

முன்பு ஒருமுறை லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்தில் பிரபல மேலைக் கலைவாணர் சார்லி சாப்ளினின் 'நகர்ப்புற வெளிச்சங்கள்' (சிட்டி லைட்ஸ்) என்ற திரைப்படம் அரங்கேறிற்று. அதன் ஒரு காட்சி இடைவேளையில் மேடையில் சிறப்பு விருந்தினராகத் தோன்றிய அணுவிஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினும் மக்களின் பலத்த கைதட்டல்களின் ஊடே உரையாற்றினர்.
அது குறித்து, சாப்ளினிடம் கேட்டார் விஞ்ஞானி. அதற்கு சாப்ளின், 'மக்களுக்கு உங்கள் விஞ்ஞானம் புரியவில்லை. அதனால் கைதட்டினார்கள். அவர்களுக்கு எனது கோமாளித்தனம் தெரியும். அதனால் உற்சாகப்படுத்தினார்கள்' என்றாராம்.
இந்தச் சம்பவம் நடந்த 1931-ஆம் ஆண்டுதான் நம் நாட்டில் பிறந்து, வாழ்நாளில் திரைப்படங்களே பார்க்காமல் நாட்டின் முதல் குடிமகன் ஆனார் ஒரு விஞ்ஞானி. அவர் வேறுயார்? நம் மரியாதைக்குரிய பாரத ரத்னா அப்துல் கலாம்தான்.
திரையரங்கமே அற்ற ஒரே தீவு இராமேஸ்வரம். சுதந்திர இந்தியாவில் இராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் முதன்முறையாக மின்னாக்கி நிறுவப்பெற்று, ஒரு மணிநேரம் 'கோயில் கரன்ட்' வழங்கப்பெற்ற சிற்றூரில் பிறந்தவர்.
''சின்னக் குழந்தை அப்துல் கலாம் எல்லாப் பிள்ளைகளையும் போலவே குர்ஆன் ஓதுவதற்காக 'மதராஸா' சென்றது, திண்ணைப் பள்ளிக்கூடம் படிக்கப் போனது. அதிகாலை நான்கு மணிக்கு குழந்தையை ஒரு கையிலும் அரிக்கேன் லாந்தரை மறு கையிலும் பிடித்துக் கொண்டு செயின் மரைக்காயர் திண்ணைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வது வாடிக்கை. இந்தப் பள்ளிக்கூடம் 'சாமியார் பள்ளிக்கூடம்' என்றும் சொல்லப்பட்டது'' என்று ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர் குறிப்பிடுகிறார்.
அங்கே, ராமர் தீர்த்தக் குளத்தில் தெப்ப உற்சவத்தின்போது, நடுமண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ராமர் விக்கிரகம் குளத்தில் தவறி விழுந்துவிட்டது. ராமர் விக்கிரகத்தை, நீருக்குள் முக்குளித்து மீட்டு வந்தவர் கலாமின் முப்பாட்டனார். இந்தத் திருக்காரியத்திற்காக அவர்தம் குடும்பத்தினரும் 'அம்பலத்தார்' ஆயினர்.
அன்னை ஆஷியம்மாவும் வீட்டில் குழந்தைகளை உறங்க வைக்க, இராமபிரான் கதைகளும், நபிகள் வரலாறுகளும் சொல்வார்களாம். கலாமின் இளமைக் காலத்திலும், அலுவலகத்திலும்கூட, நண்பர்களில் பலரும் இந்துப் பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். கல்லூரிக் காலம் தொட்டு சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறிய கலாமை பிற்காலத்தில் 'கலாம் அய்யர்' என்றே பலரும் குறிப்பிட்டனர்.
தமது மகன் மாவட்ட ஆட்சியாளராக வர வேண்டும் என்பது அவரது தகப்பனார் ஆசை. ஆனால், கலாமின் அறிவியல் ஆசான் சிவசுப்பிரமணிய அய்யர் அறிவுரைப்படி இராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் கலாம். கிறித்தவ மிஷினரிப் பள்ளிக்கூடம். அங்குக் கலாமிற்கு அய்யாதுரை சாலமன் என்பவர் ஆசிரியர். அவர் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல, ஞானகுருவும்கூட.
