புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமூகநீதி நிலைபெறுக..

நீட் தேர்வு என்பது இந்தியா முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக இந்திய அளவில் நடைபெறும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு. கல்வி பொதுப்பட்டியலில்

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 8:50 pm

சா. பன்னீர் செல்வம்

நீட் தேர்வு என்பது இந்தியா முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக இந்திய அளவில் நடைபெறும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசும் இந்திய அளவில் பள்ளி - கல்லூரிகளை நடத்துதலும், அவற்றுக்கான சேர்க்கை முறைகளை வகுத்துக் கொள்ளுதலும் சரிதான். 
அதே உரிமையின்படி மாநில அரசு தனது பாடத்திட்டப்படிப் பள்ளிகள் நடத்துதலும், அதே திட்டப்படித் தேர்வு நடத்துதலும் அரசியல் சட்டபூர்வமானதுதான். ஆனால், சட்டப்படியான மாநிலத் தேர்வு மதிப்பெண் அதே மாநில அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளின் சேர்க்கைக்குச் செல்லுபடியாகாதெனல் என்ன நியாயத்தில் சேர்த்தி? 
மாணவியரில் சிலர், நீட் தேர்வுக்காக முயன்று கூடுதலான மதிப்பெண் பெற்ற எங்களுக்குப் பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதற்காகக் கல்லூரி அனுமதி மறுத்தல் எங்கள் முதுகில் குத்துவதாகிறது - எனப் பதட்டமாகப் பேசியதை ஒரு தொலைக்காட்சியில் கேட்க நேர்ந்தது. 
அரசுப் பள்ளியில் சேர்ந்து - முயன்று படித்துப் பள்ளியிறுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை அல்லது நீட் தேர்வில் மதிப்பெண் குறைவென்னும் காரணம் கூறி அனுமதி மறுத்தல் அவர்களின் நெஞ்சில் குத்துதலா - முதுகில் குத்துதலா? 
இந்திய ஆட்சிப்பணித் தேர்வு இந்தியா முழுமைக்கும் பொதுவாக நடைபெறுகிறது. காரணம், இந்திய ஆட்சிப்பணிக்கு விண்ணப்பிப்போர் வெவ்வேறு பாடங்களில் பட்டம் பெற்றவர்கள். எனவே அத்தேர்வுக்கெனப் பொதுவான பாடத்திட்டமும், அதனில் பயிற்சி பெறுதற்கான கால அவகாசமும் அறிவிக்கப்பட்டு அதன்படி நடைபெறுகிறது. 
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பாடங்களாக இந்தியா முழுதும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்பனவே கொள்ளப்படுகின்றன. ஆனாலும் அவற்றுக்கான பாடத்திட்டங்களும், பயிற்சி முறைகளும் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகள், மத்திய பாடத்திட்டப் பள்ளிகள் என வேறுபடுகின்றன. 
எனவே இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதாயின், இரு சாரார்க்கும் பொதுவான பாடத்திட்டமும், பயிற்சி பெறுதற்கான காலஅவகாசமும் முன்கூட்டியே அறிவித்து நடத்த வேண்டும். அவ்வாறின்றி, மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப்படியான நுழைவுத் தேர்வெழுதி அதனடிப்படையில்தான் மாநில அரசுக் கல்லூரியில் சேர வேண்டுமெனல் என்ன நியாயத்தில் சேர்த்தி? 
அரசுப் பள்ளியில் சேரும்போது, மாநில அரசு நடத்தும் பள்ளியிறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் தொழிற்கல்லூரிகளின் சேர்க்கைக்குக் கொள்ளப்படாதென்னும் நிபந்தனையுடன் சேர்க்கப்பட்டார்களா? 
பள்ளிச் சேர்க்கையின்போது விதிக்கப்படாத நிபந்தனையாக, பள்ளித் தேர்வல்லாத வேறொரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றால்தான் கல்லூரி அனுமதி எனல், சட்டத்தில் எந்த விதியின்படி நியாயமாகிறது?
