குறையொன்றுமில்லை எட்டப்பா...

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஜுலியஸ் சீசர் "யூ டூ ப்ரூட்டஸ்?' என்று கேட்கும் வாசகம் போல எட்டப்பர் பெயர் சொன்னாலே காட்டிக் கொடுத்தவர் என்ற பழிச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இதனை மறுக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஜுலியஸ் சீசர் "யூ டூ ப்ரூட்டஸ்?' என்று கேட்கும் வாசகம் போல எட்டப்பர் பெயர் சொன்னாலே காட்டிக் கொடுத்தவர் என்ற பழிச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இதனை மறுக்கிறார்கள்.

எட்டப்பர் ஆங்கிலேயர்களோடு நெருக்கமாக இருந்தது உண்மை. வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தார் என்றும், சூழ்ச்சிகள் செய்தார் என்றும் வலம் வரும் செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

எட்டையபுரத்தினை ஆண்ட எட்டப்ப வம்சத்தினர் கலை இலக்கியத்திற்கும், மக்கள் நலத்திற்கும் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை.

கி.பி.856-ஆம் ஆண்டு சந்திரகிரி பகுதியினை ஆண்ட மன்னர் பரம்பரையில் பிறந்தவர் நல்லம நாயக்கர். அவர் ஒரு சமயம் விஜயநகரம் செல்லும்போது சோமன் என்ற மல்யுத்த வீரன் பாதையை மறைத்துக் கொண்டு, தன்னுடன் யுத்தம் புரிய வேண்டுமென்று அவரை நிர்பந்தித்தான். இருவரும் போரிட்டனர். இறுதியில் நல்லம நாயக்கர் வென்று விடுகிறார்.

உயிர் போகும் தருவாயில் சோமன் தனது எட்டு தம்பிகளும் ஆதரவில்லாமல் போய்விடுவார்களே என்று வருந்தினான். அப்போது "கவலை வேண்டாம், உன் தம்பியர் எட்டு பேரும் இனி என் பிள்ளைகள்' என நல்லம நாயக்கர் வாக்களித்தார்.

எட்டுப் பிள்ளைகளுக்கு தந்தை ஆனதால் "எட்டப்பர்' என்றும், விஜயநகர அரசர் தன் உயிர் காத்தமைக்கு அய்யன் என்ற பட்டத்தை வழங்கியதால் "எட்டையன்' என்றும் அழைக்கப்பட்டார். எட்டப்ப நாயக்கர் வம்சாவளியினர் இளம் புவனம் பகுதியை எட்டையபுரம் என்று பெயர் சூட்டி தங்கள் தலைநகராக மாற்றிக் கொண்டு ஆட்சி புரியத் துவங்கினர்.

ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின், மூன்றாம் மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம், தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையினை கம்பெனியினர் பெற்றுக் கொண்டனர்.

நில அளவையின்போது பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான மூன்று ஊர்களை எட்டையபுரத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிவிட்டனர். இது பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டையபுரத்திற்கும் இடையே பிரச்னை உருவாகக் காரணமானது.

தமிழ்நாட்டில் அப்போது இருந்த 72 பாளையங்களில் 30 பாளையங்கள் நெல்லைச் சீமையில்தான் இருந்தன. அவற்றில் எட்டையபுரம் ஜமீனே அளவில் பெரியது. சுமார் 500 கிராமங்கள் அடங்கிய சமஸ்தானம்.

வெங்கடேஸ்வர எட்டப்பரின் மரணத்திற்குப்பின் வாரிசு இல்லாத நிலையில் குருமலை துரை ஜமீன் ஆட்சிக்கு வந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எட்டையபுரத்தின் வெங்கடேஸ்வரபுரம் கோட்டைமீது படையெடுத்தார். இதனைத் தடுக்க எட்டையபுர தளபதிகளான ராமநாத பிள்ளை, மாணிக்கவாசகம் பிள்ளை ஆகிய இருவரும் போருக்குச் செல்ல, போர்க்களத்தில் ராமநாத பிள்ளை இறந்து விட்டார். பாஞ்சாலங்குறிச்சிக்காரர்கள் ஆதனூர் கோட்டையினைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

மன்னர் குருமலைத் துரை 1783-இல் இயற்கை எய்த, அவருடைய மூன்றாம் தலைமுறையான முத்து ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் கட்டபொம்மனுக்குமான வரி பாக்கி பிரச்னையில் பகை வளர்ந்தது. நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட, வெள்ளையர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் அடக்கப்பட்டனர்.

