
மரணத்தின் காலடி ஓசை அண்மையில் கேட்கிறது என்பதை அறிந்தும் ஆனால் அது 13 நாட்களின் தூரத்தில்தான் நிலைகொண்டிருக்கிறது என்பதை அறியாமலும் தமிழ்ச் சமூகத்துக்குத் தன் கசப்பான ஆனால் கர்வமான விண்ணப்பத்தை முன்வைக்கிறார் புதுமைப்பித்தன்:
""தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது; மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன்; வறுமையில் சாகக் கிடக்கிறேன். எனவே என்னுடைய தமிழ்நாட்டாரைப் பார்த்து நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்க எனக்கு உரிமையுண்டு''
உயிர் வாழ்ந்த 42 ஆண்டுகளும் கல்லீரல் வரைக்கும் கசப்பையே தந்த இந்தச்
சமூகம் கடைசி 13 நாட்களில் எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கப்போகிறது என்பதை உய்த்துணரப் பாதிப் பகுத்தறிவே போதுமானது.
1948 ஜூன் 30 நள்ளிரவில் திருவனந்தபுரத்தில் இறந்து போனார்; ஜூலை 1 எரியுண்டார். எலும்பையும் அந்த எலும்பை மூடிவைத்திருந்த சதையில்லாத தோலையும் வறுமை காசநோய் என்ற இரண்டும் முன்பே தின்று முடித்திருந்ததால், எரிகாட்டில் ஏமாற்றமடைந்திருக்கக்கூடும்தின்பதற்கு மாமிசமில்லாத தீ.
எவன் தமிழ்ச் செவ்வியற் சிறுகதையின் முழு முதல்வன் என்று மூளைக் கொழுப்புள்ளவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டவனோ - தமிழ் உரைநடையைக் கலைக்கருவியாய் வார்த்தவன் எவனோ - தமிழ்ச் சாதியின் வாழ்வின் மீது இருநூறு ஆண்டுகளாய் மேய்ந்துகொண்டிருந்த சீலைப்பேன்களைத் தன் பேனா முள்ளில் குத்தியவன் எவனோ - அவன் - அந்தப்புதுமைப்பித்தன் வாழ்வின் கசப்பு தொண்டையில் விக்கிச் செத்துப் போனான்.ஆனால் அந்த வறுமை குறித்து வாழ்வின் கடைசி நாட்களில் தவிர அவர் கவலையுற்றாரில்லை. எந்த வறுமை அவரைச் சாகடித்ததோ அதுதான் அவர் செய்த கலை. கலைக் கருவுக்கு உயிர்த்திரவம் சுமந்தோடிய தொப்பூழ்க்கொடியே அந்த வறுமைதான். வறுமை என்பது எந்தக் கலைஞனுக்கும் ஏற்புடையதன்று. ஆனால் தனதுவறுமையை சமூக வறுமையாய்க்கண்டு எதிர்த்தாடியவன்தான் இலக்கியம் செய்திருக்கிறான்.
அடுப்புச் சாம்பலில் படுத்திருந்த பூனைகளும் "இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை'களும் "கையதுகொண்டு மெய்யது பொத்தி'க் கிடந்த கையறு நிலைகளுமே இலக்கியத்தின் ஊற்றுக் கண்களாய் இருந்திருக்கின்றன.
ஏதோ வறுமை என்பது எழுத்தாளனுக்கு மட்டுமான ஏகபோக உரிமை என்று கழிவிரக்கம் கொள்வது சரியன்று. சமூகத்தின் மீது வறுமை திணிக்கப்படுகிறது. அதில் எழுத்தாளனும் இருந்து தொலைக்கிறான். வறுமை ஏழையின் வாழ்வில் சாபமாகிறது. எழுத்தாளன் வாழ்வில் சாகசமாகிறது. வறுமையை சாகசமாக்கிய மகாகலைஞன் புதுமைப்பித்தன். வறுமைதான் எழுத்துக்கு வசதி என்பதற்குப் புதுமைப்பித்தனின் வாக்குமூலமே சாட்சி.
