பெண்ணுரிமை முழுமை அடைய...
மூன்று சம்பவங்கள்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்... என் வீட்டின் அருகே, நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி.


மூன்று சம்பவங்கள்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்... என் வீட்டின் அருகே, நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி. அங்கிருந்த ஓர் அரச மரத்தடியில், நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் ஒரு குடும்பம் - அம்மா தையல் இயந்திரத்தைத் தெருத் தெருவாக உருட்டிக் கொண்டு சென்று தைத்துக் கொடுப்பார். ஒருவரையே மணந்து கொண்ட அக்கா, தங்கை. கணவன் வேலை ஏதும் செய்யாமல் மரத்தடியில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மனைவியரையும், மாமியாரையும், குழந்தைகளையும் அதிகாரம் செய்து கொண்டு இருப்பார். ஒருநாள் நான் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, அங்கு ஒரு ரகளை நடந்து முடிந்துவிட்டிருந்தது. அவன் தன் மனைவியை (தங்கையை) நடுவீதியில் பெல்ட்டால் அடித்து விளாசி இருக்கிறார். அங்கிருந்த யாருமே இதைத் தட்டிக் கேட்கவில்லை புருஷன் பொண்டாட்டியை அடித்தார், நாம் எப்படிக் கேட்பது' என்று எல்லோரும் அந்த அநியாயத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
நான் அப்பெண்ணை அழைத்துப் பேச, அவளும் அழுதுகொண்டே தன்னால் அவர் கொடுமையைத் தாங்க முடியவில்லை என்றும், எங்காவது வேறு ஊரில் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடும்படியும் கேட்டுக் கொண்டார். நானும் திருச்சியில் எனக்குத் தெரிந்த ஒரு காப்பகத்தில் பேசி, அந்தப் பெண்ணின் செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தேன். மறுநாள் அதே மரத்தடியில் சகஜமாக உட்கார்ந்து அவர் நாற்காலி பின்னிக் கொண்டிருந்தார். அவள் தன் உரிமையை நிலைநாட்ட விரும்பாமல் அடிமைத்தளையிலேயே இருந்துவிட்டார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்... என் ஆசிரியை பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அடிக்கடி பேசுவார். அவர் மிக உயர்ந்த அரசுப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். ஒரு முறை பேசும்போது தன் இளவயது வாழ்க்கையைப் பற்றி மிக வருத்தத்துடன் கூறினார். தன் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறியதைக் கேட்டு நான் அதிர்ந்து போய்விட்டேன். தன் மாணவியிடம், அதுவும் பல ஆண்டுகள் கழித்துப் பேசும் நிலையில், தன் நிலையைப் பற்றிக் கூற அவர் மனம் எவ்வளவு அவமானப்பட்டிருக்கும்? பதவி, பணம் இருந்தும் அவர் அடிமைத்தளையிலிருந்து விடுபடமுடியவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்... பெண் ஒருவர் குடிமைப் பணி அதிகாரி. விவாகரத்தானவர். நண்பர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அதிகாரி குறித்து அவர், அந்தப் பெண்மணி மிகவும் கண்டிப்பானவர். வளைந்து கொடுக்கவே மாட்டார். கணவனை டைவர்ஸ் பண்ணியவராச்சே' என்றார். அந்த அதிகாரியின் நேர்மையும், கண்டிப்பும் இவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. விவாகரத்தானவர், அதிலும் விவாகரத்துக்குக் காரணம் அவரது அடங்காப் போக்கு என்னும் தொனியில் பேசினார். அடிமைத்தளையிலிருந்து வெளிவந்துவிட்டாலும், அவருக்கு அதற்கு உரிமை கிடையாது என்றே சமூகம் இன்னும் கருதுகிறது.
