விண்வெளியிலும் வெள்ளையனே வெளியேறு

இன்றைக்கு ஜி.பி.எஸ் காட்டும் 'கூகுள்' வரைபடம் இல்லாமல் எந்தவொரு வாகனத்தையும் இந்தியச் சாலைகளில் ஓட்ட முடியாது என்ற நிலை வந்துவிட்டது.
விண்வெளியிலும் வெள்ளையனே வெளியேறு
Updated on
3 min read

உலகளாவிய இருப்பிடங்காட்டி முறைமையினை ஆங்கிலத்தில் 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்கிறோம். சுருக்கமாக, ஜி.பி.எஸ். (ஓ.பி.எஸ்., இபி.எஸ் அல்ல!), கிரந்த எழுத்து இல்லாமல், யாரேனும் இதனைத் தவறுதலாக சி.பி.எஸ். என்றால், 'கரண்ட் பாப்புலேசன் சர்வே' (தற்கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) அல்லது 'கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்' (பங்களிப்பு ஓவு ஊதியத் திட்டம்) ஆகிவிடும்.
எப்படியோ, 1978-ஆம் ஆண்டு சான் டியாகோ நகர் அருகே பனிமூட்டத்தின் காரணமாக, நடுவானில் இரண்டு விமானங்கள் (இன்றைய அரசியல் அணிகள் மாதிரி) மோதிக் கொண்டன. அந்த விபத்தில் இறந்து போனவர்களில் ஓர் ஆத்மா, பேராசிரியர் ஜெரால்டு கே.ஓ. நீல் என்பவரின் நண்பர். இனி, இவ்வித கோர விபத்துகள் நிகழாமல் தடுக்கும் நவீன உத்தி ஒன்றைச் சிந்தித்தார். 'ஜியோ ஸ்டார்' என்ற நிறுவனமும் தொடங்கினார்.
அதன்படி, இரண்டு செயற்கைக் கோள்களால் வானில் அல்லது கடலில் ஒரு வாகன இருப்பிடத்தை உணர்த்த முடியும். அந்த வாகனத்திற்கு இரண்டு செயற்கைக்கோள்களுமே ஒரு குறித்த மின்காந்த அலைக்கற்றையினை தனித்தனியே அனுப்பும். 
அந்த சமிக்ஞை, வாகனத்திற்குச் சென்று மீளும் கால அளவு, இரண்டு செயற்கைக்கோளிலும் வெவ்வேறு ஆக அமையும். இந்த கால வேற்றுமையினைக் கணித்து, அந்த வாகனத்தின் இருப்பிடத்தைத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும்.
அத்துடன் அந்த வாகனம், செயற்கைக்கோள் வழியாகப் புவிநிலையத்தோடு காணொலி ஆகவோ, குரல் ஒலியாகவோ உரையாட முடிந்தால் அதுவும் சிறப்பு அல்லவா? இவ்விதம் தோன்றியதுதான் பயண அமைப்பியல் செயற்கைக்கோள் (நேவிகேசனல் சாட்டிலைட்டு).
நேவி என்ற ஆங்கிலச் சொல்லினை உடைத்துப் பிரித்துப் பார்த்தால், என்-ஏ-வி-ஒய், 'நாவாய்' என்றே வருகிறது. ஆரம்பத்தில் நாவாய் கடலோடுதல் 'நேவிகேசன்' ஆயிற்று, பிற்காலத்தில் விமானப் பயண அமைப்பிற்கும் இது பொதுச்சொல் ஆனது.
அது ஏதாயினும், ஜி.பி.எஸ். திட்டத்தின்கீழ் அமெரிக்கா 24 பயண அமைப்பியல் செயற்கைக்கோள்களை வானில் உலவவிட்டு உள்ளது. இதன்வழி அமெரிக்காவின் மேற்கே சீனா வரையிலும், கிழக்கே அரேபியத் தீபகற்பம் வரையிலும் கண்காணிக்கப்படும்.