""வெங்கம்பட்டிகளாக இருந்தால்தான் எதைப்பற்றியும் எவனைப்பற்றியும் தயை தாட்சண்யமில்லாமல் எழுதலாம். சொத்து சுகமென்று வந்துவிட்டால் போலிகௌரவமும் வந்துவிடும். அதற்குப் பிறகு நேர்மையான இலக்கியச் சேவை செய்ய முடியாது. இப்போது என்னைத் தாக்கினாலும் கவலையில்லை. வழக்குப் போட்டால்கூட முந்தி வேட்டியை முன்னால் விரித்து மல்லாந்துவிடலாம்''.
புதுமைப்பித்தனைப் பொறுத்தவரையில் சொத்து என்பது தளை; வறுமையே விடுதலை.
அப்படியாயின் சாகக் கிடக்கையில் நிதிகேட்டதை நியாயப்படுத்த முடியுமா என்று கேட்கலாம். முடியும். அவர் சாகக் கிடக்கையில் நிதி கேட்டது உடல் தேவை. ஆனால் வறுமைதான் எழுத்தின் உயிர்த்தேவை; கலைத்தேவை. அதற்காக வறுமையை நியாயப்படுத்த முடியாது.
""எமக்குத் தொழில் எழுத்து'' என்பது ஒரு படைப்பாளியின் துணிச்சல் அல்லது தியாகம் என்றே கொள்ளப்பட வேண்டும். சமூக வெளியில் எழுத்து என்பது எப்போதுமே ஒரு கலைப்பொருளே தவிர விலைப் பொருள் அன்று. சந்தைக்கு ஒரு மொழியுண்டு; ஆனால் மொழிக்குச்சந்தையில்லை. இலக்கியத்தின் காலப்பெருவெளியில் ஒரு நிறுவனம் சார்ந்தே எழுத்து சந்தைப் படுத்தப்பட்டிருக்கிறது. மன்னன் - மதம் - அரசு - குடும்பம் - குழுமம் போன்ற அதிகாரமையங்களைச் சார்ந்தே மொழி சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சந்தை கிடைக்காதவனுக்கும், சந்தை கிடைத்தும் சரியான விலை கிடைக்காதவனுக்கும் சரக்கு தங்கள் நுகர்வுத்தரத்தில் இல்லை என்று நிராகரிக்கப்பட்டவனுக்கும் அந்த அதிகார மையங்கள்
வறுமையையே பரிசாய் வழங்கியிருக்கின்றன. அந்த அதிகார மையங்களை மீறியதும் சிதைக்கப் பார்த்ததும்தான் புதுமைப்பித்தன் எழுத்து.
நம்பிக்கை வறட்சிக்கு மத்தியில் "நமத்து'ப்போன விழுமியங்களை கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குதல் என்ற உட்சரடு புதுமைப்பித்தன் எழுத்துக்களில் ஊடாடி ஓடுகிறது. அந்தக் கதைவெளியில் பொடிநடைபோனால் சமூக நிறுவனங்களை அசைக்கும் அரவம் ஆங்காங்கே கேட்கிறது.
""சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!'' என்று தலையை உலுக்கினார் கந்த
சாமிப்பிள்ளை. ""தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் "காப்பிகள்' என்று சொல்''என்றார் கடவுள். ""அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்'' என்று தமிழ்க்கொடி நாட்டினார் பிள்ளை''.
"கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' என்ற இந்தக் கதையாடலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அல்ல இரண்டு மா மரங்களையே அடித்திருக்கிறார் புதுமைப்பித்தன்.
மனிதன் மண்டியிடுவது மதத்துக்கு. அவன் கைகூப்பிக் கிடப்பது கடவுள் என்ற அருவ உருவத்துக்கு. உலகத்தையே வெல்லுகிற மனிதனையும் கடைசியில் வெல்லுகிறவர் கடவுள் என்பது ஐதீகம். காலங்காலமாக வெல்லப்படாத கடவுளைக் காப்பிக் கடையில் வெல்கிறார் புதுமைப்பித்தன். "கள்' என்ற பன்மை விகுதியைக் காப்பியிலிருந்து கப்புக்கு இடம்மாற்றிக் கடவுளைத் தோற்கடித்து மதவழிப்பட்ட அதிகார மையத்தைத் தகர்த்துத் தரைக்கிழுக்கிறார்; மற்றும் "கடவுளிடமிருந்து விடுதலை' என்ற மனிதனின் தீராத ஆசையைத் தீர்த்து வைக்கிறார்.
"கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு. வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி' என்று (பொன்னகரம்) அம்மாளுவைச் சுட்டுகிறதுபோது திருமணம் என்ற நிறுவனத்தை எள்ளி நகையாடி எள்ளிறைக்கிறார்.
""நான் பரத்தையன்று; நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்'' (வாடாமல்லிகை) என்று பேசும் பிராமண விதவை சரசுவை விரும்பியோ விரும்பாமலோ சாகடித்து சமூக மரபுகள் என்ற மூடநெறிகள் மீது கண்ணீர்த் துளிகளால் கல்லெறிகிறார்.
""பிள்ளைமாருன்னா என்ன? கொம்பு முளைச்சிருக்கா. மனுசனக் கட்டிப்போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லியா. இன்னிக்கு சிரிக்கிறவுஹ நாளக்கி வாரதயும் நெனச்சுப் பாக்கணும்'' (நாசகாரக்கும்பல்) என்று நாவிதன் மருதப்பனைப் பேசவிட்டு நிலப்பிரபுத்துவத்தை உள்ளடங்கிய குரலில் எச்சரிக்கிறார்.
நாற்பத்திரண்டு ஆண்டுகால வாழ்வின் வழியெங்கும் கசப்புகளையும் ஏமாற்றங்களையும் - வறுமையையும் - வியாதிகளையும் விழுங்கியவர் தன் எழுத்தில் பொய் நம்பிக்கையைப் புனைந்துவைக்க முடியவில்லை. ஆனால் விஷச் செடிகளைத் தின்றாலும் வெள்ளாட்டுப்பாலில் விஷமில்லை என்பது மாதிரி அவர் வாழ்வில் தின்ற விஷம் எழுத்தில் இறங்கவில்லை. அது புரதமாகிவிட்டது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் காலப் பதிவாளன் மற்றும் கலைப்பதிவாளன் என்று புதுமைப்பித்தனைச் சொல்லலாம்.
உலகப் போர்கள் - உலகப் பொருளாதாரப் பின்னடைவு - பூமியை வஞ்சித்த வானம் - மக்களை வஞ்சித்த வர்ணபேதம் - அந்நிய ஆட்சி - அடிமை வாழ்வு போன்றவற்றால் முகம் கிழிந்து நெஞ்சுடைந்து கிடந்த சமூகத்தின் அழுக்கை - அவலத்தை - மனச்சிதைவைத் தன் நூறுகதைகளால் பேரோவியம் தீட்டிய பெருங்கலைஞன் என்று புதுமைப்பித்தனைச் சொல்லமுடியும்.
எந்தச் சித்தாந்தத்திலும் அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை என்பது அவர் மீது வீசப்படும் விமர்சனங்களுள் ஒன்று. "வாழ்வு தராத சுதந்திரத்தை என் கதைகளில் அனுபவிக்கிறேன். அதனால் சித்தாந்தம் எதிலும் சிக்கிக்கொள்ள மாட்டேன்' என்று அவர் கருதிக்கொண்டாரோ என்று கருதவேண்டியிருக்கிறது.
புதுமைப்பித்தன் மீது முன்வைக்கப்படும் இடதுசாரிகளின் தீவிர விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட பிறகும்கூட அவர் ஒரு கனத்த கதைசொல்லியாய் மிச்சப்படுகிறார்.
