வாராக் கடனின் விஸ்வரூபம்!
பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி அன்று அரசுடமை வங்கிகளின் பங்குகளின் மதிப்பு 12.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட


பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி அன்று அரசுடமை வங்கிகளின் பங்குகளின் மதிப்பு 12.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 29 பொதுத்துறை வங்கிகளில் 8 வங்கிகள், 2015 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், கடும் இழப்பை சந்தித்துள்ளன. இதில் இரண்டு அரசுடமை வங்கிகள் முறையே ரூ.1,505 கோடி மற்றும் ரூ.1,425 கோடி நஷ்டமடைந்துள்ளன. மீத வங்கிகளின் காலாண்டு இழப்பு ரூ.837 கோடி முதல் ரூ.119 கோடி வரை வித்தியாசப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட லாபம் ஈட்டிய வங்கிகளும், முந்தைய காலாண்டு லாபத் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே லாபம் ஈட்டி உள்ளன.
இதற்கு முக்கிய காரணம், வங்கிகளின் வாராக் கடன் தொகை அபரிமிதமாக அதிகரித்துள்ளதுதான். பொதுத்துறை வங்கிகளின் என்.பி.ஏ. (Non Performing Asset) என்கிற வாராக் கடன் தொகை 31.3.2016-இல் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடியைத் தொட்டுவிடும் என்று தோன்றுகிறது.
வங்கியில் வாங்கிய கடன் திரும்பச் செலுத்தப்படாமல் போவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், எப்பொழுதெல்லாம் பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் வாராக்கடன் அதிகரிப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால், இது மட்டுமே காரணம் அல்ல. சில நேரங்களில் வங்கிகளே கூட வாராக் கடனுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணமாக, வாடிக்கையாளர் கடன் விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்கிட அதீத தாமதம் செய்வதுகூட ஒரு காரணம் எனலாம்.
"பிராஜெக்ட்' என்று சொல்லக்கூடிய, தொழில் தொடங்குவதற்கான திட்டத்தின் செலவு அதிகரித்துவிடுகிறது. சில நல்ல வியாபார வாய்ப்புகள் காலதாமதத்தால் நழுவி விடுகின்றன. அவசரத்துக்கு வெளியாரிடம் அதிக வட்டிக்குக் கடனுக்கு கடன் வாங்கி, வாடிக்கையாளர் அந்த கடன் சுழற்சியில் சிக்கிவிடக்கூடும். இப்படி பல வகையில் சூழ்நிலை பாதகமாக மாறிவிடக்கூடும்.
சில நேரங்களில் வங்கிகள் தொழில்துறை நிபுணத்துவத்துடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில்லை. அதேபோல் கடன்வழங்கிய பிறகு, வங்கிக்கடன் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பதில்லை. தொழில் தொடங்குபவரின் தவறான அணுகுமுறையும் ஒரு காரணமாக அமையக்கூடும். இவை யாவும் வாராக்கடனுக்கு வழி கோலுகின்றன.
இதற்கெல்லாம் மேலாக, மிகவும் கவலை அளிக்கும் காரணம் ஒன்று உண்டு. அதுதான், கடனைத் திரும்பச் செலுத்த வசதி இருந்தும், சொந்த வாழ்க்கை வளமாக இருந்தாலும், வேண்டும் என்றே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தைக் காரணம் காட்டியோ அல்லது லாபத்தை வேறு காரணங்களுக்காக பயன்படுத்திவிட்டு கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களைக் கண்டறிந்து, சட்டத்துக்கு முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவதற்கு அண்மைக்காலமாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் முனைப்பு காட்டி வருகின்றன என்பது ஆறுதல் தரும் விஷயம்.