1799 செப்டம்பர் 4-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெள்ளையர்களால் முற்றுகையிடப்பட, கட்டபொம்மன் தன்னுடைய படை வீரர்களோடு கோலார்பட்டி வந்து, பின்னர் புதுக்கோட்டைக்குச் சென்று காடுகளில் மறைந்திருந்தார். அங்கு கைது செய்யப்பட்டு 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் கயத்தாறு சாலையிலிருந்த புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வு இது. வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வீரதீரம் இன்றைக்கும் போராளிகளுக்கான பால பாடம்.

பாஞ்சாலங்குறிச்சி போர்களுக்குப்பின், அதன் ஆறு பகுதிகள் எட்டயபுரத்தோடு சேர்க்கப்பட்டன. முத்து ஜெகவீரராம குமார எட்டப்பர் 1783 முதல் 1816 வரை ஆட்சி செய்தார்.

நாகலாபுரம், குமாரட்டையாபுரம், கழுகுமலை, குளத்துவாய்பட்டி, எட்டையபுரம், வேடநத்தம், புதியம்புத்தூர் ஆகிய ஊர்களில் கோயில்கள், குடிதண்ணீர் குளங்கள், அன்னச் சத்திரங்களைக் கட்டியெழுப்பினார்.

முத்து ஜெகவீரராம குமார எட்டப்பரின் மூத்த புதல்வர் ஜெகவீரராம குமார எட்டப்ப நாயக்கர் 1839 முதல் 1852 வரை ஆட்சி செய்தார்.

அவருக்குப் பின், 1852}இல் ஆட்சிக்கு வந்த வெங்கடேஸ்வர எட்டப்பர், எட்டையபுரம் நடுவப்பட்டிக்குச் சாலை அமைத்ததோடு, கழுகுமலை கோயிலில் பெரிய மண்டபமும், எட்டையபுரத்தில் சண்முக விலாசம் என்ற புதிய கோட்டையையும் கட்டினார். நடுவப்பட்டி, புதுப்பட்டி குளங்களும் தூர் வாரப்பட்டன.

வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கருக்குப் பின், 1868-ஆம் ஆண்டு ஜமீனாக ஆட்சிப் பொறுப்பேற்றவர் குமார எட்டப்பர். 1877-78}இல் எட்டையபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

திருவாங்கூரில் செயல்பட்டுவந்த ஊட்டுப்பாறை என்னும் உணவு விடுதிகளைப் பார்த்து, எட்டையபுரத்திலும் 64 உணவு விடுதிகள் அமைத்து மக்களுக்கு உணவும், கால்நடைகளுக்குத் தீவனங்களும் இனாமாக வழங்கினார். திண்ணைப் பள்ளிக் கூடங்களைக் கட்டியெழுப்பினார்.

தாமிரவருணியின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் பாலம் கட்ட 3,500 ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

சுப்புராம தீட்சிதர் மகாபாரதத்தை மொழிபெயர்த்தது, கடிகை நமச்சிவாய புலவர் வில்லிபாரதம் நாட்டிய நாடகத்தில் உள்ள பாடல்களுக்கு வர்ண மெட்டுக்களையும் ஸ்வரங்களையும் ஏற்படுத்தியது, தீட்சிதர் தமிழில் வம்சமணிதீபிகை என்ற நூலை இயற்றியது இவையனைத்தும் வெங்கடேஸ்வர எட்டப்பரின் சமஸ்தானத்தில்தான்.

1890-இல் வெங்கடேஸ்வர எட்டப்பரின் மறைவுக்குப் பின் அவருடைய மகன் 12 வயது சிறுவனாக இருந்ததால், 1890 முதல் 1899 வரை ஆங்கிலேய சர்க்காரின் கையில் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. 1899-இல் தனது 21-ஆம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைனர் ராஜா, எட்டையபுரத்தில் நவீனமுறையில் 64 விவசாயப் பண்ணைகளை அமைத்து வேளாண்மையைப் பெருக்கினார்.