""ஷேக்ஸ்பியர் பற்றியும் ஹோமர் பற்றியும் டாந்தே பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் மகாபாரதம் பற்றியும் சொல்வதுபோல புதுமைப்பித்தனைப் பற்றியும் சொல்ல முடிகிறது'' - வாழ்த்துவதில் வார்த்தைக் கருமியான க.நா.சு இப்படி விதந்தோதுவது புதுமைப்பித்தனோடு நேர்ந்த பழக்கத்தால் அன்று: "கலை உய்ய இலக்கியம் ஓங்க வந்தவர்' என்று புதுமைப்பித்தன்மீது அவர்கொண்ட நகர்த்த முடியாத நம்பிக்கையே காரணமாயிருக்கலாம்.
புதுமைப்பித்தன் இப்படிக் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நெல்லைத் தமிழ் தந்த மரபறிவு - ஆங்கில இலக்கியத்தின் கூட்டறிவு - பத்திரிகை உலகம் தந்த உலகறிவு - வாழ்வின் வலிகள் தந்த பட்டறிவு மற்றும் தன் உண்மையறிவு என்ற கலவையாய் இருக்கலாம்.
தன் மகன் விருத்தாசலத்தை வக்கீலாக்க அல்லது வாழ்க்கைக்கு ஆக்க ஆங்கிலக் கல்வி ஊட்டினார் தாசில்தார் சொக்கலிங்கம் பிள்ளை. அந்த ஆங்கிலக் கல்வி மடைமாற்றமுற்று இலக்கியப் பயிர் செழிக்கவே உதவியது.
தாமஸ் ஹார்டி - எமிலி ஜோலா - டி.எஸ் எலியட் - ஹென்றி மில்லர் - டபிள்யூ.எச்.ஆடன் - லூயி மக்னீஷ் - வி.எஸ்.பிரிச்செட் முதலியோரின் ஆங்கிலப் படைப்புகளால் கலையுருவம் கைவரப்பெற்றாலும், கம்பராமாயணம் - குறவஞ்சி - பள்ளு - பிரபந்தங்களில் பெற்ற ஊட்டம்தான் புதுமைப்பித்தனின் கதைமொழியை உயர்த்திப் பிடிக்கிறது. தமிழ்நாட்டு மண்ணையும் மனசையும் பிசைந்த தமிழ்தான் இலக்கிய ஒய்யாரத்தை ஏற்படுத்துகிறது.
அங்கயற்கண்ணி மணியூசல் ஆடுவதை "அன்று இரவு' கதையில் இப்படி எழுதுகிறார் புதுமைப்பித்தன்:
""மதுரை மூதூரின் கர்ப்பக்கிருகத்திலே மணியூசலிலே கருங்குயில் ஒன்று உந்தி ஆடிக்கொண்டிருந்தது. விளக்கற்ற வெளிச்சத்திலே புலன்களுக்கு எட்டாத ஒளிப்பிரவாகத்திலே மணியூசல் விசையோடு ஆடியது. அளகச் சுருள் புலன் உணர்வு நுகரும் இருட்டுடன் இருட்டாகப் புரள, கால் விசைத்து உந்திச் சுழி குழிந்து அலைபோல உகள, கொங்கைகள் பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள்''
திருக்குற்றாலத்தில் "இரு கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தா'டிய வசந்த சௌந்தரியோடு பந்து பயின்றவன் மட்டுமே உரைநடைக்கு இப்படி ஓர் ஒயில் ஊட்டமுடியும்.
அந்தக் கவிதைப் பரிச்சயம்தான் பாரதியார் பாடலையே திருத்தி எழுதுகிற கிருத்திரியத்தை அல்லது தைரியத்தைத் தந்திருக்கிறது புதுமைப்பித்தனுக்கு.
""சோலைப் பறவையெல்லாம்
சூழ்ந்து பரவசமாய்க்
காலைக் கடனில்
கருத்தின்றிக் கேட்டிருக்க''
-என்ற பாரதியின் குயில் பாட்டில் "காலைக் கடன்' என்ற வார்த்தைகளை மோந்து பார்த்துக் கெட்டவாசம் அடிப்பதாகக்கருதிய புதுமைப்பித்தன் "காலைக் களியில்' என்று திருத்தித் தன் மொழி மேலாண்மையை முன்மொழிந்துகொள்கிறார்.
