முகநூல் நட்பது நட்பு அன்று!

மின்னணு யுகத்தில் இணையதள 'வலை' வாய்ப்பு பெருகி வருவது என்னவோ உண்மை! 'இகர முதல எழுத்து எல்லாம் மின்னணுக் கணினி முதற்றே உலகு' என்று புதுக்குறளே எழுதலாம். இ-வர்த்தகம் என்னும் இணைய வர்த்தகம்,
Updated on
4 min read

மின்னணு யுகத்தில் இணையதள 'வலை' வாய்ப்பு பெருகி வருவது என்னவோ உண்மை! 'இகர முதல எழுத்து எல்லாம் மின்னணுக் கணினி முதற்றே உலகு' என்று புதுக்குறளே எழுதலாம். இ-வர்த்தகம் என்னும் இணைய வர்த்தகம், இ-கவர்னன்ஸ் (மின் ஆளுகை), இ-மெயில் (மின்னஞ்சல்), இ-பேப்பர் (மின் இதழ்) என்று தொடங்கி இ-புக் (மின்நூல்) படித்தவர்கள் இன்று 'எஃப்-புக்' படிக்கிறார்கள். அதுதான் 
ஃபேஸ்புக். தமிழில் முகநூல். உள்ளபடியே, இன்று அகம் நக நட்பது நட்பு அன்று; இந்த முகநூல் நட்புதான் நட்பு என்ற மாயை உருவாகிவிட்டது.
செல்லிடப்பேசிகளும், கணிப்பொறிகளும் சமர்த்தாக வேலை செய்கின்றன. கைபேசி பொய் பேசாது. கணிப்பொறி 'தாய்ப்பலகை' (மதர்போர்டு) சொல்லைத் தட்டாது. ஆனால் இன்றைய குடிமக்கள் ('சிடிசன்கள்') வலைமக்கள் ('நெடிசன்கள்') ஆகிவிட்ட நிலையில் 'மாதாவை ஒருநாளும் மதிக்க வேண்டாம்' என்றும் மாறிவிட்டார்கள். ஒரு பெரியவர் தனது செல்லிடப்பேசியைப் பழுது நீக்க ஒரு கடைக்கு எடுத்துச் சென்று காட்டினார். சரியாகத்தானே இருக்கிறது என்றார் கடைக்காரர். அப்படியானால் என் மகனிடம் இருந்து எனக்கு போன் வருவதில்லையே, ஏன் என ஆதங்கப்பட்டாராம் முதியவர். அந்த அளவுக்கு உறவுகளைத் தொலைத்துவிட்டு செல்லிடப்பேசிக்குள் மூழ்கிவிட்டது இளைய தலைமுறை. வீட்டில் சமையல் செய்யாமல் கட்செவி (வாட்ஸ் அப்) பதிவில் ஐக்கியமாகிவிட்ட இல்லத்தரசியைக் கொல்கத்தாவில் ஒருவர் கொலையே செய்துவிட்டாராம்.
சின்னத்திரைகளிலும் பெண்களை ஈர்ப்பதற்கு என்ன எல்லாம் விளம்பரங்கள்? ஒரு நகைக் கடையில் நகையை வாங்கி, மற்றொரு நிறுவனத்தில் அடகு வைத்து, இன்னொரு நிறுவனத்திடம் மீட்டுத் தர அலைகிற கதை சுவாரஸ்யம்தான்! இதற்கு மத்தியில் 'செல்லும் இடந்தோறும் பேசி' - செல்லிடப்பேசி என்றாலும் இலக்கணம் சரியே. 'செல்' என்ற சொல்லிற்கு உயிரியலில் உயிரணு, இயற்பியலில் மின்கலம், சரித்திரத்தில் சிறை (சிற்றறை) என்று பலவிதமாகப் பாடம் நடத்தி, தமிழ் வகுப்பில் 'போ' என்றும் சொன்னால் மாணவர்க்குக் குழப்பம் வரத்தானே செய்யும்? 
ஆணுக்குப் பெண் சளைத்தவர் இல்லை என்றபடி, 54% பெண்கள் செல்லிடப்பேசியிலும், மடிக்கணினியிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். முகநூல் என்கிற இலவச வசதி இருக்கவே இருக்கிறது. அவரவர் அகத்தின் அழகு இந்த முகநூல் பக்கங்களில் தெரியும். தங்கள் விருப்பு, வெறுப்புகளையும், ஸ்வீட், காரம், காபியோடு முகநூலில் மாய நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வர். அப்புறம் என்ன, உங்கள் அந்தரங்கம் முழுவதும் முகநூல் சேவை சேமிப்பக சிலிக்கன் சில்லினுள் அப்பட்டமாகப் பதிவாகிவிடும்.
