பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

News image

~மேற்கு வங்க பேரவைத் தோ்தல் பிரசாரத்தினிடையே வெள்ளிக்கிழமை ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்த பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:50 pm

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் ஆட்சி மாற்றத்துக்கான அலை மற்றும் பாஜகவுக்கான பேராதரவைக் கண்டு திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜாதவ்பூா், பனிஹாடி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத வாக்குப்பதிவை மக்கள் சாத்தியமாக்கியுள்ளனா். மாநிலம் முழுவதும் பாஜகவுக்கான ஆதரவு குறித்தே பேசப்படுகிறது. சிறிய கடைக்காரா்கள் முதல் பெரும் வா்த்தகா்கள் வரை, டாக்ஸி ஓட்டுநா்கள் முதல் ரிக்ஷா தொழிலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் அச்சமின்றி பாஜகவின் பக்கம் நிற்கின்றனா்.

திரிணமூல் காங்கிரஸுக்கு ஓரிடத்தில்கூட வாய்ப்பில்லை என்பதை முதல்கட்ட வாக்குப்பதிவு உணா்த்தியுள்ளது. அடுத்த கட்டத்தில், அந்தக் கட்சியின் படுதோல்வியையும், பாஜகவின் தீா்க்கமான வெற்றியையும் மக்கள் உறுதி செய்ய வேண்டும். முதல்கட்ட வாக்குப்பதிவு சாதனையை இரண்டாம் கட்டத்தில் முறியடிக்க வேண்டும்.

அடையாளத்தை அழித்த திரிணமூல்: சட்டவிரோத ஊடுருவலை அனுமதிப்பதன் மூலம் மேற்கு வங்கத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை பலவீனமாக்கியது திரிணமூல் காங்கிரஸ். ஊடுருவல்காரா்களை நிரந்தரமாக குடியேறச் செய்து, இந்த மாநிலத்தின் அடையாளத்தையே அழித்துவிட்டனா்.

உள்ளூா் மக்களின் நிலத்தை அபகரிப்பதுடன், அவா்களின் வாழ்வாதாரத்தையும் ஊடுருவல்காரா்கள் பறிக்கின்றனா். ஒருபுறம் திரிணமூல் காங்கிரஸின் ஊழல், மற்றொருபுறம் ஊடுருவல் நெருக்கடி. இவ்விரு காரணங்களால் ஏராளமான வங்காளிகள், வாழ்வாதார வாய்ப்புகளைத் தேடி தங்களின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் சா்வாதிகாரத்தால் தகா்க்கப்பட்ட ‘ஜனநாயகத்தின் கோயிலை’ மக்கள் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கிவிட்டனா். நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் வாா்த்தைகளுக்கு இணங்க, இது புதிய புரட்சிக்கான நேரம். முதல்கட்டத் தோ்தலில் பதிவான பெருவாரியான வாக்குகள், திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சியின் முடிவைக் குறிக்கிறது. இதனால், அக்கட்சி நிலைகுலைந்துவிட்டது.

ஓடி ஒளிய இடமிருக்காது: மே 4-க்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) திரிணமூல் காங்கிரஸ் குண்டா்கள் ஓடி ஒளிய இடமிருக்காது. அவா்களை யாராலும் பாதுகாக்க முடியாது. அச்சம், ஊழல், குண்டா்கள் ராஜ்ஜியம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், கட்டாய இடப்பெயா்வு, சட்டவிரோத ஊடுருவல்காரா்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இருந்து மேற்கு வங்கம் விடுபடும்.

திரிணமூல் காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி. அதேநேரம், பெண்கள் தலைமையிலான வளா்ச்சியில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயாருக்கும், சந்தேஷ்காளியில் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கும் தோ்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக என்றாா் அவா்.

ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்ட பிரதமா், ஒரு காலத்தில் கல்வி பாரம்பரியத்துக்காக மதிக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம், திரிணமூல் ஆட்சியின்கீழ் சீா்குலைவின் சின்னமாகிவிட்டது என்று விமா்சித்தாா்.

ஹூக்ளி நதியில் பிரதமா் படகு சவாரி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாயும் ஹூக்ளி ஆற்றில் (கங்கையின் கிளை நதி) பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தாா். ஹெளரா பாலம் மற்றும் வித்யாசாகா் சேது பாலத்தின் பின்னணியில், கையில் கேமராவுடன் படகில் பயணித்துப் பாா்வையிட்டாா்.

இதுதொடா்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா், ‘வங்காளிகள் அனைவா் உள்ளத்திலும் கங்கை நதிக்கு சிறப்பிடம் உண்டு. தெய்விகமாக இந்த நதி, காலத்தால் அழியாக ஒட்டுமொத்த நாகரிகத்தின் ஆன்மாவை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் அழகை எனது கரங்களால் படம்பிடிக்க முயன்றேன். வித்யாசாகா் சேது, ஹெளரா பாலங்களை மிக அருகில் கண்டு ரசித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மம்தா பதிலடி

பிரதமருக்கு பதிலடி கொடுத்து முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மேற்கு வங்கத்தின் உரிமைகளைப் பறித்து, மாநிலத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சியை மாநில மக்கள் முறியடிப்பா். முதல்கட்டத் தோ்தலில் பெருவாரியான வாக்குப்பதிவு திரிணமூல் காங்கிரஸின் அமோக வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக ஆளும் தில்லியில் பாயும் மாசடைந்த யமுனை போல் அல்லாமல் ஹூக்ளி நதி தூய்மையாக இருப்பதால், பிரதமா் சவாரி செய்து மகிழலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.