வரும் கடனும், வாராக்கடனும்

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்; விவசாயம் நலிவடைந்தால் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். விவசாய மேம்பாடு
Updated on
3 min read

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்; விவசாயம் நலிவடைந்தால் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். விவசாய மேம்பாடு மூலமே நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
 தில்லியில் மார்ச் 19 அன்று நடந்த விவசாயிகள் முன்னேற்ற மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். வரவேற்க வேண்டிய பேச்சுதான். ஆனால், இது செயல்பாட்டில் வரவேண்டாமா?
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளினார். அந்தப் புலவரின் வாக்கு இக்காலத்துக்குப் பொருந்தி வரவில்லையே.. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது வெறும் பழமொழியல்ல. இன்றைய விவசாயத்தின் நடைமுறையாக அல்லவா இருக்கிறது!
 விவசாயிகள் தேசத்தின் உயிர்நாடிகள்; அவர்கள் இல்லாமல் தேசம் இல்லை. அவர்கள் முன்னேறாமல் தேசம் எப்படி முன்னேறும்? இதனைத் தேசமும் ஆளுவோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 விவசாயிகளின் தற்கொலை என்பது நாடு தழுவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் கண்டு களைய வேண்டிய அரசு, கண்டும் காணாமல் இருக்கிறது. ஆறுதல் கூறுவதும், அறிக்கைகள் விடுப்பதும் போதுமா?
 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்னும் நடுத்தர விவசாயி டிராக்டர் வாங்கிய கடனுக்காகத் தாக்கப்பட்டுள்ளார். டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 2011-ஆம் ஆண்டில் கோடக் மகேந்திரா என்ற தனியார் நிறுவனத்திடம் 3 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய அடிப்படையில் டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது. அந்தக் கடன் தொகை, தன் வேளாண்மை வருமானத்தின் மூலமாக 6 தவணைகளாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 வரை திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
 கடந்த சில ஆண்டுகளாக விவசாய வருமானம் பாதிக்கப்பட்டதால் கடைசி இரண்டு தவணைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதுபற்றி எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த மார்ச் 5 அன்று பாப்பாநாடு காவல் துறையினர் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அவரைத் தாக்கி, டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அடித்து லாக்கப்பிலும் அடைத்துள்ளனர்.
 இதனைப்போலவே மற்றொரு நிகழ்ச்சி அரியலூர் அருகே நிகழ்ந்துள்ளது. ஆறுமுகம் என்பவரின் மகன் அழகர் என்னும் விவசாயி கடன்தொகை செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனம் அவர் டிராக்டரைப் பறிமுதல் செய்துவிட்டது. அந்த அவமானம் தாங்காமல் அந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 இவர் அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. 26 வயது நிரம்பிய இளைஞர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் டிராக்டர் வாங்குவதற்காக ரூ.7 லட்சம் கடன் பெற்றிருக்கிறார்.
 இந்த கடன் தொகையில் ரூ.5.10 லட்சம் வரை திரும்பச் செலுத்தியுள்ளார். விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக குறிப்பிட்ட நாளுக்குள் கடனைச் செலுத்த முடியவில்லை.
 இதனால், அந்தத் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த விவசாயியிடம் சென்று தகாத வார்த்தைகளால் பேசி, டிராக்டரையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த விவசாயி அழகர், பூச்சி மருந்தை வாங்கிக் குடித்து மரணமடைந்துள்ளார்.
 விவசாயிகளின் கடன் தொடர்பான இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தனியார் நிதி நிறுவனங்களின் தொடர்பினை அறிய முடிகிறது. பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளுக்கு முறையாகத் தேவைப்படும்போது கடன் கொடுத்து உதவியிருந்தால், அவர்கள் தனியார் நிறுவனங்களைத் தேடிப்போகும் நிலை ஏற்பட்டிருக்காது.
 இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து கொண்டிருக்கிறான் என்று 1928-இல் ஆங்கிலேயரின் ராயல் குழு அறிக்கை குறிப்பிட்டது. அந்த நிலையே இப்போதும் தொடர்கிறது என்பது விவசாயி வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.
