மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. இந்த சிறிய எல்லைக்குள் மகத்தான பணிகளை நிறைவேற்றி மறைபவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர். அத்தகைய மாவீரர்தான் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ்சந்திர போஸ்.
கட்டாக்கில் 1897 ஜன. 23-இல் பிறந்த போஸ், தைவானில் 1945, ஆக. 18-இல் நடந்த விமான விபத்தில் மாயமானது வரை, தனது வாழ்க்கை நிகழ்வுகளால் சரித்திரத்தில் பல அரிய பதிவுகளை விட்டுச் சென்றுள்ளார்.
அவர் விமான விபத்தில் மறையவில்லை என்று ஒரு கருத்தும் உண்டு. மக்கள் அறிய அவர் வாழ்ந்த காலத்தைக் கருதியே, அரை நூற்றாண்டுக்குள் அரிய சாகஸம் நிகழ்த்திய சாதனையாளராக அவரை இளைய சமுதாயம் கொண்டாடி மகிழ்கிறது.
1913-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துவந்த சுபாஷ், அங்கிருந்த ஆங்கிலேயப் பேராசிரியர் ஒருவரது இந்திய விரோதப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. பிறகு ஸ்காட்டிஷ் கல்லூரியில் படித்து பி.ஏ. தேறிய அவர், தந்தையின் விருப்பத்தை ஏற்று பிரிட்டன் சென்று ஐ.சி.எஸ். படித்தார். அப்படிப்பில் நான்காவது நிலையில் 1919-இல் சுபாஷ் தேறினார்.
ஐ.சி.எஸ். என்பது இன்றைய ஐ.ஏ.எஸ். படிப்புக்கு இணையானது. அவர் நினைத்திருந்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசில் உயர் பதவி பெற்று சுகமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்திய விடுதலைப் போராட்டம் அவரை ஈர்த்தது. தனது ஐ.சி.எஸ். பட்டத்தை உதறிவிட்டு விடுதலைப் போரில் குதித்தார்.
மிக விரைவிலேயே வங்கத்தில் முக்கியமான இளம் தலைவராக சுபாஷ் உருவெடுத்தார். சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் அவர் போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது புயல் வேகப் பிரசாரம் கண்டு மிரண்ட அரசு அவரைக் கைது செய்து, பர்மாவின் (இன்றைய மியான்மர்) மாண்டலே சிறைக்கு அனுப்பியது. சிறைக்குள் அவரது உடல்நலம் சீர் கெடவே, அவரை 1927-இல் விடுவித்தது. அடுத்து 1930-இல் நடந்த தேர்தலில் வென்று கொல்கத்தா மாநகராட்சி மேயரானார் சுபாஷ்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மிதவாத- தீவிரவாத குழுக்களிடையிலான போராட்டத்தில் மிதவாதியான மகாத்மா காந்தியை சுபாஷ் எதிர்த்ததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.
அப்போது காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியை நிறுவி, கட்சிக்குள் ஜனநாயகத்துக்காக அவர் போராடினார். மிக விரைவில் தேசிய அரசியலில் அவர் தவிர்க்க இயலாத தலைவரானார். 'நேதாஜி' என்று மக்கள் அவரை அழைத்தனர்.
1935-இல் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரியா சென்ற நேதாஜி, அங்கிருந்து போலந்து, ஹங்கேரி, இத்தாலி, செக்கோஸ்லோவாகியா நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்.
நாடு திரும்பிய பின், 1939-இல் காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட நேதாஜி, காந்திஜி ஆதரவுடன் களமிறங்கிய பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தார். ஆனால், காந்திஜியின் ஆதரவாளர்களால் புறக்கணிக்கப்பட்டதாலும், காந்திஜியின் எதிர்ப்பாலும் தனது பதவியை ராஜிநாமா செய்த நேதாஜி, காங்கிரஸிலிருந்தும் விலகினார். அடுத்து, தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவினார். அதன் தமிழகத் தலைவரானார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
1939-இல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அப்போது உலக நாடுகள் இரு பிரிவாக சண்டையிட்டன. அதைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிட்டன் இருந்த நேச நாடுகள் அணிக்கு எதிராக இந்தியா போராட வேண்டும் என்று நேதாஜி குரல் கொடுத்தார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரிட்டனுக்கு எதிரான நாடுகளின் துணையுடன் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரைத் துரத்திவிட முடியும் என்பதே நேதாஜியின் கனவு.
நேதாஜியின் பிரிட்டிஷ் எதிர்ப்பு பிரசாரத்தைக் கண்டு வெகுண்ட அன்றைய காலனிய அரசு, 1941-இல் அவரை வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால் காவலர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, மாறுவேடத்தில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நேதாஜி, ஆப்கானிஸ்தான், ரஷியா, இத்தாலி வழியாக ஜெர்மனி சென்றார். பெர்லினில் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரை அவர் சந்தித்தார்.
ஜெர்மனி அரசின் உதவியுடன் அங்கு இந்திய விடுதலை மையத்தையும், ஆஸாத் ஹிந்த் வானொலியையும் அவர் அமைத்தார்.
உலகப்போரில் ஈடுபாடு காட்டிய ஜெர்மனி இந்தியாவுக்கு சாதகமாகச் செயல்படாது என்று உணர்ந்தவுடன் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பலில் தப்பி ஜப்பான் சென்றார் நேதாஜி.
ஜப்பான் அரசின் ஆதரவுடன், அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூருக்கு 1942-இல் வந்த நேதாஜி, அங்கு ஏற்கெனவே செயல்பட்டுவந்த இந்திய தேசிய ராணுவத்தை மறுசீரமைத்தார். பிறகு ஜப்பான் ராணுவ உதவியுடன் இந்தியா மீது போர் தொடுத்தார். 'தில்லி சலோ' என்ற அவரது போர் முழக்கம் ஆங்கிலேயரை அதிர வைத்தது.
இந்திய தேசிய ராணுவம் பர்மாவிலும் இந்தியாவின் மணிப்பூரிலும் வெற்றிகளை ஈட்டிய தருணம், அமெரிக்காவின் தாக்குதலில் சிக்கி ஜப்பான் நிலைகுலைந்தது. அதனால் நோதாஜியின் படைக்கு ஜப்பானின் உதவிகள் தடைபட்டன. அதன் விளைவாக அவரது படைகள் தோல்வியைத் தழுவின. வேறு வழியின்றி விமானத்தில் தப்ப முயன்ற நேதாஜி 1945-இல் மர்மமாக மறைந்தார்.
இவ்வாறு தனது வாழ்நாளெல்லாம் உலக அரசியல் பார்வையுடன், அதே சமயம் இந்திய விடுதலைச் சிந்தனையுடன் போராடிய வீரர் நேதாஜி. அவர் தனது போராட்டத்தில் தோற்றிருக்கலாம். ஆனால், இந்தியா விரைவில் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை அவரால் விதைக்கப்பட்டது.
நேதாஜியின் வாழ்வே ஒரு போர்க்களம்; அதில் சாகஸங்கள் ஏராளம். அவரது வாழ்வில் சுயநலனுக்கு இடமே இருந்ததில்லை; தேசநலனே அவரது உயிர்மூச்சாக இருந்தது. இந்திய இளைஞர்களுக்கு அவர் என்றும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கம். 'ரத்தம் தாருங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்' என்ற அவரது முழக்கம் என்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.
ஜனவரி 23 -
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறந்த தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