இவையொருபுறமிருக்க, தனியார் கொள்ளையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?கல்வி நிலையங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அதனை விடுத்து, பொருளாதார சீர்திருத்தம், தாராளமயம், உலகமயம், வளர்ச்சி எனப் பலப்பல சொல்லி, கல்வியுட்பட அனைத்தையும் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கும் அரசு தனியார் கொள்ளையைத் தடுப்பதற்காக நீட் தேர்வு எனல் நகைப்புக்கும் தகுதியற்றது.
மாநிலங்கள் தோறும் பாடத்திட்டம் வேறுபடுதல் நல்லதல்ல. அவற்றைப் பொதுமைப்படுத்துவதற்கு நீட் தேர்வு அவசியம் என்பது முதன்மை வாதமாகிறது. ஆபத்தும் அங்கேதான் உருவாகிறது. பள்ளிப் பாடத்திட்டத்தை இந்தியமயமாக்குதலால் விளையும் கேடுகள் மூன்று. 
முதலாவது, கல்வியில் மாநில அரசின் உரிமை முற்றாகப் பறிக்கப்படுகின்றது. இரண்டாவது, மத்தியப் பாடத்திட்டத்தில் மாநில மொழி கட்டாய பாடமாதல், பயிற்று மொழியாதல். இரண்டிற்கும் வாய்ப்பில்லாது போவதால் அதன் வழியாக இந்தியாவை ஒரு மொழி நாடாக்கும் திட்டத்தின் முன்னோடித் திட்டமாகவே நீட் தேர்வு நுழைக்கப்படுகிறது என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனாலும் அது நிறைவேற வாய்ப்பில்லை. 
மொழி என்பது யாராலும் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. பன்னெடுங்காலப் பயன்பாட்டின் வழி இயல்பாக - இயற்கையாக உருவாவது. எந்தச் சமூகமும் தனது உயிர்ப்பான மொழியை விட்டுக்கொடுக்க இணங்குவதில்லை. 
நீண்ட காலமாக மொழியின உணர்வைப் புறக்கணித்துக் கொண்டிருந்த மார்க்சியவாதிகள் அண்மைக் காலமாக மொழியின உணர்வை மதித்தொழுகுதலானது ஆக்கபூர்வமான மாற்றமாகிறது. இன்னொன்று இந்தியெதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமே எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தற்போது கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் என இந்தியெதிர்ப்பு பரவலாகிறது.
நீட் தேர்வைப் பிற மாநிலங்கள் ஏற்கும் நிலையில் நாம் மட்டும் எதிர்ப்பதன் வழியாக நம்மை நாமே தாழ்வுப்படுத்திக் கொள்ளலாமா என்கிறார்கள். அடுத்த வீட்டார் விரும்பியுண்ணுவதையே நாமும் உண்ணுவதன் வழியாகச் சமத்துவம் கொண்டாட முற்படுதல் நல்லறிவாகாது. நமது உடல்நலனுக்கு ஏற்புடையதைத் தேர்ந்துண்ணுதலே அறிவார்ந்த செயலாகும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டப்படிப் படித்து, மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்தல் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை என்பதற்கு முரணானது என்பது முதன்மை வாதமாகிறது. 
இந்திய அரசியல் சட்டத்தின் 14-ஆவது பிரிவு அரசு, இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவருக்கும் சட்டத்தின் முன்னிலையில் சமன்மையையோ, சட்டங்களின் சமன்மையான பங்களிப்பையோ மறுத்தல் கூடாது - என்கிறது. அதனையடுத்த 15-ஆவது பிரிவின் முதலாவது உட்பிரிவு, சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களாகக் கொண்டு, குடிமகன் எவருக்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டுதல் ஆகாது - என்றமைகிறது. அதாவது, 14-ஆவது பிரிவு கூறும் சம உரிமையாவது எவ்வகையானது என்பதை 15-ஆவது பிரிவு விளக்குகிறது. 
