ஊழலற்ற இந்தியா எனும் கனவு

"நோயாளியை குணப்படுத்த வேண்டுமானால், முதலில் மருத்துவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' - இது ஏதோ நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றலாம்.

"நோயாளியை குணப்படுத்த வேண்டுமானால், முதலில் மருத்துவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' - இது ஏதோ நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே ஷேக்ஸ்பியர் இந்த சமூகத்துக்கு அளித்துச் சென்ற சிறந்த தத்துவம் இது.
 "மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவதற்கு முன்பு நாம் சரியானவர்களாக இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்' என்பதுதான் அந்த உவமை கூறும் உண்மை. மானுட வாழ்வின் பல்வேறு தருணங்களில் அந்தக் கூற்றை நம்மால் பொருத்தி பார்க்க முடியும். கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதிராட்டங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு ஷேக்ஸ்பியர் குறிப்பட்ட அந்தத் தத்துவம்தான் நினைவுக்கு வந்தது.
 அந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சொகுசு விடுதிக்குள் சொந்த கட்சியாலேயே சிறை வைக்கப்பட்டனர். மந்தையில் அடைப்பதுபோல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாத்து வைப்பது ஒன்றும் இந்திய தேசம் இதுவரை சந்தித்திராத விநோத நிகழ்வல்ல.
 ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதபோது, அரசியல் களம் பேரம் பேசும் இடமாக மாறிப்போவதும் புதிதல்ல. பல முறை இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய சம்பவங்கள் ஒவ்வொரு முறை அரங்கேறும்போதும் அவற்றைப் பார்த்து ஒட்டு மொத்த சமூகமும் சிரிக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அதே மக்கள் விமர்சிப்பார்கள். ஆனால், சில நாள்கள் கழிந்த பிறகு அந்த நிகழ்வுகள் அனைத்துமே மக்களின் மனதில் இருந்து மறைந்து விடுகின்றன. இப்படிப்பட்ட அரசியல் நாடகங்களால் ஜனநாயகத்தின் மாண்பு முழுமையாக சிதைத்து அழிக்கப்படுகிறது என்ற உண்மையும் அவர்களுக்கு மறந்துவிடுகிறது.
 ஒருவேளை, எம்.எல்.ஏ.க்களை விடுதிகளில் அடைக்காமல் வீட்டிலேயே இருக்கச் சொன்னால் என்னதான் ஆகிவிடப் போகிறது எனக் கேட்கலாம். நிச்சயமாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், பெரும்பாலானோர் மாற்றுக் கட்சிக்கு விலை போய்விடுவார்கள், அவ்வளவுதான். ஆசை வார்த்தைகளுக்கும், அமைச்சர் பதவிக்கும் நாட்டம் கொண்டு தன்னை வெற்றி பெற வைத்த கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்குத் தயக்கமின்றித் தாவி விடுவார்கள்.
 இதைப் பார்க்கும் நமக்கு, தனக்கு வாய்ப்பு கொடுத்த சொந்த கட்சிக்கே அவர்கள் துரோகம் இழைத்ததாகத் தோன்றும். ஆனால், நிஜம் என்ன தெரியுமா? அவர்களை நம்பி வாக்களித்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத்தான் அந்த எம்.எல்.ஏ.க்கள் மிகப்பெரிய துரோகத்தைப் பரிசாகத் தருகிறார்கள். வாக்குப்பதிவின்போது விரலில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்னதாகவே, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அழிந்துவிடுகிறது.
 இத்தகைய நிலையைத் தடுக்கத்தான் விடுதிகளுக்குள் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கிறார்களோ, என்னவோ? இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் சொல்லத் தோன்றுகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளியே எங்கும் செல்லாமல் வேண்டுமானால் தடுத்துவிட முடியும். அதே வேளையில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மனதில் தோன்றும் ஆசைகளையும், அமைச்சர் பதவிக் கனவுகளையும் அணை போட்டுத் தடுக்க முடியுமா?
 சரி, அதற்கும் கட்டுப்பாடுகளையும், கடிவாளங்களையும் அமைத்து எம்.எல்.ஏ.க்களை கடுங்காவலில் வைக்கட்டும். இதேபோன்ற மற்றொரு தருணம் உருவாகும்போது அவர்கள் விலை போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
 இது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து மற்றொரு கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. மாறிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே பேசியபடி அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவியை புதிய கட்சி வழங்கி விடும். அவரும், "மக்கள் நலன் காப்பேன்' என உறுதியேற்று பதவிப் பிரமாணமும் செய்து கொள்வார்.
 சற்று சிந்தித்துப் பாருங்கள்... பணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்? அவரா சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சமரசமின்றி உழைக்கப் போகிறார்? நாணயத்துடனும், நன்னடத்தையுடனும் பணியாற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு அந்த அமைச்சரா அறிவுறுத்தப் போகிறார்? ஜனநாயக மாண்புகளையும், ஜாதி - மத பேதமற்ற கொள்கைகளையும் அவரா உயர்த்திப் பிடிக்கப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த அமைச்சரா புரையோடிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கும் புருஷோத்தமராக உருவெடுக்கப் போகிறார்?