தந்தையோடு முரண்பாடு - வறுமையே சாப்பாடு - பஞ்சம் பகிரும் நட்பு - பசையற்ற பத்திரிகை அலுவல் - நிலையற்ற வருவாய் - நிறைவற்ற வாழ்வு என்ற சூழலில் அவரை ஈரமாய் வைத்திருந்ததே விட்டேத்தி விமர்சனம்தான். அவநம்பிக்கை என்ற ஆயுட்சிறையை விட்டு அடிக்கடி ஜாமீனில் வரும் ஏற்பாடுதான் அவரது எள்ளலும் கேலியும்.
""நான் உங்கள் சிஷ்யன்; நீங்கள்தான் என் துரோணர்'' என்று வலிய வலிய வழிந்திருக்கிறான் ஓர் எழுத்தாளன். ""யாருக்கு வேணும் சிஷ்யப் பரம்பரை? ஆசாமி கட்டவெரலைக் கேட்டாத்தான் சரிப்பட்டு வருவான்'' - புதுமைப்பித்தன் சீறிச் சிரித்திருக்கிறார்.
""எப்படியாவது ஒரு கதை கொடுங்கள்'' என்று நச்சரிக்கிறார் ஒரு பத்திரிகை
ஆசிரியர். தாங்க முடியவில்லை புதுமைப்பித்தனுக்கு. ""ஏலே எழுந்துபோலே... என் எழுத்து நெருப்பு. ஒம் பத்திரிகை சாம்பலாகிப் போகும்லே'' என்று மெய்வாழ்விலும் எள்ளி நகையாடும் இந்த இயல்புக் கூறுதான் கதையிலும் கலைச்சரிகை நெய்திருக்கிறது.
வாழ்வின் விரக்தியில் விளைந்த நகைச்சுவைதான் -
""பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். க்ரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது
என்னைச் சுமந்தது (காஞ்சனை)'' - என்றும்
""கும்மிருட்டு... பஞ்சாங்கத்தின்படி
இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்துகொண்டால் முனிசிபாலிட்டி என்ன செய்ய முடியும்'' (பொன்னகரம்) - என்றும்
""கட்டில் கம்பியில் டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி இரண்டில் ஒன்றைக் காண்பிக்கும் சார்ட் (கட்டில் பேசுகிறது)'' - என்றும்
எழுத்திலே சுரமாகி இசை கூட்டுகிறது.
தமிழில் சிறுகதை என்ற முயற்சி பாரதியில் தொடங்கி வ.வே.சு.அய்யரில் வளர்ந்து மணிக்கொடியில் செழித்து திராவிட இயக்கம்வரை நீண்டு நிலைத்தாலும் அதன் உருவம் பழுத்தது புதுமைப்பித்தனில்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.
புதுமைப்பித்தனின் கதைகள் கலைஅமைதி கண்டிருக்கக் காரணம் அதன் ஒருமைதான்; கொண்ட கருத்தின் குவிமையம்தான். ஆடாமல் அசையாமல் அங்கிங்கு மேயாமல் குறி சென்று தைக்கும்அம்பின் ஒழுக்கம் வேண்டும் சிறுகதை என்ற பெரும்பொருளுக்கு. அந்த ஒழுக்கம் காக்கும் கதைகள் புதுமைப்பித்தன் படைப்பில் பல உள.
"நியாயம்' என்ற ஒரு சிறுகதை சொல்லும் அந்த ஒருமையின் முற்றிலக்கணத்தை. ""புண்ணாகிப்போன குதிரையை வண்டியில் பூட்டியதற்காகச் சுடலைமுத்துப்பிள்ளைக்கு அபராதம் விதித்த மேஜிஸ்டிரேட் தேவ இரக்கம் நாடார் பரமண்டலத்திலிருக்கும் பிதாவிடம் - எங்களை மன்னியும் நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கு மன்னிக்கிறோமே! ஆமென்...'' என்று ஜெபித்து முடியும் கதை ஓர் அணுவுக்குள் அண்டம் சுற்றும் அதிசயத்தைக் காட்டுகிறது.
