அண்மையில் எனது பூர்வீகக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு தெருக்குழாயில் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. யாரும் அருகே இல்லாத போதும், தெருக்குழாயின் அடைப்பான் உடைந்திருந்ததால் தண்ணீரை நிறுத்த முடியவில்லை. அந்தத் தண்ணீர் அருகிலுள்ள சாக்கடையில் சென்று கலந்து கொண்டிருந்தது.
இந்த அனுபவம் பலருக்கும் வேறு வடிவில் கிடைத்திருக்கலாம். திரையரங்கம், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், கழிப்பறைகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அடைக்கப்படாத குடிநீர்க் குழாய்களில் வீணாகும் தண்ணீரை பலரும் பல இடங்களில் பார்த்திருப்போம்.
நமது வீட்டிலேயேகூட வாஷ்பேசினில் குழாயைத் திறந்துவிட்டு பல் துலக்கும் நேரத்தில் பல லிட்டர் தண்ணீரை விரயம் செய்வோம்.
குடிக்கவும் நீரின்றி பல கிராமங்களில் மக்கள் அல்லல்படும் இதே நாட்டில்தான், தண்ணீரை இப்படி நாம் வீணாக்குகிறோம். தண்ணீரைப் பெற மக்கள் சிரமப்பட்ட காலங்களில் தண்ணீருக்கு மரியாதை இருந்தது. அதுவே எளிதாகக் கிடைக்கும்போது, அதன் சிறப்பு மறந்து போகிறது.
இன்றைக்கும் நூறு அடி ஆழக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துப் பயன்படுத்தும் சூழல் பல இடங்களில் உண்டு; ஒரு குடம் குடிநீரை பத்து ரூபாய் விலைக்கு வாங்கும் நிலை பல நகரங்களில் உண்டு. பயணங்களின்போது ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 20 ரூபாய் கொடுத்து வாங்கவும் நாம் தயார்.
நுகர்பொருளாக மாறும்போது குடிநீர் என்ற முறையில் அதற்கு விலை அடிப்படையில் மரியாதை கிடைக்கிறது. அதுவே வேறு உபயோகங்களுக்காக எளிதாகக் கிடைக்கும்போது, அதன் மரியாதை குறைகிறது. பொருள் ஒன்றுதான்; அதன் பயன்பாடுதான் வேறு.
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது' என்ற பழமொழி உண்டு. இது நாம் தண்ணீருக்கு அளித்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆனால், இன்று தண்ணீரை வீணாகச் செலழித்து கழிவுநீராக்கி, ஆறுகளை நாசப்படுத்தி, நிலத்தடி நீரையும் அசுத்தமாக்கி, நாகரிகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பல கி.மீ. தொலைவிலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து, வீட்டுக் குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் விழுவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டால், அதை எப்படி வேண்டுமானாலும் வீணாக்கலாம்.
அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொற்பத்தொகையும் ஒரு காரணம். அந்தத் தொகையையும் பல இடங்களில் கோடிக்கணக்கில் நிலுவை இருப்பதாக தகவல்.
குடிநீர்க் குழாய்களை வீடு வரை பதித்ததுதான் நமது அலட்சிய மனோபாவத்துக்குக் காரணமோ என்று தோன்றுகிறது. நமது ஆறுகள் சாக்கடையாக ஓடவும் அதுவே காரணம் என்ற உண்மை, சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
நம் வீடுகள், தொழிலகங்களில் புழங்கும் தண்ணீர் கழிவுநீரான பிறகு எங்கே போகிறது என்று யோசித்திருக்கிறோமா? நமது வீட்டைவிட்டு கழிவுநீர் சென்றுவிட்டால் போதும் நமக்கு. அந்தக் கழிவுநீர் சாக்கடைகள் வழியே தாழ்வான ஓடைகளில் சங்கமித்து, இறுதியில் அப்பகுதியில் பாயும் நதிகளில் கலக்கவிடப்படுகிறது.
ஆறுகளில் கலப்பதற்கு முன் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வோ, பொறுப்புணர்வோ நமது அரசுக்கும் இல்லை; அதிகாரிகளுக்கும் இல்லை.
வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் ஆறுகளில் எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் கலப்பதை யாருமே பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
சிரமமின்றிக் கிடைக்கும் தண்ணீரை கவலையின்றிப் புழங்கும் மக்கள், அதைக் கழிவுநீராக்குகிறார்கள். அது நதிகளை நாசமாக்குவதை எந்த மனத்தடையுமின்றி அதே மக்கள் கடக்கிறார்கள்- மூக்கைப் பொத்திக்கொண்டு.
இதற்கு என்னதான் தீர்வு? மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், தண்ணீரை வழங்குவது அரசின் கடமையே. எனினும், அதைப் பயன்படுத்துவதில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும்.
ஒவ்வொரு வீட்டிலும் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் அளவுமானி எப்படி இயங்குகிறது என்பது நமக்கும் தெரியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியும். பெரும்பாலான குடிநீர்மானிகள் இயங்குவதில்லை. அப்படி இயங்கினாலும், அதைக் கணக்கிட்டு குடிநீர்க் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலை மாற வேண்டும். குறுகிய அரசியல் லாபங்களைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
மகாத்மா காந்தி வாழ்விலிருந்து ஒரு சம்பவம். குஜராத்தில் சபர்மதி நதிக்கரையில் அவரது ஆசிரமம் உள்ளது. அங்கு உணவுக்குப் பின் கைகழுவச் சென்ற காந்தி, வாளியிலிருந்து மிகக் குறைவான அளவே தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தினார்.
அப்போது அருகிலிருந்த தலைவர் ஒருவர் "பாபுஜி, அருகிலேயே சபர்மதி ஒடுகிறது. நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கனமாக தண்ணீரை செலவு செய்கிறீர்கள்?' என்று கேட்டாராம். அதற்கு "சபர்மதி எனக்கு மட்டும் சொந்தமானதல்ல' என்றாராம் மகாத்மா.
சிக்கனமும் சேமிப்பும் பண விஷயத்தில் மட்டுமல்ல, தண்ணீரிலும் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

