ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மோடி அரசின் மோசடி வித்தை!

மத்திய அரசு முன்பு மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கவும், அதை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:09 am

எம்.ஜி.கே. நிஜாமுதீன்

மத்திய அரசு முன்பு மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கவும், அதை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்பிறகு ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டத்தை அறிவித்து அனுமதியும் வழங்கியுள்ளது.
மத்திய அரசு மக்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறதென்று புரியவில்லை. ஒருவன், அவன் வசிக்கும் பகுதியில் வாழ்பவர்களிடம் சிங்கம், புலி, கரடி, பாம்பு ஆகியவற்றை வளர்க்க போகிறேன் என்றான். அப்பகுதி மக்கள் பயந்து இது எல்லாம் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மிருகங்கள், இதனை குடியிருப்பு பகுதியில் வளர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்ட அவன் யோசித்து அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தான்.
பின்னர் மீண்டும் பொத்தாம் பொதுவாக வன உயிரினங்களை வளர்ப்பதாக அறிவித்தான். இதன் உள்நோக்கம் பலருக்கு புரியவில்லை. இவன் வன உயிரினம் என்கிறானே மான், முயல், மயில் போன்றவைகளும் வன உயிரினம் தான் சிங்கம், புலி, கரடியும் வன உயிரினம் தான். இப்படி பொத்தாம் பொதுவாக அனுமதி வாங்கிவிட்டு எதை வளர்க்கப் போகிறானோ என்று அப்பகுதியினர் பயந்து நடுங்கி குழம்பினர்.
இதைப்போலதான் மீத்தேனை திரும்பப் பெற்றுவிட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறுவதும்.
ஹைட்ரோ கார்பனும் மீத்தேனை (CH4) போன்றதுதான். அதுபோல எத்திலின் (C2H4), புரோப்பேன்(C3H8),  புத்தேன் (C4H10), பென்த்தேன் (C4H12), எச்தேன் (C5H4), சேல் வடிவில் கிடைக்கும் வாயுக்கள் மற்றும் எல்.பி.ஜி., இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, தார் இவை அனைத்தும், ஹைட்ரோ கார்பன் குடும்பத்தை சார்ந்தவைதான். இதில் எதை சோதிக்க போகிறோம் என்று சொல்லாமல் பொத்தாம் பொதுவாக அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலே.
இயற்கை எரிவாயு துரப்பனப் பணிகள் மேற்கொள்ளும்போது தானாக பீறிட்டு வெளியே வரக்கூடியது. இது நேரடியாக தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் மீத்தேனின் அளவு மிக மிக குறைவு (10 சதவீதத்திற்கு கீழ்தான்). இதனை சேமித்து வைக்கவும் முடியாது. எல்.பி.ஜி}ஆக மாற்றவும் இயலாது. எல்.பி.ஜி- யில் சுமார் 90 சதவீதம் மீத்தேன் உள்ளது. ஒரு சதுர சென்டி மீட்டர் எல்.பி.ஜி- யை அதன் சிலிண்டரிலிருந்து வெளியே விட்டால், அது 255 சதுர சென்டி மீட்டர் அளவுக்கு வாயுவாக மாறும்.
எண்ணெய் துரப்பனப் பணியில் கிடைப்பது கச்சா எண்ணெய். இதை எடுப்பதற்கு குறைந்த அளவு மணலையும் தண்ணீரையும் பயன்படுத்துகிறார்கள். இது வெளியே வந்தவுடன் கச்சா எண்ணெயை பிரித்து எல்.பி.ஜி., விமான எரிபொருள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, மெழுகு, நாப்தா, தார் போன்ற 24 வகையான பொருட்கள் எடுக்கப்படுகின்றன.இதில் மண்ணும் தண்ணீரும் கலந்து வரும். இவற்றை எடுப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறைவு. இருந்தபோதிலும் நாகை, திருவாரூர் மாவட்ட பகுதியில் இதனால் அவ்வப்போது விபத்துகளும் சேதங்களும் ஏற்பட்டவண்ணமே உள்ளன. மேலும் இதை எடுக்கும்போது இயற்கை எரிவாயு கட்டுங்கடங்காமல் சீறி வெளியே வரும். இது வெளியேறினால்தான் கச்சா எண்ணெய் வெளிவரும்.