தலையெழுத்தைக் கூட அழித்துவிடலாம். செல்லிடப்பேசியின் சேவை வழங்கும் கணினி சேமிப்பகத்திலிருந்து எந்தத் தகவலையும் அழித்து, ஒழித்து, இல்லாமற் செய்திட முடியாது. அது 'பல்லுயிரும் பலவுயிரும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்' எழுத்து மாறாமல் சம்மணமிட்டு கணினிக்குள் அமர்ந்து கொள்ளும்.
இந்தத் தரவுகளெல்லாம், உங்கள் பெயரில் நீங்களாகவே முன்வந்து கட்டணம் இன்றிப் பதிவு ஏற்றிய தற்குறிப்புகள். அவற்றை விலை இல்லாப் பொருட்களாய் சுய லாபத்திற்காக வெளிநாட்டினர் எவராலும் எதற்காகவும் கையாள முடியும். 'கடவுச் சொல்' (பாஸ்வேர்ட்) என்பது நம் கண்ணுக்குத்தான் கணினித் திரையில் கரும்புள்ளிகளாய்த் தோன்றும். உங்கள் சேவை வழங்கி சேமிப்பகத்தின் மின்னணுப் பார்வையில் அந்த சங்கேதச் சொல் ஆடையின் மறைப்பின்றி, அம்மணமாய் தன் கோலம் முழுதும் காட்டி நிற்கும் என்று பலருக்கும் தெரியாது. இந்த முகநூல் சேமிப்பகங்கள் அயல்நாடுகளில் நங்கூரமிட்டிருப்பதால், உங்கள் கோபதாபங்களை தோலுரித்துப் பார்ப்பது அந்நியர்க்கு மிக எளிது. உங்களுக்குப் பிடித்தது, உங்கள் பொழுதுபோக்கு, உங்கள் பலவீனங்கள் அனைத்தும் சர்வலோக அம்பலம். 'பூமியில் அனைவர்க்கும் இனி அடிமை செய்வோம்' என்ற புதுவிதி படைத்துக் கொண்டோம். அப்படித்தான் பாருங்கள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த ரஷியரான அலெக்சாண்டர் கோகன் என்பவரால் அமெரிக்கர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டன. அவை 'கேம்பிரிட்ஜ் பகுப்பாய்வு' என்ற அமைப்பிற்குக் கடத்தப்பட்டனவாம். லண்டனில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதன் துணைத்தலைவரான ஸ்டீவ் பன்னான் என்பவர், ரெபேக்காமற்றும் ராபர்ட் மெர்சர் ஆகிய இரு கோடீஸ்வரர்களின் நிதி பெற்றனர். அவரே பின்னாளில் அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியான அலெக்சாண்டர் நிக்ஸ் என்பவர், விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவை அணுகி அமெரிக்காவில் தேவையான சில மின்னஞ்சல்களைத் திருடினாராம். அதன்வழி, முகநூல் பயனாளிகளோடு உளவியல் யுத்தம் நடத்தியும், வியூகங்கள் வகுத்தும் அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்கியது இந்த லண்டன் அமைப்பு. அமெரிக்காவின் வியூக ஆலோசனைக் கூடம் என்ற நிறுவனத்தின் பினாமி கம்பெனி இது. இந்த வழியில் லட்சக்கணக்கான அமெரிக்க வாக்காளர்களின் 'வண்டவாளம்' முழுவதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தண்டவாளம் ஏறி, டொனால்ட் டிரம்ப் வெற்றியும் பெற்றார்.
அதுசரி, அமெரிக்கக் கதை நமக்கு எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்? நம் நாட்டிலும் 24 கோடி முகநூல் விசிறிகள் உள்ளனரே! கடந்த 6 மாதங்களுக்குள் இணைந்தவர்கள் மட்டும் 5 கோடி பேர். அவர்கள் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள். வாழ்நாளில் சந்தித்தே இராவிட்டாலும், இறக்கும்போது 'வடக்கிருந்து' சந்திப்பார்கள். 
அந்த கேம்பிரிட்ஜ் பகுப்பாய்வுக் கூடத்திற்கு இந்தியாவிலும் வணிக அறிவாண்மை என்கிற கிளை நிறுவனம் இருக்கிறதாம். அந்த அந்நிய நிறுவனம் இந்திய வாக்காளப் பெருமக்களின் தகவல்களை அலசி ஆராய்ந்து, நம் நாட்டுத் தலைவர்களுக்கே விற்பனை செய்யும். எதனை எதனால் எவன் வெறுக்கும் என்று ஆராய்ந்து, அதனைத் தேர்தலில் மக்கள் இடையே பரப்பி சாதகமான வியூகம் வகுக்க உதவுவதே லண்டன் அமைப்பின் திருத்தொண்டு. இந்த நிறுவனத்துடன் கை குலுக்குவது என்ன சாமானியமா? மில்லியன் டாலர் 'பை' குலுக்கல் அல்லவா? இந்த அர்த்த சாஸ்திரம் கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?
