சமூகப் பொறுப்புணர்வும் அலட்சிய மனோபாவமும்...

அண்மையில் சென்னையிலும் கோவையிலும் நிகழ்ந்த வித்தியாசமான இருவேறு சாலை விபத்துகள், நமது மனசாட்சியை உலுக்குபவையாக உள்ளன.
Updated on
2 min read

அண்மையில் சென்னையிலும் கோவையிலும் நிகழ்ந்த வித்தியாசமான இருவேறு சாலை விபத்துகள், நமது மனசாட்சியை உலுக்குபவையாக உள்ளன. சமூகப் பொறுப்புணர்வு உள்ள மனிதர்களாக நாம் இருந்திருந்தால் அந்த இரு விபத்துகளுமே நடந்திருக்காது.
நவம்பர் 24-ஆம் தேதி, சென்னை, செங்குன்றம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து அரிதினும் அரிதானது. இப்படியும்கூட சாலை விபத்து நடக்குமா என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்தது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலிகொண்ட அந்த விபத்து.
மூஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்காக மூன்று இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. எனவே, அந்தரத்தில் நிற்கும் மேம்பாலத்தை வாகனங்கள் அணுகாவண்ணம் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 
செங்குன்றம் அருகே அரைகுறையாக நிற்கும் மேம்பாலத்தில் அண்மையில் திரைப்படப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது மேம்பாலத்தை அணுகாமலிருக்க வைத்திருந்த தடுப்புகளைப் படக்குழுவினர் அகற்றியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்தத் தடுப்புகளை மீண்டும் அதே இடத்தில் வைக்காமல் அவர்கள் சென்றுவிட்டனர். 
இதையறியாமல் காரில் வந்த குடும்பத்தினர் அந்த மேம்பாலத்தில் சென்றதால் 30 அடி உயரத்திலிருந்து கார் விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. இதில் மூவர் அதே இடத்தில் இறந்துள்ளனர்; மேலும் இருவர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். 
படக்குழுவினர் தங்கள் பணி முடிந்ததும் பொறுப்புணர்வுடன் பழையபடி தடுப்புகளை மேம்பாலத்தில் வைத்திருந்தால் அந்த விபத்து நேர்ந்திருக்காது.
அதேபோல, விபத்து நடந்த பகுதியிலிருந்த எவரேனும், தடுப்புகள் அகற்றப்பட்டதன் அபாயத்தை உணர்ந்து செயல்பட்டிருந்தாலும், அந்தக் கார் 30 அடி உயரத்திலிருந்து விழுந்திருக்காது. படப்பிடிப்பை அனுமதித்த அதிகாரிகள் மீண்டும் தடுப்புகள் வைப்பதை உறுதிப்படுத்தியிருந்தாலும் மூவர் விபத்தில் இறந்திருக்க மாட்டார்கள். இங்குதான் சமூகப் பொறுப்புணர்வின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
நவம்பர் 25-ஆம் தேதி இரவு கோவையில் நிகழ்ந்த விபத்தில் பொறியாளரான இளைஞர் பலியானதும் அதேபோன்ற அரிதான நிகழ்வுதான். கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரகுபதி அமெரிக்காவில் பணிபுரிந்த பொறியாளர். திருமண ஏற்பாட்டுக்காக சொந்த ஊர் வந்த அவர், அமெரிக்கா திரும்பும் முன் பழனி கோயிலுக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். அதற்காக இருசக்கர வாகனத்தில் பின்னிரவில் அவர் சென்றபோது நேரிட்டது அந்தக் கொடிய விபத்து.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அரசியல் கட்சியினரால் கோவை நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவின் மரக்கட்டையில் மோதிய அவரது வாகனம் கீழே விழுந்துள்ளது. அதேநேரம் எதிர்த்திசையில் வந்த லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். 
இந்த விபத்துக்கு, நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. உடனே அந்த அலங்கார வளைவு அகற்றப்பட்டது. ஆனால், அதை அங்கு வைத்தவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, தவறான திசையில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விபத்துக்கு, நெடுஞ்சாலை விதிமுறைகளை மீறி அலங்கார வளைவு வைக்கப்பட்டதே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கோவையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பான அனைத்து விளம்பர கட்அவுட்களையும் அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது அவை அவசர கதியில் அகற்றப்படுகின்றன. இதை நெடுஞ்சாலைத் துறையினரோ, மாநகராட்சி அதிகாரிகளோ முன்னரே செய்திருந்தால், இளைஞர் ரகுபதி விபத்தில் சிக்கி இறந்திருக்க மாட்டார். 
இப்போது ஆளும் கட்சியைக் கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இந்த அத்துமீறலை எதிர்த்து முன்னரே குரல் எழுப்பியிருந்தால், ரகுபதி பத்திரமாக அமெரிக்கா சென்றிருப்பார். ஆனால், எல்லாக் கட்சிகளுமே சாலையில் பெரிய அளவில் கட்அவுட் வைப்பதை பெருமையாக நினைக்கும்போது, ரகுபதிகள்தான் மிகுந்த கவனமாக வாகனத்தில் சென்றாக வேண்டியுள்ளது.
இந்த அலங்கார வளைவை அமைக்க நெடுஞ்சாலையில் குழி தோண்டியபோதே விழிப்புணர்வுள்ள பொதுமக்கள் எதிர்த்திருந்தாலும்கூட, இந்த விபத்து நேரிட்டிருக்காது. நமக்கு சமூகப் பொறுப்புணர்வு உள்ளதா என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்ப வேண்டிய தருணம் இது.
வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவால் விளைபவையே சாலை விபத்துகள். அவற்றைத் தவிர்க்கத்தான் சாலை விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலை விதிகளை வாகன ஓட்டுநர்கள் மீறியதாலோ, கவனக் குறைவாலோ, சென்னை- செங்குன்றத்திலும், கோவையிலும் இவ்விரு விபத்துகளும் நடக்கவில்லை. இவை நாம் அறிந்தே செய்த தவறுகளின் அநியாய விளைவுகள். இவை, நமது அக்கறையின்மை, அலட்சியம், சமூகப் பொறுப்பின்மை ஆகியவற்றின் ஆதார நிகழ்வுகள். 
சாலையில் கிடக்கும் ஆணியை எடுத்து குப்பைத்தொட்டியில் போடும் அக்கறையில் துவங்குகிறது சமூகப் பொறுப்புணர்வு. எது நடந்தால் நமக்கென்ன என்ற அலட்சியத்தில் விளைகிறது சமூகப் பொறுப்பின்மை. நமது சமூகத்தில் சகமனிதர் மீதான அக்கறை குறைந்து அலட்சியம் மிகுந்து வருவது, ஆபத்தின் அறிகுறி.
சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமகன்களால் மட்டுமே வலிமையான தேசம் கட்டமைக்கப்படுகிறது. மாறாக பொறுப்பற்ற சமூகம் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறது. இதைத்தான், செங்குன்றத்திலும் கோவையிலும் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளும், நமக்கு எச்சரிக்கையாகச் சொல்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com