விவசாயிகளும் விவசாயமும்
விவசாய உற்பத்தி பெருக, துறை ரீதியாகவும், அமைச்சரக ரீதியாகவும், ஒவ்வொரு விளைபொருளுக்கும் வளர்ச்சிக் குறியீடுகளும் இலக்குகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. உற்பத்தியை உயர்த்த மானியங்களும்


விவசாய உற்பத்தி பெருக, துறை ரீதியாகவும், அமைச்சரக ரீதியாகவும், ஒவ்வொரு விளைபொருளுக்கும் வளர்ச்சிக் குறியீடுகளும் இலக்குகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. உற்பத்தியை உயர்த்த மானியங்களும் வழங்கப்படுகின்றன. நெல், கோதுமை, கரும்பு நீங்கலாக மற்றப் பயிர்களில் திட்டமிட்டபடி வளர்ச்சி இல்லை. ஏனெனில், மேற்படி பயிர்களில் மட்டுமே அரசின் தலையீடு உள்ளது. அவை பொது விநியோகத்திற்குட்பட்டவை. உற்பத்திச் செலவுகளைக் கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுக் கொள்முதல் நிகழ்ந்து வருகிறது.
இப்படி நிர்ணயமாகும் விவசாய விலை லாபகரமாக உள்ளதா, இல்லையா என்பது அடுத்தகட்ட விவாதம். இந்த விவாதத்தில்தான் விவசாயம் செழித்தாலும் விவசாயிகள் செழிக்கவில்லை என்ற உண்மை புலனாகிறது. இதற்கு விவாசாயிகளின் தற்கொலைகள் எடுத்துக்காட்டு.
விவசாயம் செழித்து வளர்ந்துள்ளதை எடுத்துக்காட்டும் புள்ளிவிவரங்கள் உண்டு. ஆனால் செழிப்புடன் வாழும் ஒரு விவசாயியை எடுத்துக்காட்ட முடியுமா? தண்ணீர் வசதி, முதலீட்டு வசதி, வேலை செய்ய ஆட்கள் எல்லாம் சிலருக்கு மட்டுமே அமைந்துள்ளன. பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை.
ஆண்டுதோறும் பட்ஜெட்' போடப்படுகிறது. விவசாயத்திற்காக நிதி ஒதுக்குகிறார்கள். உர மானியம், உணவு மானியம், விதை மானியம், நுண்ணீர்ப் பாசன மானியம், விவசாயக் கடன் ஒதுக்கீடு என்று நிறைய அறிவிப்புகள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தித் தரப்படுகிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த நிலை?
விவசாய மானியங்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. உதாரணமாக, உர மானியம் உர உற்பத்தியாளர்களுக்கும், விவசாய இயந்திர மானியம் டிராக்டர், டில்லர் வடிவமைக்கும் தொழிலதிபர்களுக்கும், நுண்ணீர்ப் பாசன மானியம் மின் மோட்டார், குழாய், நுண் கருவி உற்பத்தியாளர்களுக்கும் வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. உண்மைதான். இந்த மானியத்தை விவசாயிகளிடம் வழங்கினால் அவர் அதை வேறு செலவுக்கும் பயன்படுத்துவார். பொதுவான நன்மை கருதி விவசாய உற்பத்திக்குரிய இயந்திரங்கள், கருவிகள், உரம் வாங்கும்போது மானியத்தைக் கணக்கிட்டுக் குறைந்த விலையில் அவை விற்கப்படுகின்றன. ஆனால், விதை மானியம், விதைத் தொழில்நுட்பம், விவசாயக் கடன், ஆகியவற்றில் ஊழல்கள் அதிகம்.
1960-70 காலகட்டத்தில் சான்றிதழ் பெற்ற நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, காய்கறி விதைகள் போன்றவை வட்டார ஆட்சி அலுவலக சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்தன. தேவைப்படும் விவசாயிகள் சான்றிதழ் பெற்ற விதைகளைப் பெற்றனர். நாளாவட்டத்தில் ஊழல் பெருகியதால் நெல்லைத் தவிர வேறு விதைகள் அங்கு கிடைப்பது அரிதாகி விட்டது. சான்றிதழ் விதை உற்பத்தி நெல்லைத் தவிர மற்ற பயிர்களில் நிறுத்தப்பட்டதா? இல்லை, அப்படி உற்பத்தியான விதைகள் வெளி அங்காடிக்கு விற்றுவிட்டுப் போலியான விவசாயிகளுக்கு வழங்கியதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா? உண்மை நிலையைக் கண்டறிவது நல்லது.
