தொடரும் தேசபக்திக் குழப்பம்!

நாடு, தேசம், தேசியம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் எல்லைக்கு உள்பட்ட நிலத்தின் மீதான அன்பு

நாடு, தேசம், தேசியம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் எல்லைக்கு உள்பட்ட நிலத்தின் மீதான அன்பு மட்டுமே தேசபக்தி அல்ல. அது நிலத்தின் எல்லை, அங்கு வாழும் மக்கள், அவர்களின் வரலாறு, வம்சாவளி ஆகியவற்றால் உருவாவதாகும். 
தேசத்துக்கு எல்லை மிகவும் அவசியம்; அதே சமயம், எல்லை மட்டுமே போதுமானதல்ல. மேலும் அனைத்து நாடுகளின் தேசியம் ஒன்றுபோல இருக்க வேண்டியதில்லை. இயல்பாக உருவான ஒரு நாட்டுக்கு, வரலாறு, சமூக மதிப்பீடுகள் தொடர்பான மக்களின் ஒருங்கிணைந்த உணர்வுகளே காரணமாக இருக்கும். இதற்கு இரு வேறுபட்ட தேசியவாத உதாரணங்களை நாம் காணலாம். அவை அமெரிக்க ஐக்கிய மாகாணங்களும், இஸ்ரேலும்.
யூத இஸ்ரேலும், உருகும் அமெரிக்காவும் 
அமெரிக்காவைப் பொருத்த வரை, நீண்ட காலமாக அங்கு குடியேறிய மக்களின் இணைப்பால் உருவான நாடு அது. இதை 'உருகும் பானை' தேசியம் (மெல்டிங் பாட் நேஷனலிஸம்) என்று பெருமிதமாக அமெரிக்கா சொல்லிக் கொள்கிறது. எனினும் அமெரிக்க அறிஞர் சாமுவேல் ஹன்டிங்டன், தனது நாட்டை ஆங்கிலோ சாக்ஸன் புராட்டஸ்டன்ட் வெள்ளையர்களின் தேசமாகவே விவரிக்கிறார். 
அமெரிக்கா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட தேசம். மாறாக, இயற்கையாக உருவாகும் தேசம் வித்தியாசமானது. வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாதபோதும் தேசிய உணர்வு நிலைபெற முடியும். இதற்கு சிறந்த உதாரணம் இஸ்ரேல். 
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சொந்த நாடு இல்லாதபோதும், பாரதம் உள்பட நூறு நாடுகளில் பரந்திருந்த யூத மக்கள், தங்கள் நாடு என்ற கருத்தாக்கத்துடன் பல தலைமுறைகளாக வாழ்ந்தனர். 1947-இல்தான் யூத மக்கள் தங்கள் நாட்டின் சிறு பகுதியை மீட்டனர். அதுவே தற்போதைய இஸ்ரேல். 
யூத மக்களின் தேசிய உணர்வே அவர்களின் நாடு மீண்டும் கிடைக்கக் காரணமானது. இழந்த நாட்டைத் திரும்பப் பெற தேசிய சிந்தனை காரணமாகிறது. யூத மக்களின் தேசிய கருத்தாக்கம். அமெரிக்காவின் தேசிய கருத்தாக்கத்துக்கு முற்றிலும் முரணானது. உண்மையில் யூத தேசியம் என்பது இன அடிப்படையிலானது. எனினும் அதை உலகம் அங்கீகரித்துள்ளது. 
மக்கள் ஒன்றாக வாழ்வதாலோ, எல்லைகள் வகுக்கப்பட்டதாலோ ஒரு தேசம் உருவாவதில்லை. அது அரசால் ஒன்றாக ஆளப்படுகிறது, அவ்வளவே. அது செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட தேசம் மட்டுமே. முந்தைய சோவியத் யூனியனும் யுகோஸ்லாவியாவும் அத்தகைய நாடுகளாகும். அவை இன்று இல்லை.
எல்லை அடிப்படையில் தேசத்தை நேசிப்பது தேசியமாகாது; அது தேசிய சிந்தனையுமல்ல; தேசபக்தியும் அல்ல. எல்லைகள் அடிப்படையிலான தேசபக்தி என்பது நில உரிமையாளரின் மண்ணாசை போன்றது. மாறாக, ஒரு நாட்டையும் அதன் மூதாதையர்களையும் நேசிப்பதே உண்மையான தேசபக்தியாகும். 
