என்ன செய்யப் போகிறோம்?
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, "சுற்றுச்சூழல் தூதுவர்' விருது அளித்துக் கெüரவித்தது ஐ.நா சபை. இவ்விருதினைப் பெற்ற பிறகு, ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் மோடி.


அண்மையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, "சுற்றுச்சூழல் தூதுவர்' விருது அளித்துக் கெüரவித்தது ஐ.நா சபை. இவ்விருதினைப் பெற்ற பிறகு, ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் மோடி. அதில், "மனிதர்களின் பேராசையால் பூமி கடும் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் சிக்கித்தவிக்கிறது.
ஒன்று, இதை ஏற்றுக் கொண்டு, இப்படியே வாழ்ந்துவிட்டு, நமக்குப் பின்வரும் தலைமுறையினர் பூமியில் வாழவே முடியாத நிலையை ஏற்படுத்தலாம். அல்லது நம் வாழ்க்கை முறையைச் சற்றே மாற்றிக் கொண்டு சீர்கேட்டைச் சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மைத் தாங்கி நிற்கும் "நிலம் என்னும் நல்லா'ளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? நிலம் மாசடையப் பெரிதும் காரணமாக இருப்பவை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ரசாயனக் கழிவுகள் ஆகியவையே.
பெரும்பான்மையான விவசாயிகள் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை மறந்து விட்டார்கள். வேளாண்மையும் ஒரு வணிகமாகி விட்டதால், விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி, அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக, ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
பசுமைப் புரட்சியும் இதனையே ஊக்குவித்தது. வேளாண் தொழில் நுட்பங்களாலும், அரசின் நலத்திட்டங்களாலும் உற்பத்திப் பெருகியுள்ளது. ஆனால், விளை பொருள்களை இருப்பு வைக்கவோ, பதப்படுத்தவோ, பகிர்ந்து விநியோகிக்கவோ, ஏற்றுமதி செய்யவோ போதிய வசதிகள் இல்லாததால் அவை வீணாகிப் போகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் அரசுக்கிடங்குகளில் நெல் மூட்டைகள் முளை விட்டு வண்டு பிடித்துச் சீரழிவதையும், கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் வெங்காயம், தக்காளி போன்றவை டன் கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு பட்டறைகளில் அழுகிக் கிடக்கின்ற அவல நிலையையும் காண்கின்றோம்.
அரசு, உற்பத்தியைப் பெருக்க மட்டுமே திட்டங்கள் கொண்டு வருகிறது. அதனை முறைப்படி சேமித்து, விநியோகம் செய்வதும் அரசின் கடமைதான். ஆனால், அரசு அதைச் செய்வதில்லை. விளைச்சல் பெருகினாலும் அதற்குரிய விலையைப் பெற முடியாது என்பதை உணராமல் விவசாயிகள் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தியதால் நிலம் முற்றிலும் மாசடைந்துவிட்டது.
இந்நிலை மாற வேண்டுமானால், அரசு, அடுத்த ஐந்துஆண்டுகளுக்குள் இயற்கை மற்றும் பாரம்பரிய வேளாண்மையைப் படிப்படியாகக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் தேவையான கட்டமைப்புகள், இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள், கால்நடைகள், சேமிப்புக் கிடங்குகள், விளை பொருள்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை ஆகியவற்றை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
பொதுமக்களும் இயற்கை வேளாண் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாசடைந்த நிலத்தை ஓரளவாவது மீட்க முடியும்.
நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களைப் பலகாலம் தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவுகளை நாம் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறோம். அவை மக்காமல் மண்ணில் தங்கி நிலத்தைக் கெடுத்துவிட்டன. இதை எப்படிச் சரிசெய்யலாம்?
மண் பாண்டங்கள் தட்டு, தம்ளர், குவளை, எண்ணெய் சட்டி, தோசைக்கல் என பல வடிவங்களில் புழக்கத்துக்கு வந்துள்ளன. சமையலுக்கும், பிற பயன்பாட்டுக்கும் நெகிழியை விடுத்து மண், கல், பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
பல் தேய்க்கும் பிரஷ், சீப்பு, பேனா போன்றவை தற்போது மூங்கிலில் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நாப்கின்கள், வாழை நார் மற்றும் பருத்தியில் தயாரிக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றின் விலை சற்றே அதிகம் என்றாலும் மாசற்ற பூமிக்கு நாம் கொடுக்கும் விலையாக நினைத்து இவற்றை வாங்கலாம்.
பால் பாயின்ட் பேனாக்களைத் தவிர்த்து, மை பேனாக்களை உபயோகிக்கலாம். மூங்கிலில் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், கூடைகள், மேசையில் வைக்கும் தட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது நாம் குடிசைத் தொழிலையும் ஆதரிக்கிறோம். இவை உடைந்தாலும் மக்கிப் போய்விடும்.
மின்னணு சாதனங்களின் சாதகங்களை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். அவை நிலத்திற்கு எவ்வளவு பாதகமாயிருக்கின்றனஎன்பதை நாம் உணர்ந்தால், அடிக்கடி செல்லிடப்பேசியை மாற்றிப் புதிது புதிதாய் வாங்குவதையும், பழையனவற்றை என்னசெய்வது என்று தெரியாமல் சேர்த்து வைத்துத் தூக்கிப் போடுவதையும் செய்ய மாட்டோம்.
தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்னணு சாதனங்களை அடிக்கடி மாற்றாமல் முடிந்தவரை சரி செய்து பயன்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில் அவற்றை மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்கவேண்டும். அதற்கு வசதியாக, அரசு, ஒவ்வொரு ஊரிலும் "மின்னணுக் கழிவு மறுசுழற்சி மையம்' தொடங்கவேண்டும்.
நெகிழிப் பயன்பாட்டின்கெடுதல்கள் பற்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. தமிழக அரசும் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நெகிழிப் பயன்பாட்டைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தடையை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பெயருக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டு, கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் நெகிழியினால் நிலம் மாசுபடுவதைத் தடுக்கவே முடியாது.
நெகிழிக்கு மாற்றாக, துணி, சணல், காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். ஒரே சமயத்தில் நெகிழி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும்; மக்கள் நெகிழிப் பயன்பாட்டைவிட்டு விடவேண்டும். அரசு இவ்விரண்டையும் உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நெகிழியால் நிலம் மாசடைவதைத் தடுக்க இயலும்.
கட்டட இடிபாடுகளாலும் நிலம் வெகுவாக மாசடைந்து வருகிறது. நன்றாக இருக்கும் வீட்டைவாஸ்து பார்த்து மீண்டும் மீண்டும் இடித்துக் கட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். கட்டடங்களை இடிப்பதற்கும், கட்டுவதற்கும் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தில்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில், கட்டடங்களை இடிப்பதற்கு அரசு பல கட்டுப்பாடுகளைஅறிவித்துள்ளது. அங்கும் காற்று மாசு மட்டுமே கவனத்தை ஈர்த்துள்ளது. நிலம் மாசடைவது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை.
புதிதாக ஒரு வீட்டைக் கட்டும்போது, கூடியவரை இயற்கைப் பொருள்களையும், அப்பகுதியில் கிடைக்கும் பொருள்களையும் மட்டுமே கொண்டு கட்டுவது நல்லது. சிமென்ட், இரும்பு போன்றவற்றைக் குறைத்து மண், கருங்கல், சுண்ணாம்பு, மண்ணில் செய்யப்பட்டசெங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேற்கூரையைத் தூக்கி நிறுத்த இரும்புக் கம்பிகளைவிட மூங்கில் உறுதியானது என்று கட்டடக்கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மூங்கில், வளைந்து கொடுத்துக் கூரையின் அழுத்தத்துக்கு ஈடு கொடுக்கும். மூங்கில் வெட்டுவதற்குத் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால், மூங்கிலின் பயன்பாட்டை அதிகரிக்கலாம். இதனால் விவசாயிகளுக்கும் ஒரு லாபகரமான மாற்றுப் பயிர் கிடைக்கும். மேல் மாடியில் கட்டப்படும் அறைகளை முற்றிலும் மூங்கில் அல்லது தென்னை நார் கொண்டு வடிவமைக்கலாம். இவை பார்க்க அழகாக இருப்பதோடு, கான்கிரீட் கட்டடங்களைவிட இவற்றுக்கு செலவும் குறைவு. மிகக் குறைந்த காலத்தில் கட்டி முடித்துவிடவும் முடியும்.
குப்பைகளும் கழிவுகளும் ஆங்காங்கு குவிந்து நாற்றமெடுத்து நிலத்தை மாசுபடுத்துகின்றன. வளர்ச்சிக்கு ஈடு கொடுக்காத, அரை வேக்காட்டுத் திட்டங்கள், ஊழல் புரையோடிய நகராட்சிகள், வேலையே செய்யாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கிக் கொண்டிருக்கும் நகராட்சி ஊழியர்கள், சுற்றுச்சூழல் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் குப்பையை நெகிழிப் பையில் கட்டிச் சாலையில் வீசியெறிந்து போகும் மக்கள் -இவர்கள் இருக்கும்வரை நிலமாசைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது.
மக்கும் குப்பை, மக்காத குப்பைஆகியவற்றை வீடுகளிலேயே தரம் பிரிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மக்கும் குப்பையை உரமாக மாற்ற, ஒவ்வொரு வார்டிலும் ஒரு"மண்புழு உர மையம்'அமைத்து, அதை சுற்றுச்சூழல் அமைப்புகளின் துணையோடு பராமரிக்கலாம். மக்காத குப்பைகளையும் தனித்தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும்.
வல்லுநர்களின் உதவியோடு அரசு இதைச் செயல்படுத்தவேண்டும்.
இவற்றையெல்லாம்விட, மிக மோசமான விஷயங்கள், மக்கள் சிறிதும் கூச்சமில்லாமல் திறந்த வெளியில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது ஆகியவை.
படித்தவர், படிக்காதவர், சிறுவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சாலைகளிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்புகிறார்கள். இதை எப்படித் தடுப்பது?
இன்றைய வாழ்க்கை வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக, நாம் நாளைய வாழ்க்கையை மிகவும் கடினமாக்கிக் கொண்டு வருகிறோம். அதற்காக நேற்றைய வாழ்க்கைக்கு முற்றிலுமாகப் போய்விட முடியாதுதான். இன்று நம் வாழ்க்கை முறையைச் சற்றே மாற்றிஅமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாளை வரும் அடுத்த தலைமுறையினர் பூமியில் வாழவே முடியும்.
கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...