உலகம் முழுவதும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருப்பதாகவும், ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பனை மரங்கள் இருப்பதாக ஆய்ந்தறியப்பட்டிருக்கிறது.
உலக அளவில் இருக்கும் பனை மரங்களில் பத்து கோடிக்கு மேற்பட்டவை இந்தியாவிலும், ஐந்து கோடிக்கு மேல் தமிழ்நாட்டிலும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. பனை மரத்தின் தாய் நிலம் தமிழ் நிலம். பனை மரங்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் பழமையான பந்தம் உண்டு. தமிழ் மக்களுக்கும் பனை மரங்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டு, பண்பாட்டுப் பரிச்சயமும் உண்டு.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடர்ந்தும், தமிழ்நாடு முழுவதும் படர்ந்தும் காணப்படும் பனை மரங்கள் "போரசஸ் பிலபெல்லிஃபெர்' எனும் தாவரவியல் பெயர் பூண்டவை. மூங்கில், தென்னை, கரும்பு போன்று பனையும் புல்லின வகையைச் சேர்ந்தது என தாவர அறிவியல் வல்லுநர்கள் வரையறை செய்திருக்கிறார்கள்.
ஆனால், தென்னை, மூங்கில், கரும்பு ஆகியவற்றைக் காட்டிலும் பனையின் பயன்பாடுகள் மகத்தானவை. "ஓடகம்', "தாலம்', "கரும்புறம்', "காமம்', "பெண்ணை', "போந்து', "புற்பதி', "புற்றாளி', "தாளி', "தருவிராகன்' போன்று பல்வேறு பெயர்களில் பழந்தமிழர்களால் அழைக்கப்பட்ட பனை மரங்களின் ஓலைகள்தான் தொல் தமிழ் அறிஞர்களின் சிந்தனை வளங்களைச் சுமக்கப் பயன்பட்டிருக்கின்றன.
சில கோயில்களின் தல விருட்சமாகவும் பனை மரம் விளங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்களின் "தாய்வீடு' பனை ஓலைதான். பனையோலைகளில் பதிவு செய்யப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் "தமிழ்த் தாத்தா' உ,வே,சாமிநாத ஐயருக்கும் இடையே நிலவிய உன்னதமான உறவை, அறிவுலகம் நன்கறியும்.
பழந்தமிழரின் செய்திப் பரிமாற்றங்களுக்கு பனையோலைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. யானைகளின் தும்பிக்கைகள் கருத்த பனைமரங்களைப் போல உறுதியாகவும் நெடிதுயர்ந்தும் காணப்பட்டதாக பழைய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மூவேந்தர்களில், சேர மன்னர்கள் பனம்பூ மாலை சூடி மகிழ்ந்தவர்களாவர். பனை மரமே தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.
பழந்தமிழர்களுக்கான பயன்பாட்டுப் பொருள்களாகவும், உணவு வகைகளாகவும் பனை மரங்கள் பயன்பட்டுள்ளன. தென்னை வச்சவன் தின்னுப்புட்டு சாவான், பனை வச்சவன் பார்த்துப்புட்டு சாவான்' என்றொரு பழமொழி உண்டு. பனை மரங்கள், அவற்றை வைத்து வளர்க்கிற தலைமுறையைத் தாண்டி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கே அதிகம் பயன்படக்கூடியவை.
1885-ஆம் ஆண்டு திருநெல்வேலி மண்டலத்தில் கூட்டப்பனை எனும் ஊரில் இருந்து வேம்பார் என்கிற ஊர் வரை கடற்கரையையொட்டிய பகுதிகளில் ஐந்து லட்சம் பனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. வளர்த்தவர் வெள்ளைக்கார மாவட்ட ஆட்சியர் ஒருவர்.
சுனாமி போன்ற கடலின் சீற்றங்களையும் தடுத்து நிறுத்துகின்ற இயற்கை அரண்களாகவும், பசியைப் போக்கிப் பல்வேறு உணவு வகைகளைப் படைக்கின்ற அருஞ்சுவை அமுதசுரபிகளாகவும், வாழ்வின் தேவைகளுக்காக நுற்றுக்கணக்கான பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிக்க மூலப் பொருள் கொடுக்கும் சூழல் நலத் தொழிற்சாலைகளாகவும், பழந்தமிழ் இலக்கியங்களை பல தலைமுறைகளுக்கு பயிற்றுவித்த பல்கலைக்கழகங்களாகவும் பனை மரங்கள் விளங்கின; விளங்குகின்றன.
ஆல மரங்களும் அரச மரங்களும் பனை மரங்களும் அருகருகே வளரும் இயல்புடையவை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் அருகேயுள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தின் ஏரிக்கரையில் ஆல மரமும் பனை மரமும் ஆங்காங்கே பின்னிப் பிணைந்து கொண்டு வளரும் அழகிய காட்சியினைக் காண முடியும். இயற்கையிடமிருந்து கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மனிதர்களுக்கு மிக அதிகமாகத் தருகின்ற கொடையுள்ளம் கொண்டவை பனை மரங்கள்.
