இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இலங்கையில் இரண்டு பிரதமர்கள் இருக்கும் நெறியற்ற நடைமுறையை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை அதன் தலைவரின் ஆலோசனையைப் பெறாமலேயே தனது விருப்பத்திற்கேற்ப ஒத்திவைத்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து தெருச்சண்டை போல அங்கு கலவரத்தை உண்டாக்கி, அதன் தலைவர் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவரை இருக்கையில் அமர விடாமல் ராஜபட்ச ஆதரவாளர் கூத்தடித்தது, இந்த கூத்துக்கு மைத்ரிபால சிறீசேனா துணை போனது - இவற்றையெல்லாம் உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது.
ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை நாடளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்கீழ், இருமுறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அம்முடிவை ஏற்க சிறீசேனாவும் ராஜபட்சவும் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றனர். இதற்கு சிறீசேனா ஆதரவு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இத்தனைக்குப் பிறகும் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமர் பதவியில் நியமிக்க மாட்டேன் என்று சிறீசேனா திட்டவட்டமாகக் கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் அமரக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மைத்ரிபால சிறீசேனா தொடர்ந்து செயல்பட்டு வந்ததற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்தன.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கிறிஸ்வான் ஹோலன், அதிபர் சிறீசேனாவுக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அதில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீங்கள் பதவி நீக்கம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை ஏற்க மறுத்ததும் மிகுந்த வருத்தமளிக்கின்றன. இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மைத்ரிபால சிறீசேனா, அதிபராக இருந்து, ராஜபட்சவுக்கு மகுடம் சூட்டினாலும், சிறீசேனாவை ராஜபட்ச பெரிதாக மதிக்கவில்லை. சிறீசேனாவும், ராஜபட்சவும் கலந்து கொண்ட பொது நிகழ்வில் அந்நாட்டு தேசியப் பண் இசைக்கப்பட்ட போது சிறீசேனாவின் கையை ராஜபட்ச அலட்சியமாக தட்டிவிட்டார். இதனைக் கவனித்தபோது, ராஜபட்ச, தனக்குக் கீழே அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சராக சிறீசேனா இருந்தபோது அவரை எப்படி நடத்தினாரோ அந்த அளவிலேயே இப்போதும் அவர் அதிபர் என்றுகூட நினைக்காமல் நடத்துகிறார் என்பது புரிந்தது.
சிறீசேனா-ராஜபட்ச இடையேயான உறவு தற்போது விரிசலடையத் தொடங்கியுள்ளது என்பதே உண்மை. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியை சேர்ந்த அனுதாபிகள் சந்திரிகாவுடன் இணைந்துவிட்டனர். ரணிலை விரட்ட நினைத்த சிறீசேனா இப்போது தனிமரமாக உள்ளார். இப்படிப்பட்ட நிலையில், இலங்கையில் மகிந்த ராஜபட்சவின் அதிபர் வேட்பாளராக எதிர்காலத்தில் சிறீசேனா இருக்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சமல் ராஜபட்ச இருக்கலாம் என்றும் செய்திகள் வருகின்றன.
இப்படி தினமும் இலங்கையில் கேலிக்கூத்துகள் நடக்கின்றன. சீனா மட்டும் அவர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கின்றது. நீதிமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும், அரசியல் கோட்பாடுகளையும் மதிக்காத ஒருவருக்கு சீனா எதற்கு ஆதரவு கொடுக்கிறது என்று இந்தியா யோசிக்கவில்லை. அங்கு ஜனநாயகமும் ஜனநாயகத்தின் கூறுகளும் மதிக்கப்படாமல் இருக்கின்ற அசாதராண நிலை உள்ளது.
மான்டெஸ்கியூவின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டின்படி, நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சி அதிகார மையம் ஆகியவை, தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலைகளில் இயங்க வேண்டுமென்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. கடந்த ஒரு மாத காலமாக பிரெஞ்சு 16-ஆம் லூயியைப் போல சர்வாதிகாரப் போக்கில் இலங்கை அதிபர் சிறீசேனா, தானே அரசு என்பது போல நடந்து வருகிறார்.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள், இலங்கை அதிபரின் இந்த போக்கைக் கண்டித்துள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட்டிலும் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டு, இலங்கை அதிபர் ஜனநாயக நெறிமுறையிலிருந்து வழுவாமல், அதை முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்தியாவோ இது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல், நடப்பதை மௌனமாக கவனித்து வருகிறது. அது அயல்நாட்டு பிரச்னை; அதில் நாம் தலையிட முடியாது என்று கூறுகிறது. இது அயல்நாட்டு பிரச்னை என்றால், ஈழ பிரச்னைக்குத் தீர்வு காண திம்பு மாநாட்டை ஏன் நடத்தவேண்டும்? ராஜீவ் காந்தி, இலங்கை அரசின் ஒப்புதலில்லாமலே, வடமாராச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலம் வழங்கவில்லையா? அதை அன்றைய அதிபர் ஜெயவர்தன கண்டிக்கவில்லையா?
