மகாகவி பாரதியாரின் வாழ்வு நிலை கொண்ட தலங்களுள் ஒன்று காரைக்குடி. செட்டிநாட்டின் சிறப்புக்குரிய நகர்களான காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் தம் வாழ்நாளில் இருமுறை வந்த பாரதி, இப்பகுதியில் தங்கிய நாட்கள் சிலவே எனினும் சீரிய பல பணிகளுக்கும் அனுபவங்களுக்கும் தம்மை ஆட்படுத்திக்கொண்டமை அறிய வேண்டிய வரலாறாகும்.
பாரதியாரைவிடவும் பன்னிரண்டு வயது இளையவரான கானாடுகாத்தான் வயி.சு. சண்முகஞ்செட்டியார் என்னும் பாரதிபித்தர்தான், பாரதியாரின் காரைக்குடி வரவுக்கு வித்திட்டவர்.
அவர்தம் அரிய முயற்சியால் செட்டிநாட்டுக்கு வருகை தந்த பாரதியாரை அன்புடன் வரவேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க உரைநிகழ்த்தவைத்த பெருமை காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்திற்கு உண்டு.
இச் சங்கமானது, இன்றைக்குச் சரியாக, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காரைக்குடியில் தொடங்கப்பெற்ற பெருமைக்குரியது. பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாள் 10.9.1917 அன்று, செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ. முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக ராய. சொக்கலிங்கனார், கானாடுகாத்தான் வயி. சு. சண்முகனார், அமராவதி புதூர் பிச்சப்பா சுப்பிரமணியன் மற்றும் பலரது துணையுடன் இந்துமதாபிமான சங்கமானது, காரைக்குடி- திருவாசக மடத்தில் தொடங்கப்பட்டது.
நாடு, சமயம், மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை வளர்த்தல், சான்றோர் தொடர்பு, இலக்கியத் தோய்வுண்டாக்கல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்ட இச்சங்கத்தால் தொடங்கப்பெற்ற, இராமகிருஷ்ண கலாசாலையானது, கம்பனடிப்பொடி சா. கணேசன் முதலியோருக்குக் கல்வி புகட்டும் களமாக அமைந்தது. "கம்பநாடர்' இதழின் ஆசிரியரான மோ.வே. கோவிந்தராச ஐயங்கார் இளைஞர்களுக்குத் திருக்குறள் மற்றும் கம்பராமாயண வகுப்புகளை நடத்தினார்.
தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 27.8.1918-இல், "விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
1952-இல் இருந்து இச்சங்கமானது, காரைக்குடி சிவன் கோவில் மேலைத்தெருவில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தொடங்கிய காலத்திலிருந்து இலக்கியக் கூட்டம் நடத்துவதும், ஆண்டுதோறும் ஆண்டு விழாக்களும், திங்கள்தோறும் கூட்டங்களும் நடத்துவதுமாகச் செயல்பட்டுவரும் இந்தச் சங்கத்துக்குக்கு, வ.உ.சி., திரு.வி.க., வ.வே.சு. ஐயர், ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி. ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம்பிள்ளை எனப்பலர் வந்திருக்கின்றனர். இந்தச் சங்கத்திற்கு வாராத தமிழறிஞரே இல்லை எனலாம்.
இத்தகு பெருமைக்குரிய இந்துமதாபிமான சங்கத்திற்கு, 1919-இல் பாரதி வருகைபுரிந்தார். அதற்கு முன்னர் இந்துமதம் குறித்து எத்தனையோ கட்டுரைகளிலும் உரைநடையிலக்கியங்களிலும் பாரதி எழுதியிருந்தாலும் தமது பேச்சிலும், கவிதையிலும் தனது உன்னதப் பார்வையைப் பதிவு செய்யக் களமாக அமைந்தது இந்துமதாபிமான சங்கம்தான். இச்சங்கத்தினை வாழ்த்தி அவர் பாடிய பாடல்கள் அத்தகு சிறப்புக்குரியவையாகும்.