 இதற்கான பதில் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இருந்தும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை நாம் சகித்துக் கொள்கிறோம். அரசு உயரதிகாரிகளும் சரி, வாக்காளர்களும் சரி மக்கள் பிரதிநிதிகளின் இந்த முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டால், "ஊழலை ஒழிக்க வேண்டும்', "லஞ்சம் வாங்குபவர்களைத் தண்டிக்க வேண்டும்', "நாணயமான நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்ற கனவுகளை எல்லாம் கைவிட்டுவிட வேண்டியதுதான்.
 பொது வாழ்வில் நேர்மை மிகமிக அவசியம். அரசுத் துறைகளில் பணியாற்றும் கீழ் நிலை ஊழியர்களில் இருந்து மேல்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் வரை அனைவருக்கும் அது முக்கியம். அதில் மட்டும் சமரசமே இருக்கக் கூடாது. இல்லாவிடில் லஞ்ச லாவண்யம் எங்கும் பரவி விடுவது மட்டுமன்றி, சமூகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் அது மாறிவிடும். மக்கள் பிரதிநிதிகள் பேசும் வார்த்தைக்கும் செயலுக்கும் மலையளவு இடைவெளி இருக்கக் கூடிய நிலைதான் தற்போது உள்ளது. இதே நிலை நீடித்தால், "நாணயம், நேர்மை என்றெல்லாம் ஒரு சில விஷயங்கள் முன்னொரு காலத்தில் இருந்ததாமே' என்று எதிர்காலத் தலைமுறையினர் வியப்புடன் பேசிக்கொண்டிப்பார்கள்.
 அதற்கான முன்னோட்டத்தைத்தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூகத்தின் அடிமட்டத்தில் கூட ஊழல் புரையோடிப் போயிருப்பதும், அதை எவரும் ஒரு பொருட்டாகக் கூடக் கருதாததுமே அதற்கு சான்று.
 மற்றொரு புறம், ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, மின் - ஆளுகை (இ-கவர்னன்ஸ்) நடைமுறைகளும், தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், அந்த முயற்சிகளால் எந்தப் பலனும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்திருந்தால், அரசுத் துறைகளில் முன்பு மலிந்திருந்த முறைகேடுகளில் இம்மியளவாவது தற்போது குறைந்திருக்க வேண்டுமே. மாறாக அதிகரித்துக் கொண்டு அல்லவா செல்கிறது?
 அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகம் நிறைந்துள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 80-ஆவது இடத்தைத்தான் இந்தியாவால் பிடிக்க முடிந்தது. சரி, அதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆதங்கப்படுவதற்கோ என்ன இருக்கிறது? தரவரிசையில் எப்போதும் இறுதி நிலையைப் பெறும் தகுதிதான் நமக்கு வாய்த்திருக்கிறது என்பது தெரிந்ததுதானே.
 ஊழலும் லஞ்சமும் நாட்டை எவ்வாறு சீரழிக்கும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்காது. இதுதான் சமூகத்தின் மிகப்பெரிய நகைமுரண்.
 மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது ஒரு விஷயத்தில் மட்டும் தீர்மானமாக இருந்தார். விடுதலை வேள்வியை எந்த நிலையிலும் நெறி தவறாமல் நடத்த வேண்டும் என்பதுதான் அது. சில நேரங்களில் அவரது நோக்கத்தை சிதைக்கும் சம்பவங்கள் சில அரங்கேறின. அப்போதெல்லாம் உடனடியாக அதற்கு தீர்வைக் கண்டறிந்து சத்தியம் தவறாத போராட்டத்தை மீண்டும் மீட்டெடுத்திருக்கிறார் காந்தி.
 அதில் எந்த சமரசத்துக்கும் அவர் இடம் கொடுக்காமல் இருந்தார். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நேர்மையை மட்டும் ஒருபோதும் மகாத்மா விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது? மகாத்மா வகுத்த பாதையில் இருந்து முற்றிலும் வேறாக அல்லவா சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது.
 இந்த நிலை மாற வேண்டும். நேர்மையான தேசமாக இந்தியா உருவாக வேண்டும். இளைய தலைமுறையினரின் மனத்தில் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகள் நிறைந்திருக்கின்றன. அவை மங்கி மறைவதற்குள் அவர்களிடையே புதிய நம்பிக்கையை மலரச் செய்ய வேண்டும். ஊழலற்ற தேசங்களின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடத்திற்குள்ளாவது வர வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களும் பெருமிதத்துடன் இந்த தேசத்தில் வாழக்கூடிய நிலை உருவாகும். அந்த நிலை உருவானால், எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதிகளுக்குள் சிறைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்களும் பணம், பதவிக்கு மயங்காத தலைவர்களாக உருவெடுப்பார்கள். அத்தகைய தலைவர்களால்தான் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும். அந்த நாள் வரும் வரை "நோயாளியை குணப்படுத்த வேண்டுமானால், முதலில் மருத்துவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தையைத்தான் திரும்பத் திரும்ப நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் தலைமைச் செயலர்,
 கேரள மாநிலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com