ஊழலை மேலும் வளர்க்கும் ஊழல்

உலக அளவில் பிரபலமாக விளங்கிய ஆட்சியாளர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கடந்த சில வாரங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளனர்

உலக அளவில் பிரபலமாக விளங்கிய ஆட்சியாளர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கடந்த சில வாரங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழல் புகாரால் பதவி விலகினார். முன்னதாக, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ஊழல் புகார் காரணமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டார். அவரது முப்பத்தேழு ஆண்டு கால ஆட்சி அவமானகரமாக முடிவுக்கு வந்தது. பிரேசில் அதிபர் டில்மா ரூஸஃப் முறையற்ற செயல்பாடுகளுக்காகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 
அதே சமயம், நம் நாட்டில் நடந்த சில நிகழ்வுகளை உற்று கவனித்தால் பல உண்மைகள் புரியவரும். கடந்த கால இந்திய அரசியலில் பிரதானமானவராக வலம் வந்தவரான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழலில் பல கோடிகளைக் குவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான மது கோடாவும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
பதவி, அரசியல் அதிகாரம் என்பது தங்களுக்குப் பிரத்தியேக முக்கியத்துவமும் உரிமையும் தந்துவிடுவதாக அரசியல்வாதிகள் நினைத்துவிடுகிறார்கள். சமுதாயத்துக்கு நன்மைபயக்கும் விதத்தில் நலத்திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், வளர்ச்சிப் பணிகள், பொதுநலன் என்ற பெயர்களில் தங்கள் சுயலாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதன் மூலமாக, அதிகாரம் என்பது அரசு நிதியை தவறாகக் கையாள்வதற்கும், சட்டவிரோதமான செயல்களுக்கான ஆதாரமாகவும் மாற்றப்பட்டு விடுகிறது.
அரசியல் முதல் கல்வித் துறை வரை எங்கும் ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது நமது இளம் தலைமுறையைத் தவறாக வழிநடத்துகிறது. இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதால் நேரிடும் பொருளாதார இழப்பைவிட இது அபாயகரமானது.
இத்தகைய நிலையில், சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கும், முறைப்படி வரி செலுத்தும், அமைதியாக வாழ விரும்பும் குடிமக்கள் என்ன செய்வது? இந்த ஊழல் சகதியில் இருந்து விடுபடுவது எப்படி? தொற்றுநோய் போன்ற ஊழல் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கப் போகிறது? அஹிம்ஸையையும் வாய்மையையும் மையமாகக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இந்தியாவில், தற்போது ஊழல் மலிந்திருப்பது விதிவசம்தான் போலும். இதில் விந்தை என்னவென்றால், ஊழலுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்காதான் நமக்கு சமகளப் போட்டியாளர்!)
நமது அரசியல் தலைவர்களின் பேராசை, அகந்தை, பாதுகாப்பற்ற உணர்வு, திறமையில் நம்பிக்கையின்மை, தார்மிகத் தோல்வி, நேர்மையின் வீழ்ச்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே இந்த ஊழல் கறைகள் வெளிப்படுகின்றன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசு ஊழியரின் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்ப்பதும், அதற்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் சரியானதே. ஆனால், ஊழல் கடலில் முத்தெடுக்கும் நம்மவர்கள் சட்டத்தையே ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். 
நில ஒதுக்கீடுகள், பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை, சுரங்க உரிமங்கள் வழங்குதல், பணியிட மாற்றம் போன்ற அனைத்தும் குறிப்பிட்ட நடைமுறையில் வெளிப்படையாக நடைபெற வேண்டியவை. ஆனால், இவை தொடர்பான கொள்கை முடிவுகள் யாருக்கும் புலப்படாத வகையில், ஊழலுக்கு வித்திடும் வகையில், ரகசியமாக எடுக்கப்படுகின்றன. இத்தகைய வினோதக் கொள்கை நிலவும் அமைப்பில் முறைகேடுகள் பொங்கிப் பெருகுவதில் வியப்பில்லை. 
எந்த ஒரு ஊழல் நடவடிக்கையிலும் கொள்பவரும் கொடுப்பவரும் இருப்பார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள் இல்லாவிட்டால் ஊழல் நடைபெற வாய்ப்பில்லை. லஞ்சம் கொடுப்பவர்கள் உள்ள சமூகம், ஜனநாயகத்தையும் தேச வளர்ச்சியையும் ஊழல் அரிக்கிறது என்பதை ஏற்க மறுக்கிறது. ஊழலில் பங்கேற்கும் லஞ்சம் வாங்குபவர்- கொடுப்பவர் என்ற இரு தரப்பினரும் அரசின் நம்பகத்தன்மை சீர்குலைவதை உணர்வதில்லை.