இதற்கிடையில், வாராக்கடன் விஷயத்தில் கவலை அளிக்கும் இன்னொரு அம்சம் என்னவெனில், 2013-ஆம் நிதி ஆண்டிலிருந்து 2015-ஆம் நிதி ஆண்டு வரையில் 1.14 லட்சம் கோடி ரூபாயை, வசூலிக்கப்படாத கடன்களை 29 பொதுத் துணை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இந்த தொகை, அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகையைவிட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
ஸ்டேட் பேங்க் ஆப் செளராஷ்ட்ரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தோர் ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் ஒரு ரூபாய் வாராக் கடனைக்கூட சந்திக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ÷வாராக் கடனை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 2014-15ஆம் ஆண்டு முதல் பாரத ரிசர்வ் வங்கி பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கார்போரேட் கடன் மறு சீரமைப்பு Corporate Debt Restructuring (CDR) திருத்தி அமைத்திருப்பது, வங்கிகளின் கூட்டுக்குழு ((Joint Lenders Forum) அமைக்கப்பட்டது, வங்கிகள் தன்னிடம் உள்ள வாராக் கடன்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தக் கூடிய புதிய நடைமுறைகள், அத்தகைய கடன்களுக்கு ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிப்பது, அத்தகைய கடன்தாரர்களின் நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டை வங்கியின் கைக்கு மாற்றுதல் (Strategic Debt Restructuring - SDR திட்டம்) ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கைகளில் சில.
2017 மார்ச் மாதத்திற்குள், வங்கிகளின் "பேலன்ஸ் ஷீட்கள்' உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் நோக்கம்.
இது சாத்தியமா என்கிற விமர்சனத்தை தீபக் பாரெக் போன்ற அனுபவமிக்க நிபுணர்களும் வங்கியாளர்களும் முன் வைக்கிறார்கள். கடன் தள்ளுபடியில் (Write off) இரண்டுவகை உண்டு. ஒன்று, டெக்னிகல் (Technical write off), இரண்டாவது பாரம்பரியமான தள்ளுபடி.
டெக்னிகல் தள்ளுபடி என்பது சமீப காலத்தில் அறிமுகமானது. வங்கிக் கிளை அலுவலக கணக்குகளில் அந்த கடன் தொடரும். ஆனால், வங்கியின் தலைமை அலுவலக கணக்குகளில் அது நீக்கப்படும். அதிகாரபூர்வ "ஆடிட்டர்கள்' இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்கான ஒதுக்கீட்டை முறையாக செய்திடவும் வேண்டும். கடனை வசூலிப்பதற்கான முயற்சிகள் தொடரும்.
இதனால் வங்கிகளுக்கு என்ன லாபம்? Technical Write Off-க்குப் பிறகு வங்கியின் "பாலன்ஸ் ஷீட்'களில், வாராக் கடனாக இது இடம் பெறாது என்பதும், வருமான வரி விலக்குக் கிடைக்கிறது என்பதும் தான் லாபம்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், தற்போது லண்டன் மாநகரில் வசிப்பவருமான கே.சி.சக்ரவர்த்தி இந்த டெக்னிகல் தள்ளுபடி முறையைக் கைவிட வேண்டும் என்று கருத்து தெவித்துள்ளார். இதற்கு அவர் கூறுவது, ஒன்று இந்த முறையை எந்த ஒரு சிறு தொழில் கடனுக்கும் கையாளுவதில்லை. பெயரளவில் வணிகக்கூட்டாண்மை நிறுவன (கார்பொரேட்) கணக்குகளுக்கு மட்டும் தான் இது கையாளப்படுகிறது. இது பாரபட்சமான அணுகுறையும்கூட.
இரண்டாவதாக, பல நகரங்களில் இதுபோன்ற கணக்குகளில் உள்ள அடமானச் சொத்துகளை சொத்து மறு சீரமைப்பு கம்பெனிகளிடம் (Asset Reconstitution Company) வந்த விலைக்கு விற்றுவிட்டு, கணக்கை முடிவுக்குக் கொண்டு வருகின்றன வங்கிகள் என்கிறார் கே.சி.சக்ரவர்த்தி. இவர் ரிசர்வ் வங்கியில் 2009 முதல் 2014 வரை வங்கிகள் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விக் கடன் உள்ளிட்ட சிறிய கடன்கள் வாராக்கடனாகும் போது, அந்த நபர்களின் விவரங்களை புகைப்படத்துடன் வங்கிகள் வெளியிடுகின்றன. ஆனால், பெரும் தொழிலதிபர்களின் கடன்கள் வாராக் கடனாகும்போது, சம்பந்தப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படுவதில்லை. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.
