை. நாம் இதைக் காக்க வேண்டும்.
 பிளாஸ்டிக் பாய்களை வாங்காமல் இது போன்ற இயற்கை பாய்கள் வாங்கினோமானால், நம் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரங்களையும் காப்போம், சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது. இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே.
 இந்த குறியீடுகள், ஒவ்வொரு பிரதேசம், இடம், நிலப்பரப்புடன் இணைந்துள்ளது என்று பார்த்தோம். அதனால் தான் அந்த பெயர் வருகிறது. ஃப்ரான்ஸ் நாட்டில் "ஷாம்பெயின்' என்ற பகுதியில் தயார் செய்யும் ஒரு வித மது பானத்திற்கு "ஷாம்பெயின்' என்று பெயர்.
 அம்முறையைப் பின்பற்றி உலகில் மற்ற இடங்களில் இருக்கும் மதுபான உற்பத்தியாளர்கள் அவரவர்கள் தயாரிப்பை "ஷாம்பெயின்' என்று விற்றார்கள். உடனே ஷாம்பெயின் பிரதேச தயாரிப்பாளர்கள் தங்கள் பொருளுக்கு புவிசார்குறியீடு பதிவு செய்து அந்த பெயரை தங்கள் அறிவுசார் சொத்தாக பாதுகாத்தார்கள்.
 இப்பொழுது இதே முறையை பின்பற்றி தயார் செய்யும் மற்ற இடத்தின் மதுபானதயாரிப்பாளர்கள் தங்கள் பொருளை "மின்னும் மது' (sparkling wine) என்று பெயரிட்டார்கள்.
 இந்த சொத்துரிமையை சட்டப்படி எப்படி பாதுகாப்பது என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. இது போன்ற புவிசார்ந்த பொருள்களைத் தயாரிப்பவர்கள் ஒரு சங்கம் அமைத்தோ இல்லை அவர்களின் நலனைக் காக்கும் ஒரு அமைப்பின் மூலமோ இந்த சட்டத்தின் கீழ் தங்கள் புவிசார் குறியீட்டை பதிவு செய்ய மனு கொடுக்கலாம்.
 சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க உரிய அதிகாரிகள் பதிவு செய்ய உத்தரவு இடுவார்கள். தனி நபரும் கூட, தான் இந்த பொருளை தயார் செய்கிறேன் என்று இந்த சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற பயன்படுத்துபவராக (authorizeduser) பதிவு பெற விண்ணப்பிக்கலாம்.
 "பய்யனூர் பவித்திர மோதிரம்' என்று ஒரு வழக்கு சில ஆண்டுகளுக்கு முன் விசாரனைக்கு வந்தது. பய்யனூர் பவித்திர மோதிரம் என்பது ஒரு வகை பவித்திர மோதிரம். இந்த மோதிரத்திற்கும் பய்யனூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கும் தொடர்பு உண்டு.
 கோயிலில் சில பிரத்தியேக சடங்குகள் செய்யும்பொழுது தர்ப்பைப் புல்லால் ஆன பவித்திரம் அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தது. பழைய கோயிலை புனர்நிர்மாணம் செய்யும்பொழுது பொன்னால் ஆன இந்த மோதிரத்தை செய்தார்கள். அப்பொழுது கோயில் தந்திரி இந்த மோதிரத்தை எப்படி செய்யவேண்டும் என்ற செய்முறையை சுவாட்ட வளப்பில் தார்வாட்டைச் சேர்ந்த கேலப்பன் பெருந்தட்டானிடம் விளக்கி சொன்னார்.
 அந்த குடும்பத்தினரோ, அவர்கள் மேற்பார்வையில் மற்றவரோ தலைமுறை தலைமுறையாக இந்த மோதிரங்களை செய்து வந்துள்ளார்கள். இதில் பவித்திர முடி மத்தியில் இருக்கும் இரு பக்கமும் மூன்று கோடுகள் அவை இடை "பிங்கலை' சுஷும்னை நாடிகளைக் குறிக்கும் . இதன் எடை, பரிமாணம் எல்லாவற்றிற்கும் விதி முறை உண்டு.