பனை மரங்களை அலட்சியப்படுத்திய தலைமுறையைத் தொடர்ந்து, அவை குறித்து எதுவுமே தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. ஆங்காங்கே பனை மரங்களை நூற்றுக்கணக்கில் வெட்டி செங்கல் சூளைகளுக்குப் போட்டு எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது அரிய செல்வங்களின் மீது இயல்பாகக் காட்டப்படுகின்ற அலட்சியம், பனை மரங்கள் மீதும் காட்டப்படுகிறது. தொழிற்சாலை, வீட்டுமனை போன்ற தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படும்போது அந்த நிலத்தில் உள்ள பனை மரங்களே முதற்பலியாகின்றன.
ஒரு பனை வீழ்த்தப்படுவது எவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்துவதில்லை. மனிதர்களால் வளர்க்கப்படாமல் இயற்கையே வளர்த்துத் தருகின்ற மரங்களாகப் அவை விளங்குவதால் அவற்றின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வருவதில்லை.
தமிழ்நாட்டில் பனை மரத்தின் பயன்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அதன் விபரீதமான விளைவுகள் தெரியத் தொடங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு அண்மை நகரங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோரில் 95 விழுக்காட்டினர் பனைத் தொழிலாளர்கள்.
அவர்கள் தங்களது பனைத் தொழிலைக் கைவிட்டதன் காரணமாகவே, அவர்களது குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாகியிருக்கிறார்கள். பனைத் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு, பனைத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தந்தை பனையேறாவிட்டால், பிள்ளைகள் பள்ளிப் படியேற மாட்டார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. பனைத் தொழில் செய்வோர் அரசினால் அக்கறையோடு பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கான நலத்திட்டங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
சூழல் நலத்திற்கு எத்தகையதொரு சிறு கேட்டினையும் செய்யாத பனைப் பொருளாதாரச் செயல்பாடுகள் முற்றாக மறக்கடிக்கப்பட்டு, சூழலைச் சீர்குலைத்துச் சின்னாபின்னமாக்கும் சீமைக்கருவேல மரக் கரித்தொழிலுக்கு ராமநாதபுரம் மாவட்ட மக்கள் ஊக்குவிக்கப்பட்டுவிட்டனர். இது நம் பனைமரங்களுக்குச் செய்யப்பட்ட இயற்கையியல் இரண்டகமாகும்.
மாநிலப் பனை வாரியத் தலைவராக இருந்த குமரி அனந்தன், பனைத் தொழிலின் வளர்ச்சி குறித்துத் தீட்டிய திட்டங்களும், கண்ட கனவுகளும் இன்றுவரை கைகூடவில்லை.
பனை மரங்களுக்கென்றே தமிழக அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றி அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாசு விடுத்துள்ள அறிக்கைக்கும் அரசுத் தரப்பில் மெüனமே பதில்.
தமிழகம் முழுவதும் இருக்கும் ஆற்றங்கரைகளும், ஏரிக்கரைகளும், குளக்கரைகளும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புன்செய் நிலங்களும், கடலோர நிலப் பகுதிகளும் பனை மரங்களை நட்டு வளர்க்க சரியான இடங்களாகும்.
பயன்படுத்தாமல் இருக்கும் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்களை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, புதிய புதிய பனை மரங்களையும் நட்டு வளர்த்துப் பாதுகாத்து வந்தால் அடுத்தப் பதினைந்து ஆண்டுகளில் அவை முழுமையான வளர்ச்சி பெற்றுப் பயனளிக்கத் தொடங்கிவிடும்.
நமது உண்மையான இயற்கை வளம் என்பது பூமிக்குக் கீழே புதைந்திருக்கும் கனிம வளங்கள் அல்ல. பூமிக்கு மேலே நெடிதுயர்ந்து நின்றிருக்கும் மரங்கள்தான் } குறிப்பாக, பனை மரங்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் மரங்களோடு, பயன்படத் தயாராக இருக்கும் மரங்களையும் சேர்த்து சுமார் நான்கு கோடி பனை மரங்களைத் திட்டமிட்டு நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம் என்றால், அதனால் விளையும் பொருளாதார மேன்மைகளால் செல்வம் கொழிக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என்பது உறுதி.
வளரத் தொடங்கும் ஒரு பனை மரம் தனக்கான நீர், பூச்சி மருந்துகள், அன்றாட உழைப்பு, பாதுகாப்புத் தேவை என்று எதையும் மனிதர்களிடம் கோருவதில்லை. பனை மரங்கள் நமக்கு எண்ணிலடங்காத பயன்களைக் கொடுக்கப் பிறந்தவையே தவிர, எதுவொன்றையும் நம்மிடம் கேட்கப் பிறந்தவையல்ல.
பனையியல் சார் பல்கலைக்கழகங்கள், பனைசார்ந்த கல்வி, ஆராய்ச்சிகள், பனை உணவுத் தயாரிப்பு ஆலைகள், பனை மரப் பயன்பாட்டுப் பொருள் தயாரிப்பு ஆலைகள், பனைப் பொருள்கள் ஏற்றுமதிக் கழகம், பனைசார் உணவகங்கள், பனைத் தொழில் வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையங்கள், பனைத் தொழில் கருவிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் இவ்வளவு பணிகளுக்குமான லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு மையங்கள் என்றெல்லாம் பல்வேறு நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்கான சாத்தியக் கூறுகளை பனை மரங்கள் கொண்டுள்ளன.
கொஞ்சம் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு பனை மரங்கள் அரிய வரங்கள். அப்படிப் பார்க்காதவர்களுக்கு அவை வெறும் மரங்களே!
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.