 விவசாயிகள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அடாவடிச் செயல்களில் ஈடுபடும் நிதி நிறுவனத்தினர் மீதும், அதற்குத் துணைபோகும் காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்டமும் விவசாயிகளிடம் இத்தகைய வசூல் நடவடிக்கை கூடாது என்று பல முறை கூறியிருந்தும் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணச் சட்டம் 2008, விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டாமா? விவசாயிகள் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்வது, அவமானப்படுத்துவது, தற்கொலைக்குத் தூண்டுவது என்னும் நடவடிக்கைகளால் அவர்கள் விவசாயத்திலிருந்து துரத்தப்படுகின்றனர்.
 1995 முதல் 2010 வரையிலான காலங்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 694 பேர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் காரணம் கடன் சுமைதான். கடன் தேவைப்படும் உண்மையான விவசாயிகளுக்கு அரசின் நிதி நிறுவனங்கள் கடன் தருவதில்லை. இதனால் தனியார் நிதி நிறுவனங்களின் ஆசை வலையில் சிக்கி மோசம் போகின்றனர். தனியார் நிறுவனங்கள் எல்லாம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றாலும் அவற்றின் முறையற்ற செயல்பாடுகளை அரசும் காவல் துறையும் கண்டுகொள்வதில்லை. இதன் பின்னணி என்ன என்பது அனைவரும் அறிந்ததுதான்.
 விவசாயிகளின் உற்பத்தி என்பது அவர்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமல்ல. நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ஆகும். அவர்கள் தாங்கள் பட்டினி கிடந்து, நாட்டு மக்களின் பசியைப் போக்குவதற்காகப் பாடுபடுகின்றனர். இதனை எளிதாக மறந்து விடுவது நன்றி கொன்ற செயலாகும்.
 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குவிந்துகிடக்கும் வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டிருக்கின்றனவா? இப்போது செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபடும் விஜய் மல்லையா 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார். அவர் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதுகூட வங்கிகளுக்குத் தெரியவில்லை.
 கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக ஐ.டி.பி.ஐ. வங்கியில் பெற்ற 900 கோடி கடனை விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இந்த விவகாரத்தில் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மார்ச் 18 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென்று சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 ஆனால், அமலாக்கத் துறையின் முன்பு நேரில் வருகை தராமல் ஏப்ரல் மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பது பற்றி அமலாக்கத் துறை அதிகாரிகள் திணறி, வேறு வழியில்லாமல் ஏப்ரல் 2 அன்று நேரில் வருகை தர புதிய அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
 இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி அவருக்கு அளித்திருந்த கடனை வசூலிப்பதற்காக மும்பையில் உள்ள அவரது கிங்ஃபிஷர் இல்லம் மற்றும் 9 சொகுசு கார்கள் இணைய வழி ஏலம் விடப்பட்டன. ஆனால், அவற்றை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
 இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட கடனை வங்கிகள் ஒரு பைசா பாக்கியில்லாமல் முழுமையாக வசூலிக்கும் என்று தெரிவித்துளார்.
 பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை மல்லையா திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ருவரீஸ் ஆகிய நிறுவனங்கள் வேண்டுமென்றே வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாதவை என அறிவித்துவிட்டன.
 இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் 13 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே விஜய் மல்லையா பிரிட்டன் சென்றுவிட்டார்.
 இதனிடையே, காசோலை மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமினில் வரமுடியாத பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இப்போதைக்கு இந்தியா திரும்பப் போவதில்லை என்று மல்லையா தெரிவித்துள்ளார். மல்லையாவை மத்திய அரசு வேண்டுமென்றே தப்பிச்செல்ல விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
 எப்படியிருந்தால் என்ன? இந்தியாவில் விவசாயி பாலனும் ஒரு குடிமகன்தான்; விஜய் மல்லையாவும் ஒரு குடிமகன்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அப்படியிருக்கிறதா இல்லையே, ஏன்?
 ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய விவசாயி அடிபடுகிறார்; கோடிக்கணக்கில் கடன் வாங்கியவருக்கு ராஜ உபசாரம் நடக்கிறது. அந்தத் தொழிலதிபர்கள் வாங்கிய கடன்கள் வாராக் கடன்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. ஆனால், ஏழை விவசாயி வாங்கிய கடன்கள் வாராக் கடன்கள் அல்ல, தாமதமானாலும் வரும் கடன்கள் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com