அரசியல் வெங்காயம்!

பிரிக்க முடியாத வகைகளின் பட்டியலில் இந்திய அரசியலும், வெங்காயமும் இடம் பெற்று பல ஆண்டுகள்  ஆகிவிட்டன.

பிரிக்க முடியாத வகைகளின் பட்டியலில் இந்திய அரசியலும், வெங்காயமும் இடம் பெற்று பல ஆண்டுகள்  ஆகிவிட்டன. இந்தியப் பொருளாதாரத்தைவிட அரசியலில்தான் வெங்காயத்தின் விலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. பல தலைவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய "பெருமையும்' இந்த வெங்காயத்துக்கு உண்டு. அவசர நிலை காலகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர இந்திரா காந்திக்கு பெரிதும் உதவியதும் வெங்காய விலை தான். 1980-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் சரண் சிங்கை வீழ்த்தி இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக காரணமாக இருந்தது வெங்காய விலை உயர்வை முன்னிறுத்தி மேற்கொண்ட பிரசாரம்தான். அப்போது வெங்காயம் ஒரு கிலோ ரூ.5 என்ற உச்சத்தில் இருந்தது.
1998-ஆம் ஆண்டு தேர்தலில் தில்லி மாநில பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பியதும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தை முதல்வர் ஆக்கியதும் வெங்காய விலை உயர்வுதான். அதே ஆண்டு பிற்பகுதியில் ராஜஸ்தானில் 200-க்கு 153 என்ற அமோக வெற்றியை காங்கிரஸýக்கு பரிசளித்ததும் வெங்காய விலை உயர்வை முன்னிறுத்திய பிரசாரம்தான்.
அந்த வெங்காய அலையில் இப்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அப்போது முதல் முறையாக ராஜஸ்தான் முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் நூதனப் போராட்டம் நடைபெற்ற ஒரே நாடு இந்தியாதான்.
இதையெல்லாம் உணர்ந்துதான் 2010-ஆம் ஆண்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தைத் தொட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்நாட்டில் வெங்காய விலையைக் குறைத்தார். கடந்த 2015-இல் தில்லியில் வெங்காய விலை கிலோ ரூ.80 எட்டியபோது, பாகிஸ்தானில் இருந்து கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை இறக்குமதி செய்ய முடிவெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இப்படி இந்தியாவில் வெங்காயத்துக்கு அஞ்சாத அரசியல் தலைவர்களே இல்லை. சில வகை தித்திப்புகள் நினைத்தாலே இனிக்கும். வெங்காயமோ அரசியல்வாதிகளுக்கு உரிக்காமலேயே கண்ணீர் வர வழைத்துவிடும் மக்களின் அத்தியாவசியப் பொருள்.
இது வரை விலை ஏற்றத்தால் மட்டுமே அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த வெங்காயம், இப்போது விலை குறைந்து  மகாராஷ்டிர அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெங்காய விலை உயர்வால் பல ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.  இப்போது விலை குறைந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறவாய்ப்புள்ளது. இந்நிலையில் அந்த மாநில பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது வெங்காய விலை வீழ்ச்சி.
உலகில் வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது நமது நாடுதான். இந்தியாவில் வெங்காயம் விளையும் மாநிலங்களில் முதன்மையானது மகாராஷ்டிரம். நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வெங்காய நுகர்வு இருந்தாலும், மொத்த வெங்காய சாகுபடியில் 35 சதவீதம் வரை மகாராஷ்டிரத்தில்தான் நடைபெறுகிறது. அங்கு வெங்காயம் கிலோ ரூ. 10 வரை விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்று கூறப்பட்டாலும், நாசிக் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயத்துக்கு ரூ.1.40 விலை கிடைத்ததால் விரக்தியடைந்த ஒரு விவசாயி, வெங்காயம் விற்ற தொகையை அண்மையில் பிரதமருக்கு அனுப்பி வைத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இதனை மத்திய அரசு உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு  அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும வெங்காயத்தை சாகுபடி செய்தது, ஏற்கெனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம் சந்தைக்கு வந்து குவிந்தது ஆகியவைதான் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என அரசு வட்டாரங்களில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் வெங்காய விவசாயிகளின் அவல நிலையைக் கையில் எடுத்துள்ளன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரத்துக்கு மட்டுமின்றி மக்களவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெங்காய விலை வீழ்ச்சி தேர்தலில் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மகாராஷ்டிர அரசு, மத்திய அரசின் "ஆபரேஷன் ஆனியன்' திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. வெங்காயம் மட்டுமல்லாது அத்தியாவசிய உணவுப் பொருள்களான தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க மானியத்தின் மூலம் விவசாயிகளுக்கு கை கொடுப்பதுதான் ரூ.500 கோடி மதிப்பிலான "ஆபரேஷன் ஆனியன்' திட்டம்.
தேர்தலுக்கு முன் வெங்காய விலை பிரச்னையை தீர்க்க முழுவீச்சில் களமிறங்கியுள்ளது மகாராஷ்டிர பாஜக அரசு. ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களை காங்கிரஸிடம் இழந்துவிட்ட பாஜக, மகாராஷ்டிரத்திலும் அதே அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. "ஆபரேஷன் ஆனியன்' திட்டமானது அரசியல் களத்தில் பாஜகவுக்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்பது மக்களவைத் தேர்தல் முடிவுகளில்தான் 
தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com