"புதுமைப்பித்தன் என்ன சூனா மானாவா?' (சுயமரியாதைக்காரரா) என்று கேட்ட ராஜாஜியை ஒருமுறை சந்திக்கிறார் புதுமைப்பித்தன். அறிவுரைக்கிறார் ராஜாஜி:
""உங்கள் கற்பனையை ரசிக்கிறேன்; வெள்ளம்போல் வரும் கற்பனையை அணைகட்டித் தேக்கிப் பாய்ச்சினால்தான் பயனுண்டு''.
புதுமைப்பித்தன் எதிர்வினை செய்கிறார்:
""உண்மை. மலை உச்சியிலிருந்து விழுந்து மண்ணையும் மரத்தையும் அடித்துக்கொண்டு கரைபுரண்டுவரும் காட்டாறு அணைகட்டாமலும் எவ்வளவு அழகாயிருக்கிறது''.
அவர் விடைசொல்லி விடைகொண்டதும் புதுமைப்பித்தன் "சூனா மானா' அல்லர். "தானா தோனா' அதாவது "தான் தோன்றி' என்ற உண்மையை ராஜாஜியின் நாசியைப் போன்ற கூரியமதி கூறியிருக்கக் கூடும்ஏமாற்றங்களின் தொகுப்பாகிப்போன புதுமைப்பித்தன் வாழ்வில் கடைசி ஏமாற்றம் மரணம்; அதற்கு முந்தைய ஏமாற்றம் சினிமா.
தனது மொழிக்குப் பதிப்பகமும் பத்திரிகையும் தரமுடியாத சந்தையை சினிமா பெற்றுத்தரக் கூடும் என்று புதுமைப்பித்தன் நம்பியதற்குக் காரணமே அவர்தம் நண்பர்களான பி.எஸ்.ராமையா, கி.ராமச்சந்திரன் என்கிற "கி.ரா', "முருகதாசா' என்ற முத்துச்சாமி மூவரும் ஜெமினி கதை இலாகாவில் தொழில் செய்யப் போனதுதான். ஆனால் சினிமாவுக்குத் தேவை "திருநெல்வேவி அல்வா'தானே தவிரப் புதுமைப்பித்தனைப் போன்ற "சுத்த சூரணம்' அல்ல என்ற உண்மையை போகப் போக அவர் புரிந்துகொண்டார்.
""நான் இப்போது ஜெமினிக்கு "ஒளவை' கதையை அமைத்துக்கொடுக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனது கற்பனையை 'ஏண்ஞ்ட் க்ஷழ்ர்ஜ்' என்று முதலாளி பயந்தார். பிறகு அவர் பாதி தூரம் - நான் பாதி தூரம் விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொண்டோம்''
02.01.1946 அன்று மீ.ப. சோமுவுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் இது.
எந்த அமைப்போடும் சமரசம் செய்துகொள்வதை விரும்பாத ஒரு கலைஞன் சினிமாவுக்கெழுதிய சமரச வசனம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சாகா
வரம் அருளும் நெல்லிக்கனியை அதியமான் தனக்கு வழங்கியபோது ஒளவை சொல்வதாய்ப் புதுமைப்பித்தன் எழுதியது :
""மன்னா! உலகத்துக்குள் வர ஒரு வழிதான் உண்டு. போவதற்கோ பல வழிகள் இருக்கின்றன. அத்தனை வழிகளையும் இந்த நெல்லிக்கனி அடைத்துவிடுமென்று எதிர்பார்க்கிறாயா?''
சமரசங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட இதுபோன்ற வசனங்களுள் ஒன்று கூடப் படத்தில் இடம்பெறவில்லை. தன் எழுத்தில் காற்புள்ளி அரைப்புள்ளியில் கைவைத்தால்கூடப் பத்திரிகை - பதிப்பகம் இரண்டையும் சுட்டெரித்துவிடும் எழுத்தாளனை மொத்தமாய் நிராகரித்துவிடும் மூர்க்கம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சினிமா அறிவுடையோனை விரும்புவதைவிடத் தனது சந்தைக்கேற்ற அறிவை மட்டுமே விரும்புகிறது.