ஊழலைத் தடுக்கவும், தண்டிக்கவும் முறையான அமைப்புகளும் சட்டங்களும் உள்ளன. அதனால் சில பலன்கள் விளைந்தாலும், ஊழலை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. சொல்லப் போனால் ஊழலின் விஸ்தீரணமும், வேகமும் முன்னைவிட அதிகரித்து வருகிறது. கண் சிமிட்டும் உயர்மட்ட ஊழல்கள், விபரீதமான சமூக சிந்தனைகளையும், மனஅழுத்தத்தையும் உருவாக்குகின்றன. ஊழலின் விளைவான பொருளாதார, சமூகப் பேரழிவுகளைவிட, இந்த பாதிப்புகள் அதிக சேதாரம் விளைவிப்பவை.
ஊழலால் தண்டிக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்கள்தான். அவர்கள் பதவியில் இருந்தபோது, காவல்துறை உயரதிகாரிகள் அவர்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். 'சத்தியமேவ ஜயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவர் பின்னணியில் இருக்க அவர்கள் பலமுறை அரசுக் கூட்டங்களை நடத்தியிருப்பார்கள். பல உலகத் தலைவர்களுடன் அவர்கள் கைகுலுக்கி இருப்பார்கள். 
தற்போது அந்த நாயகர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகையில், மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகிறது; அரசு நடைமுறைகள் அனைத்தும் வெற்றுச் சடங்குகளே என்ற எண்ணம் மக்களுக்கு எழுகிறது. எனவே, யாரும் யோக்கியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். இந்த நிலைமை நமது இளைஞர்களை - வரும் தலைமுறையை எவ்வாறு பாதிக்கும் என்று சிந்திக்க வேண்டும்.
இப்படித்தான், பள்ளிகளில் சேர கணக்கில் வராத பணத்தைச் செலுத்துவதில் துவங்கி, அரசுப் பணிகளில் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துவது வரை, ஊழல் சர்வ வியாபகமாகிறது. இது ஊழலை நியாயப்படுத்தும் நிர்பந்தத்துக்கு இளைஞர்களைத் தள்ளுகிறது. 
இத்தகைய நிலையில் ஊழலை எவ்வாறு தடுப்பது? இருண்ட ஊழல் பள்ளத்தில் தவிக்கும் சமுதாயத்துக்கு எப்படி தார்மிக நம்பிக்கை அளிப்பது? ஊழலே இங்கு ஊழலை மேலும் வளர்ப்பதாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இது நிகழ்காலத்தை மட்டும் பாதிப்பதல்ல; எதிர்காலத்தையும் தடம்புரளச் செய்யும் கொடிய விஷம்.
புதிய தாராளமயக் கொள்கைகளும், தனியார்மயமாக்கலும்தான் இன்றைக்குப் பெருகி வரும் ஊழலுக்கு காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். தனியார் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் முதலீட்டாளர்களைக் கவரக் கூடிய நட்புரீதியான தன்மையுடன் இருப்பது ஊழலுக்கு வித்திடுகிறது என்பதும் உண்மையே. ஆனால் இது மட்டும் காரணம் என்று கூறுவது உண்மையாகாது. ஏனெனில், முதலாளித்துவ சமுதாயமோ, அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் சமுதாயமோ எதுவாயினும் எல்லா இடங்களிலும் ஊழல் சதிராட்டம் போடுகிறது. 
சொல்லப்போனால், சர்வாதிகார அமைப்பைவிட, தாராளமயக் கொள்கை கொண்ட சமுதாயத்தில்தான், வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும், சாமானியர்களின் தகவல் அறியும் உரிமையும், செய்திகளை அம்பலப்படுத்தும் ஊடக சுதந்திரமும் கூடுதலாக நிலவுகின்றன. ஊடகத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நாட்டில் ஊழல் பெருமளவில் நடைபெறவே வாய்ப்புகள் அதிகம்.
முந்தைய சோவியத் ஒன்றியமோ, தற்போதைய சீனாவோ எதுவாயினும் ஊழலுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது. எனினும், முன்னொரு காலத்தில் கோலோச்சியவர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு கம்பி எண்ணும்போது, ஊழல் தடுப்புச் சட்டங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தோற்றம் அளிப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.
இதற்கு ஒரே தீர்வு, ஊழலுக்கு எதிரான மனப்பான்மையை சமுதாயத்தில் வளர்ப்பதும், சமரசமற்ற நேர்மையை முன்வைப்பதும், ஊழலை சற்றும் சகிக்காத பண்பை பரப்புவதும்தான்.
உயர்ந்த லட்சியங்களுடன் சிறந்து விளங்கும் ஜனநாயக நாடுகளில் சிறிதளவு ஊழல் கறையும்கூட ஒருவருடைய பொதுவாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
மாறாக நமது நாட்டிலோ, ஊழலுக்காகத் தண்டிக்கப்படுவோர் அதீத முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஊழல் வழக்கில் சிறை செல்வோர் அதற்கு வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் சேவகன் என்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொள்வதற்கு எந்த தார்மிக நேர்மையும், தகுதியும் இல்லை. 
இந்த உண்மையை மூடி மறைக்கும் சமுதாயம், ஊழலை வெட்கமின்றி சகித்துக் கொள்கிறது. இந்த மனப்பான்மையால், ஊழல் சேறே மேலும் பெரிய ஊழல் விருட்சத்தை வளர்ப்பதற்கான ஆதாரமாகிறது.
கட்டுரையாளர்:
கேரள மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்,

மற்றும் மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com