எவ்வுயிரும் தன்னுயிர்போல்...

சூழலியல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில், மாணவர்களோடு பங்கேற்க நேர்ந்தது.
Updated on
3 min read

சூழலியல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில், மாணவர்களோடு பங்கேற்க நேர்ந்தது.
மனிதர்களை உயர்த்திப் புகழ்வதற்காக மற்ற உயிரினங்களைத் தாழ்த்திப் பேசுவதிலும், பார்ப்பதிலும் இருந்தே சூழலியல் பிரச்னை தொடங்கிவிடுகிறது என்றொரு வாதத்தை முன்வைத்தார் ஒரு மாணவி.
எப்படி என்பதற்கும் அவரே விளக்கம் தந்தார். ""திருவள்ளுவர் "மரம்போல்வர்' என்று மக்கட்பண்பில்லாதவரைச் சொல்லுகிறார். சரிதான். ஆனால், மனிதன் செய்ய முடியாத பல மகத்தான செயல்களை, மரம் செய்கிறது அல்லவா? இன்றைய சூழலியல் சீர்கேடு மரங்களால் வருகிறதா, மனிதனால் வருகிறதா சொல்லுங்கள்'' என்றார்.
உடனே, இன்னொரு மாணவர் எழுந்து, "சீமைக்கருவேல மரம்..' என்றதும் கரவொலி எழுந்தது.
"அதுவும் மனித முயற்சியில் பெருகியது தானே' என்று மறுமொழி கூறியதும், அவை அதற்கும் கரவொலி எழுப்பியது.
"அதனால்தான் இளைதாக முள்மரம் கொல்க என்றார் திருவள்ளுவர்' என்றேன் இடைச்செருகலாக, நானும்..
அதற்கும் கரவொலி.
"ஐயா, நான் சொல்ல வந்தது அதுவல்ல. மனிதர்களை முன்னிறுத்தி மட்டுமே யோசிப்பதால்தான் சூழலியல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. உதாரணமாக, இன்று காலையில் என்னை என் அம்மா எருமை மாடு என்று திட்டுகிறார். எருமை மாடு என்றால் அவ்வளவு மட்டமா? குழந்தைக்குப் பால் தருகிற தாய்க்கும் தாயான தாய்க்கும் பால் தருகிற ஒன்றைத் தாழ்த்திப் பேசலாமா? இப்படிச் சொல்லித் திட்டுகிற ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் இன்னோர் உயிரினத்தைத் தாழ்த்திப் பேசுவதாலும் பார்ப்பதாலும் அல்லவா பிரச்னை பெரிதாகிறது' என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
"உவமை என்பது ஒருபகுதி உண்மையைக் கொண்டது. முயற்சிக் குறைவு, சோம்பல் தொடர்பாகச் சொல்லப்படுகிற உவமை அல்லவா அது' என்று விளக்கம் சொல்லப் பார்த்தேன். விடவில்லை.
"ஒவ்வோர் உயிரினத்திற்கும் ஒவ்வொருவிதமான பணியும் பண்பும் இருக்கிறது. ஒன்றிடம் இருப்பதை இன்னொன்றிடம் எதிர்பார்ப்பது நியாயமா கூறுங்கள்' என்று இன்னொரு விளக்கத்தை அவர் தந்தபோது எனக்குள் முயல் - ஆமை கதை முன் நின்றது.
முயலாமையை விளக்க, முயலுக்கும் ஆமைக்கும் இடையில் நடந்த ஓட்டப்பந்தயத்தைச் சொல்லி விளக்கும் கதை அது.
ஆனால், இரண்டுக்கும் தனித்தனி இயல்புகள் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது என்பது உண்மைதானே? முயலுக்குப் பாதுகாப்பு அதன் ஓட்டத்தில் இருக்கிறது. ஆமைக்குப் பாதுகாப்பு அதன் ஓட்டுக்குள் இருக்கிறது.
