காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருத்துவ செலவு என்னும் பூதம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நாம் எல்லாரும் அறிந்த பழமொழி.

News image
Updated On :10 மே 2017, 7:58 pm

ரமாமணி சுந்தா்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நாம் எல்லாரும் அறிந்த பழமொழி. ஆனால் குடும்பத்தில் யாராவது ஒருவர் தீவிர நோயினால் தாக்கப்பட்டால் அக்குடும்பம் தனது செல்வத்தையெல்லாம் இழந்து கடனில் மூழ்கித் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது பலர் அறியாத உண்மை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் மருத்துவச் செலவுகளை பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
டென்மார்க் (15), இங்கிலாந்து (18), சீனா (44) போன்ற நாடுகளில் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் ஒரு சிறு பங்கே குடும்பத்தினர் செலவழிக்கிறார்கள். ஆனால் நமது நாட்டிலோ பாதிக்கப்பட்ட குடும்பமே 70 சதவீதம் வரையில் செலவழிக்க வேண்டியுள்ளது.
தேசிய மாதிரிக் கணெக்கெடுப்பு நிறுவன(National Sample Survey Organization) ஆய்வின்படி, 2014-ஆம் ஆண்டில் மருத்துவச் செலவின் சுமை காரணமாக நமது நாட்டில் ஏழு விழுக்காடு குடும்பங்கள், அதாவது 880 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர்.
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, நாட்டில் கிராமப்புறங்களில் ஐந்தில் ஒரு வெளி நோயாளியும், நகரங்களில் 28 சதவீத வெளி நோயாளிகளும் மட்டுமே அரசு நடத்தும் மருத்துவ வசதிகளோடு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
இந்த விகிதங்கள் உள் நோயாளிகளைப் பொருத்தவரையில் சற்றே அதிகமாக (கிராமங்களில் 42 சதவீதமாகவும், நகரங்களில் 32 சதவீதமாகவும்) உள்ளன என்றாலும், பெரும்பாலும் மக்கள் தனியார் மருத்துவ வசதிகளையே நாடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
கிராமங்களில் 55 சதவீதத்தினரும், நகரங்களில் 60 சதவீதத்தினரும் தாங்கள் எந்த விதமான சிகிச்சையும் பெறாததற்கு, பணத் தட்டுப்பாட்டையே காரணமாகச் சொல்கிறார்கள். கிராமங்களைப் பொருத்தவரையில் சரியான மருத்துவ வசதி ஒன்றும் அருகில் இல்லாததும் சிகிச்சை பெறாததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஆரம்ப சுகாதார மையம், சமுதாய சுகாதார மையம், மாவட்ட பொது மருத்துவமனை என்று மூன்றடுக்கு சுகாதார வசதியை நமது அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுவி அனைவரும் அடிப்படை மருத்துவ வசதி பெற வழி வகுத்துள்ளது.
2005-ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை (National Rural Health Mission) அமல்படுத்தி, ஆரம்ப சுகாதார வசதிகளைப் பெருக்கி கிராமப்புற மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களின் உடல் நலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி எடுத்துள்ளது அரசு. அப்படி இருந்தும் மக்கள் தனியார் மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனைகளையும் நாடுவதற்கான காரணம் என்ன?
மக்களுக்கு அரசு மருத்துவ வசதிகளின் செயல்பாட்டின் மேல் திருப்தி இல்லாமையே முக்கிய காரணம். பல ஆரம்ப சுகாதார மையங்கள் பெயருக்குத்தான் இயங்கி வருகின்றன. பலவற்றில் மருத்துவர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
உதாரணமாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி ஆரம்ப சுகாதார மையங்களிருந்து வரும் நோயாளிகளுக்கு, பரிந்துரை மருத்துவ வசதிகளாகச் (Referral hospital) செயல்படும் சமுதாய சுகாதார மையங்களில், சிறப்பு மருத்துவர்களின் பணியிடம் 19 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
22,040 சிறப்பு மருத்துவர்களுக்கு பதில் 4,186 பேர் மட்டுமே தற்பொழுது பணியில் உள்ளனர். அப்படியே சில இடங்களில் மருத்துவர்களும் இதர பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒழுங்காகப் பணிக்கு வருகிறார்களா என்பது கேள்விக்குறியே.
அரசு மருத்துவமனைகளில் எப்பொழுதுமே அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடுதான். கூலி வேலை செய்யும் ஏழை எளிய மக்கள் தங்கள் வேலை நேரத்தில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் காத்திருந்து தங்களது ஒரு நாள் கூலியை இழக்கத் தயாராக இல்லை போன்ற காரணங்களும், அரசு மருத்துவ வசதிகளுக்காக மேல் நம்பிக்கையின்மையும் பாமர மக்களையும் கூட தனியார் மருத்துவர்களிடம் செல்ல வைக்கின்றன.