இந்திய விடுதலைக்கு முந்தைய நாள் அய்யாதுரை, 'நாளைக்கு இந்தியா சுதந்திரம் அடையப்போகிறது. அதை நாம் கொண்டாடுவோம். இன்று இரவு பண்டித ஜவாஹர்லால் நேரு வானொலியில் சுதந்திர தின உரை நிகழ்த்துவார். எல்லோரும் தவறாமல் கேளுங்கள்' என்று அறிவுறுத்தினார். 'அடிமைத் தளையற்ற சுயாட்சி' என்றதும் ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் இனிய கனவுகள் தோன்றின.
சிறுவயதில் தம் சகோதரர் முஸ்தஃபா கமாலின் நண்பர் எஸ்.டி.ஆர். மாணிக்கத்தின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் பாரதி பாடல்கள், பகவத் கீதை, திருக்குறள் போன்ற நூல்களை வாங்கி வருவார்.
எஸ்.டி.ஆர். மாணிக்கம் 1944-ஆம் ஆண்டு தேசியக் கொடி ஏற்றியதற்காக அன்றைய ஆட்சியாளர்களால் தேடப்பட்டு வந்தவர். பரமக்குடியில் அவர் தலைமறைவாக வாழ்ந்தாராம். அந்தக் காலகட்டத்தில் கலாம் வளர்ச்சிக்குத் தடை ஏற்படக் கூடாது என்பதற்காக அவருடனான தன் தொடர்பினைச் சில காலம் குறைத்துக் கொண்டார்.
பத்தாம் வகுப்பு முடித்து அன்றைய 'இன்டர்மீடியட்' இடைநிலைப் படிப்புக்காக ஆசிரியர் அய்யாதுரை சாலமன் அறிவுரைப்படி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர விரும்பினார் கலாம்.
அத்தருணத்தில் தந்தை தமது நண்பரான 'பொடேல் பாதிரியா'ரைச் சந்தித்தார். பிரெஞ்சு நாட்டிலிருந்து மதம் பரப்ப வந்த இவர் இராமேஸ்வரம் மக்களோடு மனம் கலந்து போனார். 'புடல் சாமியார்' என்று அழைக்கப்பட்டார். தேவாலயங்களில் பிரசங்கங்களை நிகழ்த்தினார். இவர் தங்கியிருந்த இடமே தற்போது 'பொடேல் வளாகம்' என்று அழைக்கப்படுகிறது.
தமிழைப் பேசவும் புரிந்து கொள்ளவும் ஓரளவு திறன் பெற்றிருந்த இவர், செயின் மரைக்காயரிடம் நல்ல நட்பு கொண்டிருந்தார் என்றும், அவர் தன் கைப்பட செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்துக்குக் கடிதம் ஒன்று கொடுத்தார் என்றும் சில வரலாற்று தகவல்களைப் பதிவு செய்து இருக்கிறார் ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்.
இயற்பியல் இளங்கலைப் பட்டப்படிப்பு அங்கேயே தொடர்ந்தது. கல்லூரியில் அருள்திரு டி.என். செக்காரியா பாதிரியார் கலாமின் சிறந்த வழிகாட்டி. மேலும் காஞ்சி காமகோடி பீடாதிபதி பரமாச்சாரிய சுவாமிகளின் பக்தர்களான தோத்தாத்திரி மற்றும் சூரிய நாராயண சாஸ்திரியார் ஆகியோர் கணிதப் பேராசிரியர்கள்.
கல்லூரி இறுதியாண்டு. ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு. டால்ஸ்டாய், ஸ்காட் மற்றும் ஹார்டி போன்றோர் படைப்புகள் தொடங்கித் தத்துவ நூல்களும் படிப்பார் கலாம்.
நல்ல உள்ளங்களின் நல்லாதரவுடன் பி.எஸ்ஸி. படிப்பு முடித்து பட்டம் கிடைத்துவிட்டது. இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியிலிருந்து வேலைக்கு வரச்சொல்லிக் கடிதம் வந்தது. ஆனால், அப்துல் கலாமின் விருப்பம் வேறாக இருந்தது. தகப்பனாரிடமும், சகோதரர்களிடமும் தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதைத் தெரிவித்தார். அவர்கள் சம்மதிக்கவே பொறியியல் படிக்க எம்.ஐ.டி.யில் விண்ணப்பித்தார்.