அதுபோல், பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைக்கும் ஆறு நிழற்படங்களுள் இரண்டு படங்கள் இங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
அதில் கோல் கைக்கொண்டு வீற்றிருக்கும் பாரதியின் அழகிய தோற்றம் அவரைக் கவிச்சக்கரவர்த்தியாக அடையாளம் காட்டும் அற்புதம் வாய்ந்ததாகும்.
குழுப்படமாக நமக்குக் கிடைக்கும் அப்படத்தினை எடுக்கும்வேளையில் நடந்த உரையாடல் சுவாரசியமானது.
""பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம் பிடிப்போருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொன்னார். "முடியாது. நீர் சொல்வதை நான் என்ன கேட்பது?' என்று சொல்லிவிட்டார் பாரதியார். பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்'' என்கிறார் ராய.சொ.
இதற்கெல்லாம் காரணகர்த்தா கானாடுகாத்தான் வயி.சு. சண்முகனார்தான். பாரதியோடு கடிதத்தொடர்பு கொண்ட இவர்தான், புதுவையை விட்டுக் கடையத்திற்கு வந்திருந்த பாரதியாரை நேரிற்சென்று, கானாடுகாத்தானுக்கு வரவழைத்தவர். வந்து திரும்புகிற விருந்தாளியாக அல்ல; நிரந்தரமாக இங்கேயே இருந்து படைப்பு பல படைத்துப் பைந்தமிழன்னைக்குத் தொண்டாற்ற வேண்டுமென்பதற்காக!
பாரதி ஆய்வாளர், ரா.அ. பத்மநாபனுக்கு 1956-இல், வயி.சு.ச. எழுதிய நெடுங்கடிதத்தில், "28.10.19 அன்று எனது வேண்டுகோளுக்கு இணங்கியே, உடுத்திய ஆடைதவிர, வேறு ஏதுமின்றி அவர் காரைக்குடி வழியாகக் கானாடுகாத்தானுக்கு வந்தார்.
பாரதியார் குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்ட கடையத்தில் இனி இருக்க வேண்டாம். இங்கேயே அவர் மனைவி மக்களை அழைத்து வந்துவிடலாம். என் மனைவியும் நானும் வசிக்கும் விதத்துக்குச் சிறிதும் குறைவின்றி இங்கேயே இருந்து கவிதைகள் எழுதலாம் என்று 29.10.1919 அன்று கேட்டுக் கொண்டதற்கும் பாரதியார் இணங்கினார்' என்று குறிப்பிடுகிறார்.
இதில் அவர் குறிப்பிடும் வீடு, வழக்கமாய் நாம் கருதும் சாதாரண வீடன்று; அரண்மனை ஒத்த மாளிகை. அதன்பெயர் "இன்பமாளிகை'. பெயருக்கேற்ப, இன்பந்தரும் மாளிகையாக மட்டுமன்றி, அன்பு தவழும் மாளிகையாகவும் அது நிலைபெற்றிருந்தது.
இந்த மாளிகையில்தான் பாரதியார் வந்து இருந்து மகிழ்ந்தார்; மகிழ்வித்தார். மகாகவி பாரதி கானாடுகாத்தானுக்கு வந்த மறுநாளே, பாரதியாரின குடும்பத்தினரை அழைத்துவர, ஆள் அனுப்பப்பெற்றது. வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய குருகுலத்தில் பணிபுரிந்த ரா. அனந்தகிருஷ்ணன் என்பவர் அனுப்பப்பட்டார்.
சென்றவர் மீளவரும் வரை பாரதியார் அங்கேயே இருந்தார். அவ்வமயம் புதிதாகப் பாடல் இயற்றும்படி, பாரதியிடம் விண்ணப்பித்தார் வயி.சு.ச.
அக்காலகட்டத்தில், கிட்டத்தட்ட கவிபாடுவதையே முற்றிலும் தவிர்த்திருந்த பாரதி, "கவிதை என்பது அதுவாகத் தோன்ற வேண்டும். இதுவரை எழுதத்தோன்றவில்லை. இப்போது எழுதத்தோன்றுகிறது' என்று கூறி, செட்டிநாட்டின் குலவிளக்கு என்று வயி.சு.ச. மீதே ஏழு பாடல்களை, பாரதி இயற்றிப் பாடிப்பெருமைப்படுத்தியிருக்கிறார்.