இந்த மூன்று சம்பவங்களும் பெண்ணுரிமையின்' வெவ்வேறு பரிமாணங்களைக் காண்பிக்கின்றன. முதல் சம்பவத்தில் பெண் அடிமைத்தளையிலிருந்து வெளிவர விரும்பவில்லை. இரண்டாவதில் அவள் வெளிவர முடியவில்லை. மூன்றாவதில் அவள் வெளியே வந்துவிட்டாலும் அவள் குற்றவாளியாகவே கருதப்படுகிறாள். பெண்ணுரிமை' என்று எப்போதும் பேசுகிறோமே; பெண்களின் உரிமைதான் என்ன? அந்த உரிமையினால் அவர்களின் இன்றைய நிலைதான் என்ன?
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களை எடுத்துக் கொள்வோம். படிப்பறிவு அதிகம் இல்லாதபோதும், அவர்களில் பலரால் இன்று சொந்தக் காலில் நிற்க முடிகிறது. சுய உதவிக் குழு'க்களின் மூலம் பெண்களின் கைளில் ஓரளவு பணம் புழங்குகிறது.
பொருளாதார ரீதியாக அவர்கள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், அவர்களுடைய உரிமைகளில் பெரிதும் முன்னேற்றம் இல்லை. குழுக்களில் சக்திக்கு மீறிக் கடன் வாங்கித் தம் கணவன்மார்களுக்கு ஆட்டோ, டெம்போ வாங்கித் தருகிறார்கள். அந்த ஆண்கள் அந்த வேலையையாவது ஒழுங்காகச் செய்கிறார்களா? இல்லை. வாங்கிய கடனை அடைக்க இந்தப் பெண்கள் மேன்மேலும் உழைத்துக் கொட்டுகிறார்கள். ஆண்களைச் சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும், குடிகாரர்களாகவும் ஆக்கி அவர்களுக்கும் சேர்த்துச் சம்பாதித்துப் போடுவதோடு அவர்களிடம் அடி, உதை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கு தங்கள் உரிமைகளும் தெரியவில்லை, அவற்றைப் பற்றிய கவலையும் இல்லை.
நடுத்தர வர்க்கத்துப் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் பலரும் கை நிறைய சம்பாதிப்பதால் பொருளாதாரம் ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. ஆனால், சுயமாக முடிவெடுக்கும் உரிமை இவர்களில் வெகு சிலருக்குத்தான் இருக்கிறது. ஆண் சம்பாதிப்பது, பெண் வீட்டைப் பராமரிப்பது என்ற காலம் போய் இப்போது பெண்கள் வீட்டையும் பார்த்துக் கொண்டு, வெளியில் வேலைக்கும் சென்று பொருள் ஈட்டும் கட்டாயம் வந்துவிட்டது.
ஆண்கள் அன்றிருந்தது போலவே இருக்க, பெண்களின் சுமைகள் மட்டும் கூடிக்கொண்டே போகின்றன. ஆண்கள் தங்கள் வேலை நேரம் போக, வீட்டில் சுகவாசிகளாக வாழும் உரிமையைத் தாங்களாகவே எடுத்துக் கொண்டுவிட்டார்கள். பெண்களோ ஓய்வெடுக்கும் உரிமையைக்கூட இழந்து, பெரியவர்களிலிருந்து குழந்தைகள் வரை எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சம்பாதிக்கும் உரிமை இருப்பவர்களுக்கு அதைச் செலவிடக்கூடிய உரிமை இருப்பதில்லை.
மேல்தட்டுப் பெண்களை எடுத்துக்கொண்டால், இங்கு பெண்ணுரிமை வேறுவித பரிமாணம் எடுத்துள்ளது. உரிமை என்ற பெயரில் இவர்களில் சிலர் குடும்பம் என்னும் அமைப்பைச் சிதைக்க முற்படுகிறார்கள். சிலர் பெண்ணுரிமை என்பதே ஆண்களை எதிர்ப்பதற்குத்தான் எனும் ரீதியில் செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் உரிமை' என்று சொல்லிக்கொண்டு நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் மேல்நாட்டவரைப் போலவே மாறி நம் கலாசாரத்தையே மாற்றுகிறார்கள்.
