தொண்டும் தொழிலும்

மன்னராட்சியை வெறுப்பதற்கும், மக்களாட்சியை விரும்புவதற்கும் காரணம் எல்லோரும் அறிந்ததுதான். மக்களின் விருப்பம் அறிந்து ஆட்சி புரியாததால் மன்னர்களை மக்கள் வெறுத்தனர்.
Updated on
3 min read

மன்னராட்சியை வெறுப்பதற்கும், மக்களாட்சியை விரும்புவதற்கும் காரணம் எல்லோரும் அறிந்ததுதான். மக்களின் விருப்பம் அறிந்து ஆட்சி புரியாததால் மன்னர்களை மக்கள் வெறுத்தனர்.
அத்துடன் தங்கள் நலனுக்காக வரிமேல் வரி போட்டு வதைத்தனர். அதனால் மக்கள் கொதித்தெழுந்தனர்; மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியைக் கொண்டு வந்தனர்.
இது உடனே நடந்து முடிந்து விட்டதா? இல்லை, இதற்குப் பல காலம் ஆனது; இதுதான் காலம் செய்த கோலம்; மக்களின் கோபம் அந்தக் கொடுங்கோலர்களைத் தூக்கி எறிந்தது.
இப்போது மக்களாட்சியிலும் அந்தச் சர்வாதிகாரப் போக்கு வர ஆரம்பித்து விட்டது. மக்களின் விருப்பத்துக்கு எதிராக மக்களாட்சிகள் தங்கள் அதிகாரத்தைத் திணிக்க ஆரம்பித்து விட்டனர்.
காவல்துறையை வைத்துக் கொண்டு அடக்குமுறையை ஏவும் போக்கே தொடர்கிறது.
பல சமயங்களில் அரசாங்கத்தின் அதிகாரத்திலிருந்து தப்பிப்பதற்கு நீதிமன்றங்களையே நாட வேண்டியுள்ளது. இவ்வாறு நீதிமன்றங்களை நம்பி வாழ்வது மக்களாட்சிக்கு ஏற்றதல்ல.
அண்மையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வைப் பல மடங்காக உயர்த்திக் கொண்டது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்த நேரத்தில் இந்த ஊதிய உயர்வு சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வறட்சியால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்திக் கொள்வது சரியா என்பதை அவரவர் மனச்சாட்சிக்கு விட்டு விடுகிறோம் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்ததுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகக் கடந்த ஜூலை 19 அன்று அறிவிப்பு வெளியானது. இதில் மாத ஊதியம் மற்றும் இதரப் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு வழங்கும் ஆணையை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றனர்.
வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் பலர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மின் வாரியம் உள்ளிட்ட பல அரசுத் துறைகள் இழப்பில் இயங்கி வருகின்றன.
மேலும் தமிழகம் தற்பொழுது ரூ.45 ஆயிரத்து 119 கோடி கடன் சுமையில் உள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இரண்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதிகள் கூறிய தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் தார்மிக அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதில் நீதித்துறை தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
இது தேவையா என்று சட்டப்பேரவையிலேயே எதிர்க்கட்சிகளே கேள்வி எழுப்பியுள்ளனர். விவசாயிகள் தற்கொலை, வறட்சியால் பஞ்சம், பசி, பட்டினி என தமிழ்நாட்டின் நிலை உள்ளபோது இது தேவையா என மனுதாரர் தம் மனுவில் கேட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் அந்த முடிவு சட்டபூர்வமானதா என்று ஆய்வு செய்யலாம். இந்த விவகாரத்தில் அரசுதான் நீதிமன்றம். அரசு எடுக்கும் கொள்கை முடிவின் மீது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கே உள்ளது.
பொதுவாக இந்த விவகாரம் சரியா, தவறா என்று நீதிமன்றம் கூற இயலாது. சட்டப்பேரவை உறுப்பினர்களை மக்கள்தாம் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் கேள்விகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இது அவர்களின் பொறுப்பாகும்.
எந்த நேரத்தில் எது தேவை, எது தேவையில்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின்படி நிர்வாகம், நீதி, சட்டப்பேரவை எல்லாம் தனித்தனித் துறைகள். நிர்வாகத்தின் முடிவுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்கலாம். அது சட்டபூர்வமாக சரியா என்பதை மட்டுமே நீதித்துறையால் பார்க்க முடியும். இவ்வாறு இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர், விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஏழைகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊதிய உயர்வை அறிவித்துள்ளனர் - அதுவும் இரண்டு மடங்காக.