1973-ஆம் ஆண்டு தொட்டு பெரும்பாலான உலக நாடுகள் அமெரிக்கா அறிமுகப்படுத்திய ஜி.பி.எஸ். அமைப்பின் தயவில் வாழ்ந்து வருகின்றன. இதற்கு ஒப்பாக ரஷியாவிடம் 'குளோனாஸ்', ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 'கலீலியோ' போன்ற அமைப்புகள் உள்ளன. சீனாவும் கடல்வழிப் பயணங்களுக்குத் தனக்கே உரிய 'பெய்தூ பயண அமைப்புச் செயற்கைக்கோள் முறைமை'க்கு வித்திட்டு, உப்புத் தண்ணீர் ஊற்றி வருகிறது.
அமெரிக்கா ஜி.பி.எஸ். அமைப்பு, கார்கில் போரின்போது இந்தியாவுக்கு உதவாமல் கைவிரித்து விட்டதை நாம் அறிவோம். அறிவியல் ஆகட்டும், அரசியல் ஆகட்டும், ஊரார் காலில் நிற்பதைவிட சொந்தக்காலில் வேர் ஊன்றுவோம் என்ற மும்முரத்தில் நம் நாட்டில் தோன்றியது - 'இந்திய மண்டலப் பயண அமைப்பியல் செயற்கைக்கோள் முறைமைத் திட்டம்' ஆங்கிலச் சுருக்கமாக, 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.'.
இத்திட்டத்தின்கீழ் 2013-ஆம் ஆண்டு தொடங்கி மூன்றே ஆண்டுகளில் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவற்றில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ (1.7.2013) மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி (4.4.2014) ஆகியவை புவி ஒத்தியக்கச் சுற்றுப்பாதையில் அரேபியாவின் மேலாக (55 பாகை கிழக்கு தீர்க்க ரேகையில்) நிலநடுக்கோட்டினைக் கடக்கின்றன.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி (28.3.2015) மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1இ (20.2.2016) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் மலேசியாவின் மேலாக (111.75 பாகை கி.தீ.) புவிசுற்றி வருகின்றன. பூமியின் நாட்சுழற்சிக் காலம் போலவே ஒருமுறை பூமியைச் சுற்ற இவை 24 மணிநேரம் எடுத்துக்கொள்வதால், புவி ஒத்தியச் செயற்கைக்கோள் எனப்படுகின்றன.
இந்த நான்கு செயற்கைக்கோள்களும் ஏறத்தாழ 29 பாகை சாயமானத்தில் நிலநடுக்கோட்டினைக் கடப்பதால், இவற்றின் சுற்றுப்பாதை வானில் பிரமாண்ட '8 ' மாதிரி அமைகிறது.
ஏனைய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எஃப் (10.3.2016), ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி (15.10.2014), ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஜி (28.4.2016) ஆகிய மூன்று செயற்கைக்கோள்களும் முறையே சூடான் (32.5 கி.தீ.), இலங்கை (83 கி.தீ.), பிலிப்பைன்ஸ் (129 கி.தீ.) ஆகிய நாடுகளின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
சப்தரிஷி மண்டலம் மாதிரி, இந்த ஏழு செயற்கைக்கோள்களின் தொகுப்பிற்கு - ஆங்கிலத்தில் 'நாவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டல்லேசன்' என்கிற பொருளில் சுருக்கமாக, 'நாவிக்' என்று பெயர் சூட்டியவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. நாவிக் என்றால் வடமொழியில் மாலுமி என்றும் அர்த்தம்.
நாவிக் திட்ட மொத்தச் செலவு 1420 கோடி. இது இன்றைய அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய 'பஞ்சப்படி'யும் சொகுசு விடுதி வசதிகளுக்கும் ஆகும் செலவைக் காட்டிலும் குறைவுதானாம்.
ஆனால் நாவிக், அமெரிக்காவின் ஜி.பி.எஸ். அமைப்பைவிட மேம்பட்டது. ஜி.பி.எஸ். அமைப்பினால் 20 - 30 மீட்டர்கள் இடைவெளியே வேறுபடுத்திப் பார்க்க இயலும். அதிகபட்சம் 100 அடிச்சாலை இருமருங்கிலும் ஏதேனும் வாகனம் தென்பட்டால், அது 100 அடிச்சாலையில் நிற்பதாகவே காட்டும். 
ஆனால் இந்திய நாவிக் அமைப்போ, அமெரிக்காவைக் காட்டிலும் ஆறு மடங்கு துல்லியம். ஒரு மெட்ரோ ரயில் அகலத்தையும் துல்லியமாகக் காட்டக் கூடியது.
