நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. வாழ்க்கையில் பிளஸ் 2 தேர்வெழுதும் ஒவ்வொருவருக்கும் இத்தேர்வு மிக முக்கியமானதுதான். இத்தேர்வில் பெரும் மதிப்பெண்ணை வைத்துத்தான் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு அமையப்போகிறது. அதனால் பெற்றோர், பள்ளிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் பெற முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவியரின் மன அழுத்தத்துக்குக் கொடுக்கும் விலைதான் என்ன?
பிளஸ் 2 என்பது வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள், ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பைப் படிக்க வேண்டும். அதன்பின் மேல்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும். அங்கு படித்து முடித்த பின் கைநிறைய ஊதியம், அதன்பின் திருமணம், பிறகு சில ஆண்டுகளில் ஓரிரு குழந்தைகள் - இப்படித்தான் வாழ்க்கை செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை' என்ற பாடலின் பொருளை எத்தனை பேர் உணர்கின்றனர்? "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்ற வரிகளைக் கேட்டு ரசித்தாலும்கூட அதனை யாரும் கடைப்பிடிப்பதில்லை.
கிடைப்பதை நினைத்துத் திருப்தியடைந்தால் எதற்கும் கவலையில்லாமல் எங்கும் பயணிக்க முடியும். பெற்றோர், தங்களுடைய மகன் அல்லது மகள் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டால் அது நிறைவேறாமல் போகும்போது ஏற்படக்கூடிய ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
மதுரையில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவியிடம் அவருடைய தந்தை, "கேள்வித்தாள் எப்படியிருந்தது' எனக் கேட்க, "கடினமாக இருந்தது' என்று மகள் பதிலளித்திருக்கிறார். இதைத் தாங்க முடியாத தந்தை மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவர் மரணத்துக்கான அடிப்படைக் காரணம் என்ன? மிகுந்த எதிர்பார்ப்புத்தானே. மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கையா? அப்படிப்பு படிக்க இயலாவிட்டால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாதா?
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தான் ஒரு சிறந்த போர் விமானியாக வேண்டுமென்றுதான் விரும்பினார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. தனது முயற்சியால் வாழ்வில் வெற்றி பெற்று, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைவராகி சாதனை படைத்தார். அவர் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் அவனுடைய இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுப் பிரிவில் முதுநிலை மேலாளராக உள்ள நண்பர் ஒருவர் விரும்பியது ஒன்று. அவர் படித்தது வேறொன்று. ஆனால் படித்து முடித்து பணியில் சேர்ந்த பிறகு, தனக்குப் பிடித்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பலமுறை மாணவர்களிடம் கூறியிருக்கிறார்.
இந்த உலகில் விரும்பியவாறு வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அவர்களின் சதவீதம் மிக
மிகக் குறைவு என்பது நம் அனைவருக்கும்தெரியும்.
இப்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானி என்று சிறு குழந்தை கூடச் சொல்லும். இன்று அவருக்கு உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. ஆனால் அவருடைய தந்தை திருபாய் அம்பானி வெளிநாடுகளில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து பணம் சம்பாதித்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவருடைய பிறப்பு சாதாரணமானதுதான். ஆனால் அவருடைய இறப்புக்கு பிரதமர் முதல் அனைவரும் வந்திருந்தனர்.
இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் எந்தக் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றார்? இன்று அவர் புகழ் பெறவில்லையா? கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் புகழ் பெறவில்லையா?
கிரிக்கெட் மட்டுமில்லாமல் ஒவ்வொரு விளையாட்டிலும் புகழ் பெற்றவர்கள் பலரையும் உதாரணமாகக் காட்ட முடியும். பசி, பஞ்சத்தால் அடிபட்டுக் கிடக்கும் எதியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் மாரத்தான் ஓட்டம் எனப்படும் நீண்ட தொலைவு ஓட்டப்பந்தயத்தில் உள்ள அளவில் சாம்பியன்களாகி சாதனை படைத்து வருகின்றனர்.
மேலே குறிப்பிட்ட சாதனையாளர்கள் அனைவருமே வாழ்க்கையை ரசித்து தாங்கள் விரும்பியபடி அமைத்துக் கொண்டவர்கள். யாருக்குமே அவர்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு இப்போதைய வாழ்க்கையில் சாதித்துக் காட்டியவர்கள்தான்.
இந்த உலகில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டுப் பார்த்த அனைவரின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் பார்த்தால் யாருக்குமே விரும்பிய வாழ்க்கை கிடைத்திருக்காது. அதேபோல தொழிலதிபர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பல்வேறு தோல்விகளின் நினைவுகள் எப்போதும் நிழலாடிக் கொண்டே இருக்கும்.
இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதனால் பிளஸ் 2 என்பது மேற்படிப்புக்கான ஒரு படிக்கல் என்று மட்டுமே பார்க்க வேண்டும். அத்தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே பிரதானமாக எண்ணாமல் நான் இந்த உலகில் சாதிக்கப் பிறந்தவன் என்று நினைத்து கிடைத்த மதிப்பெண்ணில் ஆறுதலடைந்து கொள்வது மிகவும் நல்லது. இதனைப் புரிந்துகொண்டால் தேர்வு முடிவின் வெற்றி தோல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல என்கிற உண்மை அனைவருக்கும் புரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.