காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமண உறவில் வன்கொடுமையா?

எழுபத்தேழு ஆண்டுகள் பழைமையான சட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து, 18 வயது நிரம்பாத மனைவியுடன் கணவன்

News image
Updated On :22 நவம்பர் 2017, 8:16 pm

ரமாமணி சுந்தா்

எழுபத்தேழு ஆண்டுகள் பழைமையான சட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து, 18 வயது நிரம்பாத மனைவியுடன் கணவன் பாலுறவு கொண்டால், அது பலாத்காரமாகக் கருதப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தக் கணவனுக்கு பத்தாண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் அல்லது பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act 2012) கீழ் ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டத்தின் இந்த மாற்றத்தின் காரணமாக நாட்டில் குழந்தைத் திருமணங்கள் வெகுவாகக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. 
இது வரையில், இந்திய குற்றவியல் சட்டம் 375 -இன், உட்பிரிவு 2-இன் படி 15 வயதிற்குக் குறைவில்லாத மனைவியுடன் அவரது கணவன் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிவிலக்கு பிற சட்டங்களுக்கு முரணாக இருந்தது. 
உதாரணமாக பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களை குழந்தைகள் என்று குறிப்பிடுகிறது. மேலும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கும் பொழுது 15 வயதிற்குக் குறைவில்லாத மனைவியுடன் பாலுறவு கொள்வது சரி என்று சட்டம் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 
அதுமட்டுமல்லாமல், வாக்களிப்பு, சொத்துரிமை போன்ற விவகாரங்களில் குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்கும் பொழுது, இந்த விஷயத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கு என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 
நமது நாடு, உலகிலேயே அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் நாடு என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனமான யுனிசெஃப் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நமது நாட்டில் 18 வயதிற்குள் உள்ள பெண்குழந்தைகளில் 47 விழுக்காடு பேரும், 15 வயதிற்குள் உள்ள பெண்களில் 18 விழுக்காடு பேரும் திருமணம் ஆனவர்கள். 
ராஜஸ்தான் (69%), பிகார் (65%)போன்ற மாநிலங்களில் 18 வயதிற்குள் திருமணம் ஆகிவிட்ட பெண்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. திருமணம் செய்துகொள்வதற்குக் குறைந்தபட்சம் பெண்களுக்கு 18 வயதாக இருக்க வேண்டும், ஆண்களுக்கு 21 வயதாகியிருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தும் (PCMA 2006) குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 
குழந்தை / பதின் பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள்; முழுமையாகக் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பக்குவம் அடையாத நிலையில், தாங்களே குழந்தைப் பருவத்தைத் தாண்டாத வயதில் குழந்தைக்கு (குழந்தைகளுக்கு) தாயாகிறார்கள். 
18 வயதை எட்டாத பெண் தாய்மை அடைவது அந்தத் தாய்- சேய் இருவரின் உடல் நலனை வெகுவாக பாதிக்கும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். 
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இதுவரையில் சட்டத்தில் இருந்த குழப்பத்தைத் தீர்த்து, 18 வயதிற்குக் கீழ் உள்ள மனைவியுடன் கணவன் பாலுறவு கொள்ளுதல் கிரிமினல் குற்றம் என்று அறிவித்துள்ளது வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது. 
இந்தச் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையையே சாரும் என்பதனால், இதில் போலீஸ் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும், எத்தனை இளம் பெண்கள் குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளை மீறி கணவனைப் பற்றி போலீஸில் புகார் கொடுக்க முன்வருவார்கள்? 
அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல தன்னார்வ நிறுவனங்கள் குழந்தைத் திருமணங்களை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கிராமம் கிராமமாகச் சென்று எவ்வளவோ முயற்சித்தும், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்கையில், 18 வயது நிரம்பாத மனைவியுடன் கணவன் பாலுறவு கொள்வதை எப்படித் தடுக்க முடியும்? 