அரசு மருத்துவ வசதிகளில் காத்திருக்க நேரம் இல்லாமையினாலும், தனியார் மருத்துவரிடம் சென்றால் ஏகமாக பணம் செலவழியும் என்பதாலும் தாங்களாகவே அல்லது மருந்துக் கடைக்காரரின் ஆலோசனையின்படி மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நோயாளிகளுக்கும் நாட்டில் பஞ்சமில்லை.
பெருகி வரும் மருத்துவத் தேவைகளை அரசு மருத்துவ வசதிகளால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவ வசதிகளுடன் தனியார் மருத்துவ வசதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி அளிக்க முடியும்.
தனியார் மருத்துவத்துறையின் செயல்பாடுகளை கண்காணித்து, மக்கள் நியாயமான விலையில் தரமான சிகிச்சை பெற வழி வகுக்க வேண்டியது அரசின் கடமை.
சமீபத்தில், இருதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் 'ஸ்டெண்ட்' சாதனத்திற்கு அரசு நியாயமான விலையை நிர்ணயித்து லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் பயனடையும்படி செய்துள்ளது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை.
குடும்பங்கள் சிகிச்சைக்காக கையை விட்டு செலவழிக்கும்(Out of pocket expenditure)   தொகையில் கணிசமானப் பங்கு மருத்துகளுக்கே செலவழிக்கப்படுகிறது. தேசிய மாதிரி கணெக்கெடுப்பின்படி, சிகிச்சைக்காக வெளிநோயாளிகள் செலவழிக்கும் தொகையில், கிராமங்களில் 72 சதவீதமும், நகரங்களில் 68 சதவீதமும் மருந்துகள் வாங்குவதிலேயே செலவழிக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், நோயாளிகள் பெரும்பாலும் கையிலிருந்து பணம் செலவழித்து வெளிக் கடைகளிலிருந்தே மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது. ஏழை மக்களுக்குத் தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வழி வகுக்கும் விதத்தில், ஜெனரிக் மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பெரும் மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும், பிராண்ட் பெயர்களில் விற்கப்படும் மருந்துகளை விட ஜெனரிக் என்று கூறப்படும் அடிப்படை மூலக்கூறு மருந்துகள், மிகக் குறைவான விலையில் கிடைக்கும்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நேஷனல் ஹெல்த் சிஸ்டம் என்று சொல்லப்படும் அரசு மருத்துவ வசதிகள் மக்களின் மருத்துவத் தேவைகளை கவனித்துக் கொள்கின்றன. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் தனியார் மருத்துவ வசதிகளுடன் இணைத்து செயல்படுகின்றன. நமது நாட்டில் பெருகி வரும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க உதவும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் இன்னமும் பெருமளவில் மக்களைச் சென்றடையவில்லை.
தற்சமயம் அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஓரளவு வசதி உள்ளவர்கள் இணையக் கூடிய பல்வேறு மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் எந்த ஒரு காப்பீட்டு திட்டமும் வெளிநோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இந்தத் திட்டங்களினால் பயனடைய முடியும்.
IRDAI (Insurance Regulatory and Development Authority of India)  அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி 2015-16ஆம் ஆண்டில் மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்தப்பட்ட காப்பீட்டுத் தவணைப் பணம் 21.7 சதவீதம் அதிகரித்து 24,448 கோடி ரூபாய் இலக்கைத் தொட்டுள்ளது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, கடந்த பத்தாண்டு காலத்தில் (2004-2014) நமது மக்கள்தொகையில் மருத்துவ காப்பீடு உள்ளவர்களின் விகிதம் ஒன்றிலிருந்து பதினைந்து சதமாக உயர்ந்துள்ளது. இப்படி உயர்ந்திருந்தாலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு எந்தவிதமான காப்பீடு பாதுகாப்பும் இல்லை என்பது தான் உண்மை.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காகத் தொடங்கப்பட்ட மத்திய அரசின்Rashtriya Swasthya Bima Yojana (RSBY)   திட்டம் 12-13 சதவீதம் மக்களைக் கூடப் போய்ச் சேரவில்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மொத்தத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏழை மக்களுக்கு அவர்களது மருத்துவச் செலவை ஈடு செய்ய எந்தவிதமான காப்பீடும் இல்லை.
குடும்பத்தினர் யாரவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் இவர்கள் கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சொத்தை விற்றோதான் சமாளிக்க வேண்டும்.
பதினைந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மத்திய அரசு புதிய, தேசிய சுகாதாரக் கொள்கையை(National Health Policy, 2017)  சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்தப் புதிய கொள்கையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும், அத்தியாவசிய மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நாட்டின் வருமானத்தில் மருத்துவத் தேவைகளுக்காக மிகக் குறைந்த அளவு (1.2 சதவீதம்) செலவழிக்கும் நாடு இந்தியாதான். இந்த அளவு படிப்படியாக 2.5-ஆக உயர்த்தப்படும் என்று புதிய சுகாதாரக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் பொருளாதார அடிமட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்ப்போமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.