அப்படி வெளியே வரும் எரிவாயுவை சேமித்து வைக்க முடியாததனால் திறந்து விட்டு விடுவார்கள். இது காற்றில் கலந்தாலும் ஆபத்து. ஆதலால் அதனை கொளுத்தி விடுவார்கள். இதனால் அப்பகுதியில் மழை மேகங்கள் கூடுவதில்லை. சில சமயங்களில் இந்த குழாய்களில் பழுது ஏற்பட்டால், அல்லது விபத்து ஏற்பட்டால் அப்பகுதி நிரந்தரமாக விவசாயத்திற்கு ஏற்றதாக இல்லாமல் போய்விடுகிறது.
இதற்கே இப்படியென்றால், மீத்தேன் போன்றவற்றை எடுப்பதற்கு மிக அதிக அளவில் தண்ணீரும், ஆற்று மணலும் தேவைப்படுகிறது. ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில் என்ன நடக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மேலும் இதற்காக ஆற்று மணலை அதிகளவு எடுப்பதால், ஆற்று மணல் விலை கடுமையாக உயரும்.
மேலும் தண்ணீரையும் மணலையும் கடுமையான உஷ்ண நிலைக்கு கொண்டு வந்து அதோடு கொடிய விஷத் தன்மையுள்ள ரசாயனங்களையும், வெடிமருந்துகளையும் சேர்த்து பூமிக்கு உள்ளே செலுத்தி வெடிக்கவும் செய்ய வேண்டும்.
உதாரணமாக பூமியின் உஷ்ண நிலை 36 சென்டிகிரேடு என்றால், பூமிக்கு உள்ளே செல்ல செல்ல ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1 சென்டிகிரேடு வெப்பம் கூடிக்கொண்டே செல்லும். மீத்தேனுக்கு 6000 மீட்டர் ஆழம் செல்லவேண்டுமென்றால் அங்கே உள்ள உஷ்ண நிலை, பூமியின் உஷ்ணநிலையை விட 60 டிகிரி கூடி 96 டிகிரி சென்டிகிரேடு ஆகிறது.
அதாவது 204.8 பாரன்ஹீட் உஷ்ணம் அந்த இடத்தில் இருக்கும். அதை விட பன்மடங்கு கூடுதலாக உஷ்ணப்படுத்தி அதோடு கொடிய விஷமுள்ள ரசாயனங்களை சேர்த்து அனுப்பினால்தான் மீத்தேனை எடுக்க முடியும். செல் வடிவில் உள்ள வாயுவை எடுக்க இதோடு வெடிமருந்துகளையும் பயன்படுத்தி பாறைகளை உடைத்தாக வேண்டும்.
இவ்வளவையும் பயன்படுத்தி இந்த கொடிய வாயுவை வெளியே எடுத்தாலும் பிறகு சேமித்துதான் வைக்கவேண்டும். மாறாக உடனடியாக சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (ரீபைனரி) தமிழ்நாடு கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் தென் பகுதியில் எங்கும் இல்லை.
வடநாட்டில் குஜராத்தில் மட்டும் ரிலையன்ஸுக்கு சொந்தமான மீத்தேனை சுத்திகரிக்கக் கூடிய ஆலை உள்ளது. தானே எரியக்கூடிய இந்த கொடிய வாயுக்களை கையாள முடியாமல் அமெரிக்காவே திணறும்போது, ரீபைனரி இல்லாத நிலையில் இந்தியா எப்படி கையாளும்? இதற்கு எல்லோருக்கும் விடை தெரியும்.
சமீபத்தில் தமிழக கடலில் ஏற்பட்ட எண்ணெய் படலங்களை அகற்றுவதற்கு இந்திய அரசு எவ்வித அறிவியல் பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் மனித சக்தியை பயன்படுத்தி வாளிகளால் அப்புறப்படுத்தியதை உலகே அறியும். இந்நிலையில் இவர்கள் எப்படி மீத்தேனை கையாளப்போகிறார்கள்?
