கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கோட்டயத்தில் உள்ள இரு தொகுதிகளில் தந்தை, மகனை வேட்பாளர்களாக நிறுத்தி அதிரடி போட்டியை உருவாக்கியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரசாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளம், தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியைத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் மார்ச் 15-ல் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளத்தின் தென்பகுதியான கோட்டயத்தில் கிறித்தவ வாக்காளர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் தந்தையையும், மகனையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
அவர்கள் வேறு யாருமல்ல... மூத்த அரசியல்வாதியான பி. சி. ஜார்ஜ் மற்றும் அவரது மகன் ஷோன் ஜார்ஜ் ஆகியோர் ஆவர்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் திங்களன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய கேரளப் பகுதியின் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பூஞ்ஞாறு மற்றும் பாலா தொகுதிகளில் தந்தை - மகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பி. சி. ஜார்ஜ் தற்போது பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினராகப் பணியாற்றி வரும் நிலையில், ஷோன் ஜார்ஜ் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
ஏழு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி. சி. ஜார்ஜ் தனது சொந்தத் தொகுதியான பூஞ்ஞாறில் மக்களால் நன்கு அறியப்பட்ட பிரபலமான முகமாகத் திகழ்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய அவர், பல்வேறு கேரள காங்கிரஸ் பிரிவுகளில் செயல்படுவதற்கு முன்பு, கேரள ஜனபக்ஷம் (மதச்சார்பற்ற) என்ற கட்சியை சொந்தமாகத் தொடங்கினார்.
1981, 1982, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பூஞ்ஞாறு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தனது சொந்தத் தொகுதியிலேயே சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், அம்மாநிலத்தின் மூன்று முக்கிய அரசியல் கூட்டணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பொதுவாழ்க்கையில் தனது வெளிப்படையான மற்றும் துணிச்சலான பேச்சுக்கு பி. சி. ஜார்ஜ் பெயர் பெற்றவர்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, அவரது கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைக்கப்பட்டது.
இதற்கிடையில், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஷோன் ஜார்ஜ், ஒரே சட்டப்பேரவைத் தேர்தலில் தந்தையும் மகனும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதை தாங்கள் இருவரும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
எனினும், பூஞ்ஞாறு மற்றும் அதற்கு அருகிலுள்ள பாலா ஆகிய தொகுதிகளில் நாங்கள் இருவரும் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தேர்தலில் போட்டியிடுவது பலவிதமான நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது தனிநபர்கள் அல்ல, மாறாக, கட்சியே போட்டியிடுகிறது என்று கட்சித் தலைமை கூறியது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருவர் பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், மற்றொருவர் அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளராகவும் இருப்பதால், தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியே முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் என்றும் ஷோன் ஜார்ஜ் கூறினார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாலா தொகுதியில், எல்டிஎஃப் தலைவர் மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) கட்சியின் உச்சபட்சத் தலைவரான ஜோஸ் கே. மணி, மற்றும் தற்போதைய யுடிஎஃப் சட்டப்பேரவை உறுப்பினர் மணி சி. காப்பன் ஆகியோரை எதிர்த்து ஷோன் ஜார்ஜ் போட்டியிடுகிறார்.
பாலா தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுவதாக வரும் தகவல்களை அவர் நிராகரித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் எப்டிஎஃப் கூட்டணியும், ஜோஸ் கே. மணியும் பாலா தொகுதியின் தேர்தல் களத்தில் கணக்கில் கொள்ளத்தக்க நிலையில் இல்லை. இத்தொகுதியில் நடைபெறும் உண்மையான போட்டி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் மணி சி. காப்பனுக்கும், என்டிஏ கூட்டணிக்கும் இடையேதான் என்று அவர் கூறினார்.
பாலா தொகுதி எந்தவிதமான அரசியல் பழிவாங்கும் உணர்வை வளர்க்கும் தொகுதி அல்ல. மாநில நிர்வாகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எதுவும் பாலா தொகுதியை ஒருபோதும் பாதித்ததில்லை.
பாலா தொகுதியில் பாஜக - என்டிஏ கூட்டணி குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பெறும் என்றும் ஷோன் ஜார்ஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 23-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தலும், மே 4-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Summary
With Kerala counting days for the April 9 Assembly polls, the southern Kottayam district is witnessing a father and his son seeking votes as NDA candidates in two constituencies with considerable Christian voters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




