அண்மையில் நடைபெற்ற இரு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி கண்டிருப்பது குறித்து பலவிதமான மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. ஹிமாசலில் ஆண்ட காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம் என்பதாலோ என்னவோ, அதுதொடர்பாக அதிக விமர்சனங்கள் எழவில்லை.
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் முடிவுகள், பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகவே புலப்படுகிறது.
குறிப்பாக, குஜராத்தில் 22 ஆண்டுகளாகத் தொடரும் பாஜக ஆட்சி மீதான அதிருப்தியும், மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் மக்களிடம் ஏற்பட்ட கோபமும் தேர்தலில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தவிர, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஜாதி ரீதியான கூட்டணியை வலுவாக அமைத்ததுடன், அதன் தலைவர் ராகுல் காந்தி பம்பரமாகச் சுழன்று பிரசாரம் செய்தார்.
எனவே காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் மிகுதியாகவே தென்பட்டது. உண்மையில் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வென்றிருக்க வேண்டியதாகும். ஆனால், பிரதமர் மோடிமுன்னின்று வழிநடத்திய பிரசாரமும், ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை அடிப்படையிலான பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் வியூகமும், கட்சியின் அடித்தளத் தொண்டர் பலமும் இணைந்து, குஜராத்தில் அக்கட்சியின் ஆட்சியே தொடருமாறு செய்திருக்கின்றன.
எனினும், பாஜகவின் வெற்றி வீரியம் குறைந்திருக்கிறது. 2012 தேர்தலில் 118 இடங்களில் வென்றிருந்த பாஜக இப்போது 99 இடங்களுடன் திருப்தி அடைய நேரிட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
ஆனால், அவரது முயற்சி அரைக்கிணறு தாண்டிய கதையாகிவிட்டது. எனவே பாஜகவும் காங்கிரஸýம் இந்தத் தேர்தல் முடிவுகளை தீர ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இத்தேர்தலில் வெளிப்பட்டதுபோல ஜாதியவாதம் குஜராத்தில் இதுவரை முன்வைக்கப்பட்டதில்லை. முற்பட்ட வகுப்பினரான படேல்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு கோரிப் போராடியபோது, அதை ஏற்க வழியின்றி விழி பிதுங்கியது பாஜக அரசு. அதை சாதகமாக்கிக் கொண்டு, ஹார்திக் படேல் தலைமையிலான பாடிதார் அநாமத் ஆந்தோலன் சமிதியின் ஆதரவைப் பெறுவதில் காங்கிரஸ் வென்றது.
அதேபோல, குஜராத் மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரான அல்பேஷ் தாகுர் காங்கிரஸில் இணைந்ததும் காங்கிரஸ் கட்சிக்கு வலிமை அளித்தது. தலித் மக்களுக்காகப் போராடிவந்த ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸýக்கு ஆதரவளித்தார். ஜிக்னேஷ் சுயேச்சையாகவும், அல்பேஷ் காங்கிரஸ் வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
உண்மையில், ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளைக் கொண்ட இம்மூவரும், பாஜக எதிர்ப்பு என்ற ஒரே இலக்குடன் காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்தனர். அவர்களது தேர்தல் பிரசாரத்தில் ஜாதிநெடி காரமாகவே இருந்தது. இவர்கள் மூவரும் பாஜகவை முற்பட்ட ஜாதியினரின் கட்சியாகச் சித்திரிக்க முயன்றனர். அதை காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது.
தேர்தலின் துவக்கத்தில் தங்களது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லியே பாஜக பிரசாரம் செய்தது. ஆனால், ராகுல் காந்தியின் திருக்கோயில்கள் விஜயத்தால் விழிப்படைந்த பாஜக, அதை விமர்சித்தது. அப்போதுதான், இத்தேர்தல் இதுவரை இல்லாத வகையில் மிதவாத ஹிந்துத்துவ காங்கிரஸýக்கும் தீவிரவாத ஹிந்துத்துவ பாஜகவுக்கும் இடையிலானதாக மாறியது. ராகுல் பூணூல் அணிவதாகவும் கூட காங்கிரஸôர் கூற வேண்டி வந்தது. எப்போது இந்தக் கருத்தை தேர்தல் களத்தில் காங்கிரஸ் முன்வைத்ததோ அப்போதே சித்தாந்த ரீதியில் பாஜக வென்றுவிட்டது.
பாஜகவே ஹிந்துத்துவ ஆதரவுப் போக்கைக் கைவிட்டாலும்கூட, அக்கட்சியை மதவாதக் கட்சியென ஓயாமல் நினைவுபடுத்தும் "தூண்டுதல்' பிரசாரம் செய்து சூழலை மாற்றிவிடுவர் என்பது மீண்டும் உண்மையானது.
பாஜக ஆட்சி மீதான கருத்துக் கணிப்பாக நடந்திருக்க வேண்டிய தேர்தலை மதரீதியான போட்டிக்களமாக மாற்றி, பாஜகவுக்கு உதவியவர்கள் அதன் எதிரிகளே. அதை மோடி- அமித் ஷா இணை சாதகமாக்கிக் கொண்டது. காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யரின் வெறுப்பூட்டிய "நீசன்' கருத்தும் தேர்தல் களத்தில் மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தியது.
மதவாதம் போலவே ஜாதியவாதமும் தீமையானதுதான். ஜாதி, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளால் மக்களிடையே ஒற்றுமை குலைவதை நமது அரசியல் சாஸனம் அனுமதிக்கவில்லை. ஆனால், "மதச்சார்பற்ற' நடுநிலையாளர்களோ, ஊடகங்களோ காங்கிரஸின் தேர்தல் "உத்தியை' இதுவரை கண்டிக்கவில்லை.
இத்தேர்தலில் தெரியவந்துள்ள முக்கியமான திருப்பம், நகர்ப்புற- கிராமப்புற வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள பெருத்த இடைவெளி. நகர்ப்புறங்களில் பெற்ற வெற்றியால்தான் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
மாறாக ஜாதியவாதம் அதிகமுள்ள கிராமப்புறங்களில் காங்கிரஸின் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பழங்குடியினர் பகுதிகளில் பாஜக ஆட்சியால் விளைந்த நல்ல மாற்றங்கள், அவர்களை பாஜகவுக்கு ஆதரவாகத் திருப்பி இருக்கின்றன.
பொருளாதார சீர்திருத்தங்களால் நகர்ப்புற மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாஜக அதிக வெற்றி பெற்றிருக்கிறது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் நீக்கம், சரக்கு- சேவை வரி அமல் ஆகிய நடவடிக்கைகளால் வெகுவாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள்கூட பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
இனிமேலும் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார சீர்திருத்தங்களை தேர்தல் பிரச்னையாக முன்வைக்க முடியுமா என்ற கேள்வியையும் இம்முடிவுகள் எழுப்பியுள்ளன.
நாடு முழுவதும் கிராமப் பகுதிகளிலிருந்து மக்கள் கிளம்பி நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவரும் காட்சிகள் அதிகரிக்கும் நிலையில், நகரமயமாதலால் உடனடி லாபம் ஆளுங்கட்சிக்கே கிடைத்திருப்பது குறித்து சமூக-அரசியல் பார்வையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