பண்ணை விவசாயத்தின் விளைபொருள்கள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு தானியங்களே மக்களுக்குக் கூலியாக வழங்கப்பட்டன.

எட்டையபுரம் 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பேஷ்கார் என்ற ரெவென்யூ இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். வெங்கு ஐயர் என்பவர் எட்டையபுரத்தின் முதல் தாசில்தாராகப் பொறுப்பேற்றார். தனது ஆசிரியராகவும், வளர்ப்புத் தந்தையாகவும் இருந்த ராவ்பகதூர் ஜெகந்நாத செட்டியாரையே திவான் பொறுப்பேற்க வைத்தார்.

கிராம கணக்கு வழக்குகள் ஜாமபந்தி முறையில் சரிபார்க்கப்பட்டன. சுமார் 12 மைல் தூரம் விளாத்திக்குளம் சாலை அமைக்கப்பட்டது. மருத்துவமனை, உயர்நிலைப் பள்ளிகள், பெண்களுக்குத் தனிப் பள்ளிகள், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, குழந்தைகளுக்கு பால் என்று கல்விக்கும் உணவுக்கும் வகை செய்தார் எட்டப்ப நாயக்கர்.

தமிழ், ஆங்கில, சம்ஸ்கிருத நூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்றை அமைத்தார். "இளசை வித்தியா விலாசினி' என்ற அச்சுக்கூடம் நிறுவப்பட்டு முதன் முதலில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு அச்சு எழுத்துகளைக் கொண்டு வந்து "சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி' என்ற இசை நூல் அச்சிடப்பட்டது.

எட்டையபுரம் ஜமீன்தாரே "ஞானவல்லி', "சுத்தசேனன்' ஆகிய இரண்டு நாடகங்களை எழுதினார். ஜமீனின் ஆங்கிலப் பேராசிரியர் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாடக அரங்குகள் கட்டி "வந்தே மாதரம்' பாடலை அரங்கில் ஒலிக்கச் செய்தார்.

உமறுப்புலவர், மகாகவி பாரதி, நாவலர் சோமசுந்தர பாரதி, சங்கீத வரலாற்றில் முத்திரை பதித்த முத்துசாமி தீட்சிதர், பாலுசாமி தீட்சிதர், நாடக உலக மும்மூர்த்திகளில் ஒருவரான் காசி விஸ்வநாத பாண்டியன் ஆகியோர் எட்டையபுரம் ஜமீன்களால் ஆதரிக்கப்பட்டவர்கள்.

இசைப்பள்ளு என்கிற நாடோடி இலக்கியம், ராமநூத்து மணிமுத்துப் புலவர் இயற்றிய வைணவப் பாசுரங்கள் ஆகியவை எட்டையபுர சமஸ்தானத்தால் வழங்கப்பட்டவையே. இசைஞானியாகிய விளாத்திகுளம் சாமிகளை சீராட்ட நினைத்த எட்டப்பருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எட்டையபுரம் மக்கள், நெல் குவியலை மரக்காலால் அளக்கும் போது, ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக்கொண்டே வந்து, ஏழுக்குப் பிறகு, எட்டு என்று கூறாமல் "மகாராஜா' என்று எண்ணுவார்களாம்.

எட்டாம் எண் மகாராஜாவின் பெயர் போல இருப்பதால் தங்கள் அரசனை பெயர் சொல்லி அழைக்கக் கூடாதென்று இப்படி எண்ணி இருக்கிறார்கள். பதினெட்டாவது எண்ணுக்கு "பத்து மகாராஜா' என்று கூறுவர்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் பகை இருந்திருக்கலாம். எட்டையபுர மண்ணின் வீரத்தையும் எட்டப்ப நாயக்க வம்சத்தினர் ஆற்றிய அரும்பணிகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.

எட்டையபுரம் மன்னரின் மரணத்தைக் கூறும் நாட்டுப்புறப் பாடலொன்று, "ஆடழுக மாடழுக அஞ்சு லட்சம் ஜனமழுக, பட்டத்து யானையெல்லாம் பாதையிலே நின்னழுக...' என்று விவரிக்கிறது. குறையொன்றுமில்லை எட்டப்பா...

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com