காந்தி, அரவிந்தர் பார்வையில் இந்திய தேசியம்
இந்திய தேசியம் காலம் கடந்தது. பழைமையான வேதங்களிலேயே 'ராஷ்ட்ரம்' குறித்த விளக்கங்கள் உள்ளன. விஷ்ணு புராணம், வாயு புராணம், லிங்க புராணம், பிரம்மாண்ட புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மாபெரும் இந்தியாவை அறிய முடிகிறது. அப்போது 'பாரத வர்ஷம்' என்று அழைக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்தவர்களே பாரதீயர்கள். ஆன்மிகம்தான் பாரத வர்ஷத்தின் ஆன்மா என்பதை புராணங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 
மகாத்மா காந்தியின் அடிப்படை அரசியல் நூல் 'ஹிந்த் ஸ்வராஜ்'. அதில், பழங்கால பாரத வர்ஷமே இந்தியா என்ற ஆன்மிக தேசியத்தின் அடிப்படை என்று காந்தி வரையறுக்கிறார். 
''தெற்கில் ராமேஸ்வரத்தில் சேது பந்தனத்தையும், கிழக்கில் புரி ஜகந்நாத்தையும், வடக்கில் ஹரித்வாரையும் வழிபாட்டுத் தலங்களாக அமைத்த நமது முன்னோர் முட்டாள்களல்ல. அந்த வழிபாடு வீடுகளில் பரவி, நாடு முழுவதிலுமுள்ள புனிதத் தலங்களை மக்களிடையே நினைவுபடுத்தி, தேசிய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இத்தகைய காட்சியை உலகில் வேறெங்கும் காண முடியாது'' என்கிறார் மகாத்மா காந்தி. 
முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பும்கூட இந்தியாவில் மாற்றம் விளைவிக்கவில்லை. அவர்களையும் இந்நாடு தன்வயப்படுத்திக் கொண்டது என்றும் காந்தி கூறுகிறார். 
மகரிஷி அரவிந்தரோ, ''இந்திய தேசியம் என்பது ஹிந்து தேசியம் தான். மதம், வழிபாட்டுப் பிரிவுகள், சமயம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது அது. இந்நாட்டில் பன்னெடுங்காலமாக நிலைத்திருக்கும் சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஹிந்து நாடு அமைந்ததே தேசியம்'' என்பார். 
விவேகானந்தரும் ஆன்மிக தேசியமும்
இந்திய விடுதலைப் போரில் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் செலுத்திய தாக்கம் அளப்பரியது. விடுதலைப் போராட்ட வீரர்களிடமிருந்து தொடர்ச்சியாக விவேகானந்தரின் நூல்களை பிரிட்டிஷ் போலீஸார் பறிமுதல் செய்தவண்ணம் இருந்தனர். இதனால் ராமகிருஷ்ண மடத்தைக் கண்காணிக்கவும் அவர்கள் தலைப்பட்டனர். நாட்டின் மாபெரும் தலைவர்கள் அனைவருமே, விடுதலை இயக்கத்தில் விவேகானந்தரின் பங்களிப்பைப் பதிவு செய்துள்ளனர்.
''சுவாமி விவேகானந்தரைப் படித்ததால் எனது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்தது'' என்று கூறுவார் மகாத்மா காந்தி. 
''இந்தியாவில் நவீன தேசிய இயக்கத்தின் ஆன்மிகத் தந்தை சுவாமி விவேகானந்தரே'' என்பார் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.
ராஜாஜியோ, ''சுவாமி விவேகானந்தர் இல்லாதிருந்தால் நாம் நமது சமயத்தை இழந்திருப்போம்; சுதந்திரத்தையும் பெற்றிருக்க மாட்டோம். நாம் பெற்றுள்ள அனைத்துப் பெருமைகளுக்கும் அவரே காரணம்'' என்று கூறுவார்.
ரவீந்திரநாத் தாகூர், ''இந்தியாவைப் பற்றி நீ அறிய வேண்டுமானால் விவேகானந்தரைப் படித்தாக வேண்டும்'' என்பார். 
மதச்சார்பற்ற இந்தியாவின் தளகர்த்தரான ஜவாஹர்லால் நேருவும், ''இந்திய தேசிய இயக்கத்தின் மாபெரும் நிறுவனர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர். அவரால் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஊக்கம் பெற்றனர்'' என்று கூறியுள்ளார். 
