காவல் தெய்வங்கள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு இது போதாத காலம். அதனால்தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசும் சிலரிடம் சிக்கிக் கொண்டு பாடாய்ப் படுகிறார்கள்.
Updated on
2 min read

இந்திய ராணுவ வீரர்களுக்கு இது போதாத காலம். அதனால்தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசும் சிலரிடம் சிக்கிக் கொண்டு பாடாய்ப் படுகிறார்கள்.
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கல்லெறியும் பொதுமக்களுக்கு எதிராக பிரிவினைவாதி ஒருவரை ஜீப்பின் முன்பக்கத்தில் வைத்துக் கட்டி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரைக் காப்பாற்றினார் ராணுவ மேஜர் கோகோய்.
இதனைப் பாராட்டாமல் கடுமையான கண்டனத்தை மனித உரிமை ஆர்வலர்களும் பிரிவினைவாதிகளும் தெரிவித்துள்ளனர். ராணுவ உயரதிகாரிகள் மேஜர் கோகோயின் இம்முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் தினமும் நடைபெற்று வரும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பிரிவினைவாதிகள் செய்யும் செயல்
களையும் பொதுமக்கள் கல்லெறிவதையும் மனித உரிமை ஆர்வலர்களோ அல்லது அங்குள்ள எதிர்க்கட்சியினரோ கண்டிப்பதில்லை. மாறாக கல்லெறிபவர்களுக்கு பாகிஸ்தான் ஊக்கத்தொகை வழங்குகிறதாம்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் பலியான வீரர்கள் அரசியல்வாதிகளைப் போல ஒதுங்கியிருந்தாலோ அல்லது எல்லையில் தீவிரவாதிகளை ஊடுருவ விட்டாலோ அரசியல்வாதிகள் இப்படி எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கலாசாரம், பண்பாடு, பண்டிகைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பஞ்சாப்பில் இருப்பவர்கள் அதிகமாக ராணுவத்தில் சேருவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் அமைதி வட மாநிலங்களில் இல்லை. ஆனாலும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கடைப்பிடித்து வருகிறோம்.
பிரதமர் மோடியைக் குறிவைத்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவோ ராணுவத்தினரைக் கொச்சைப்படுத்தினார். குஜராத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொன்னது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவரைவிட எத்தனையோ பேர் கட்சியில் இருந்தும் முலாயம் சிங் யாதவின் மகன் என்பதால்தானே அவருக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. இல்லாவிட்டால் இவ்வளவு சிறிய வயதில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் பதவியை அலங்கரித்திருக்க முடியுமா?
பாகிஸ்தானைப் போல ராணுவப் புரட்சி நடைபெற்றால் இந்த அரசியல்வாதிகளின் நிலை என்ன? அங்கு ராணுவத்தை இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பேசுவதைப் போலப் பேசத்தான் முடியுமா?
ஒவ்வோராண்டும் பல ராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள். எல்லைப் பகுதியில் போரிடும்போதும், பனிபடர்ந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போதும் எத்தனை யெத்தனையோ ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவர் ராணுவத்தில் சேர்ந்தாலே அவருடைய உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
நாமெல்லாம் பெரும்பாலும் குடும்பத்துடன்தான் இருக்கிறோம். ஆனால் ராணுவ வீரர்களின் நிலை அப்படியா? குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ந்து கொள்ளலாமே தவிர உடனடியாக விடுமுறை கிடைக்காது.
கிடைக்கும் விடுமுறையில் சொந்த பந்தங்கள், குடும்பம், நட்பு வட்டம் அனைத்தையும் சந்தித்தாக வேண்டும். அதற்குப் பின் மீண்டும் அடுத்த விடுமுறையில்தான், இந்தச் சிறிய சந்தோஷம் கிடைக்கும். விடுமுறையில் இருக்கும்போதும் உடனடியாக வர வேண்டுமென்றால் சென்றாக வேண்டிய கட்டாயமும் உண்டு.
ராணுவத்தைக் கடுமையாக விமர்சிக்கும் அரசியல்வாதிகள் எல்லைப் பகுதிக்குச் சென்று அவர்கள் சந்திக்கும் சவால்களை ஒருமுறை நேரடியாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் ராணுவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீவிரம் புரியும்.
ஆனால் இந்திய அரசியல்வாதிகளோ எல்லையைப் பாதுகாக்கப் போராடும் ராணுவத்துக்காக வாங்கும் ஆயுதங்களில் கூட ஊழல் செய்கிறார்கள்.
மும்பையில் நடைபெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கசாப்பின் தாக்குதல்களால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். எவ்வளவு சொத்துகள் சேதமடைந்தன. எந்த அரசியல்வாதி சென்று பொதுமக்களைக் காப்பாற்றினார்கள்.
அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் சென்றுதானே காப்பாற்றினர். பேரிடர் காலங்களிலும் ராணுவத்தினரின் பணி மகத்தானது. நிலநடுக்கம், கடும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின்போது ராணுவ வீரர்கள், தங்கள் வேலை எல்லையைப் பாதுகாப்பது மட்டுமே என்று கூறி ஒதுங்கினால் என்ன ஆகும்?
அரசியல்வாதிகள் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முடியுமா?
ராணுவ வீரர் ஒருவர் பனி மலைக்குள் விழுந்து சில நாள்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருடைய உயிருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து தேசத்தின் பலத்தை உணர்த்தினர்.
அவர் உயிரிழந்தபோது தங்கள் குடும்பத்தில் ஒருவரே உயிரிழந்தது போல உணர்வுபூர்வமாக மனதில் அஞ்சலி செலுத்தினர். இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அடக்கம். அப்போது எங்கும் இதே பேச்சாக இருந்தது.
எல்லையில் கடும் குளிரில் வாடி வதங்கித் தங்கள் குடும்பத்தை விட்டு நாட்டைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை அரசியல்வாதிகள் விமர்சனம் செய்யக் கூடாது.
அரசியல்வாதிகளே! உங்களுக்கென்று பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அதை மற்றவர்களின் மீது விமர்சனம் செய்யுங்கள். ராணுவ வீரர்களின் மீது வேண்டாம். ஏனென்றால் அவர்கள்தான் நமது காவல் தெய்வங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com