உலகை உலுக்கிய மலேரியா!

உலகை அச்சுறுத்திய, அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று மலேரியா. மலேரியா என்றால் இத்தாலி மொழியில் அசுத்தக் காற்று என்று பொருள். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் பேர் இக்கொடிய நோயின் பாதிப்பினால் பலியாகின்றனர்.
உலகை உலுக்கிய மலேரியா!
Updated on
3 min read

உலகை அச்சுறுத்திய, அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று மலேரியா. மலேரியா என்றால் இத்தாலி மொழியில் அசுத்தக் காற்று என்று பொருள். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் பேர் இக்கொடிய நோயின் பாதிப்பினால் பலியாகின்றனர். உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் இந்நோயின் பாதிப்பிற்கு இலக்காகின்றனர்.

சிறுவர்களை மிகுதியாகப் பாதிக்கும் இந்நோய் ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. மலேரியாவானது பிளாஸ்மோடியம் என்னும் புரோட்டோசூவன் முன்னுயிரியினால் ஏற்படுகிறது.

இந்நோய்க் கிருமியானது பாதிப்பிற்குள்ளான ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனாபிலிஸ் பெண் கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. எனவே, இந்நோய் தொற்றில் இக்கொசுவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

இந்நோயின் தீவிரத்தை உணர்ந்த பல்வேறு நாடுகள் இதைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ஆம் நாள் உலக மலேரியா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இந்நோயின் பாதிப்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் இன்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

எனவே, இந்நோயைக் கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்படும் நோக்கில் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஏப்ரல் 25-ஆம் நாளானது, 2007-ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனத்தினால் உலக மலேரியா தினமாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

கொடிய நோயான மலேரியா உலகை உலுக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்த்தால் இந்நோயின் வீரியத்தினை நாம் உணரலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்நோய் இன்றைக்குச் சுமார் 110 நாடுகளில் பரவியுள்ளது. சற்றேறக்குறைய 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் மலேரியா மனிதனையும் மனித முன்னோடியான சிம்பன்சிகளையும் பாதித்துள்ளது.

கிறிஸ்து பிறப்பிற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இந்நோயின் பாதிப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருந்தபோதிலும் முறையான அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் கி.பி. 1880 முதல் நமக்குக் கிடைத்துள்ளன.

பூச்சிகளில் வாழ்வதற்கு தகவமைப்பினைப் பெற்ற பிளாஸ்மோடியம் என்னும் ஒருசெல் முன்னுயிரி பூச்சிகளிலும் பின்னர் சிம்பன்சி உள்ளிட்ட மனித மூதாதையரின் உடலிலும் வாழத் தேவையான தகவமைப்பினைப் பெற்று பரிணாமமடைந்தது.

இந்நோய் ஆப்பிரிக்காவில் விவசாயம் தோன்ற ஆரம்பித்த காலத்தில் தீவிரமடைந்து அண்டை நாடுகளுக்கும், உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரும், சுமோரியா மற்றும் எகிப்து போன்ற பகுதிகளில் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரும், இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்னரும், மத்திய தரைக்கடல் பகுதிகளில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரும், வட ஐரோப்பாவில் சுமார் 1000-500 ஆண்டுகளுக்கு முன் இந்நோய் பரவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பல பகுதிகளில் பரவிய மலேரியாவால் பாதி பேர் பாதிப்பிற்கு உள்ளாயினர். மேலும், இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளான 10 பேரில் ஒருவர் மரணத்தைத் தழுவும் நிலைக்கு உள்ளாயினர்.

ஆனால், இருபதாம் நூற்றாண்டில் சுகாதார வாழ்வு வாழ மனித இனம் முற்பட்டபோது கொசுவிற்கும் மனிதனுக்கும் இடையான தொடர்பு, கொசுவிரட்டி, கொசுவலை பயன்பாடு, கொசு உற்பத்தி இடங்களை அழித்தல் போன்ற காரணங்களாலும் கொசுவினால் பரவும் நோய்

குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதாலும் மலேரியாவினால் ஏற்படும் மரணம் பெருமளவு குறைந்தது.

மலேரியா, உலக வரலாற்றையே மாற்றியமைத்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இந்நோய் ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி என்ற பாகுபாடின்றி ஏராளமான உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. மகா அலெக்சாண்டர், செங்கிஸ்கான், நெப்போலியன் உள்ளிட்ட பேரரசர்களின் தோல்விகளுக்குக் காரணமான மலேரியா, போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

அலெக்சாண்டர், அகஸ்தஸ் சீசர், போப் கிரிகோரி, மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான், ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்லஸ், இத்தாலியக் கவிஞர் டேண்டி, 1521-லிருந்து பல போப்பாண்டவர்கள், இந்தி நடிகர் அம்ரிஷ் புரி உள்ளிட்ட பல பிரபலங்களும் மலேரியா தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.

அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், அதிபர் ஆபிரகாம் லிங்கன், அதிபர் ஜான் எஃப். கென்னடி, நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி, அன்னை தெரசா உள்ளிட்ட பிரபலங்களும் தலைவர்களும் மலேரியா நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்களே. உலகை உலுக்கிய பல்வேறு போர்களின் போக்கினை மலேரியா மாற்றியமைத்தது என்றால் மிகையல்ல.

மனித உயிர்களின் இறப்பிற்கும், உலக நாடுகளின் பொருளாதார இழப்பிற்கும் காரணமான மலேரியாவைக் கட்டுப்படுத்தத் தொடர்ச்சியாக பெரும் பொருள் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படன. கி.மு. 300-இல் இந்தியாவின் கிரக்கா மலேரியா காய்ச்சலை ஐந்து பிரிவுகளாகப் பிரித்தார். பின் கி.மு. 100-இல் சுஸ்ருத்தா சம்கித்தா மலேரியா நோயானது பூச்சிகளுடன் தொடர்புடையது எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், 1882- ஆம் ஆண்டு மலேரியா பரவுவதற்கு கொசுக்கள்தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு மலேரியா நோயினை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் எனப்படும் ஒரு செல் முன்னுயிரியானது கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டது.

சர் ரொனால்டு ரோஸ் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மலேரியா நோய்க்கிருமியானது நோய்த் தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனாபிலிஸ் பெண் கொசு மூலம் பரவுகிறது எனக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பானது மலேரியாவினைக் கட்டுப்படுத்த அடித்தளம் அமைத்ததால், 1902-ஆம் ஆண்டு ரொனால்டு ரோஸிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  1907}ஆம் ஆண்டு மலேரியா நோய்க்கிருமியான பிளாஸ்மோடியத்தினைக் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்ட அல்போன்ஸ் லாவரெனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வியன்னாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜீலியஸ் வாக்னர் ஜாரெக் 1927-இல் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மேற்கொண்ட ஆய்விற்காகவும், கொசுக்களைக் கட்டுப்படுத்த பால் கெர்மன் முல்லர் 1942-இல் தயார் செய்த பூச்சிக்கொல்லியான ஈஈப-க்காக 1948-ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றனர்.

நரம்பு செல்களில் ஆய்வு மேற்கொண்டு நோபல் பரிசு பெற்ற கேமினோ கோல்ஜி மலேரிவியாவினைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளின் ஆய்வுக்கூடங்களில் இன்றைக்கும் மலேரியாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. உயிரித் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மலேரியா நோய்க் கிருமியான பிளாஸ்மோடியம், மலேரியாவினைப் பரப்பும் அனாபிலிஸ் கொசுவின் மரபணுக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நோயின் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு காரணமாக மலேரியாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது கணிசமான அளவு குறைந்துள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் போதிய அளவு நிதி, பூச்சிக்கொல்லி கையிருப்பு போன்ற குறைபாடுகளினாலும் போதிய ஒருங்கிணைப்பு இன்றியும் காணப்பட்டாலும், பின்னர் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயல்பாடுகள் காரணமாக இன்றைக்கு மலேரியாவினால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து சில நூறுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மலேரியாவினைக் கட்டுப்படுத்த மக்கள் மேற்கொண்ட வழிமுறைகளை வரலாற்று ஆய்வுகள் மற்றும் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மலேரியா உள்ளிட்ட நோயினைப் பரப்பும் கொசுக்களை அதன் உற்பத்தியினை தடுத்தல், தேங்கியிருக்கும் கழிவு நீர்நிலைகளை அழித்தல், நீரோடைகளைத் தேக்கமின்றி பரமாரித்தல், தாவர பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி கொசு மற்றும் கொசுவின் இளம் உயிரிகளை அழித்தல், கொசுக்கடியிலிருந்து விடுபட கொசு வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முறைகளைக் கையாண்டு கொசுவினால் பரவும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

மலேரியா நோயின் கோரத் தாண்டவம் உலகின் பல பகுதிகளில் இன்றைக்கு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மலேரியாவினால் மனித உயிர்கள் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

ஏப்ரல் 25, உலக மலேரியா தினம்.

கட்டுரையாளர்:

முனைவர்.பி. மாரியப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com