பட்டினிச் சாவுகள் தடுப்போம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் எட்டு நாள்கள் தொடர்ந்து பட்டினி கிடந்ததால் உயிரிழந்துள்ளனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் எட்டு நாள்கள் தொடர்ந்து பட்டினி கிடந்ததால் உயிரிழந்துள்ளனர். இது ஏதோ பஞ்சம் தலைவிரித்தாடும் சோமாலியாவிலோ, போரால் பாதிக்கப்பட்ட சிரியாவிலோ நடக்கவில்லை. பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தலைநகரான தில்லியில்தான் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.
ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரின் மகள்களான அச்சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், வயிறு, குடல், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் உணவுத் துகள்கள் எதுவுமே இல்லை. அவர்கள் சாப்பிட்டு எட்டு அல்லது ஒன்பது நாள்கள் இருக்கும். உடலில் கொழுப்பு சத்து சிறிதும் இல்லாததால் அவர்களின் முகங்கள் சுருங்கிவிட்டன' என்று கூறியது, கேட்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.
இந்தச் சிறுமிகளின் தந்தை, தனது ரிக்ஷா காணாமல் போனதால், வேறு வேலை தேடி எங்கோ சென்றிருக்கிறார். அவர்களது தாய் மனநலம் சரியில்லாதவர்' என காவல் துறை கூறுகிறது. அந்தக் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை இல்லாததால் பொருள்கள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தராததே' என்று ஆளும் ஆம் ஆத்மி அரசு கூறுகிறது. மானிய விலை பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதுடன் எங்கள் கடமை முடிந்துவிட்டது. சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவற்றைக் கொடுக்க வேண்டியது தில்லி அரசின் கடமை' என்று மத்திய அரசு கூறுகிறது.
அரசியல்வாதிகளின் இப்படிப் பேசுவது புதிதல்ல என்றாலும், சிறு குழந்தைகள் உணவு கிடைக்காததால் இறந்துள்ளதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. அதுவும் உணவுப் பொருள் உற்பத்தியில், ஆண்டுதோறும் புதிய உச்சத்தை எட்டி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் தரமான உணவுப் பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றியது. இதன் மூலம் பயனாளி ஒருவருக்கு அரிசி ஒரு கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும், தானியங்கள் ரூ.1-க்கும் மானிய விலையில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், 1975-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகிய அடிப்படைத் திட்டங்கள் இருந்தும் அனைவருக்கும் உணவு அளிக்கும் கடமையிலிருந்து அரசுகள் தவறியுள்ளன.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பம், ஆதார் அட்டை இருந்தும் குடும்ப அட்டை கிடைக்காத நிலையில் உள்ளனர். இதற்கு குடும்ப அட்டை பெற ஆதார் அட்டையை இருப்பிடச் சான்றாக ஏற்றுக் கொள்ளாததே காரணம் என்று அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் வீட்டிற்கு அருகே ரேஷன் கடை இருந்தும் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் உற்பத்தியாகும் உணவு பொருள்களில் 40 சதவீதம், சரியான சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து வசதி போன்றவை இல்லாத காரணங்களால் வீணாகிறது. இந்திய உணவுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஊட்டச்சத்து குறைபாட்டால் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் மூன்று லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டினியால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி வளரும் குழந்தைகளின் மூளையும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் உயிர் வாழ்ந்தாலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சிறார்களின் பட்டினியைத் தடுக்க, உணவு உற்பத்தியில் வீணாகும் 40 சதவீத பொருள்கள், ஏழை சிறார்களுக்கு சென்றடைய அரசு வழிவகை செய்ய வேண்டும். சமூக உணவு தயாரிப்பு கூடங்களை அமைத்து சமைத்த உணவை சிறார்களுக்கு அளிக்க வேண்டும். அனைவருக்கும் உணவு அளிக்க மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்களை ஒன்றிணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்த வேண்டும்.
பட்டினிச் சாவுகளை முடிவுக்கு கொண்டுவர தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். குடும்பத்தினருக்கு உணவு அளிக்க வேண்டியது குடும்பத் தலைவருக்கு கட்டாய கடமையாக்கப்பட வேண்டும். தவறினால் அவருக்கு அபராதமும், தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பட்டினிப் பிரச்னையை வெறும் அரசால் மட்டும் போக்க முடியாது. இதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியமாகும். ஒவ்வொருவரின் வீட்டிலும் தினந்தோறும் தேவைக்கு அதிகமாக சமைக்கப்பட்ட உணவு வீணாகிறது. அதேபோல், தெருவோரக் கடை முதல் நட்சத்திர ஹோட்டல் வரை நாள்தோறும் ஏராளமான உணவு வீணடிக்கப்படுகிறது. இந்த உணவுகள் ஏழை குழந்தைகளைச் சென்றடையும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சேவைக் குழுக்கள் அமைத்து அவற்றின் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும்.
அதற்கு முன்பு ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும். அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகே தேவைக்கு அதிகமாக சமைக்கப்பட்ட உணவுகள் சென்றடைய ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் மாவட்டம்தோறும் உள்ள சுய உதவிக் குழுக்கள், சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்' என்றார் மகாகவி பாரதி. பட்டினிச் சாவுகளைப் போக்க உலகை அழிக்கத் தேவையில்லை. அனைவரும் சேவை மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து செயலாற்றினாலே போதும். ஒவ்வொருவரும் தான் உண்ணும் உணவில் கையை வைக்கும்போது, மீதமுள்ள உணவு தேவையானவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று உணர்ந்தாலே பட்டினிச் சாவுகளை ஒழித்துவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...