மாணவர் விரும்பும் தேர்வுகள்

கல்வியின் மூன்று முக்கிய அங்கங்கள் கற்போர், கற்பிப்போர், கற்பவை. இவற்றுள் கற்பவை கல்வியின் மையப் பகுதி.

கல்வியின் மூன்று முக்கிய அங்கங்கள் கற்போர், கற்பிப்போர், கற்பவை. இவற்றுள் கற்பவை கல்வியின் மையப் பகுதி. திருவள்ளுவரும் கற்பவையையும், கற்பதையும் முதன்மைப் படுத்தி, "கற்க கசடற கற்பவை' என்று கூறுகிறார். கற்பவை, பாடத்திட்டங்களும், பாடப்புத்தகங்களும் ஆகும். பாடத்திட்டங்கள் பாடப்புத்தகங்கள் வழியாக மாணவர்களைச் சென்றடைகின்றன. இப்படிச் சேர்வதற்கு உதவுபவர்கள் ஆசிரியர்கள்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் கல்வித்தரத்திற்கேற்ப உயர்த்தி, தமிழக மாணவர்களை தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்துடன் பள்ளி பாடத்திட்டங்கள் சிறந்த வல்லுநர் குழுவால் மாற்றியமைக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான புத்தகங்களும் அண்மையில் வெளிவந்துள்ளன. இவற்றில் இன்றைய வாழ்வுக்கேற்ற புதிய அறிவுக்கூறுகளும், புதிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. பாடத்திட்டத்தில் தரம் பெரிதும், அளவு ஓரளவும் கூட்டப்பட்டுள்ளன.
ஆனால், சி.பி.எஸ்.இ.யில் பாடங்கள் பாதியாகக் குறைக்கப்படவிருப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறுகிறார். இதன் நோக்கம் மாணவர்களின் புத்தகக் கல்விச்சுமையைக் குறைத்து, உடற்கல்வி, விழுமியங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து கல்வியை ஒரு முழுமையான வளர்ச்சிக்கான வழியாக மாற்றுவதே. கல்வி சுவையாக இருக்க வேண்டும்; சுமையாக இருக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கல்வி, வெறும் செய்திகளைத் திணிப்பதாக இல்லாமல், மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி வளர்ப்பதாக இருக்க வேண்டும். மனித மனம் நிரப்பப்பட வேண்டிய பாத்திரம் அல்ல; தூண்டப்பட வேண்டிய ஒளிவிளக்கு.
பாடத்திட்டங்களின் அளவை விட அவற்றின் தன்மைதான் முக்கியம். அவை மாணவர்களின் உள்ளாற்றலை வெளிக்கொணர்ந்து, அவர்களை வாழ்வின் எல்லா சவால்களையும் (போட்டித் தேர்வுகளை மட்டுமல்ல) எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்க வேண்டும். 
முதல் இரண்டு வகுப்புகள் பயிலும் இளம் குழந்தைகளுக்கு வீட்டுப்பாட பளுவைக் குறைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த வயதில் குழந்தைகள் வீடுகளில், பெற்றோர் பிணைப்பில் ஆனந்தமாக வளர்வதைத் தடுக்கக் கூடாது. பொதுவாகவே வீட்டுப்பாடத்தை, மாணவர்கள் விரும்பி செய்வதாக அமைய வேண்டும். 
மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மாணவர்களுக்கு செயற் புத்தகங்களை (வொர்க் புக்) தருவது, மாணவர்களிடம், தாமே கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும். இதை கம்ப்யூட்டர் கல்வியோடு இணைத்து, ஒலிக்காட்சிகளோடு தொடர்பு படுத்துவதும், குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், இது இயந்திரக் கல்வியாக மாறிவிடக்கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களோடும், சக மாணவர்களோடும் இணைந்து பெறும் கல்வியே சிறந்தது. 
மத்திய கல்வி வாரியம், விழுமியங்களைக் கற்பிக்க வகை செய்வதாகக் கூறியுள்ளது. இது நல்ல முயற்சியே. தமிழில் ஆத்திச்சூடி, பாரதியார், பாரதிதாசன் முதல் திருக்குறள் வரை மாணவர்கள் வயதுக்கேற்ப இலக்கியங்களோடு இலக்குகளையும் கற்பிக்க வேண்டும். இவை கதைகள், நாடகங்கள் வழியாகக் கற்பிக்கப்பட்டால் அவை மாணவர்கள் நடிக்கவும் உதவும். மாணவர்கள் மாற்றுக் கருத்து கூறினால் அவை விவாதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் கதைகளை மாற்றியும் படைக்கலாம்.
பாடத்திட்டங்களின் மாற்றத்துக்கு ஏற்ப தேர்வுமுறையும் மாற்றப்பட வேண்டும். தேர்வுகள்தான் கல்வியின் அனைத்து அம்சங்களுக்கும் தலையானது என்ற நிலை மாற வேண்டும். தேர்வும் கற்றலின் ஒரு பகுதியே. தேர்வு வினாக்களும் மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவ வேண்டும். தேர்வுகளின் தன்மை மாணவர்களின் வளர்ச்சியைக் காட்டும் வகையில் அமையும்போது தேர்வுகள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளப்படும்.
பிற போட்டித் தேர்வுகளுக்கு பள்ளித் தேர்வுகள் முன்னோடியாக அமைய வேண்டும். தேர்வுகளில் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற எத்தனையோ வழிகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணரச் செய்ய வேண்டும். தேர்வுகள் மாணவர்களின் நினைவாற்றலைச் சோதிக்காமல், அறிவாற்றலை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.
கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறையிலும் ஆசிரியரின் அணுகுமுறைதான் கற்றலை எளிதாகவும், இனிதாகவும் மாற்ற முடியும். திட்டங்களும், பாடப்புத்தகங்களும் வெறும் ஆவணங்களே. அவற்றுக்கு உயிரூட்டுபவர்கள் ஆசிரியர்களே. அவர்களது துறையறிவு அவ்வப்போது வளர்க்கப்படுவதோடு, கற்பிக்கும் புதிய முறைகளிலும் அவர்களுக்குப் பயிற்சி தரப்பட வேண்டும். 
இறுதியாக, எல்லா பள்ளிகளின் உள்கட்டமைப்புகளும், ஆய்வறைகளும், நூலகங்களும், உபகரணங்களும் சமமானதாக்கப்பட வேண்டும். பள்ளிச்சூழல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். சமூகத்தின் எல்லாத் தரப்பு மாணவர்களும் இணைந்து ஒன்றாகவும், நன்றாகவும் கற்கும் புத்துலகப் பூங்காவாக அமைய வேண்டும்.
ஒரே வகையான பாடத்திட்டங்களை விட, சமமான கல்விச்சூழல் அமைவது முக்கியம். அப்போதுதான், "எங்கே அறிவு சுதந்திரமாகவும் மனம் அச்சமற்றும் உள்ளதோ, எங்கே அறிவாற்றல் என்ற தெளிந்த நீரோடை மக்கிப் போன வழக்கங்கள் என்னும் பாலை மணலுக்குள் வழிதவறிச் செல்லவில்லையோ, எங்கே மனம் தொடர்ந்து விரிவடையும் சிந்தனைக்கும் செயலுக்கும் இட்டுச் செல்கிறதோ, அந்தச் சுதந்திர சொர்க்கத்தில்,எந்தையே, என் நாடு விழித்தெழட்டும்' என்ற தாகூரின் கனவு நனவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com