மேலும் மீத்தேன் போன்றவற்றை வெளியே எடுக்கும்போது அதோடு கொடிய விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்த கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரும் ஆயிரக்கணக்கான லோடு மணலும் மீத்தேனுடன் வெளியே வரும். இதனால் அப்பகுதி நிலம் பயன்படாத பாழ்நிலமாகிப் போகும்.
மேலும் 6000 மீட்டருக்கு கீழே மீத்தேன் எடுக்கப்பட்ட இடம் அல்லது பாறை உடைத்து ஷேல் வாயு எடுக்கப்பட்ட இடம் வெற்றிடம் ஆகும்போது கடல் நீர் உட்புகவோ அல்லது பூகம்பம் ஏற்படவோ வாய்ப்பு உண்டு. இதை மறுக்க முடியாது.
1956-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெட்ரோல் எடுப்பதற்கான சிறப்பு சட்டத்தின் கீழ் ONGC  மட்டுமே இதற்கான அனுமதியை பெற்றிருந்தது. அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ’நியூ எக்ஸ்புளோரேசன் லைசன்ஸிங் பாலிசி' (NELP) சட்டத்தின் கீழ் பிரிட்டன் பெட்ரோலியம், செல் பெட்ரோலியம், ரிலையன்ஸ், கைன் எனர்ஜி போன்ற உலகத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் உள்ளே வர அனுமதி அளிக்கப்பட்டபோதே ஆபத்துகள் வந்துவிட்டன.
பொதுவாக ONGC வாயு மற்றும் கச்சா எண்ணைக்காக ஆய்வு அல்லது துரப்பன பணிகள் மேற்கொள்ளும்போது இவ்வளவு பெரிய எதிர்ப்புகள் வந்தது இல்லை. ஏனென்றால் அவற்றால் ஆபத்துகளும், மாசு ஏற்படுதலும் இருந்தாலும் கூட அவற்றால் வரும் நன்மைகள் அதிகம். ஆனால் இவற்றால் பன்மடங்கு ஆபத்துகள் அதிகம். மேலும் இத்திட்டங்கள் நிரந்தரமானவை அல்ல.
உத்தேசமாக 20 முதல் 30 ஆண்டுகள்தான் அப்பகுதியில் மீத்தேன் போன்றவை கிடைக்கும். ஆனால் அந்த நிலமோ நிரந்தரமாக பயனற்றுப் போய் விடும். மக்கள் வசிக்காத, உழவுக்கு பயன்படாத இடங்களில் இவை எடுக்கப்பட்டால் அது குறித்து நம் கவலை கொள்ள தேவையில்லை. உதாரணமாக, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் மக்கள் வசிக்காத, விவசாயத்திற்கு பயன்படாத இடங்களில் மீத்தேன் வாயு எடுக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வழியில்லை.
ஆனால் தமிழ்நாட்டிலோ மக்கள் வசிக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் நிலங்களில் எடுக்கத் திட்டமிடப்படுகிறது. மீத்தேன் கிணறுகளில் அல்லது அதை கொண்டு வரும் குழாய்களில் அல்லது தேக்கி வைக்கும் தொட்டிகளில் பழுது ஏற்பட்டாலோ, கவனக்குறைவால் கசிவு ஏற்பட்டாலோ அப்பகுதியே நாசமாகும் அல்லது தீ விபத்துகள் ஏற்படும்.
இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த இத்திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்று புதிய பெயரிட்டு மத்திய அரசு மோடி மஸ்தான் வேலை செய்கிறது. முந்தைய அரசு இதை கொண்டு வந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், அதை இந்த அரசு ரத்து செய்திருக்க வேண்டுமே தவிர மாற்று பெயரில் அதனை செயல்படுத்தியிருக்கக் கூடாது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, எவ்வித பாதிப்பும் இல்லாத சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டம் குஜராத் மாநிலத்திற்கு; ஆனால் மக்களை கொல்லும் கல்பாக்கம், கூடங்குளம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு. இது என்ன நியாயம்?

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.