என்றும் கேப்டன் கூல்

"ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒருநாள் தனது பயணத்தை முடிக்க வேண்டும்; ஆனால், நீங்கள் நெருக்கமாக உணரும் ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்'-
Updated on
2 min read

"ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒருநாள் தனது பயணத்தை முடிக்க வேண்டும்; ஆனால், நீங்கள் நெருக்கமாக உணரும் ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள்'- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக மகேந்திர சிங் தோனி அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி சுட்டுரையில் வெளியிட்ட பதிவு இது. 
சர்வதேச கிரிக்கெட்டில் தான் சாதிப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையை, தனது பதினாறு ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி ஏற்படுத்திவிட்டார். 2007-இல் டி 20 உலகக் கோப்பை, 2011-இல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-இல் "சாம்பியன்ஸ் டிராபி' என ஐசிசியின் மூன்றுவிதமான டைட்டில் போட்டிகளையும் வென்றெடுத்த ஒரே கேப்டன் தோனிதான். அத்துடன் 2010, 2016-இல் ஆசிய கோப்பையையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
2004-இல் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் தோனி. முதல் ஆட்டத்தில் ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். 2005-இல் ஜெய்ப்பூரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 299 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் சச்சின் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழக்க, மூன்றாவது வீரராகக் களமிறங்கிய தோனி 145 பந்துகளில் 183 ரன்களைக் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். 
"கிரிக்கெட்டின் பைபிள்' என அழைக்கப்படும் "விஸ்டன்', தோனியின் இன்னிங்ஸை, "கட்டுப்பாடுகளற்ற, அதே நேரத்தில் நேர்த்தியான ஆட்டம்' என வர்ணித்தது. அன்றிலிருந்து தோனியின் "ஆட்டம்' ஆரம்பம் .
2007-இல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி, ராகுல் திராவிட்டிடமிருந்து தோனியின் கைக்கு வந்தது. 
தோனியின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து, இவர் கேப்டன் பணியில் அடுத்த கங்குலியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கங்குலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு "கேப்டன் கூல்' எனப் பெயரெடுத்து வெற்றிகளைக் குவித்தார் தோனி.
2007-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்திய அணி. இறுதி ஓவரில் 13 ரன்களை எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை. களத்தில் அபாயகரமான மிஸ்பா உல் ஹக் நின்றபோதும், பந்துவீசும் வாய்ப்பை அனுபவம் குறைந்த ஜோகிந்தர் சர்மாவுக்கு அளித்தார் தோனி. போட்டியை நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த வர்ணனையாளர்கள் மட்டுமன்றி ரசிகர்களுக்கும் தோனியின் முடிவு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், கடைசி விக்கெட்டாக மிஸ்பாவை வீழ்த்தினார் ஜோகிந்தர். தோனியின் சமயோசிதமான முடிவால் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
2011, உலகக் கோப்பைத் தொடரில் இறுதி ஆட்டத்துக்கு முன்புவரை தோனி பேட்டிங்கில் பிரமாதமாகச் செயல்படவில்லை. ஏழு இன்னிங்ஸ் சேர்த்தே 150 ரன்கள்தான் எடுத்திருந்தார். இறுதி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை துரத்தியபோது, கம்பீர், யுவராஜின் பங்களிப்புடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் தோனி. அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்ததும், சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டியதும் மறக்க முடியாத நிகழ்வுகள். இதன்மூலம் 1983-க்கு பின்னர் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.
களத்தில் தோனி நின்றால் எந்த இலக்கும் அசாத்தியமல்ல. அவருடைய "ஹெலிகாப்டர் ஷாட்'டை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. மின்னல்வேக ஸ்டம்பிங், பேட்டிங் செய்யும் எதிரணி வீரருக்குத் தகுந்த வியூகம் அமைப்பது என தனது படையை ஒரு தளபதிபோல வழிநடத்தினார்.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றங்களைப் போல இறக்கங்களும் இருந்தன. கம்பீர், யுவராஜ் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்ததற்கு தோனிதான் காரணம் என விமர்சனங்களும் உண்டு. ஒருகட்டத்தில் அவரின் பேட்டிங் திறன் குறைந்தபோது, அவருடைய ஓய்வு குறித்த பேச்சைத் தவிர்க்க முடியவில்லை. எந்த நாட்டுக்குச் சென்றாலும், "எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்' என்ற கேள்வியுடன் ஊடகங்கள் அவரைத் துரத்தின. 
2014-இல்  இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பாதியிலேயே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தனைக்கும் தோனியின் தலைமையில்தான் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 2017-இல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் அவரிடமிருந்து கோலிக்கு கைமாறியது.
முதல் ஆட்டத்திலும் 2019, உலகக் கோப்பைத் தொடரில்  நியூஸிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்திலும் "ரன்-அவுட்' முறையில் ஆட்டமிழந்தார் தோனி. 
கிரிக்கெட்டைப் பொருத்தவரை, தன் அபிமான வீரர், வேறு எந்த முறையில் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை, "ரன்-அவுட்' முறையில் ஆட்டமிழப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள ரசிகர்களுக்கு மனமிருக்காது. இப்போதைய அவரது ஓய்வு அறிவிப்பும் ரசிகர்களைப் பொருத்தவரை "ரன்-அவுட்' போலதான்.
கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டவர் தோனி. ஆட்டத்தில் எந்த ஒரு நெருக்கடி என்றாலும் அமைதியாக எதிர்கொள்வதுதான் தோனியின் பாணி. அதை முன்னுதாரணமாகக் கொண்டு, வாழ்க்கையிலும் செயல்படுத்திப் பார்க்கும் இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வகையில் அவர் என்றென்றும்  "கேப்டன் கூல்'தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com