நாட்டின் நிர்வாக அமைப்பை 'இரும்புச் சட்டம்' என வர்ணிப்பதுண்டு. எளிதில் வளைக்க முடியாதது என்பதை குறிப்பதற்கான இந்த குறியீட்டின் பிரதிநிதியாக இருப்பவர்கள் இந்திய நிர்வாகப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.), இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள்.
ஆனால் தற்போது இந்த இரும்புச் சட்டம் துருப் பிடிக்கத் தொடங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றும் வகையில் ஐ.ஏ.,எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மக்களவையில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 23 ஐ.ஏ.எஸ்., 22 ஐ.பி.எஸ்., 3 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் - ஆக மொத்தம் 48 பேருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்த காலகட்டத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்காக 4 ஐ.ஏ.எஸ்., 1 ஐ.பி.எஸ்., 8 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் என மொத்தம் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர, மத்திய அரசின் செயலகங்களில் பணியாற்றும் 29 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் பிரதான காரணம் ஊழல்தான்.
கடந்த 2014-இல் மத்திய பிரதேச மாநிலத்தில் கணவன் - மனைவியான இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து சுமார் ரூ.350 கோடிக்கு சொத்து ஆவணங்களும், ரூபாய் மூன்று கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
குடிமைப் பணி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கான அனுமதியை பெறுவதற்கு சில சமயம் குடியரசு தலைவர் வரைகூட செல்ல வேண்டியது இருக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் இதுவரை இல்லாத வகையில், தலைமைச் செயலர் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடையது என மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், ரூ.30 லட்சம் ரொக்கம், 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஊழலை இனிமேலும் சகித்துக் கொள்வதில்லை என உறுதிபூண்டுள்ள மத்திய அரசானது எல்லா முனைகளிலும் கடும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளதாகக் கூறலாம்.
ஊழல் மட்டுமல்லாது, பணியை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பணியை ஒழுங்காகச் செய்யாத 129 பேருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' அலுவலர்களின் பணியை சீராய்வு செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் எத்தனை பேர் வீட்டுக்கு செல்லப் போகிறார்கள் என்பதும் விரைவில் தெரிந்து விடும்.
ஏன் இந்த நிலைமை? ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நமது நிர்வாக அமைப்பு சிறப்பான ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
சட்டம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நடைமுறை ஒழுங்குகள், மரபுகள் என ஒவ்வொரு நிலையிலும் தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டை அன்றைய நேர்மையான அதிகாரிகள்தான் உறுதி செய்தனர்.
கட்சி சார்ந்த ஆட்சியாளர்கள் தவறு செய்ய நேரும்போது நேர்மையாக நேருக்குநேர் சுட்டிக்காட்டி ஆலோசனை கூறிய அதிகாரிகள் இருந்தனர். அன்றும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதன் விழுக்காடு குறைவு.
காலப்போக்கில் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்த சில அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் நிர்வாக அமைப்பான இரும்புச் சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கத் தொடங்கின.
அரசியல் தலைவர்களின் முறைகேடுகளுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளுக்குதான் நிர்வாகத்தில் செல்வாக்கு என்ற நிலை ஏற்பட்டபோது இரும்புச் சட்டம் துருபிடிக்கத் தொடங்கியது.
கடந்த 1990-இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பின்புதான் அரசியல்வாதிகளின் ஊழலுடன் போட்டி போடும் அளவுக்கு அதிகாரிகளின் ஊழலும் ஆரம்பமாகி விட்டது.
1991 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 65 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தளர்வு போன்றவை ஒரு பக்கம் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டாலும், மறுபுறம் ஊழலுக்கும் வழிவகுத்து விட்டது.
இன்றைய நிலையில், புகார்களுக்கு இடம் கொடுக்காத வகையில் நேர்மையாக குடியுரிமை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அப்படி தேர்வாகும் இளம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பொறுப்பேற்றவுடன் நேர்மையாகவும், வேகமாகவும், சமூக அக்கறையுடனும் பணியாற்றுவதை மறுக்க முடியாது.
சிலர் காலப்போக்கில் அரசியல்வாதிகளுக்கே சவால்விடும் வகையில் ஊழல் பெருச்சாளிகளாகி குடியுரிமைப் பணியின் அவமானச் சின்னங்களாகி விடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
இத்தகைய சீர்கேடுகளை தவிர்க்க, தவறு செய்யும் அதிகாரிகள் மீதான தண்டனையைக் கடுமையாக்குவதுடன் அந்த தண்டனையும் விரைவாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் 'இரும்புச் சட்டம்' துரு நீங்கிப் பளபளக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.