"பணம் கேட்டுச் செல்வர்கள் மீதோ, மன்னர் மீதோ இனிக் கவிதை பாடுவதில்லை என்ற நெடுநாள்கட்கு முன் கட்டிய எனது முடிவை இப்பாடல்களிலேயே காரணத்தோடு காட்டியிருக்கிறேனே. நல்லோரைக் கண்டு அவர் குணம் குறிகளை உள்ளபடி கவிஞனே உணரமுடியும்' என்று கூறிவிட்டு, வெடிப்புறச் சிரித்தார்.
தினமும் உள்ளூர், வெளியூர்களிலிருந்து பாரதியாரைக் காண வருபவர்களிடம் வெடிப்புறப் பேசி மகிழ்ச்சிபொங்கச் செய்வார் என்று தன் அனுபவத்தைக் குறித்திருக்கிறார். இத்தகு சிறப்புக்குரிய அப்பாடல்களை, அவர் தற்புகழ்ச்சியாகிவிடக் கூடாது என்ற காரணத்தால் வெளி
யிடவே இல்லை.
ஆயினும், கவிஞர் முடியரசன், தமிழண்ணல் ஆகியோரது முயற்சியால் பின்னர் அது வெளிக்கொணரப்பெற்று உலகறிய வந்தது. அதற்காகத் தமிழ்கூறு நல்லுலகம் அவர்களைப் பாராட்டினாலும், அவர்கள் வயி.சு.ச. அவர்களின் கோபத்திற்கு ஆளானார்கள் என்பதுதான் உண்மை.
அரிதின் முயன்று அவர்கள் பாரதியின் பாடல்களைக் கொணர முடிந்ததுபோல், வயி.சு.ச. - பாரதி இருவருக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப்போக்குவரத்தால் எழுந்த பாரதியின் கடிதங்களை வெளிக்கொணர இயலாது போனது தவக்குறைவு.
அதைவிடவும் பெருஞ்சோகம், கானாடுகாத்தானில் பாரதியுடன் வாழச் சம்மதித்து, செல்லம்மா பாரதி வரமறுத்ததுதான். "கவிஞரின் மனது நிலையில்லாதது' என்று காரணம் தெரிவித்து, பாரதியின் குடும்பம் வரமறுத்ததால், குடும்பத்தைப் பிரிய விரும்பாத பாரதி மீண்டும் கடையம் போனார். பின்னொரு முறை தனது நூல்வெளியீடு தொடர்பாக, கானாடுகாத்தான் வந்து அவசரமாகச் சென்னை திரும்பிய பாரதி, பின்னர் செட்டிநாட்டுப்பகுதிக்கு வரவேயில்லை.
வயி.சு. சண்முகனார் அழைப்பை ஏற்றுக் கானாடுகாத்தானில் சிலநாட்கள் தங்கியிருந்த பாரதியுடன், அவர்தம் குடும்பத்தாரும் வந்து தங்கியிருந்தால் எத்தனையோ அரிய பெரிய ஆக்கங்களைத் தமிழன்னை பெற்றிருப்பாள்; அதன்வழி மகாகவி பாரதி இன்னும் பல ஆண்டுகள் நல்லின்பம் பல துய்த்து நெடிதுவாழ்ந்திருப்பார் என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
என்ன செய்வது? "வெஞ்சின விதியினை வெல்லவல்லமோ?'
எப்படியோ, பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திற்கும், திருமணம் புரிந்துகொண்ட ஊரான கடையத்திற்கும், வாழ்வு தேடிப் புகுந்த நகர்களான காசிக்கும், சென்னைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் செட்டிநாட்டுக்கு உண்டு என்றும் பாரதியின் வாழ்வில் சில புதிய அத்தியாயங்களை எழுத முயன்று விதிவசத்தால் தோற்றுப்போன சூழல் இங்குதான் அரங்கேறியிருக்கிறது என்றும் அமைதிகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்று மகாகவி பாரதி நினைவுநாள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.