ஊடகங்களில் வரும் செய்திகளில், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெற்று கையும் களவுமாகப் பிடிபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், வேளாண்மைத்துறை அலுவலர்கள் பிடிபடுவது இல்லை. அது ஒரு பாதுகாப்புள்ள பிராந்தியம்.
ஒரு காலத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி மிகுந்து இருந்தது. குறிப்பாக மிட்டாய்க் கடலை என்று சொல்லப்படும் பெருரகம். எண்ணெய்ச் சத்து குறைவாகவும், புரதச்சத்து மிகுந்தும் இருக்கும். இப்போது நின்றுவிட்டது. இது பற்றிச் சில விவசாயிகளிடம் கேட்டபோது, இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு யூனியன் அலுவலகம் போனால் மானிய விலையில் நிலக்கடலை விதை கிடைத்தது. இப்போது நெல் மட்டுமே வழங்கப்படுகிறது என்றனர்.
சான்றிதழ் விதை உற்பத்தி திட்டத்தில் நெல்லுடன் புஞ்சை தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் எண்ணெய் வித்துகள் எல்லாமே அடங்கும். அதற்கான நிதி ஒதுக்கீட்டிலும் பஞ்சம் இல்லை. நெல் தவிர மற்றப் பயிர்களில் சான்றிதழ் விதை உற்பத்தி நிகழ்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் வெளி அங்காடிக்குப் போகிறதா? அல்லது சான்றிதழ் விதை உற்பத்தி நிகழ்ந்து வருவதாகக் கணக்கு மட்டும் காட்டப்படுகிறதா? தெரியவில்லை.
ஒருவேளை புதுமை என்ற பெயரில் வீரிய ஒட்டு, மரபு நீக்கிய வீரிய ஒட்டு என்று பணம் செலவாகிறதோ? அப்படிப் பார்த்தாலும், வீரிய ரக ஒட்டு விதைகளை அதிகபட்சம் பன்னாட்டு விதை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த கார்ப்பரேட்டுகளின் ஏக போகங்கள் அல்லவா அநியாய விலைக்கு விற்கின்றன?
மன்மோகன் சிங் ஆட்சியின்போது மரபணு மாற்று விதை நுட்ப விரிவாக்கத்திற்குரிய ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்தானதை நினைவு கொள்வோம். அதைத் தொடர்ந்து, மான்சண்டோ' போன்ற நிறுவனங்கள் நுழைந்தன. இந்த ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கிக் கடனும் பெறப்பட்டு இந்திய விதை ஆராய்ச்சிக்கும் பொதுத்துறைக் கணக்கிலும் வரவுகள் உண்டு. மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த பணம் எவ்வளவு? இவர்கள் என்ன ஆராய்ச்சி செய்தார்கள்? என்ன விதைகளை வெளியிட்டார்கள்? இவையும் காகிதப் பரிமாற்றங்கள்தானா? புலன் விசாரணை தேவை.
எனினும், விவசாயிகளைக் நேரடியாகப் பாதிப்பது விவசாயிகளுக்குக்கென்று ஒதுக்கப்படும் வங்கிக் கடன்தான். ஆனால், விவசாயம் செய்யாதவர்களுக்கும் விவசாயக் கடன் வழங்கப்படுகிறது. அண்மையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சர்க்கரை ஆலை அதிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி வாராக்கடனாக்கிய செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்தோம். சுருக்கமாகச் சொன்னால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணவிவரக் கணக்குகள் சரிதான். ஆனால், அப்பணம் விவசாயிகளிடம் போகாமல் எங்கு போகிறதென்பது சிதம்பர ரகசியம்.
