ராவணன் நல்லவனா?

புராண, இதிகாசங்களின் கதைமாந்தர்தம் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றி விவாதிப்பதும் அதன் விளைவாக நமக்குள் மோதிக் கொள்ளுவதும் முடிவின்றித் தொடர்வதுதான்! 
Updated on
2 min read

புராண, இதிகாசங்களின் கதைமாந்தர்தம் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றி விவாதிப்பதும் அதன் விளைவாக நமக்குள் மோதிக் கொள்ளுவதும் முடிவின்றித் தொடர்வதுதான்! 
இத்தகைய பழம்பெரும் நூல்களின் தாக்கம் நம் மக்களிடையே அதிக அளவில் பரவலாகப் பன்னெடுங்காலமாய் இருந்து வருவதால், இவை சில நேரங்களில் தவறாய் புரிந்துகொள்ளப்படுவதே மோதலுக்குக் காரணம் என்றே தோன்றுகிறது.
ராவணனின் நன்னடத்தை பற்றி மிகவும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் 'பற்றாளர்கள்' உள்ளனர். தன் விருப்பத்துக்கு இணங்காத சீதையைத் தொடாமல், அவளது சம்மதத்துக்காக ராவணன் கண்ணியமாய்க் காத்திருந்தான் என்போர் உளர். இதே அடிப்படையில் ராவணனின் கண்ணியத்தைப் பாராட்டுபவர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சில பிரபலங்களும் இலங்கை வேந்தன் ராவணனைப் போற்றியும், அயோத்தி ராமனை ஓர் அந்தணன் என்று தவறாக எண்ணிக்கொண்டு ராமனை அவமதித்தும் வருவதை நாம் அறிவோம். ராவணனே அந்தணன் என்பதையும், ராமன் சத்திரியன் என்பதையும் பலரும் சுட்டிக்காட்டிய பிறகும் இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளத் தயாராக இல்லை.
மனிதர்களில் எவருமே முழுமையானவர்கள் அல்லர் என்பதை மெய்ப்பிப்பதே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பண்டைய பல நூல்களின் மையச் செய்தியாகும். இவ்வுலகத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி அவதாரங்களின் வாயிலாக வெளியிடப்படுவதாகப் பல அறிஞர்களும் நம்புகிறார்கள்.
நீர்வாழ் இனங்களில் தொடங்கி இறுதியாக மனிதனில் முடியும் இந்த அவதாரங்களில், ராமன் (கிட்டத்தட்ட) ஒரு முழுமையான மனிதனாய் கருதப்பட்டு வந்துள்ளான். என்னதான் முழுமையானவன் என்று கருதப்பட்டாலும், குறையுள்ள மனிதனே கிடையாது என்பதே ராமனின் செயல்பாடுகள் வாயிலாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், ராமனிடம் நிறைகளே அதிகமாகவும், குறைகள் குறைவாகவும் இருந்தன. ஆனால், ராவணனிடம் நிறைகள் குறைவாகவும், குறைகள் அதிகமாகவும் இருந்தன.
நல்லியல்புகள் அதிகமாக உள்ளவனை நல்லவன் என்றும், தீயவை அதிகம் உள்ளவனைக் கெட்டவன் என்றும் கணிப்பது உலக மரபு. இந்த அடிப்படையில்தான் ராவணன் தீயவன் என்று கணிக்கப்படுகிறான். அவன் ஒரு பெண் பித்தன் என்பது மிகத் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளது. அதிலும், விருப்பமற்ற பெண்களைக் கவர்ந்து வந்து கட்டாய நுகர்வு செய்பவன் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் ஓர் இசைக்கலைஞன், வீணை விற்பன்னன், கல்விமான், சிவனடியான் என்பவற்றையெல்லாம் இந்தப் பெருங்குற்றம் புறந்தள்ளிவிடுகிறது. பிறன் மனை நோக்குபவன் எவனையும் நாம் நல்லவன் என்று ஏற்பதில்லை. நிற்க.
