ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாக்களித்தால் மட்டுமே...

அரசியல் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. அதனால், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார வியூகம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

News image
Updated On :18 மார்ச் 2016, 8:16 pm

பெ. சுப்ரமணியன்

அரசியல் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. அதனால், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார வியூகம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் எக்கட்சியையும் சாராத, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் தாங்கள் "கவனிக்க'ப்படுவோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணம் அண்மைக் கால தேர்தல்களில் இலைமறை காயாக உருவாகி இன்று பகிரங்கமாகக் கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது.

இத்தகு நிலைக்கு வாக்காளர்கள் காரணமன்று என்பது யாவரும் அறிந்த உண்மை.கடந்த காலங்களில் தேர்தல்களில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்றே வாக்காளர்கள் கருதினர். ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறிவிட்டது.

வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பது ஏன்? மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதது காரணமா? அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்புணர்வா என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

இந்தியா சுதந்திரமடைந்து 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. முதல் பொதுத் தேர்தலின் போது ஜாதி, மதம், இனம், பாலினம் போன்றவற்றைப் பொருள்படுத்தாமல், 21 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பல ஆண்டுகள் கழித்து 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நவீன ஜனநாயகங்களைவிட இந்தியா ஒருபடி மேலே சென்றுவிட்டது.

ஆனால், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவுக்குப் பின்னர் பதிவான வாக்குகள் பற்றிய விவரம் வெளியாகும் போது உயர் வகுப்பினரும், எழுத்தறிவுமிக்கவர்களும் வசிக்கும் பகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது தெரியவரும்.

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் படித்தவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் விகிதம் எதிர்பார்க்கும் அளவில் இல்லை. ஏழை மக்களும், நலிவடைந்த மக்களும் தான் அதிக எண்ணிக்கையில் உற்சாகத்துடன் வாக்களிக்கின்றனர்.

நியாயமான காரணங்கள் இல்லாத நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தவறுவது ஜனநாயகத்திற்கு கேடுவிளைவிப்பது போன்றதாகும். வாக்களிக்காமல் இருப்பதற்கு, தாங்கள் வாக்களிப்பதால் எவ்வித மாறுதலும் ஏற்படப்போவதில்லை என்று பலர் கருதுவதும் ஒரு காரணமாகும்.

பதிவாகும் லட்சக்கணக்கான வாக்குகளில் தன்னுடைய ஒரு வாக்கு எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று வாக்காளர் எண்ணுகிறார்.

வாக்களிக்காமல் இருப்பது எதிர்ப்பைக் காட்டத்தான் என பலரும் கருதுகின்றனர். இதே போன்று அனைவரும் எண்ண ஆரம்பித்துவிட்டால், வாக்குரிமை அளித்திருப்பதில் எவ்வித நன்மையும் ஏற்படாது. ஒரே ஒரு வாக்கிற்கும் மிகப்பெரிய சக்தி உண்டு என்பதை மசோதாக்கள் நிறைவேற்றும் போதும், பெரும்பான்மையை நிரூபிக்கும் போதும் அறிய முடியும்.

அரசியல் கட்சிகளின் மீதான கருத்துகள் வாக்காளருக்கு வாக்காளர் வேறுபடலாம். அவர்கள் தங்கள் கருத்துக்கேற்ப எந்த அணியைத் தேர்வு செய்யலாம் என்று பலரும் சிந்தித்துத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்வது வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

சொந்தமாக ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது சிரமம் தான். கூட்டத்தோடு கூட்டமாக ஜாதி, மத அல்லது கட்சி அடிப்படையில் வாக்களிக்கும் மந்தை மனப்பான்மை எளிதானது. ஆனால், ஏற்றமுடையது அல்ல. சொந்த மனப்பான்மை தான் சுதந்திரத்தின் அடிப்படை, சுதந்திரத்தின் அளவுகோலும் கூட. ஆனால், அதனையும் பெரும்பாலானோர் சுமையாகக் கருதுகின்றனர்.

எழுத்தறிவில் பின்தங்கியிருப்போர் நிலை இவ்வாறெனில், வாய்ப்பு, வசதி, கல்வி இவையெல்லாம் அதிகம் இருக்குமிடத்தில் வாக்களிப்பதில் ஆர்வமும், அக்கறையும் குறைவாகவே இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டப் பேரவைத் தேர்தலாகட்டும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வாக்குப்பதிவு நிலவரங்களை உற்று நோக்கினால் இந்த உண்மை தெரியவரும்.

இவ்வாறு தங்களின் மனநிலைக்கு ஏற்ப ஏதேனுமொரு காரணத்தால் வாக்களிக்காதவர்களைப் பற்றி ஆட்சியாளர்களும் கவலைப்படுவதில்லை. ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாததால் இவர்களும் மீண்டும் வாக்களிப்பதில் இருந்து விலகிக் கொள்கின்றனர்.

இது ஒருவகையான நச்சு வட்டம் போன்றது. இந்த வட்டம் உடைத்தெறியப்பட வேண்டும். இந்த மாற்றத்தை அரசியல் வர்க்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. மாற்றம் வரவேண்டுமாயின் அது வாக்காளர்களாகிய பொதுஜனங்களிடம் இருந்து தான் வரவேண்டும்.

மக்களாட்சியில் நல்லாட்சி பெறுவதற்கு முதல்படி தேர்தல். அதனால் வாக்களித்தால் மட்டுமே வழிபிறக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பில் பங்குபெற வேண்டும்.

வாக்காளர்கள், குறிப்பாக வாக்குரிமை பெற்ற இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான். எத்தகைய அரசு அமைய வேண்டும், எத்தகைய சமூகம் உருவாக வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

அதற்கான தீர்வு அத்தகையோர் அனைவரும் வாக்களிப்பதில் தவறாமல் பங்குகொள்வதுதான். அவ்வாறு வாக்களிக்கும் போதுதான் அனைத்திற்குமான வழியும் பிறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.