தானாவதிப் பிள்ளை தனக்கே தந்தது
பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கமல்ஹாசன் தனது தசாவதாரம் திரைப்படத் தொடக்கத்தில் இதைப்பற்றி விளக்குவார்.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கமல்ஹாசன் தனது தசாவதாரம் திரைப்படத் தொடக்கத்தில் இதைப்பற்றி விளக்குவார். எங்கோ நடக்கும் ஒரு சம்பவத்தின் விளைவாக சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் நடக்கும் செயல் பட்டாம்பூச்சி விளைவு எனப்படும்.
சமீபத்தில், நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் படைத்தவர்கள், நீதிபதிகளை நியமிக்க நாடாளுமன்றமும் பாதிக்கு மேற்பட்ட இந்திய சட்டப் பேரவைகளும் ஒப்புக் கொண்டு சட்டமாக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது என இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பின் ஆரம்பம் எது? இதன் வண்ணத்துப் பூச்சி விளைவு எங்கே ஆரம்பிக்கிறது?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் எதிர் இந்திரா நேரு காந்தி என்ற வழக்கில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தலைச் செல்லாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திரா காந்தியின் இடது சார்பு சிந்தனைகள் நாடு அறிந்தது. ஆனால், அவருக்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வாதாடியது கடுமையான வலது சார்பு சிந்தனையுடைய இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர் என கொண்டாடப்படும் பல்கிவாலா.
வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாமா என விசாரித்த நீதிபதி, கேரளத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் கம்யூனிச அரசில் அமைச்சராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகி உச்சநீதிமன்றம் சென்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர். இந்தியப் பிரதமராகவே இருந்தாலும், இந்திரா காந்தியை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பார்த்து ஒரு சட்ட சம்பந்தமான இடைக்காலத் தடையாணையை வழங்கினார் நீதிபதி அய்யர்.
அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பின்னர் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தீர்ப்பு வந்த சில நாட்கள் இந்திரா தடுமாறினார் என்பது உண்மை. நீதிமன்ற தடையாணை இருந்தாலும் அவர் பிரதம மந்திரியாகத் தொடரப் பிரச்னை இல்லை என்றாலும் எதிர்க்கட்சிகள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தின.
இந்திராவின் நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு மிகப்பெரிய சோதனைக்காலம் என்பதில் ஐயமில்லை. சித்தார்த் சங்கர் ரே போன்றவர்களின் தவறான வழி காட்டுதலால் இந்திரா அவசர நிலை பிரகடனம் செய்தார்.
பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகள் தடை செய்யப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் அடக்குமுறை ஆட்சி தொடர்கிறது. இந்திரா காந்தி தேர்தலை அறிவிக்கிறார். 1977-இல் இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வடநாட்டில் கடுமையான தோல்வியைச் சந்திக்கிறது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் காட்சி மாறுகிறது. குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயருடன் தனது கனவு பதவியான பிரதமர் நாற்காலியில் மொரார்ஜி தேசாயால் நீண்ட நாள்கள் அமர முடியவில்லை.
இந்திய ஜனநாயக வரலாற்றில், பதவியேற்ற முதல் காங்கிரஸ் அல்லாத அரசு, தலைவர்களுக்குள் உள்ள பதவி ஆசைப் போட்டியினால் மத்தியில் ஆட்சியை இழக்கிறது. பீனிக்ஸ் பறவையாக இந்திரா காந்தி எழுந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திரா காந்தி ஆட்சியின் அவசர நிலையின் போது மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் தலைமை நீதிபதியாக பணி மூப்பு அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து ராஜினாமா செய்தனர். அவசர நிலையைக் காரணம் காட்டி, பல இடங்களில் நீதித்துறை நத்தையாக தனது கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டது.
ஒரு பானை சோற்றுக்கு பதம் ஒரு சோறுதானே! நெருக்கடி நிலை இருந்தபோது நடந்த நீதித்துறைக் கூற்றுக்களில் ஒன்று இது. அன்று தொலைத் தொடர்புத் துறை இந்திய அரசின் ஏக போகமாக இருந்தது. தொலைபேசி இணைப்பு வாங்குவதே குதிரைக் கொம்பாக இருந்தது.
இன்று ஒரு சிம்கார்டு ஃபோன் நிச்சயம்; இரண்டு சிம் கார்டு போன் லட்சியம் என்ற அளவில் சராசரி இந்தியன் இருக்கிறான். 30 பைசாவுக்கு எங்கேயும் எப்போதும் யாருடனும் பேசலாம். ஆனால், தொலைபேசி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போது மூன்று நிமிட உரையாடலுக்கு 50 பைசா கட்டணம் இருந்தது.
இந்திய அரசு உள்ளுர் அழைப்பின் கட்டணத்தை, நஷ்டத்தைக் காரணம் காட்டி 50 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாகக் கூட்டியது. வெகுண்டெழுந்தார் ஓய்வு பெற்ற தொலைபேசித் துறையின் உயர் அதிகாரி ஒருவர். தொலைபேசி நஷ்டத்தில் இயங்கவில்லை. அதிகமான லாபத்தில் நடைபெறுகிறது. கட்டண உயர்வு சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் கட்டண உயர்வை ரத்து செய்தது.
இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதுவரை நெருக்கடி நிலைமை அமலுக்கு வரவில்லை. வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, நெருக்கடி நிலைமை அமலில் இருந்ததால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன எனச் சொல்லி தனி ஒருவர் அரசு முடிவை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்ற மோகன் குமாரமங்கலத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்டு, உச்சநீதிமன்றம் தொலைபேசி கட்டண உயர்வு பற்றி வழக்குப் போட மனுதாரருக்கு உரிமை இல்லை என மேல்முறையீட்டை அனுமதித்து, மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டண உயர்வை அங்கீ
கரித்தது.
நெருக்கடி நிலையின் போது, சொத்துரிமை, அரசியல் சட்ட அடிப்படை உரிமை என்ற பிரிவில் இருந்து நீக்கப்பட்டது. பின்னால் வந்தவர்களால் சொத்துரிமையை அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக ஆக்க முடியவில்லை. ஆனால், ஒரு விட்டுக் கொடுத்தலின் மூலம் சொத்துரிமை அரசியல் சட்ட உரிமையாக்கப்பட்டது.
பின்னாளில் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சொத்துரிமையைப் பறித்தவர் என்ற பழியில் இருந்து மீள்வதற்காக நில ஆர்ஜித சட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதைத் தான் கடந்த மன்மோகன் சிங் அரசு மேலும் இலகுவாக்கி இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தது.
இந்தப் பின்னணியில், அவசர நிலையின் போது நீதித்துறை பொலிவு இழந்திருந்ததால் அவசர நிலைக்குப் பின்னர் நீதிமன்றம் தன்னுடைய உரிமையை நிலைப்படுத்த ஆரம்பித்தது. இதனால்தான் நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கலாம் என்ற கொலிஜியம் முறை, ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக ஏற்படுத்தப்பட்டு, மற்றொரு தீர்ப்பின் மூலமாக விரிவாக்கி ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இதை பத்திரிகைகள் எல்லாம் கொண்டாடின. இந்திய அரசியல்வாதிகளிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் நீதித்துறை தன்னைக் காத்துக் கொண்டதாக கும்மியடித்தன.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கலாம் என்று இந்திய அரசியல் சட்டம் எங்கும் சொல்லவில்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் மட்டுமே உள்ளது. தலைமை நீதிபதியைக் கலந்து, அரசின் முடிவின்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமிக்கலாம் என்ற விதியின்படி, நீதிபதிகளின் குழு அரசைக் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் நபரை, குடியரசுத் தலைவர் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் காட்சி மாறி போனது.
நீதித் துறையை ஆட்டிப்படைத்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த மாற்றத்தை மண்டியிட்டு மரியாதையுடன் மனமுவந்து ஏற்றுக் கொண்டனர். இதுதான், அலகாபாத் நீதிமன்றத்தின் வண்ணத்துப் பூச்சி விளைவு.
ஆனால், 15 ஆண்டுகளுக்குள் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. லஞ்சத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நீதிபதிகளின் ஆதிக்கத்தைப் பார்த்து கைப் பிசைந்து, வாய்மூடி மெளனியாக நின்றனர்.
ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், மாநிலத்தின் பெயராலும் எழுத்தில் எழுத முடியாத காரணங்களுக்காகவும் தகுதி அற்றவர்கள் நீதிபதிகளாக கொலிஜியத்தால் நியமிக்கப்பட்டனர். மாநில அரசுகளின் அதிகாரங்கள் முழுமையாகவும், மத்திய அரசு அதிகாரங்கள் பெரும்பான்மையாகவும் நீதிபதிகள் நியமனத்தில் நீர்த்துப் போனது.
"இதில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களைப் போன்றோர் அரசை உரிய நேரத்தில் ஏன் சரியாக வழி நடத்தவில்லை' என அரசு தலைமை வழக்குரைஞராக இருந்த ஒரு மிகப் பெரிய வழக்குரைஞரைக் கேட்டதற்கு, அவர் மத்திய அரசை கொலிஜியம் முறைக்கு எதிராக எச்சரித்ததாகவும், மாற்று ஏற்பாடுகளை உடனே தீவிரப்படுத்த வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கியதாகவும், ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதைச் செயல்படுத்தும் மனநிலையிலும், அரசியல் சூழ்நிலையிலும் இல்லை என பதில் சொன்னார்.
அதிசயம், ஆனால் உண்மை என்ற நிலையில் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கலாம் என்ற சமீபத்திய தீர்ப்பு பழையத் தீர்ப்புகளைப் போலக் கொண்டாடப்படவில்லை. கடுமையான விவாதத்தக்கு உள்ளானது. இது போன்ற சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருந்தால் அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், மோடி அரசு என்பதால் அதற்கு உள்நோக்கம் சொல்லப்படவில்லை.
இந்தியாவின் சிறந்த வக்கீலாக இருந்து இன்று இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி இந்தத் தீர்ப்பை தேர்தலே சந்திக்காதவர்களின் அராஜகம் (tyranny of the unelected) என கடுமையாக விமர்சித்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கு முக்கியப் பங்குண்டு. நீதிபதிகள் குழு அனுப்பும் பெயருக்கெல்லாம் அரசு தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் காரணங்களை நீக்கி, சரியான காரணங்களுக்காகக் குழு சொல்லும் பெயரை மாநில, மத்திய அரசுகள் ஆட்சேபிக்கலாம், ஆட்சேபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடமை தவறுவது அரசுக்கு அழகல்ல.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கலாம் என்றால் தற்போதைய தேர்தல் ஆணையரே பின்வரும் தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கக் கூடாது? ஒரு லஞ்ச ஒழிப்பு ஆணையர் தன்னுடைய வழித் தோன்றலை ஏன் தானே நியமிக்கக் கூடாது?
பதவி முடிந்த பிறகு, ஒரு குடியரசுத் தலைவர் தன்னுடைய அடுத்த வாரிசை நியமிக்கத் தலைப்பட்டால் என்ன ஆகும் இந்திய ஜனநாயகம்?
நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கலாம் எனும்போது ஒரு திருநெல்வேலி மாவட்டக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ஜமீன்தார் தன் நிதியமைச்சர் தானாவதிப் பிள்ளையோடு ஜமீனை வலம் வந்தார். ஒவ்வொரு சொத்தையும் காண்பித்து இது யாருடையது என வினவினார். தானாவதிப் பிள்ளை உரிமையாளரின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
திடீரென ஒரு மிகப்பெரிய சோலையாக ஒரு தோப்பு வந்தது. இது யாருடையது என வினவினார் ஜமீன்தார். இந்த தோப்பு தானாவதிப் பிள்ளைக்குச் சொந்தம் என பதில் வந்தது. இதை தானாவதிப்பிள்ளைக்குத் தந்தது யார் என ஜமீன்தார் கேட்டார். பட்டென்று பதில் வந்தது. தானாவதிப் பிள்ளை தனக்கே தந்தது.
இப்படித்தான் இருக்கிறது நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் வழக்கம்.
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கலாம் என்றால், தற்போதைய தேர்தல் ஆணையரே பின்வரும் தேர்தல் ஆணையரை ஏன் நியமிக்கக் கூடாது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...