 ஒரு மோதிரம் செய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும். செய்பவர் கடும் விரதம் இருப்பார். இந்த குறியீடு யாருக்குச் சொந்தம் என்று ஒரு வழக்கு அறிவுசார் மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் முன் வந்தது. அந்தப் பெயரை அதாவது "பய்யனுர் பவித்திர மோதிரம்' என்ற பெயரை ஒருவர் தன் வர்த்தக குறியாக பயன்படுத்தத் தொடங்கினார். அதை மறுத்து ஒருவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை புவிசார் குறியீடு சட்டத்தின்படி விசாரிக்கவேண்டும் என்று உத்தரவானது.
 இந்த மோதிரத்தை உருவாக்குபவர்களுக்கு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதே தெரியாது என்று தெரியவந்தது. உடனே கேரள மாநிலத்தில் வெளியாகும் ஒரு மலையாள தினசரியில் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
 அதன் பிறகு அவர்கள் எல்லோரும் ஒரு மனு கொடுத்து தங்களுக்கு சென்னைக்கு வரும் அளவிற்கு பணவசதி இல்லையென்றும், தாங்கள் தான் மோதிரம் செய்பவர்கள் என்றும் தங்கள் உரிமையைக் காக்கவேண்டும் என்றும் சொன்னார்கள்.
 இவர்களையும் விசாரித்து முடிவு செய்யவேண்டும் என்று அறிவு சார் சொத்து அலுவலகத்தின் பதிவாளரிடம் மேல்முறையீட்டூ தீர்ப்பாயம் திரும்ப அனுப்பிவைத்தது.
 இந்த புவிசார் குறியீடு பொருள்களை செய்பவர் அனைவரும் குறைந்த வருமானம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் சொத்துரிமையைக் காக்கும் வசதியோ சட்ட அறிவோ இருப்பது சந்தேகம்தான்.
 ஆனால், அவர்கள் தான் நம்முடைய கலை, கைவினை, விவசாயம் இது போன்று நம் வேரின் ஈரத்துடன் கலந்து இந்தப் பொருள்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். இது போன்ற பழவகையோ, பட்டுவகையோ, மிளகாய் வகையோ, மல்லிவகையோ அழியாமல் காக்கவேண்டும். கைத்திறன் சம்பந்தப்பட்டது என்றால் அதற்கு உரிய ஊக்கம் அளிக்க வேண்டும்.
 நிலத்திலிருந்து விளைபொருள் தொடர்பு உள்ளது என்றால் அந்த நிலம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும், வேறு யாரும் இந்த பெயரை தவறாக பயன்படுத்தாமல் சட்டம் காக்க வேண்டும்.
 இந்த அறிவு சார் சொத்தின் உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும், போலிகள் உருவாகாமல் காக்க வேண்டும். சட்டம் இயற்றிய உடனேயே ஜீபூம்பா என்று சமூக மாற்றங்கள் வருமென்றால் நம் நாட்டில் "இந்தியாவின் மகள்' போன்ற ஆவணப்படம் வரவேண்டிய தேவையே இருக்காது.
 மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால் மாற்றம் கொண்டு வர முடியாது. பட்டுக்கோட்டையார் மன்னிக்க வேண்டும்.
 ஒவ்வொரு மாநிலமாக எடுத்துக்கொண்டு ஒரு புவிசார்குறியீடு சுற்றுலா வந்தோமானால் நம் நாட்டில் இருக்கும் ஒற்றுமையில் வேற்றுமையும், வேற்றுமையில் ஒற்றுமையும் புலப்படும்; பின்னிபிணைந்து நிற்கும் இந்திய தொடர்பு நம்மைப் பெருமைப்படவும் வைக்கும்!
 
 கட்டுரையாளர்:
 நீதிபதி (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.