தலைவன் என்பவன் மக்கள் மத்தியில் இருந்தே உருவாகிறான். அடிமைப்பட்ட நம் இந்திய தேசத்தின் விடுதலைக்கு காந்திஜியின் தலைமை நமக்கு அமைந்தது நமது தவப்பயன். காந்திஜியின் தலைமைக்குப் பிறகு, நேருஜியின் தலைமை தேசியத் தலைமை எனக் கொண்டாடப்பட்டது. 17 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்து தேசத்தைக் கட்டமைத்தார். அவருக்குப் பிறகு, 11 ஆண்டுகள் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமை.
உண்மையில், நேருஜிக்குப் பிறகு காமராஜர் தலைமைதான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், காமராஜரோ, அப்பொறுப்பை ஏற்காமல் ஒதுங்கிக் கொண்டார். அதனால் இந்திரா காந்தியின் தலைமைக்கு அது காரணமாயிற்று.
1971-இல் பாகிஸ்தான் போரின் மூலம் வங்க தேசத்தை உருவாக்க உதவியபோது, இந்திரா காந்தி கட்சித் தலைமையிலிருந்து தேசியத் தலைமைக்கு நகர்ந்தார். 14 வங்கிகளை தேசிய மயமாக்கி பாமர மக்கள் செல்வாக்கைத் திரட்டினார். மன்னர் மானியத்தை ஒழித்து முற்போக்கானவராக பிரபலமானார்.
அவருடைய தேசியத் தலைமைக்குப் பிறகு மற்றொரு தேசியத் தலைமை உருவாகாமலேயே போய்விட்டது. ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், சரண் சிங், சந்திரசேகர், தேவே கௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோரில் ஒருவரும் தேசியத் தலைமைக்கான உயரத்தை எட்டவில்லை. நரசிம்ம ராவும், வாஜ்பாயும் ஓரளவுக்கு தேசியத் தலைவர்களாக உயர்ந்தனர் என்றாலும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.
டாக்டர் மன்மோகன் சிங், தன்னை சோனியா காந்தியின் பினாமி பிரதமராக நினைத்தாரே தவிர, ஒரு அரசியல் தலைவராகவோ தேசியத் தலைவராகவோ உயர்த்திக் கொள்ள நினைக்கவே இல்லை.
பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஜோதிபாசு தேசத் தலைமைக்கான பாதையில் அடியெடுத்து வைத்தார். ஆனால், அவருடைய கட்சியே அவரைத் தடுத்து விட்டது.
இப்போதுள்ள காங்கிரஸ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், ஜாதிய, பிராந்திய கட்சிகள், தலித் இயக்கம் இவற்றின் மூலம் தேசியத் தலைமை உருவாக முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், நாடு தழுவிய அளவில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை.
குடும்ப அரசியல், வாரிசு அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் முதலியவை அரசியல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
இந்திய தேசத்தில் எல்லோருக்கும் தெரியும்படியான மகத்தான வீழ்ச்சி காங்கிரஸில் இன்றைக்கு நிகழ்ந்திருக்கிறது. தாதாபாய் நெளரோஜி காலத்திலிருந்த காங்கிரஸ், படிப்படியாக காந்திஜியின் தலைமைக்கு மாறியபோது, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பேரியக்கமாக அது பரிணமித்தது.
வங்கத்தின் தோழர் எம்.என். ராய், ரஷிய தேசத் தந்தை லெனினிடம் சென்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு, ரஷியாவின் ஆயுத உதவி வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அப்போது லெனின், "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்ப்பவர்களில் முதன்மையாக இருப்பவர் காந்தி. அவருடைய போராட்டத்துக்கு ஆயுதங்கள் அவசியமில்லை. அதனால் இந்தியாவிற்குச் சென்று காந்தியைப் பின்பற்றுங்கள்' என்று தோழர் எம்.என். ராய்யிடம் கூறினார்.
காந்திