தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பிகார் சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக

Updated On :

பிகார் சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும், மத்திய அரசின் செயல் திட்டத்திலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 நீண்டகாலமாக சட்டம் - ஒழுங்கு சரியில்லாமல் இருந்த பிகார் மாநிலம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் மெல்ல மெல்ல முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
 ஆனாலும், 2012-ஆம் ஆண்டு முதல் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சியிலும் மக்கள் நல்வாழ்விலும் கவனம் செலுத்த முடியும்.
 மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்தும் பா.ஜ.க. அங்கு படுதோல்வி அடைந்ததை அடுத்து அவரின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
 இந்த நிலையில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை தனது கௌரவப் பிரச்னையாக பிரதமர் மோடி கருதி வருகிறார். அதற்காக அரசியல்ரீதியில் தனது முழு பலத்தையும் செலுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றால், அது தில்லி அரசியலிலும் எதிரொலிக்கும். அதாவது, பிரதமர் மோடியின் செல்வாக்கு ஒன்றும் சரிந்துவிடவில்லை, சரியான பாதையில்தான் அவர் சென்று கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதுடன் கட்சித் தலைவர் அமித் ஷா மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.
 அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் வழியேற்படும்.
 மேலும், 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும்.
 இந்தத் தேர்தல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அளவுக்கு முக்கியமானதோ அதேபோல, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் முக்கியமானதாகும்.
 பிகாரில் லாலு, நிதீஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி பா.ஜ.க.வின் வெற்றியை தடுத்து நிறுத்தி தேர்தலில் அமோக வெற்றிபெறுமானால், நாடாளுமன்றத்தில் அவற்றின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.
 அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணி உருவாகவும் வழிவகுத்துவிடும்.
 கடந்த மக்களவைத் தேர்தலில் பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்துதான், அவர் தனது பரம எதிரியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் திடீர் நட்பை ஏற்படுத்திக் கொண்டு இடைத் தேர்தலைச் சந்தித்தார்.
 இது அவருக்கு ஓரளவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அந்த தைரியத்தில்தான் நிதீஷ் குமார் இப்போது சட்டப்பேரவைத் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறார்.
 பிகாரில், தேர்தல்களில் எப்போதும் சாதி அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். மாநிலத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களில் முஸ்லிம்கள், யாதவர்கள், குர்மிக்கள் மூன்றில் ஒரு பங்கு இடத்தை வகிக்கின்றனர். இவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதால் நிதீஷ் குமார் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.
 ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு மகா தலித்துகளின் ஆதரவு இருப்பதால் அவரது கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டுள்ளது பா.ஜ.க.
 இந்தத் தேர்தலில் நிதீஷ் குமாரின் மெகா கூட்டணி தோல்வி அடைந்தால் அவர் ஓரங்கட்டப்படுவார். ஒருவேளை, தேர்தல் அவருக்குச் சாதகமாக இருந்து அவரும் அவரது கூட்டணியும் அமோக வெற்றி பெற்றால், பிரதமர் மோடியை எதிர்கொள்ள சரியான தலைவர் நிதீஷ் குமார்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதால் அவரால் தேர்தல் களத்தில் நேரடியாக ஈடுபட முடியாது. மேலும், கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அவரது மகன்கள் அரசியலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதே சந்தேகம்.
 பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொன்றும் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், அக்கட்சிக்கு மெகா கூட்டணியில் 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி அதிக இடங்களில் போட்டியிடாவிட்டாலும், கொடுத்த இடங்களில் பெரும்பாலான இடத்தைக் கைப்பற்றும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு அது வலுசேர்ப்பதாக அமைந்துவிடும்.
 அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், பிகார் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முக்கியமாக பா.ஜ.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 பா.ஜ.க. வெற்றிபெற்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும்.
 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துமா அல்லது பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணிக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.