இரண்டும் தத்தம் இயல்பில் இருந்து தற்காத்துக் கொள்கிற முறையில் இருந்து மாறினால், எல்லாமும் மாறும் தானே. இங்கே இன்னோர் உண்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முயல் தரையில் மட்டுமே வாழக்கூடியது. ஆமை, தண்ணீரிலும் வாழக்கூடியது. தரையில் ஓடுகிற வேகத்தைவிடத் தண்ணீரில் அது நீந்துகிற வேகம் பெரிது அல்லவா? அந்த நிலைப்பாட்டை முயல் பெற்றுவிட
முடியுமா?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தகுதியும் சிறப்பும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், ஒன்று உயர்வு, மற்றொன்று தாழ்வு என்று பேசுவதே இயற்கைக்கு முரண். பிள்ளைகளில் ஒரு பிள்ளையை உயர்த்தியும் இன்னொரு பிள்ளையைத் தாழ்த்தியும் பேசுகிற, பார்க்கிற பெற்றோர் இருக்கிறார்களே.
ஒரு பிள்ளையை மட்டும் பெற்றவர்கள் கூட, மற்றவர்களின் பிள்ளைகளோடு ஒப்பிட்டுத் தன் பிள்ளையைத் தாழ்த்தியோ உயர்த்தியோ பேசுவதைப் பார்க்கிறோமே. அது சரியில்லை தானே.
இந்தச் சிந்தனையோட்டத்திற்கு இடையில் இன்னொன்றையும் அந்த மாணவி விளக்கிக் கொண்டிருந்தார். "ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. ஒன்றின் இயல்பை இன்னொன்றிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? மாமரத்தில் தேங்காயை எதிர் பார்க்கலாமா' என்று வினா எழுப்பினார்.
உண்மையில் இந்த இடத்தில்தான் சூழலியல் மாறுபாடுகள் தோற்றம் கொள்
கின்றன.
இயல்பாக வாழும், வளரும் உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்தித் தன் வசதிக்கேற்பவும், தேவைக்கேற்பவும் மனிதர்கள் மாற்ற முயன்றதன் விளைவுகளைத்தான் இன்று சூழலியல் சீர்கேடுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நீண்டு வளரும் நெற்பயிரின் மரபில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, இடையில் உள்ள தண்டுப்பகுதியான வைக்கோல் உயரத்தைச் சுருக்கி, அதிக மகசூல் பெற்றுக்கொள்கிறோம். உண்மையில் என்ன செய்கிறோமோ, அதற்கான பலன்களைத்தான் அனுபவிக்கிறோம்.
இதில் உயர்வோ, தாழ்வோ, மிகையோ, குறையோ இல்லை என்கிற இயல்பை, உண்மையை இந்த விவாதம் மேலெழுப்பிச் செல்கிறது.
இங்கே மண்புழு செய்வதை ஒரு மன்னன் நினைத்தாலும் செய்ய முடியாது. மன்னனின் செயல்பாட்டை ஒரு மண்புழுவிடம் எதிர்பார்ப்பதும் முறையாகாது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியின் செயல்பாடு சூழலியல் வளத்திற்கு எவ்வளவு மகத்தான பங்களிப்பு என்றெல்லாம் கருதிப் பார்க்க வேண்டிய காலம் இது.
இவற்றையெல்லாம் ஓரளவு உணர்ந்து முறைப்படுத்திப் பண்டைக்காலத்து மனிதர்கள் தங்களது வாழ்வியல் முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்ந்து சிறந்திருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்து இருந்ததால்தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ முடிந்திருக்கிறது போலும்.
முல்லையும் குறிஞ்சியும் மருதமும்
நெய்தலுமாக இருந்த நானிலத் தமிழகத்தில், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு அழிந்து, பாலை ஆனபோது கூட, அந்நிலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் தம்மையும் காத்துச் சூழலியலையும் பேணிய காட்சிகளை, உள்ளுறை, இறைச்சியாக உள்வைத்துச் சங்கப்
பாடல்களை எழுதி, நம் முன்னோர்கள் அளித்தனர்.
