நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அக். 31-ஆம் தேதி முதல் தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது (முன்னர் இது ரூ. 40 ஆயிரமாக இருந்தது) இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களை விட்டு அந்நியப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஏடிஎம்-கள் அறிமுகமானபோது வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்-இல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. அதன்பின் பிற வங்கிகளின் ஏடிஎம்-மிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதோ கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்-களில் அதிகபட்சம் ஐந்து முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் மூன்று முறையும் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் ரூ.24 வரை வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் மற்றொரு பரிதாபம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்-மில் பணம் வரவில்லையென்றாலும் பணம் எடுத்ததாகக் கணக்கில் வந்துவிடும். அதனை வங்கிக் கிளையில் தெரிவித்து அந்தப் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பது அவ்வளவு எளிதல்ல. பணமில்லாத ஏடிஎம்-களை வைத்திருக்கும் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஏனோ அபராதம் விதிப்பதில்லை.
பணம் செலுத்த வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களை வர வேண்டாம் என்று வங்கிகள் சொல்கின்றன. டெபாசிட் இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தச் சொல்கின்றனர். ஆனால், இயந்திரம் மூலம் பணம் செலுத்தினால் அதற்கும் சில வங்கிகள் கட்டணம் எடுத்துக் கொள்கின்றன.
நண்பரொருவர் தனியார் வங்கியொன்றில் கல்விக் கடன் பெற்றிருந்தார். இதற்காக மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் வட்டி கட்டச் சொன்னார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஒரு முறைகூடக் காலதாமதமில்லாமல் வட்டி கட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான கல்விக் கடன் ஜூலையில் பெற்றவுடன் ஆகஸ்ட் மாதத்துக்கான வட்டி அவரின் வங்கிக் கணக்கிலிருந்து இசிஎஸ் மூலம் பெறப்பட்டது.
ஆனால் அதற்கடுத்த சில நாள்களில் கூடுதலாகத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறி வசூலிக்கும் முகவர் செல்லிடப் பேசியில் அழைத்தார். எதற்காக என்று நண்பர் கேட்டபோது கல்விக் கடன் உங்களுக்கு அனுப்பப்பட்ட தேதியில் இருந்து கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும் என்றார். இத்தனைக்கும் 10 நாள்களுக்கு முன்னதாக மட்டுமே அந்தப் பணம் வந்தது. இதற்கும் முழு மாத வட்டி என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு அபராதம் வேறு.
நண்பர் என்னுடைய தவறில்லை. நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திப்படிதான் கட்டியுள்ளேன். அதனால் அபராதம் கட்ட முடியாது என்றவுடன், அப்படியானால் உங்கள் பெயர் சிபில் ரிப்போர்ட்டுக்குச் செல்லும் என்று சம்பந்தப்பட்ட வசூல் முகவர் தெரிவித்தார். என்ன செய்வது என்று நொந்துபோய் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டார்.
இதற்கு அடுத்த மாதம் அவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறித்த தேதியில் இசிஎஸ் மூலம் செல்லவில்லை. அவரும் சம்பந்தப்பட்ட முகவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது உங்கள் கணக்கில் பணம் இருந்திருக்காது என்றார். கணக்கில் பணம் இருக்கிறது. இதுவரை இசிஎஸ் வரவில்லை என்று கூறியபோதும் அவர் பிரச்னையில்லை. பணம் அப்படியே இருக்கட்டும் என்றார். 15 நாள்களுக்குப் பின் இசிஎஸ் படிவத்தை வங்கிப் பணியாளர்கள் நிரப்பும்போது தவறு ஏற்பட்டதால் இசிஎஸ் மூலம் பணம் செல்லவில்லை என்பது உறுதியானது.
இதனால் வசூல் முகவரிடம் சொல்லி அவரும் நண்பரை அலைக்கழித்துவிட்டு மீண்டும் பல படிவங்களில் கையெழுத்துப் பெற்றார். ஒரு மாதத்துக்குப் பின்தான் இசிஎஸ் வரும் என்று சொல்லிவிட்டு கட்ட வேண்டிய தொகையை ஆன்லைனில் செலுத்துங்கள் என்றார். பணம் செலுத்திய இரண்டாவது நாளில் இசிஎஸ் நாளை வரும். அதனால் வங்கிக் கணக்கில் பணம் வையுங்கள் என்று தகவல் வந்தது.
வசூல் முகவரிடம் கேட்டபோது, இசிஎஸ்-ஐ ரிட்டர்ன் செய்யுங்கள் என்றார். ரிட்டர்ன் செய்தால் உங்கள் வங்கியும் நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் பணம் பிடிப்பார்களே என்று நண்பர் கேட்டபோது அதற்கென்ன செய்வது என்ற பதில்தான் கிடைத்தது. கட்ட வேண்டிய தொகை ரூ.2000-த்துக்கு தண்டனையாக மட்டும் ரூ.1000 செலுத்த வேண்டியிருக்கும்.
அந்த இசிஎஸ்-க்கும் பணம் செலுத்தியாகிவிட்டது. இப்போது நண்பரின் கணக்கில் ஒரு மாதத்துக்கான வட்டித்தொகை அதிகமாக உள்ளது. ஆனால் அந்தத் தொகையைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டபோது ஏழு நாள்கள் ஆகும் என்றனர். நீங்கள் காலதாமதத்துக்கு அபராதம் விதிப்பது போல எனக்குத் தருவீர்களா என்று நண்பர் கேட்டதற்கு யாருடைய தேவைக்காகக் கடன் பெற்றீர்கள் என்பது பதிலானது.
பாரத ஸ்டேட் வங்கித் தலைவராக இருந்த ஒருவர் நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்துவிட்டு இங்கு ஓய்வு பெற்றவுடன் அத்தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தது என்ன நியாயம்?
பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்பில்லாதவர்களுக்கு அபராதம் விதித்த தொகை வங்கியின் காலாண்டு லாபத்தை விட அதிகம். இந்த வங்கிகள்தான் குறிப்பிட்ட சில தனியார்களுக்கு அதிகக் கடன் தொகையை அளித்துவிட்டு வசூலிக்க முடியாமல் திணறிவருகின்றன.
பணம்தான் பிரதானம் என்ற நோக்கில்லாமல் வங்கிகள் செயல்பட்டால்தான் பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்க முடியும். அவசரத்துக்கு உதவாத பணம் இருந்தென்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.