விதை பற்றியும், கடன் பற்றியும் தெளிவுநிலை வேண்டும். அத்துடன், சாகுபடி திட்டத்திலும் மாற்றங்கள் அவசியம். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ விவசாயிகள் விவசாயத்தைச் சற்று லாபகரமாகத் தொடரச் செய்வதற்கு தக்க மாற்றங்கள் தேவை. ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில், அதாவது ஜி.டி.பி.யில் விவசாயத்தின் பங்களிப்பை உயர்த்தும் திட்டங்களில் நஞ்சை சாகுபடியை அளவுடன் மேற்கொண்டு அங்காடியில் அதிக மதிப்புள்ள விளைபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும்.
உணவு விவசாயத்தைப் பொருத்தவரை, நெல், கோதுமை, கரும்புக்கு மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறே பருப்பு வகைப் பயிர்களுக்கும், எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் பேக்கேஜ்' திட்டம் வேண்டும். கொள்முதல் விலை நிர்ணயித்தால் மட்டும் போதாது. நிஜமாகக் கொள்முதல் செய்து வினியோகத்தில் ஈடுபடவேண்டும்.
புஞ்செய் தானியமான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி விலைகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. அரிசி விலையையொட்டி உள்ளது. அரிசி விலை ரூ.40 முதல் ரூ. 60 இருந்தால் புஞ்சை தானிய விலை ரூ.70 முதல் ரூ. 150 வரை முதல் நிலை விலை இருக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 மூட்டை நெல் விளையும். ஆனால் அதே ஒரு ஏக்கரில் 5 முதல் 10 மூட்டைதான் (மக்காச்சோளம், கோதுமை நீங்கலாக) இதர தானியங்களை விளைவிக்க முடியும். நீர்ச்சிக்கனப் பயிர்கள் உய்வு பெற்றால் தண்ணீர்ச் செலவும் மிச்சமாகும்.
விளைபொருள் உற்பத்தி மதிப்புக் கூடும் வகையில் ஏற்றுமதிக்குரிய மூலிகைகள், நறுமணப் பொருள்கள், பழவகைகளின் தரத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டும்.
விளைபொருள் அங்காடிகளில் இடைத்தரகு இல்லாதபடி விவசாயிகள்-மண்டி நேரடி உறவை வலிமைப்படுத்தும் திட்டம் (விவசாய கார்ப்பரேட்) வலிமை பெற வேண்டும். மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில மண்டிகளில் சில வெற்றிக் கதைகள் உண்டு. விவசாய கார்ப்பரேட் என்பது விவசாய உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புப் பங்குரிமைக் கம்பெனி.
ஆராய்ச்சி என்ற பெயரில் கலப்பின வீரிய ரகங்கள், மரபணு மாற்றம் என்று கோடி கோடியாகப் பணம் விரயமாகிறது. அதே பணத்தைக் கொண்டு மண்ணை வளப்படுத்தும் இயற்கை விவசாயம், மர சாகுபடியுடன் இணைந்த விவசாயம், இயற்கை வழி இடுபொருள் உற்பத்தி, பாரம்பரிய விதை உற்பத்தி போன்ற விஷயங்களில் மானியமோ, நிதி ஒதுக்கீடோ இல்லை. இது மாறவேண்டும்.
சில கட்டமைப்புகளை உடைத்தெறிய வேண்டும். விதை மானியங்களில் வெளிப்படைத்தன்மை, விவசாயக் கடன் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை. இப்போது எல்லா விவசாயிகளிடமும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளதால் விவசாயத் துறையை ஊழல் இல்லாமல் கண்காணிப்பது எளிதுதான். சமையல் எரிவாயு வாங்கியவுடன் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை போல் விதை மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் செயல்படவேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடனையும் அப்படிச் செய்தால், விவசாயம் செய்யாதவர்கள் விவசாயிகளின் பெயரில் குறைந்த வட்டியில் கடன் பெறுவதை நிறுத்தி விட முடியும்.
விவசாயம் முக்கியம்தான்; ஆனால், விவசாயிகள் வாழ்க்கை அதைவிட முக்கியம்!
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...