காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வளர்ச்சிக்கு உதவும் கடல் பொருளாதாரம்

ஒரு நாட்டின் வளர்ச்சியில், கடல் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும், மக்களின் போக்குவரத்தும் அந்த நாடுகளின் பொருளாதார மற்றும்

News image
Updated On :2 மார்ச் 2017, 7:49 pm

ரமாமணி சுந்தா்

ஒரு நாட்டின் வளர்ச்சியில், கடல் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும், மக்களின் போக்குவரத்தும் அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் நாகரிகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கின்றன.
தற்பொழுது பல நாடுகளில் கடல் சார்ந்த பொருளாதாரம் அதாவது கடல் பொருளாதாரம்(Ocean Economy),  , அந்த நாடுகளின் மொத்த வருமானத்திலும், வேலைவாய்ப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடல் பொருளாதாரம் என்றால் என்ன?
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடலில் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள், கடலில் உற்பத்தியாகும் பொருட்களைப் பயன்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை கடல் பொருளாதாரத்திற்குள் அடங்கும்.
உலகெங்கிலும் கடல் பொருளாதாரத்திற்கு ஒரே மாதிரியாக பொருள் வரையறை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், அமெரிக்காவில் மொன்டெரெயிலுள்ள (Monterey) National Ocean Economic Program (NOEP)   எனும் நிறுவனம் கடல் பொருளாதாரத்தில் முக்கியமாக விளங்கும் நாடுகளில் எந்தெந்த துறைகள் கடல் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளது.
இந்த NOEP  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 12 துறைகளைச் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் கடல் பொருளாதாரத்தைச் சார்ந்தவை.
முதலாவதாக, மீன் பிடிக்கும் தொழில். இந்தத் துறை மீன் வளர்ப்பு, மீன் பிடித்தல், சிப்பி, நண்டினம் போன்ற கடல் உணவுகளை பதனப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கும்.
இரண்டாவதாக, கடல் அடிவாரத்திலும், கடல் நீரிலும் உள்ள உயிரற்ற பொருள் வளங்களை கண்டுபிடிப்பது, எடுப்பது மற்றும் பதனப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள். இதில் சுண்ணாம்பு, மணல், சரளை போன்ற பொருட்கள், உப்பு மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள் ஆகியவை அடங்கும்.
மூன்றாவதாக, கடலை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் தேடி, ஆராய்ந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபடுவது மற்றும் அதற்குத் தேவையான இயந்திரங்களை பராமரிப்பது போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அடங்கும்.
நான்காவதாக, பயணிகள் மற்றும் பொருட்களுக்கான கப்பல் போக்குவரத்து சேவை மற்றும் துறைமுகங்களின் செயல்பாடுகளும், அதன் பராமரிப்பும்.
ஐந்தாவது, கடல் மற்றும் கடற்கரைகளில் நடைபெறும் உல்லாச நடவடிக்கைகள், கேளிக்கைகள் மற்றும் சுற்றுலா. இதில் கடற்கரையிலுள்ள உணவகங்கள், விடுதிகள், உல்லாசப் படகுகள், கடல் விளையாட்டு சாதனங்களின் விற்பனை, நீர் வாழ் இனங்களின் காட்சியகம் போன்றவை இடம்பெறும்.
ஆறாவது, பொருளாதார நடவடிக்கை, கடல் அடிவாரத்தில் கேபிள்கள், குழாய்கள் போடுவது மற்றும் துறைமுகங்கள் கட்டுவது, பாலம் கட்டுவது போன்ற கடல் தொடர்பான கட்டுமானப் பணிகள்.
ஏழாவதாக, கடல் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கான இயந்திரங்கள், வால்வு, கேபிள், சென்சார், கப்பலுக்குத் தேவையான உறுப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்வது.
எட்டாவது, கப்பல்கள், படகுகள் கட்டுவது, கடலை ஒட்டி தளங்கள் அமைப்பது மற்றும் அவற்றைப் பராமரிப்பதும், பழுது பார்ப்பதும்.
ஒன்பதாவதாக, கடல் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான நிதி மற்றும் காப்பீடு, ஆலோசனை, தொழில்நுட்ப சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குதல்.
பத்தாவது நடவடிக்கையில், R&D  என்று சொல்லப்படும் கடல் சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி போன்றவை இடம்பெறும். பதினொன்றாவது, கடலோர காவல்படை, கடற்பயணம் மற்றும் பாதுகாப்பு, அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளின் கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவையெல்லாம் இடம்பெறும்.
இறுதியாக, மேலே கூறிய துறைகளில் சேர்க்கப்படாத நடவடிக்கைகள் - அதாவது காற்று, கடல் அலை போன்றவற்றிலிருந்து புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியை உற்பத்தி செய்தல், கடல் வாழ் உயிரற்ற வளங்களை வளர்ப்பது, கடல் நீர் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகள் இதில் இடம்பெறும்.
சமீப காலமாக கடற்கரைப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில், கடல் சார்ந்த பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