இன்னும் சில பெண்கள் இருக்கும் பிரச்னைகளையெல்லாம் விட்டு விட்டுச் சபரிமலைக்குச் சென்று பெண்ணுரிமையை நிலைநாட்டுகிறார்கள். தங்களுக்குத் தனி அடையாளம் வேண்டும் என்று போராடும் இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயரோடு தந்தை பெயரையோ, கணவர் பெயரையோ, ஜாதிப் பெயரையோ வைத்துக்கொள்கிறார்களே ஏன்? கீழ்த்தட்டுப் பெண்கள் யாரும் முனியம்மா மாயாண்டி' என்றோ ராசாத்தி ரத்தினம்' என்றோ சொல்லிக் கொள்வதில்லை.
ஆனால், மேல்தட்டுப் பெண்களில், குறிப்பாக அரசியல்வாதிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகைகள் ஏன் ஆண்களின் பெயரைத் துணை சேர்த்துக் கொள்கிறார்கள்? இதற்கு சோனியா காந்தி தொடங்கி பிரபலங்கள் பலரை உதாரணமாகக் கூறலாம். இங்கெல்லாம் பெண்ணுரிமை' என்னவாயிற்று? நம் பழங்காலச் சரித்திரப் பெண்கள் யாரும் குந்தவை வந்தியத்தேவன்', சீதா ராமன்', கண்ணகி கோவலன்', மும்தாஜ் ஷாஜகான்' என்றெல்லாம் தங்களை அழைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
பெண்ணுரிமை' என்னும் சொல்லின் சரியான பொருளை ஆண், பெண் என இரு பாலரும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆண்கள், பெண்கள் நம்மில் சரிபாதி என்பதை உணர்ந்து அவர்களது பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையைச் சுமப்பதும், பெறுவதும் பெண்ணின் தவிர்க்க முடியாத கடமைகள். அனைத்துக் கடமைகளையும் ஆண்களும் பகிர்ந்து கொண்டால் பெண்கள் தானாகவே உரிமை பெறுவார்கள்.
பெண்கள், ஆண்களைவிட மன வலிமை உடையவர்கள். உடல் ரீதியாகவும் ஆண்கள் மட்டுமே செய்த வேலையை இப்போது பெண்களும் செய்கிறார்கள். அப்படியிருக்க, ஆணுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கப் பெண்கள் உடன்படக் கூடாது. விட்டுக் கொடுத்தலுக்கும், அடிமையாக இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பெண்கள் உணர வேண்டும், ஆண்களுக்கும் உணர்த்த வேண்டும்.
பொருளாதார ரீதியில் மட்டும் உரிமை பெற்றால் போதாது. பெண்கள் நிறைய படித்து மனதை விரிவடையச் செய்ய வேண்டும். சமூகம், அரசியல், நாட்டு நடப்பு, உலக நடப்பு, இலக்கியம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். கற்ற கல்வியைச் சுய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்த வேண்டும். என் வீடு, என் குடும்பம் என்ற வட்டத்தைத் தாண்டி என் ஊர், என் நாடு, என் உலகம் என்ற பரந்த மனப்பான்மையைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயமும், பெண்கள் என்றால் சமையல், கோலம், அழகிப் போட்டி என்று ஒரு முத்திரை விழுந்து விட்டது. அது மாற வேண்டும். அரசியலில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு' என்று ஆண்கள் என்ன கூறுவது? பெண்கள் தானாகவே அரசியலில் பல நிலைகளில் நுழைந்து 33% எல்லாம் தாண்டிப் பரிமளிக்க வேண்டும். ஆண்களும், பெண்களும் ஒருவர் உரிமையை மற்றொருவர் சிதைக்காது, ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணுரிமை' என்னும் சொல் அதன் முழு அர்த்தம் பெறும்.
கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...