மானம் காத்த மும்மணிகள்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியினர் தோல்வியடைந்து வெறும் கையுடன்தான் திரும்புவார்களோ என்ற அவநம்பிக்கை வியாபித்திருந்த நிலையில், அதைத் தகர்த்தெறிந்து இரு பதக்கங்களை வென்று நமது நாட்டின் மானத்தைக் காத்துள்ளனர் பி.வி. சிந்துவும், சாக்ஷி மாலிக்கும்.

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள இந்த இரு வீராங்கனைகளையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இந்தியா முதன்முதலாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. அதுவும், ஒரேயொரு தடகள வீரரான நார்மன் பிரிட்சார்ட் மட்டுமே பங்கேற்றார். அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

அதன்பிறகு, 1920- ஆம் ஆண்டு முதல் தற்போதைய ரியோ ஒலிம்பிக் வரை இந்திய அணியினர் தொடர்ச்சியாகப் பங்கேற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை (2016, ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற இரு பதக்கங்கள் உள்பட) மொத்தம் 28 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 2012, லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை (2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதுதான் மிக அதிகப்பட்சமாகும்.

1920- 1980 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா 8 தங்கம் உள்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.

1984 முதல் இதுவரை ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் நம்மால் எந்தவொரு பதக்கத்தையும் வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் தொடர்கிறது.

2008, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நமக்கு ஆறுதல் அளித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் 6 முறை பதக்கம் எதையும் வெல்ல முடியாமல் வெறும் கைகளுடன் நாடு திரும்பினர்.

இத்தகைய பின்னணியில், அதிக பதக்கங்களைக் குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன், முதல் முறையாக மிக அதிக அளவாக 124 வீரர்கள், வீராங்கனைகளுடன் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்றது. மிகவும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறினர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சானியா மிர்ஸா, போபண்ணா, லியாண்டர் பயஸ் (மூவரும் டென்னிஸ்), சாய்னா நெவால் (பாட்மிண்டன்) உள்ளிட்டோர் தொடக்கச் சுற்றுகளிலேயே தோல்வியடைந்து ஏமாற்றமளித்தனர்.

பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அபினவ் பிந்த்ரா (துப்பாக்கி சுடுதல்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்) இருவரும் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர்.

இதனால், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் ஏதும் வெல்ல முடியாமல் இந்திய அணியினர் ஏமாற்றத்துடன்தான் நாடு திரும்புவர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

இந்த நிலையில், பி.வி. சிந்து மகளிர் பாட்மிண்டனில் வெள்ளியையும், சாக்ஷி மாலிக் மகளிர் மல்யுத்தத்தில் வெண்கலத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

இவர்களில் சிந்து இளம் வயதில் (21) ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனைகளையும் படைத்துள்ளார்.

இருப்பினும், உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக அளவு மக்கள்தொகையை (சுமார் 133 கோடி) கொண்ட இந்தியா, ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களைப் பெறுவதற்கே இந்த அளவுக்குப் போராட வேண்டியுள்ளதே என்ற யதார்த்த நிலையைப் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும்.

ஒலிம்பிக்கில் ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ள போதிலும், ஹாக்கி, டென்னிஸ், பாட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவை தவிர பிறவற்றில் உலகத் தரத்திலான வீரர்கள், வீராங்கனைகளை நம்மால் உருவாக்க முடியவில்லை.

இந்த நிலைமைக்கு, பல்லாயிரம் கோடி அளவுக்கு பணம் புரளும் கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை பிற விளையாட்டுகளுக்கு நாம் தருவதில்லை என்பது முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

பிற நாடுகளில் பள்ளிப் பருவத்திலிருந்தே அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் முறையான பயிற்சிகள் அளித்து, மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நடைமுறை இயல்பானதாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் பள்ளிகளில் விளையாட்டு இன்னமும் கட்டாயமாக்கப்படாத நிலைதான் உள்ளது.

மேலும், நமது விளையாட்டு அமைப்புகளை நிர்வகிப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளது. உலகத் தரத்திலான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்க முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

எனவே, இந்த அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து அரசியல்வாதிகளை வெளியேற்றி, அவர்களுக்குப் பதிலாக விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களையும், திறமையான முன்னாள் வீரர்கள், வீராங்கனைகளையும் நியமிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நம்மால் தலைசிறந்த விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் உருவாக்க முடியும்.

ஒரு நாடு பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி பெற்றால் போதாது. விளையாட்டுகளிலும் அந்த நாடு சிறந்து விளங்கினால்தான் உலக அரங்கில் உரிய மதிப்பும், மரியாதையும் அதற்குக் கிடைக்கும்.

நமது ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து, இனிமேலாவது விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com