அமெரிக்க ஜி.பி.எஸ். அமைப்பில் (15 - 30 சென்டிமீட்டர் அலைநீளம் கொண்ட) எல்-அலைவரிசையில் மட்டுமே இயங்குகிறது. அதனால் வளிமண்டலக் கொந்தளிப்புகளும் கோளாறுகளும், மின்காந்த அலைவரிசையின் அதிர்வெண்களில் மாற்றங்களை உண்டுபண்ணும். அதனால் வாகனத்தின் இருப்பிடத்தைத் துல்லியமாகப் பதிவாக்க இயலாது.
ஆனால், இந்திய நாவிக் அமைப்போ, எஸ். மற்றும் எல். ஆகிய இரட்டை அலை (இரட்டை இலை அல்ல) வரிசையில் செயல்படுவதனால், காற்று மண்டலத்தில் எழும் ஈரப்பதம், முகில் மாற்றங்கள் எதுவும் இதன் செயல்பாட்டில் தவறு நேராது. (எஸ்-வரிசையின் அலைநீளம் 7.5-15 செ.மீ.).
நிலம், கடல், வான் ஆகிய மூன்று வழிப் போக்குவரத்திற்கும், விபத்துகளைத் தடுப்பதற்கும்,ஆபத்து கால மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கும் கைகொடுக்கும் திட்டம். வாகனங்கள் கடத்துபவர்களைக் கையோடு பிடிக்கவும் உதவுமாமே. இந்திய விமானப் படைக்கும், ஏவுகணைப் பயன்பாட்டிற்கும் கூட நாவிக் கண்காணிப்பு பயன்தரும்.
இதன் செயற்கைக்கோள்கள் தொகுப்பில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு பயண வாகனங்களின் இருப்பிடத்தினைச் சுட்டிக்காட்டும் நுட்பம். இதில் இடம்பெறும் 'ருபிடியம் அணுக்கடிகாரங்கள்' 10 கோடி ஆண்டுகள் கழிந்தால் ஒரு நொடி அளவு தாமதம் ஆகும் என்றால் பாருங்களேன்.
உலகெங்கும் மொத்தம் 400 அணுக்கடிகாரங்கள் சளைக்காமல் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை காட்டும் பன்னாட்டு நேரம் மட்டும் பிரான்சில் இயங்கிவரும் 'பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகள் பேரவை' வழி, அமெரிக்க ஜி.பி.எஸ். உதவியுடன் அறிவிப்பாகிறது.
அவசரப் போர்க்காலங்களில் அமெரிக்கா தனது ஜி.பி.எஸ். உதவியை நிறுத்திக் கொண்ட சம்பவங்களும் வரலாற்றில் உள்ளன.
எத்தனை நாளைக்குத்தான் அமெரிக்க கடிகாரத்தைப் பார்த்து அலுவல் நடத்துவது? சமீபகாலமாக நம் நாடு கடிகாரங்கள் வடிவமைப்பதில், இந்தியச் செயற்கைக்கோள் தடமறிதல், தொலைக்கட்டளை மற்றும் தொலை அளப்பு மையமும், தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடமும் இணைந்து ஆயத்தப் பணிகளைத் தொடங்கி உள்ளன.
இதற்கிடையில், ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் மூன்று அணுக்கடிகாரங்களில் ஒன்று வீதம் செயலிழந்து வருகின்றது. அதிலும் முதலாவது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோளில் அணுக்கடிகாரங்கள் முற்றிலும் நின்றுவிட்டன. அதற்குப் பதிலாக இந்திய அணுக் கடிகாரங்களுடன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1எச் செயற்கைக்கோல் செலுத்தப்படுகிறது.
இந்தியாவோ தனது நாவிக் திட்டத்தில் பங்கெடுக்க விழையும் நாடுகளை இன்று வரவேற்கக் காத்து இருக்கிறது.
2018-ஆம் ஆண்டுக்குள் அணுக்கடிகாரங்களின் இந்தியச் சந்தை முழுக்க முழுக்க தற்சார்பு பெற்றுவிடும் என்று நம்பலாம். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் பவள விழாக் காலகட்டத்தில் இதுகூட இல்லையென்றால் எப்படி?

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com