கனடா, இந்தோனேஷியா, பிலிபின்ஸ், டென்மார்க், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிக நீளமான கடற்கரை பகுதிகளை கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் அடங்குகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் முதல் இருபது நாடுகளுக்குள் இடம்பெறுகின்றன.
இந்த நாடுகளில் கடல் வளத்தின் மூலம் பொருளாதார பயன்களை அடைவதற்கான வாய்ப்புகள் பெரும் அளவில் உள்ளன. சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடல் சார்ந்த பொருளாதாரம் அந்தந்த நாடுகளின் மொத்த வருமானத்தில் நான்கு சதம் பங்கு வகிக்கிறது. சீனாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.இங்கிலாந்தில் சுமார் அரை கோடி பேர்களுக்கு இது வேலை வழங்குகிறது.
7500 கிலோ மீட்டர் கடற்கரையோரப் பகுதிகளையும், இருபது லட்சம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமாக Exclusive Economic Zone என்று அழைக்கப்படும் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தையும், 1300-க்கும் அதிகமான தீவுகளையும், நதிகளின் இணைப்புகளையும் கொண்ட இந்தியா இயற்கையிலேயே கடல் மார்க்கமாக வல்லமை படைத்த நாடாக விளங்குகிறது.
பிரத்தியேக பொருளாதார மண்டலம்(Exclusive Economic Zone)   என்பது ஐக்கிய நாட்டு சபையின் கடல் சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி பரிந்துரைக்கப்
பட்டுள்ள கடல் பகுதிகள். இதன்படி ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தப் பகுதிக்குள் உள்ள கடல் வளங்களைப் பயன்படுத்தவும், நீர் மற்றும் காற்றிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்யவும் உரிமை அளிக்கப்படுகிறது.
1997-ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெருங்கடலின் கரையை ஒட்டியிருக்கும் நாடுகளின் சங்கம் (Indian Ocean Rim Association)  இயங்கி வருகிறது.
இருபத்தியோரு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் நோக்கம், இதில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடையே நிலையான மற்றும் சீரான வளர்ச்சிக்கு வழிவகுப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கான அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்குவதும், பொது நலன் மற்றும் பொதுவானப் பயன்களை அடைவதற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை நிலைநாட்டுவதும், நாடுகளிடையே பொருட்கள்,சேவைகள், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பரிமாற்றங்களில் உள்ள தடைகளை குறைப்பதும் ஆகும்.
இந்தியப் பெருங்கடலிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கினாலும், நமது நாடு பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பெருங்கடலின் மேல் சீன தேசத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இலங்கை மற்றும் மாலத் தீவுகளில் சீனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் கடலிலுள்ள கனிமங்கள் மற்றும் கடல் மின்சக்தி போன்ற வளங்களை அடைவதற்கான தொழில்நுட்பங்களையும், மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியா நவீனப்படுத்த வேண்டியது அவசியம்.
ஆழ்}கடல் மீன் பிடிப்பு என்பது நமது நாட்டில் மிகக் குறைவாகவே நடைபெறுகிறது. மேலும் ஆழ்-கடல் சுரங்கம் மற்றும் கடல் அனல் மின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும். இந்தியப் பெருங்கடல் மிகச் செழுமையான வளங்களைக் கொண்ட ஒன்று.
ஆனால் அந்தக் கடலிலிருந்து நீண்ட காலம் நிலையான பயனை அடையவேண்டும் என்றால், கடல் வளங்கள் அதிகம் சுரண்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நமது கப்பல் கட்டும் தொழில் உலகில் 17-ஆவது இடத்திலுள்ளது. இந்தத் தொழில்சாலைகளையும் நாம் நவீனமயமாக்குதல் அவசியம். கப்பல் கட்டும் தொழிலில் தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நம்மைவிட மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.
நமது நாட்டில் 90 சதவீதம் பொருட்களின் ஏற்றுமதி - இறக்குமதி நீர் மார்க்கமாகவே நடைபெறுகிறது. 2015-16ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 200 துறைமுகங்கள், நூறு கோடி டன்னுக்கும் அதிகமான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன.
நாட்டின் துறைமுகங்களை உலகத்தரம் வாய்ந்ததாக ஆக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்யும் நோக்கத்துடன் கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் ’சாகர்மாலா' செயல்திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த ’சாகர்மாலா' திட்டத்தின்படி, கடற்கரையை ஒட்டி தொழிலகங்களை அமைப்பதின் மூலம் உள்நாட்டு போக்குவரத்துச் செலவுகளையும், தடங்கல்களையும் வெகுவாக குறைக்க முடியும்.
இந்தத் திட்டத்தின்படி கடற்கரையோர நகரங்களில் தொழிற்சாலைகளும், உள்கட்டமைப்புகளும் அதிகரிக்கப்பட்டால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் இந்தத் துறைமுகங்களும் அதை அடுத்த பகுதிகளும் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.