அதே 15-ஆவது பிரிவில் இரண்டாவது உட்பிரிவும் சம உரிமை எங்கெங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையே விவரிக்கிறது. அவற்றையடுத்த மூன்றாவது உட்பிரிவு, இந்த உறுப்பில் உள்ள எதுவும் பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும் சிறப்பு வகைமுறை எதனையும் செய்வதிலிருந்து அரசினைத் தடுத்தல் ஆகாது - என்கிறது. 
அதாவது, சம உரிமையென்பது சமநிலையில் இருப்பவர்க்கே பொருந்தும், சமநிலையில்லாத பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான சிறப்பு ஏற்பாடு சம உரிமைக்கு எதிரானதாகக் கொள்ளப்படாது என்கிறது. 
1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முதலாவது திருத்தச்சட்டமாக, இந்த உறுப்பில் அல்லது 29-ஆவது உறுப்பில் இரண்டாம் கூறில் உள்ள எதுவும் சமூகநிலையிலும், கல்விநிலையிலும் பிற்பட்ட வகுப்பினராகிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும், பட்டியல் குலத்தினர், பட்டியல் பழங்குடியினர்க்காகவும் சிறப்பு ஏற்பாடு செய்வதிலிருந்து அரசினைத் தடுத்தல் ஆகாது என்பது 15-ஆவது பிரிவு நான்காவது உட்பிரிவாக 1951-இல் சேர்க்கப்பட்டது. 
அதாவது சம உரிமை என்பதற்கு மாறாகச் சிறப்புச் சலுகை பெறுதற்குரியோரில், சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய நிலையில் இருப்போரையும் சேர்த்தது. அந்த முதலாவது திருத்தச் சட்டப்படிதான் இந்தியா முழுதும் கல்வி வாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு நடைமுறையாகிறது.
இப்போது நீட் பிரச்னைக்கு வருவோம். அரசுப் பள்ளி மாணவர்களும், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களும் சம உரிமையுடையோர் என்பதை மறுப்பாரில்லை. ஆனால், இருவரும் சமநிலையில் உள்ளவர்களா? 
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிப் பாடத்திட்டமும், பள்ளியிறுதித் தேர்வுக்கான பயிற்சியும், நீட் தேர்வுக்கான பாடத்திட்டமும், அதற்கான பயிற்சியும் ஒன்றேயென்றாகிறது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டும் வெவ்வேறாகின்றன. இந்நிலையில் இருவரும் சம உரிமையாளராக சமப் போட்டியாளர் ஆதல் யாங்ஙனம்? 
பேச்சு, கட்டுரை, விளையாட்டு என அனைத்திலும் வயது, கல்வி அடிப்படையில் போட்டி நடத்துதல் சட்ட விரோதமாகாதபோது, பாடத்திட்டம் பயிற்சி எனும் இருவகைகளிலும் கூடுதல் சுமையுடன் பின்தங்கும் நிலையிலுள்ள அரசுப் பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுத்தல் இன்றளவும் இந்தியா முழுவதிலும் நடைமுறையிலுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நிராகரித்தலான விபரீதமாதலைச் சட்டம் படித்தவர்கள் கண்டு கொள்ளாமை வியப்பும் வேதனையுமாகின்றது. 
அரசியல் சட்ட 15-ஆவது பிரிவின் இரண்டு மற்றும் நான்காவது உட்பிரிவுகளின் நோக்கம், யாது காரணத்தாலும் சம நிலையில்லாத பின்தங்கிய நிலையிலிருப்போர்க்குச் சிறப்புச் சலுகை வழங்குதல் சம உரிமைக்கு முரணாகாது என்பதுதான். சட்டப் போராட்டம் தொடர்க. சமூகநீதி நிலைபெறுக.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.