பாகவதருக்கு எழுதிய ராஜமுக்தியிலும் புதுமைப்பித்தன் முக்தியுறவில்லை. பூனாவிலிருந்து வசனமெழுதியவர் காசைவிட அதிகம் சம்பாதித்தது காசநோயைத்தான். கடைசியில் சாவதற்குத் திருவனந்த
புரம் ரயிலேறுகிறார். மனைவியார் திகைத்துநிற்க உடைந்த உருவமாய்க் கம்பூன்றி வருகிறார். படுத்த படுக்கையாகிறார். பார்க்க வரவில்லை பழகியவர்கள் யாரும்; சிலர் சொல்லிவிட்டும் வரவில்லை. அழைக்காமல் வந்தது மரணம்தான்.
வியர்த்துக் கொட்டுகிறது. ""எழுத்தை முழுநேரத் தொழிலாக எவனும் வைத்துக்கொள்ள வேண்டாம்'' என்ற இறுதி வாசகம் இருமலின் கோழையோடு வந்து விழுகிறது. பேசுகிறார்; பேசிக்கொண்டேயிருக்கிறார். பேசிக்கொண்டே மரிக்கிறார். மரித்த பிறகும் பேசப்படுகிறார்; மற்றும் படுவார்.
உலகச் சிறுகதைகளுக்குத் தமிழின் பங்களிப்பு என்று புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளை வீரியத்தோடு எடுத்து வீசலாம். தொண்டைக்குழி அழுத்தப்பட்ட மனிதர்களின் மர்மக்குரல்கள் அவை.
""இவையாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது - கண்டது - கனவு கண்டது - காணவிரும்பியது - காணவிரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை'' என்ற வாக்குமூலத்தின் மூலம் தன்னைப் பற்றி நிகழும் - நிகழவிருக்கும் இலக்கியத் தெருச்சண்டைகளைத் தவிர்க்கப் பார்த்திருக்கலாம் புதுமைப்பித்தன். ஆனால் சண்டைகளே குடும்பங்களையும் இலக்கியங்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. அவை தவிர்க்கவியலாதவை.
பாரதி போட்டுக்கொடுத்த ராஜபாட்டையில் பயணப்படாமல் நம்பிக்கை வறட்சி என்ற ஒற்றையடிப் பாதையில் ஒதுங்கிக்கொண்டார் புதுமைப்பித்தன் என்றவிமர்சனத்தைப் பொருட்படுத்தாமலிருக்க முடியாது.
ஆனால் புதுமைப்பித்தனை ஒரு கலாசார சக்தி என்று கொண்டாடும் வெங்கட் சாமிநாதன் ""எந்தச் சித்தாந்தமும் ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுதலை தரும் குரலாக எழும்பி இன்னொரு அடிமைத் தனத்திற்கு இட்டுச் செல்லும்'' என்று புதுமைப்பித்தனைக் காப்பாற்ற ஒரு சுற்றுச்சுவர் கட்டுகிறார்.
"கயிற்றரவு' கதையின் மூலம் மாயா
வாதத்திற்குள் புகுந்துவிட்டார் புதுமைப்பித்தன் என்ற குரலும் ஒரு காலத்தில் ஓயாதொலித்தது.
அதுகுறித்துச் சொல்வதற்கு எனக்கும் ஒன்றுண்டு.
"கயிற்றரவு' மாயாவாதம் இல்லை.
மனிதன் - வாழ்வு - அண்டம் எல்லாமே நிஜம்; ஆனால் மாயத்தில் முடியப்போகும் நிஜம்.
கயிறு மாயமெனில் அரவு நிஜம். அரவு மாயமெனில் கயிறு நிஜம். மனிதன் மாயமெனில் வாழ்வு நிஜம்; வாழ்வு மாயமெனில் மனிதன் நிஜம்.
புதுமைப்பித்தன் தமிழுக்குள் வந்துபோன ஒரு மாயம். அவன் கலை நிஜம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.