நிலமும் பொழுதும் முதற்பொருள் என்றும் அந்நிலத்தில் வாழ்வன கருப்பொருள் என்றும் உணர்த்துகிற இலக்கணம்தான் பொருள் இலக்கணம். எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், பொருள் என்று
குறித்தது சொல்லின் பொருளையோ, பொருளாதாரப் பொருளையோ இல்லை, வாழ்வின் பொருளை. வாழ்விற்கு ஆதாரமான இயற்கை வளங்களின் பொருளைத்தான். இந்தப் பொருள்களைத் தொலைத்து, இன்ன பிற பொருள்களைத் தேடுவதில் என்ன பொருளைக் கண்டுவிட முடியும்?
இயற்கை அன்னையின் மார்பகங்களாய் உயர்ந்த மலைகளை அறுத்தும், மடியென நீண்ட ஆறுகளின் மணல்களைக் கொள்ளையிட்டும், நீலக்கடலின் நிறைசெல்வச் சூழல்களைச் சிதைத்தும் பெறுகிற பொருள்களால் யாது பயன் என்றெல்லாம் சிந்திக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.
அதனால்தான், விரைந்தோடிய தேரை நிறுத்தி, பற்றிப்படரக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தேரைத் தந்து நடந்தானோ வள்ளல் பாரி!
தேசியச் சின்னமான தருமச்சக்கரத்தில் உள்ள ஒவ்வோர் ஆரமும் ஒவ்வொரு செயல்பாட்டைக் குறிக்கிறது. அவரவர் நிலையில் இருந்து அவரவர் கடமைகளைத் தவறாமல் செய்தால், சக்கரம் ஓடும், தருமம் நிலைபெறும் என்பதைக் குறிப்பாக உணர்த்துவதற்குத்தானே அதனை நாம் கொண்டிருக்கிறோம்.
பன்னெடுங்காலமாய், காட்டில் வாழ்ந்து பழகிய பேகனுக்கு, மயிலின் இயல்பு தெரியாமல் இருக்குமா? மேகம் பார்த்துச் சிலிர்த்தாடும் மயிலுக்கும் குளிரில் நடுங்கித் துயருறும் மயிலுக்கும் வேறுபாடு அறிந்ததால்தான், மயிலுக்குப் போர்வை போர்த்தியிருக்க வேண்டும். அதைக் "கொடை மடம்' என்று என்னால் கருத முடியவில்லை.
எவ்வுயிரும் தன்னுயிர்போல் கருதிக்காப்பதுதான் உயிரின் இயல்பு என்பதை உணர்த்துவதற்காகத்தான் பன்றிக்குட்டிகளுக்குத் தாயாகி இறைவன் முலையூட்டியதாகத் "திருவிளையாடல் புராணம்' பாடு
கிறது.
இந்த இயல்பும் மரபும் விடுத்து, அதி
நவீனம் என்கிற பேரில் சூழலைச் சிதைத்து விரையும் மானுடம் தற்காலத்தில் வேண்டுமானால் தலைநிமிர்ந்து நிற்பதாகத் தெரியலாம். வருங்காலத்தில் வளரும் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்ட எங்கே மலை இருக்கும்? மணல் இல்லாத நிலையில் ஆறு எவ்வாறு அழியாது இருக்கும்? வயலையும் காடுகளையும் இனி கணினித்திரையில் காட்ட வேண்டி வரலாம். ஆனால், குடிநீர் என்று எதைக் குடிக்க, கொடுக்க இயலும்?
அதனால்தான் தாயைப்பழித்தாலும் தண்ணீரைப் பழியாதே என்று முன்னோர்கள் சொன்னார்களோ?
இவற்றையெல்லாம் விளக்கி முடிப்புரையாக, அந்த நேரத்திற்கு அவையில் சொல்லி முடித்தபிறகு என்னுள் தோன்றியவை. இதுவும் மனித முயற்சியின் மற்றோர் அடையாளம்தானே?
இந்த தன்முனைப்புத்தான் மனித இனத்தைத் தரைமட்டம் ஆக்கியது என்கிற உள்ளுணர்வும் தோன்ற, மறுபடியும் தன்னை ஒப்பிட்டுத் தரையை மட்டம் தட்டும் தன்மை வருவது தவறு அல்லவா என்ற பார்வையும் இணைந்து எழுகிறது.
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர்?
அந்தப் பொறுமையும் எத்தனை நாளைக்கு இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com