ராவணன் சீதையை வன்னுகர்வு செய்யாமல் ஏன் பொறுமை காத்தான் என்பதைப் பார்ப்போம். 
ராவணன் ஒரு முறை குபேரப் பட்டணத்துக்கு அருகே முகாமிட்டிருந்தபோது, கின்னரர்களும், வித்தியாதரர்களும் பாடிய சில காதல் பாட்டுகளாலும், அப்போது நிலவிய காலநிலையாலும் உசுப்பிவிடப்படுகிறான். அந்நேரத்தில் தற்செயலாக நளகுபேரனின் மனைவி ரம்பா அவ்வழியாய்ச் செல்லுகிறாள். நளகுபேரன் ராவணனின் ஒன்றுவிட்ட தம்பி குபேரனின் மகன். எனவே, நமது மரபுப்படி அவள் ராவணனின் மருமகளும் ஆவாள். அவள் தனக்குத் தம்பிமுறையாகும் குபேரனின் மருமகள் என்பது ராவணனுக்கு அப்போது தெரியாது. அவன் தகாத நோக்கத்துடன் அவளைப் பற்றி இழுக்கிறான். ஆனால், தான் யாரென்பதை ரம்பா ராவணனுக்குத் தெரியப்படுத்துகிறாள். தான் குபேரனின் மருமகளானதால், அவனுக்கும் மருமகள் முறையாக வேண்டும் என்றும், எனவே தன்னை விட்டுவிடுமாறும் அவள் கண்ணீருடன் கைகூப்பி அவனிடம் மன்றாடுகிறாள். ஒருவன் தன் மருமகளிடம் இச்சை கொள்ளுவது தவறு என்றும் எடுத்துக் கூறுகிறாள்.
(வால்மீகி ராமாயணம் - பகுதி 26: சுலோகம் 29) 
'நீ என் மகன் இந்திரஜித்தின் மனைவியெனில், உனது இந்தக் கூற்றை நான் ஏற்பேன். ஆனால் நீயோ என் ஒன்றுவிட்ட தம்பியின் மகனுக்குத்தானே மனைவி?' (சுலோகம் 39) என்று கூறி, ரம்பா மன்றாடியதைப் புறந்தள்ளி அவளைக் கட்டாய வன்னுகர்வு செய்துவிடுகிறான் ராவணன்.
தனக்கு ராவணன் இழைத்துவிட்ட கொடுமையை ரம்பா கண்ணீருடன் தன் கணவனிடம் சொல்லிவிடுகிறாள். கடுஞ்சினமுறும் நளகுபேரன்,'ரம்பா! நீ வலுக்கட்டாயமாய் கெடுக்கப்பட்டிருக்கிறாய்!' என்று கூறி அவளைத் தேற்றுவதோடு, ராவணனை பின்வருமாறு சபித்துவிடுகிறான்:
'தவறிழைத்தவன் ராவணனே என்பதால், இனி அவன் மீது விருப்பம் இல்லாத எந்தப் பெண்ணையும் அவனால் நெருங்க முடியாது. எனினும், அவன் அவ்வாறு செய்தால், அந்தக் கணமே அவனது தலை ஏழு சுக்கல்களாய் வெடித்துச் சிதறிவிடும் என்று நான் சாபம் இடுகிறேன்!'(சுலோகம் 55)
ராவணனை அணுகி அவன் மீது நீர் தெளித்து நளகுபேரன் இடும் இந்த சாபத்தால் ராவணன் தன்வாழ்க்கையில் முதன்முதலாக நிலைகுலைந்து போகிறான். இதனால் அன்றிலிருந்து அவனால் எந்தப் பெண்ணையும் வலுக்கட்டாயப்படுத்த இயலவில்லை. (சுலோகம் 59)
இந்த சாபத்தால், ஏற்கெனவே அவனால் கவரப்பட்ட, அவன் மீது விருப்பமற்ற பல பெண்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள், என்கிறார் வால்மீகி. 
எனவே, இனிமேலாகிலும் ராவணனின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் யாரும் போற்றிப் புகழாதிருப்பார்களாக!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com