மாறுமா தொழிற்சங்கங்களின் மனப்பாங்கு?

கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்தவற்றில் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த செய்திகளில் ஒன்று,
Updated on
2 min read

கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்தவற்றில் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த செய்திகளில் ஒன்று, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தம் செய்த 7 நாள்களுக்கு ஊதியத்தைப் பிடித்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு வழக்கம்போல தொழிற்சங்கங்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போய்விட்டதாகப் புலம்பியுள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சியில் தனியார் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளாக அறிவிக்கும்போது அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள் இது ஒரு கற்பகத் தரு என்பதை. பொதுமக்கள் சேவை என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் அதை இன்றுவரை விட்டுவிடவில்லை.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு தொகைகளைச் செலுத்தாமல் விட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதனால் தொழிலாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காப்பீட்டுத் தொகை கட்டாததால் விபத்தோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டுத் தொகை கிடைக்காமல் போனவர்கள் பலர். ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகையைக் கொண்டு மகள் திருமணம், மகனின் கல்வி அல்லது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் காத்திருந்த பலரின் கனவுகள் கானல் நீராகவே போனது உண்மை.
இந்தச் சூழ்நிலையில்தான் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என நீதிமன்றம் அறிவித்தது. ஊதியம் போதாவிட்டால் வெளியேறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 
ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது செவிவழித் தகவலை வைத்து பேச்சுவார்த்தை தோல்வி என முடிவெடுத்து, ஆங்காங்கு பேருந்துகளை நிறுத்திய ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதனால் பல ஆயிரக்கணக்கானவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவிப்புக்கு உள்ளானார்களே? போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுக் கொள்வார்களா?
தமிழகத்தில் சென்னை தவிர பிற இடங்களில் அடையாள அட்டை வைத்திருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். ஆனால் சென்னையில் ஊழியர்களுடன் எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் டிக்கெட் தேவையில்லை. இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் முதியோர்களும் மாணவர்களும் எத்தனை இழி சொற்களைக் கேட்டிருப்பார்கள்? 
பல எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் அதிகம் விற்பனையாகும் டிக்கெட்டுகளைத் தேவையான அளவு அதிகாரிகள் தருவதில்லையாம். கூடுதல் கட்டண டிக்கெட்டுகளை விற்கச் சொல்கின்றனராம். 
எல்லாவற்றுக்கும் மேலாக வேலை நிறுத்தத்தின்போது போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும் நடத்துநருமே பேருந்தின் முகப்பு விளக்கையும் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு அடையாளம் தெரியாதவர்கள் இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனராம். மேற்கண்ட பிரச்னைகளை எந்தத் தொழிற்சங்கங்களும் கண்டிக்கக் கூட இல்லையே? 
தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடும் தொழிற்சங்கத்தினர் என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பலர் தொழிற்சங்கப் பணி என்று வேலைக்குச் செல்லாமல் ஊதியம் பெறுவதை எந்தத் தொழிற்சங்கத்தினரும் கண்டுகொள்வதில்லையே ஏன்? 
ஊதியம் போதவில்லை, எங்களுக்கு கூடுதல் சலுகைகள் தேவை என்று போராடும் தொழிற்சங்கத்தினர், அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் கடமைகளைச் செய்து உரிமையைப் பெற வேண்டும் என்று கூறுவதேயில்லையே. முதலில் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நமது சட்டத்தின் முக்கிய நோக்கம். காப்பீட்டுத் தொகை கட்டாததால் விபத்தில் உயிரிழந்தவருக்குக் கிடைக்க வேண்டிய தொகை போக்குவரத்துத் தொழிலாளருக்குக் கிடைப்பதில்லை. ஊதியத்தில் பிடித்தம் செய்தும் கட்டாமல் விட்ட அதிகாரிக்குத் தண்டனையா? கட்ட வேண்டாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்ன அரசை வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்கா? இதில் யாருக்கு தண்டனை தருவது என்பதை யார் முடிவு செய்வது?
தொழிலாளர்களும் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டாக வேண்டும். கடமையைச் செய்தால் மட்டுமே உரிமை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் எங்கும் வேலை செய்யத் தயாராக உள்ளனர். அவர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். இனி எதிர்காலத்தில் இதேபோல வேலை நிறுத்தம் செய்தால் வடமாநிலத் தொழிலாளர்கள் மூலம் பணிகள் நிரப்பப்படும் என்ற நிலை எழுந்தால் என்னவாகும்? இதைப் புரிந்து கொண்டு அனைவரும் வேலை செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதில் தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தவறு செய்தாலும் தொழிலாளர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவது தொழிற்சங்கங்களின் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றிவிடும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதுதான் மாறிவரும் இன்றைய சூழலில் அடிப்படைத் தேவை. வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அது ஆசிரியர்களானாலும் சரி போக்குவரத்து ஊழியர்களானாலும் சரி செவிலியர்களானாலும் சரி. இது அனைவருக்கும் பொருந்தும் என்று உறுதியாகத் தீர்ப்பும் வழங்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் நலனும் உரிமையும் காக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com