ஆன்லைன் தேசம்!

பெருங்கோபத்துடனும், கொலை வெறியுடனும் அமர்ந்திருக்கிறான் 19 வயது நிரம்பிய அந்த இளைஞன். அதிபரைக் கொல்லத் திட்டமிட்டு தோல்வியடைந்ததன் விரக்தி அவனது இரு கண்களிலும்
ஆன்லைன் தேசம்!
Updated on
3 min read

பெருங்கோபத்துடனும், கொலை வெறியுடனும் அமர்ந்திருக்கிறான் 19 வயது நிரம்பிய அந்த இளைஞன். அதிபரைக் கொல்லத் திட்டமிட்டு தோல்வியடைந்ததன் விரக்தி அவனது இரு கண்களிலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. வீதியை வெறித்தபடி சலனமின்றி உட்காந்திருந்த அந்த இளைஞனுக்கு சில அடி தூரம் முன்னே ஒரு கார் திடீரென வந்து நிற்கிறது. அதைப் பார்த்தவுடன் சிவந்து கிடந்த அவனது முகத்தில் சிரிப்பின் ரேகைகள் படர்கின்றன.
யாரைக் கொல்லத் திட்டமிட்டானோ அதே அதிபர் காருக்குள் அமர்ந்திருக்கிறார். இமைக்கும் நேரத்தில் துப்பாக்கி விசையை அழுத்துகிறான். அடுத்த சில விநாடிகளில் அதிபரின் இதயம், துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. இதோடு கதை முடிந்துவிட்டதாக எண்ணி நகர்கிறான் அந்த இளைஞன். ஆனால், அந்த ஒற்றைத் தோட்டாவின் உரசலில் எழுந்த தீப்பொறி அதற்கு பின்னர் 10 கோடி பேரைக் கொன்றொழிக்கப் போகிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. நிஜம்தான், முதல் உலகப் போர் தொடங்குவதற்கு விதையிட்டது இந்தக் கொலைச் சம்பவமே. கொலையுண்டவர் ஆஸ்திரிய அதிபர் ஃப்ரான்ஸ் ஃபெர்டினன்ட். கொலை செய்த இளைஞன் ஆஸ்திரிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த போஸ்னியாவைச் சேர்ந்த காவ்ரிலோ பிரின்சிப். வேறு பாதையில் செல்ல வேண்டிய அதிபர், வழிமாறி அங்கு வந்ததன் விளைவால் உலக நாடுகளின் விதிமாறிப் போனது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தது ஏறத்தாழ 103 ஆண்டுகளுக்கு முன்னால்... ஒருவேளை இன்றைக்கு இருப்பது போல சமூக வலைதளங்களும், கூகுள் வரைபடமும், நேவிகேட்டர் போன்ற வழிகாட்டும் செயலிகளும் அன்று இருந்திருந்தால் ஃப்ரான்ஸ், தனது பாதையைத் தவற விட்டிருக்க மாட்டார். பெரும் போரும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இத்தனை கோடி உயிர்கள் உலக நாடுகளின் அதிகார வெறிக்கு இரையாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கும்.
அங்கலாய்த்து என்ன ஆகப்போகிறது... உலக வரலாற்றின் கருப்புப் பக்கங்களை இனி ஒருபோதும் திருத்தியமைக்க முடியாது. ஆனால், இனிமேல், இப்படி ஒரு நிகழ்வு நேராமல் தவிர்க்க முடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் சமகாலத் தொழில்நுட்பங்களின் துணையுடன். ஏனென்றால், இன்றைக்கு வலைதளங்களின் உதவியால் இந்த உலகை உள்ளங்கைக்குள் சிறைவைக்கும் வாய்ப்பு நமக்கு வசப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் நியூஜெர்ஸியில் வெளியிடும் அறிவிப்பை மதுரை மேலமாசி வீதியில் உட்கார்ந்து கொண்டே அறிந்துகொள்ள முடிகிறது. கடல் கடந்து எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தின் வழியே இணைந்திருக்க முடிகிறது. விடியோ சாட்டிங் மூலம் வெளிநாட்டிலுள்ள மகளுக்கு சமையல் பாடம் எடுக்க முடிகிறது. அந்த அளவுக்கு சகலமானவர்களுக்கும் இணைய சேவை சுலபமாகச் சென்றடைந்திருக்கிறது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உலக நாடுகளிலேயே இந்தியாவின் இணையதளப் பயன்பாடுதான் அதிவேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது மொத்தம் 35 கோடி பேருக்கும் அதிகமானோர் செல்லிடப்பேசியில் இணையதள சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். பிராட்பேண்ட் பயன்பாட்டாளர்களை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 28 கோடியாக உள்ளது. இதிலிருந்தே இணைய உலகில் இந்தியாவின் அசுரப் பாயச்சலை ஊகிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்லிடப்பேசிகளில் இணையதளங்களைப் பயன்படுத்துவது என்பது அனாவசியம். இன்று அது அத்தியாவசியம். கால வெள்ளத்தின் துரித ஓட்டத்தாலும், சமூக வலைதளங்களின் படையெடுப்பாலும் இந்த மாற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது.