1954-ஆம் ஆண்டு சென்னைத் தொழில்நுட்பப் பயிற்றகத்தில் 'வானூர்தியியல்' துறையில் சேர்ந்தார். பெங்களூரு இந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பயிற்சி பெற்று, 1957-ஆம் ஆண்டு வானூர்தியியலில் 'பொறியியல் பட்டதாரி' ஆனார். தொடர்ந்து, பணி நாடி விண்ணப்பித்த டேராடூனில் இந்திய விமானப் படைத்துறையில் தேர்வு பெறவில்லை. ஏமாற்றம் அடைந்தவர், ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தாவின் அருள்சொற்களால் ஊக்குவிக்கப்பட்டார்.
'முடிவை ஏற்றுக்கொள். வாழ்வுப் பயணத்தில் தொடர்ந்து செல். விமானப் படையில் சேர்வது உனக்கு விதிக்கப்படாமலும் இருக்கலாம். கவலைப்படாதே. உனது உயர்வு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நடக்கும். தோல்வியை மற. சோர்ந்து விடாதே. நீ நீயாக இரு. உன் ஆசைகளை ஆண்டவனிடம் விட்டுவிடு'.
தொடர்ந்து, பெங்களூருவில் விமானவியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 'நந்தி' என்ற மிதக்கும் விமானம், இந்திய விண்வெளித்துறையில் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலன் எஸ்.எல்.வி.-3, இந்தியப் பாதுகாப்புத் துறையில் அக்னி தொடங்கி பல ஏவுகணைகள் இவரது படைப்புகள்.
அவரின் ஒவ்வோர் அறிவியல் சாதனைக்கும் 'பத்ம' விருது இயல்பாகவே அவரைத் தேடி வந்து கெளரவம் பெற்றது. பொக்ரான் அணுகுண்டு பரிசோதனைக்கு முன்னமேயே 'பாரத ரத்னா' விருதும் பெற்ற விஞ்ஞானி டாக்டர் கலாம்.
அப்துல் கலாம் 2002 ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற தருணத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானி ய.சு. ராஜன், 'இந்த நாட்டை எப்படி முன்னோக்கிய நாடாக, முன்வளர்ந்த நாடாக ஆக்குவது என்பது குறித்து நாங்கள் பதினாறு தலைப்புகளில் ஆவணங்களைத் தயாரித்தோம்.
இது சிலர் மேற்கொண்ட காரியம் கிடையாது. பலர் கூடித் தேர் இழுத்தார்கள். ஒவ்வோர் ஆவணமும் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் இருக்கும். இதற்கு டாக்டர் அப்துல் கலாம் தலைவராக இருந்தார்' என்று குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய பிரதமரும், இந்தியா - 2020 எனும் குறிக்கோளை நிறைவேற்ற இருப்பதாக 2005-ஆம் ஆண்டு ஆளுநர்கள் மாநாட்டிலேயே உறுதி அளித்தார். ஆனால், 'அந்த அழுத்தமான மாநாட்டுப் பேச்சுகள் மறக்கப்பட்டுவிட்டன' என்று தமது 'திருப்பு முனைகள்' நூலில் ஆதங்கப்படுகிறார் டாக்டர் கலாம்.
பிர்லா கோயிலில் பஜனை முடிவில் அன்பளிப்பாகப் பெறப்பட்ட பொதுமக்கள் பணத்தில் 10 பைசா குறைந்ததற்கு இரவெல்லாம் உறங்காத காந்திஜியை அறிவோம். அமெரிக்காவிற்கு இந்திய ஆன்மிகத்தைப் போதித்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை கேட்டிருக்கிறோம்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனின் மனிதநேயக் குரலை உலகிற்கு எடுத்து உரைத்தவர் அல்லவா? அவர்தம் அறிவியல் சிந்தனைகளை இளைஞர்களிடம் எடுத்துச் செல்வோம்.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.