வாராக் கடன் விஷயத்தில் வியப்பளிக்கும் விஷயம் என்னவெனில், வெறும் முப்பது நிறுவனங்களிடம் மட்டும் முடங்கியுள்ள வாராக் கடன் தொகை ரூ.95,000 கோடி என்பதே.
அதாவது, ஒட்டுமொத்த வாராக் கடனில் நான்கில் ஒருபங்கு வெறும் 30 நிறுவனங்களிடம் கையில் சிக்கியுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் (willful defaulters).
இந்நிலையில், சமீபத்திய சில நிகழ்வுகள் இருளில் தோன்றிய ஒளிக்கீற்று எனலாம். ஒன்று விஜய் மல்லையாவின் UBHL கம்பெனியை வேண்டும் என்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் என பாரத ஸ்டேட் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியும் சட்டபூர்வமாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.
இதன் மூலம் இந்தக் கடன் தொகை மட்டும் அல்லாமல் பிற "வில்ஃபுல் டிஃபால்டர்'களும் கடன் தொகையை விரைந்து திரும்பச் செலுத்த முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். காரணம், இந்த அறிவிப்பினால் ஏற்படும் கடும் விளைவுகள் அப்படி.
உதாரணமாக, வேண்டும் என்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும், அல்லது நிதி அமைப்புகளிலும் கடன் வாங்க இயலாது. இரண்டாவது, இதுபோன்ற நிறுவனங்களின் இயக்குனர்கள் வேறு எந்த நிறுவனத்திலும் இயக்குனர்களாக செயல்பட முடியாது. மூன்றாவதாக, முக்கியமாக, இவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவார்கள்.
சில மாதங்களுக்கு முன், பொதுக் கணக்குக் குழு எனப்படும் நாடாளுமன்றக் குழுவின் முன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அழைக்கப்பட்டார். அது சமயம் வாராக்கடன் தொடர்பான பல்வேறு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. தேவையான விளக்கங்களையும் ரகுராம் ராஜன் நாடாளுமன்றக் குழுவின் முன் சமர்ப்பித்தார்.
அப்போது, நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களில் சிலர், மேற்கூறிய நிறுவனத்திடம் வங்கிகள் மென்மையான, சாதகமான போக்கைக் கடைபிடிக்கின்றனவா என்று ரகுராம் ராஜனிடம் வினா எழுப்பியதாக செய்திகள் வெளியானது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பெரிய அளவில் வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாதவர்களின் நிறுவனங்களில், வங்கிகள் ஏன் தங்கள் பிரதிநிதியை இயக்குனர் குழுவில் இயக்குனராக நியமிக்கக் கூடாது என்ற வினாவும் மேற்கூறிய குழுவில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியின் தலைமையிலான நாடாளுமன்ற நிதி தொடர்பான நிலைக்குழுவிலும், வங்கிகளின் வாராக்கடன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விளைவாக, வங்கிகளின் வாராக் கடன்களை தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்றும், இது பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ரூ.500 கோடிக்கும் மேல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் நிலுவையில் உள்ள வாராக் கடன்களின் பட்டியலை தங்களுக்கு சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இப்படியாக வாராக்கடன் பிரச்னை ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுக்கும் அதே நேரம், இது ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதால், இதற்கான தீர்வும் விரைந்து வசப்படும் என்று நிச்சயமாக நம்பலாம்.
கல்விக் கடன் உள்ளிட்ட சிறிய கடன்கள் வாராக்கடனாகும் போது, அந்த நபர்களின் விவரங்களை புகைப்படத்துடன் வங்கிகள் வெளியிடுகின்றன. ஆனால், பெரும் தொழிலதிபர்களின் கடன்கள் வாராக் கடனாகும்போது, சம்பந்தப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படுவதில்லை. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...