சட்டத்தின் இந்த மாற்றத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும் இல்லாமல் இல்லை. சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா முதலிய நாடுகளில் பரஸ்பர உடன்பாட்டுடன் பாலுறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 16 அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளது என்ற வாதத்தை எடுத்துவைக்கிறார்கள் இவர்கள். 
ஆனால், நமது நாட்டை இந்த நாடுகளுடன் நாம் ஒரு போதும் ஒப்பிட முடியாது. இந்த நாடுகளில் பெரும்பாலும் இப்படிப்பட்ட உறவுகள் திருமணமாகாத ஆண்-பெண்களிடையே ஏற்படுவது. அது அவர்கள் சமூகத்தின் சீர்குலைவை எடுத்துக்காட்டுகிறது. 
நமது நாட்டில் பதின் பருவத்தில் ஏற்படும் பாலுறவுகள் பெரும்பாலும் குழந்தைத் திருமணங்களின் காரணமாக ஏற்படுவதே. குழந்தைத் திருமணங்களை தடுப்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம். 
இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்க, தற்பொழுது திருமண பந்தத்தில் ஏற்படும் வல்லுறவுக்கு (Marital Rape)  எதிராகப் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும். குற்றவியல் சட்டப்பிரிவு 375(2)ஐ மாற்றியமைத்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், திருமணமான தம்பதிகளிடையே வல்லுறவு என்ற விவகாரத்திற்குள் தாங்கள் செல்லவில்லை என்று குறிப்பிட்டாலும், இன்று நமது நாட்டில் பல பெண்களைப் பாதிக்கும் பிரச்னை இது என்பதில் சந்தேகம் இல்லை. 
குடித்து விட்டு மனைவியை அடித்து, உதைத்து அவளுடைய விருப்பத்திற்கு மாறாக கணவன் பலவந்தமாக உடலுறவு கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள், இந்தப் பெண்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்துள்ள மகளிர். 
பெரும்பாலும் தங்கள் சம்மதத்தைக்கூட தெரிவிக்க இடமளிக்காத, குடும்பப் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், இந்த விஷயத்தில் தங்களது சம்மதமின்மையை வெளியிட எத்தனை பெண்களுக்குத் துணிச்சல் இருக்கிறது? அப்படியே அவள் மறுப்பு தெரிவித்தாலும் ஆண் ஆதிக்கம் மிக்க இந்த சமூகத்தில், எத்தனை ஆண்களுக்கு அந்த மறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது? 
நாட்டையே உலுக்கிய தில்லி நிர்பயா பலாத்கார சம்பவத்தையடுத்து, நியமிக்கப்பட்ட நீதியரசர் வர்மா கமிஷன் செய்த பரிந்துரைகளில் ஒன்று, திருமண பந்தத்தில் நடக்கும் வல்லுறவை கிரிமினல் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது. 
ஆனால் நாடாளுமன்றக் குழுவோ, மத்திய அரசோ இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கணவன், மனைவியுடன் பலவந்தமாகக் கொள்ளும் உடலுறவை பலாத்காரமாகக் கருதி அதை ஒரு கிரிமினல் குற்றம் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் சில மகளிர் நல அமைப்புகள் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளன. 
திருமண பந்தத்தில் பலாத்காரம் என்பதெல்லாம் நமது நாட்டிற்குப் பொருந்தாத சட்டம் என்று சென்ற ஆண்டு குறிப்பிட்ட மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த விஷயத்தை அரசு பரிசீலனை செய்யும் என்று தற்பொழுது அறிவித்திருப்பது மகளிர் நல ஆர்வலர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 
ஆனால், திருமண பந்தத்தில் பலாத்காரத்தைத் தடுக்க புதிதாக ஒரு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள் சிலர். ஏற்கெனவே உள்ள குடும்ப வன்முறைச் சட்டத்தில் (Domestic Violence Act,  2005) உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார்கள் இவர்கள். 
அப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்தால், ஏற்கெனவே உள்ள வரதட்சிணை ஒழிப்புச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் போன்று இதையும் ஆண்களுக்கு எதிராக மகளிர் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆண்கள்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு கணவன் தனது தாம்பத்திய உறவை / உரிமையை நிலைநாட்டுவது எப்படி குற்றமாகும் என்றும் கேட்கிறார்கள் ஆண்கள். ஒரு பெண் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள் என்றால், அவள் அந்த ஆணுடன் பாலியல் உறவு கொள்வதற்கும் சம்மதம் அளிக்கிறாள் என்றுதானே பொருள் என்கிறார்கள் இவர்கள். 
நமது கலாசாரத்தில் கணவன்- மனைவி என்பது புனிதமான ஓர் உறவு, அதில் பலவந்தப்படுத்துதல் அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்கிறார்கள் சில பழைமைவாதிகள். 
இப்படி மாறுபட்ட கருத்துகளை எழுப்பியுள்ள இந்தச் சர்ச்சைக்குரிய தாம்பத்திய உறவில் வல்லுறவை (Marital Rape)  கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டம் நிறைவேற்றப்படுமா என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.