மகரிஷி அரவிந்தரும் மகாகவி பாரதியும்கூட சுவாமி விவேகானந்தரால் ஊக்கம் பெற்றவர்கள்தான். இந்திய தேசம் குறித்தும் தேசியம் குறித்தும் சுவாமி விவேகானந்தர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
''ஒரே ஆன்மிக லயத்துடன் துடிக்கும் இதயங்களின் ஒருங்கிணைப்பே இந்திய தேசம். தற்போதுள்ள இங்கிலீஷ், பிரெஞ்ச், ஹிந்து தேசங்களில் ஹிந்து தேசமே வாழும் தேசமாகும். இதற்கு அதன் ஹிந்து சமயமே காரணம்'' என்று விவேகானந்தர் கூறுகிறார். அதனால்தான் மத மாற்றத்தை அவர் கண்டித்தார். 
''ஹிந்து சமுதாயத்திலிருந்து ஒருவன் பிற மதத்துக்கு மாறிவிட்டான் என்றால், அவன் தாய்நாட்டின் எதிரியாகி, வக்கிரமாகி விடுகிறான்'' என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்தியாவின் ஹிந்துத் தன்மையை மிகவும் தொலைநோக்குடன் வரையறுத்தவராக சுவாமி விவேகானந்தர் உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கலாசாரப் பார்வை
இறுதியாக, நாட்டின் உச்ச நீதிமன்றமும் இதே சிந்தனையை 1995-இல் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அடிப்படையான ஹிந்து கலாசாரத் தன்மையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ''ஹிந்துத்துவம், ஹிந்துயிஸம் ஆகியவற்றை மதரீதியான குறுகிய பொருளில் அணுகக் கூடாது. 'ஹிந்துத்துவம்' என்ற சொல், இந்த துணைக் கண்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதாகும்'' என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. 
இதே தீர்ப்பை, அயோத்தி கோயில் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நினைவுபடுத்தியது. அப்போது ''ஹிந்து சமயம் சகிப்புத் தன்மை கொண்டது. இஸ்லாம், கிறிஸ்தவம், ஜொராஸ்டிரியம், யூதம், பெளத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்கள் இந்நிலத்தில் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஹிந்து சமயத்தின் பரந்த மனப்பான்மையே காரணம்'' என்று நீதிபதிகள் பரூச்சா, அகமதி ஆகியோர் கூறினர். அதாவது ஹிந்து சமயம் என்றாலே மதச்சார்பற்றதுதான். 
இந்தியாவின் ஹிந்து கலாசாரத் தன்மை குறித்த இந்த 1995-ஆம் வருடத்திய தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு 2017-இல் முறையிடப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 
மதச்சார்பின்மையால் குழப்பம்
இந்திய தேசியத்தை வடிவமைத்ததில் ஹிந்து கலாசாரம், ஹிந்து வாழ்க்கை முறையின் பங்களிப்பை விவேகானந்தர், அரவிந்தர், மகாத்மா காந்தி முதற்கொண்டு உச்ச நீதிமன்றம் வரை பலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் மதச்சார்பின்மைப் பிரசாரம் காரணமாக நாட்டின் உண்மையான தன்மை மதிப்பிழந்துள்ளது. 
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது எதுவெல்லாம் இந்திய தேசம் என்ற சிந்தனைக்கு உரமூட்டியதோ, எதுவெல்லாம் விடுதலை வீரர்களுக்கு உணர்வூட்டியதோ, அவையெல்லாம் சமகால வரலாற்றில் வகுப்புவாதமாகவும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவும் சித்திரிக்கப்படுகின்றன. 
விடுதலைப் போராட்டத்தின்போது மக்களுக்கு உணர்வூட்டிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடல், மகாத்மா காந்தியால் முன்மொழியப்பட்ட ராமராஜ்யம், சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் வலியுறுத்திய ஹிந்து தேசியம் உள்ளிட்ட அனைத்துமே இன்று வகுப்புவாதமாக விளக்கப்படுகின்றன. 
இதனால்தான் தேசியம், தேசபக்தி ஆகிய கருத்தாக்கங்களில் இப்போது குழப்பம் நேரிட்டுள்ளது. 
மதச்சார்பின்மை தொடர்பான விவாதங்கள் இத்தகைய குழப்ப நிலையைத் தவிர்க்காத வரை, இந்தியாவை உருவாக்கிய ஹிந்து கலாசாரம் குறித்து மகத்தான தலைவர்களும் உச்ச நீதிமன்றமும் கூறியதை ஏற்காத வரை, தேசபக்தி தொடர்பான குழப்பம் தொடரவே செய்யும்.


கட்டுரையாளர்:
'துக்ளக்' வார இதழின் ஆசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com