இதனைச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனச்சாட்சி எப்படி ஏற்றுக் கொண்டது என்பதுதான் தெரியவில்லை. வீடு தீப்பற்றி எரியும்போது, எரியும் வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என நினைக்கக் கூடாது.
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஊதிய உயர்வு கேட்டு போராடும் போது அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறி மறுப்பவர்கள், தங்களுக்கென வரும்போது எந்த விவாதமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
தம் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்தை மறுத்துவிட்டு, தங்களுக்கு மட்டும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளை நிர்ணயித்துக் கொள்ளத் தயங்குவதில்லை.
மக்களுக்குத் தொண்டு செய்ய வந்துவிட்டு ஊதியம் கேட்பதும், ஊதியத்தை இருமடங்காக உயர்த்திக் கொள்வதும் நியாயம்தானா? உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியத் தலைவர்கள் ஊதியம் இன்றியே பணியாற்றுகின்றனர். இத்தகைய கடமை உணர்ச்சி அனைவருக்கும் வர வேண்டாமா?
தமிழகத்தில் அந்நியத் தொழில் முதலீடுகள் வரவரக் குறைந்து கொண்டே போகின்றன. இருந்த தொழிற்சாலைகளும் பக்கத்து மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டுள்ளன, என்ற புகார் எழுந்துள்ளன. இதற்கு இலஞ்சமும், ஊழலும்தான் காரணம் என்று கூறப்படுகின்றது.
பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை தமிழ்நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையுத்தரவு ஏட்டளவில் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் இல்லை. கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் எங்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த ஊழல் பற்றிய விசாரணை வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. பான் மசாலா, குட்கா பயன்பாடு புற்று நோய்க்கு வழிவகுக்கிறது என்ற எச்சரிக்கையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
இது மட்டுமல்லாமல் பணி நியமனங்கள், இடமாறுதல்கள் எல்லாம் பணத்தின் பேரிலேயே நடைபெறுகின்றன. அதிலும் ஆளும் கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமை. மக்களாட்சி என்பது மக்கள் அனைவருக்கும் என்பது அடிபட்டுப் போய்விட்டது.
மக்களால் மக்களுக்காக ஆளப்படுவது என்பது போய் கட்சிக்காக, கட்சிக்காரர்களால் ஆளப்படுவது என ஆகிவிட்டது.
மனித நேயம் என்பது என்ன? அண்டை வீட்டானுக்குக் காய்ச்சல் என்றால் அவனோடு சேர்ந்து நீயும் வேக வேண்டும் என்றார் அறிஞர் ஹாலி.
இந்த வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தார் காந்தியடிகள். தமிழ்நாட்டின் தென்பகுதியில் அவர் சுற்றுப்பயணம் போனபோது அங்கு ஏழைக் குடியானவர்களைப் பார்க்கிறார்.
அந்தக் காட்சி அவரை அரையாடை மனிதராகவே ஆக்கிவிட்டது. இறுதிவரையில் அந்தக் கோலத்தை மாற்ற மறுத்துவிட்டார். அதுவே அவரது அடையாளமாகி விட்டது.
மகாத்மாக்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள்; மக்களோடு மக்களாவே வாழ்வார்கள். அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களை மக்கள் எப்படி மறப்பார்கள்?
குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்துக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று காமராசரைக் கூற வைத்தது எது? நாட்டின் எதிர்காலத்தின் மீது கொண்ட அக்கறை. இக்கால அரசியல்வாதிகளுக்கு ஏன் இந்த அக்கறை வரவில்லை?
நாடே தீப்பற்றி எரியும் போது வேடிக்கை பார்க்கக்கூடாது. அதை அணைப்பதற்கு ஓட வேண்டும். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆட வேண்டும். நாடே வறட்சிப் பிடியில் வருந்தும்போது நம்முடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளக் கூடாது. குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறவும் வேண்டுமோ?
அக்கால அரசியல் தொண்டாக இருந்தது; இக்கால அரசியல் தொழிலாக மாறிவிட்டது. தொண்டுக்கும், தொழிலுக்கும் உள்ள வேறுபாடு அனைவரும் அறிந்ததுதான். இதில் நீதிமன்றம் சொல்லும் மனச்சாட்சி எங்கே இருக்கிறது என்று தேட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com