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையொப்பமிட வேண்டும்? இலங்கைக்கு இந்தியா, அமைதிப் படையை எப்படி அனுப்பியது? முள்ளிவாய்க்கால் பிரச்னையில் இந்திய ராணுவத்தை ஏன் அனுப்பியது? முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா நிதியுதவி செய்தது ஏன்? இப்போது மட்டும் அயல்நாட்டு பிரச்னை என்பது வேடிக்கையாக இருக்கிறது. இப்போது இந்தியா குரல் கொடுக்காமல் மெளனம் சாதிப்பது நியாயமா?
இலங்கையால், சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலத்தீவுடன் இந்தியாவிற்கு இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. இருந்தும் மாலத்தீவின் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு இந்தியப் பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.
மாலத்தீவின் புதிய அதிபருடைய அணுகுமுறை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. கடந்த நவம்பர் 5-ஆம் தேதி, அமெரிக்கா பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருந்த இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு விளக்கமளித்தது.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை அடுத்த மூன்றாவது நாடான இரானில் அமெரிக்க பரிந்துரையோடு சபஹார் துறைமுகம் கட்ட இந்தியா முதலீடு செய்துள்ளது. இதை சீனா விரும்பவில்லை.
இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பத்தால், இலங்கை வழியாக இந்தியாவை மிரட்டக்கூடிய பணிகளை சீனா ஆரம்பித்துள்ளது. எவ்வளவுதான் இந்தியா இலங்கைக்கு உதவி செய்தாலும், இலங்கை நன்றி பாராட்டுவதே இல்லை.
இலங்கையில் பண்டாரநாயக பிரதமராக இருந்தபோது, ஜேவிபி புரட்சியால் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இந்தியா சிங்கள அரசுக்கு உதவியது. இதே காலகட்டத்தில் வங்க தேசம் உதயமானபோது நடந்த போரின்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வேண்டிக்கொண்டதை மீறி, பாகிஸ்தான் விமானங்களுக்கு எண்ணெயை நிரப்பி கிழக்கு வங்கப் போருக்கு அனுப்பியது பண்டாரநாயக அரசு. 300 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 40,000 வீடுகள் கட்டும் ஒப்பந்தம், சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை நிறுத்தி இந்திய நிறுவனத்திற்கு வழங்க பரிந்துரை செய்தார் பிரதமர் ரணில். இது சீனாவிற்கு ஆத்திரமூட்டியது. அதிபர் சிறீசேனாவும் சீனாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முற்றம் இந்தியாவிற்கு சிறீசேனாவால் மறுக்கப்பட்டது.
ஆனால், 2017-ஆம் ஆண்டு, ஹம்பன்தோட்டா துறைமுகத்தை, சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது. திரிகோணமலை துறைமுகம், எண்ணெய் பாதுகாப்புப் கழகப் பிரச்னை, கெரவலபிடிய எல்என்ஜி மின்சார உற்பத்தி, பலாலி, மாத்தளை விமான நிலையம் போன்ற பிரச்னைகளில் சீனா மூக்கை நுழைத்தது. இலங்கை அரசு உறுதியளித்தும், இந்த திட்டங்களை செயல்படுத்த இந்தியா சிக்கலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் இரண்டு முக்கியமான பகுதிகளை ராஜபட்ச பதவியேற்றவுடன் சீனாவுக்கு வழங்க சிறீசேனாவும் ராஜபட்சவும் ரகசியமாகத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. இது உண்மையானால் மிகவும் அபாயகரமானது. இந்திய அரசு இதை கவனிக்க வேண்டாமா?
மாலத்தீவில் புதிய அதிபராக முகமது இப்ராகிம் சாலி பதவியேற்றபோது இந்தியப் பிரதமர் மோடியை அழைக்கக்கூடாது என்று இலங்கையும் சீனாவும் காய்களை நகர்த்தின. சீனா மாலத்தீவிற்கு கடனுதவியையும் அப்போது அறிவித்தது. ஆனால், புதிதாக பதவியேற்ற அதிபர் இதை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியாவை அழைத்தார்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இலங்கை பிரச்னயில் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு வாழும் தமிழர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள். இந்துக்களும் இந்து கோயில்களும் அழிக்கப்படுகின்றனர் என்பதை கவனத்தில் கொண்டாவது பாஜக அரசு கடமையாற்ற வேண்டாமா?
ராஜபட்சவுடன் முள்ளிவாய்க்கால் போரை நடத்திய மைத்ரிபால சிறீசேனாவை, நல்லவர் என்று நம்பி, ராஜபட்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்று சிறீசேனாவுக்கு வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி பாராட்டாமல், மீண்டும் ராஜபட்சவுக்கே அவர் மகுடம் சூட்டியதை வரலாறு மன்னிக்காது.
கட்டுரையாளர்:
செய்தித் தொடர்பாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.