இதற்கு நடுவே, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் நிலவும் போட்டியால் டேட்டா கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டதும் இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சரி, இந்தியாவில் வலைதளங்கள் எதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சற்று ஆராய்ந்தால், பொழுதுபோக்கு விஷயங்களே அதில் முதன்மையாக இருக்கின்றன. அதாவது, படங்கள், பாடல்கள் போன்றவற்றைப் பார்ப்பதற்காக அதிக நேரம் செலவிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இணையவழி வர்த்தக தளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒருவர் வாரத்துக்கு சராசரியாக செல்லிடப்பேசியில் 28 மணி மணி நேரம் செலவிடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் செய்தித் தாள்கள் படிப்பதற்கு இந்தியர்கள் வாரந்தோறும் சராசரியாக ஒதுக்கும் நேரம் வெறும் 2 மணி நேரமாகக் குறைந்துவிட்டது.
இருந்தாலும் வலைதளங்களின் உதவியால் நாட்டு நடப்புகள் அனைத்தும் அடுத்த சில விநாடிகளிலேயே அனைவருக்கும் சென்றடைந்து விடுவது கொஞ்சம் ஆறுதல்.
அடுத்ததாக, தற்போதைய நவநாகரீக சூழலில் வலைதளப் பயன்பாட்டுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஸ்மார்ட் போன்களின் விற்பனையை சற்று உற்றுநோக்கினால் அதுவும் நம்மை மலைக்க வைக்கிறது.
பொதுவாக, ஸ்மார்ட் போன்களைப் பொருத்தவரை இந்தியாதான் மிகப் பெரிய வர்த்தக சந்தை. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பலனடைந்து வரும் ஒரே நாடு சீனா.
கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் விற்பனை விகிதம் 35 சதவீதம் உயர்ந்திருப்பதே அதற்கு சான்று. அதேகாலகட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த ஸ்மார்ட் போன்களின் விற்பனை பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.
"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் சீன செல்லிடப்பேசிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும், உள்நாட்டு நிறுவனங்கள் அதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எது, எப்படியோ! சாதக பாதகங்கள் ஆயிரம் இருந்தாலும் இணையதளப் பயன்பாட்டில் உலக நாடுகள் ஒவ்வொன்றையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறி வருகிறது என்பது நிதர்சனம்.
அதிலும் குறிப்பாக, அமெரிக்கர்களை விட இந்தியர்களே அதிகமாக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. அடுத்த சில ஆண்டுகளில் 75 கோடி வலைப் பயன்பாட்டாளர்களைக் கொண்ட தேசமாக நம் நாடு உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் கால் கடுக்க வரிசையில் நின்ற காலம்போய் இணையவழியே விண்ணப்பிக்கும் நிலை இப்போது வந்துவிட்டது. அதுமட்டுமன்றி, பல சேவைகளையும், விவரங்களையும் வலைதளங்களில் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு உருவாகிவிட்டது.
இணையத்தின் துணையோடு ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒளிக் கீற்று மெல்ல அரும்புவிட்டுக் கொண்டிருக்கிறது. அது புதிய விடியலாக உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனென்றால் இணையதளம் என்பது வெறும் சேவை மட்டுமல்ல... காலத்தின் தேவையும் கூட...

இந்தியாவின் வை-ஃபை இணையப் பயன்பாடு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com