ஆனாலும், தீவிரவாதிகளுக்கு இது 'மீன் வலை'. மாட்டிக்கொள்வார்கள். புத்திஜீவிகளில் சிலர் மட்டும் இதனைக் 'கொசு வலை'யாகக் கருதுவர். பிறர்
நுழைந்து கடிக்காமல் தற்காத்துக் கொள்வர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது 'சிலந்தி வலை'- சிலர் சிக்கிக் கொண்டனர். இந்த சர்வதேசத் தரவுத் திருடர் குழுமத்தில் நம் தேசத் தலைவர்களில் முன்னாள் - இந்நாள் வாடிக்கையாளர்களும் உளர். 'திருடர்கள் ஜாக்கிரதை' என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன், ஒருவருக்கு ஒருவர் குர்தாவையும் ஜிப்பாவையும் மாறிமாறிப் பிடித்து இழுத்து அவர்கள் நடத்தும் ஊடக மல்யுத்தம் படுஜோர். இந்தக் குறுநில மன்னர்கள் அடிமைத்தனம் என்றும் பாராமல் அந்நிய நிறுவனத்துடன் உறவு கொண்டு தேர்தல் களம் கண்டு வென்றும் உள்ளனராம்.
உண்மையில் வாக்காளர் தரவுகளைத் திருடி வென்றவர்கள் அந்நியரிடம் தோற்றவர்களே. இடையில் சாதாரணக் குடிமகன்தான் நிலைதான் அவலம். தரவுகளையும், உறவுகளையும் இழந்து வெறும் வாக்கு வங்கிகளாகவே தொங்கி நிற்கிறான். லலித் 3000 கோடி, விஜய் 6000 கோடி, நீரவ் 10000 கோடி - எனப் பொருளாதார 'வளர்ச்சி' ஒருபுறம். ஏழை உழவனின் வெறும் பத்தாயிரம் வாராக் கடனா? சத்தம் இல்லாமல் அவன் முற்றத்தில் டிராக்டரைப் பிடுங்கு என்பதே வங்கிச் சட்டம்.
கணிப்பொறி வழி வங்கிப் பணத்தை மட்டுமல்ல, உங்கள் குணத்தையும் கையாடலாம் என்கிறார்கள். நம் நாட்டுத் தகவல்களை வெளிநாட்டுக் கணினி சேமிப்பகத்துக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, இங்கு என்ன கண்காணிப்பு நடக்கும்?
சிசிடிவி கேமராக்கள் இருந்தால் கூட வேண்டுமென்றே அணைக்கிற அதிபுத்திசாலிகள் நாம். அப்புறம் என்ன, வழக்கு என்று வந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த பிறகே தீர்ப்பு வரும் என்கிற அசட்டு தைரியம் வேறு.
எப்போதுமே நல்லவன் நீண்ட காலத்திற்குப் பிறகுதான் ஜெயிக்கிறான் என்பது உலகப் பொது நீதியாகிவிட்டது. அதற்குள் கெட்டவன் வாழ்ந்துவிட்டுப் போய்விடுகிறானே?
ஏதாயினும் குறிஞ்சி பூத்தலும், இராம பிரான் வனவாசமும், பாண்டவர் வனவாழ்வும், புத்தர் துறவறம் பூண்டு இல்லத்திற்கு மீண்டுவந்ததும் எல்லாம் 12-14 ஆண்டு இடைவெளியில்தான். அதே 14 ஆண்டுகளின் முன், 2004 பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் (தமிழ் இருக்கை வரப்போகும்) ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உளவியல் மாணவர் ஒருவர் தலையில் உதித்ததுதான் முகநூல் நுட்பம். மார்க் ஸக்கர்பர்க் என்ற அந்த இளைஞர் தனது கல்லூரி மாணவர் விடுதி நண்பர்களுடன் இணைந்து முகநூல் தளத்தை உருவாக்கினார். மின்னஞ்சல் வழி கருத்து பரிமாறிக் கொள்ளும் உத்தி. அவ்வளவுதான். ஆனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பல்கலைக்கழகத்தில் 1200 மாணவர்களை இந்தப் புதிய வலைதளம் வளைத்துப்போட்டது.
தமிழகத்திலும் இன்றைக்கு மாட்டு - நீட்டு - நோட்டு என எல்லா வகைப்பாட்டுக்கும் இளைஞர்கள் திரள்வது இந்த முகநூல் நூதனம் வழியாகத்தானே!
மனித வரலாற்றில் உணவுமயம், தொழில்மயம் சார்ந்தே முதல் இரண்டு உலகப்போர்கள் நடந்தன. இனி மின்னணுமய மூன்றாம் உலகப் போரில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள், எங்கோ ஓர் இடத்தில் மனித உருவமே இன்றி இருப்பார்கள். 'மாய யுத்தம்' தொடரும். இந்த நிலையில் ரத கஜ துரக பதாதி பழைமைவாத போர்ப் படைகளால் பயனும் உண்டோ?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com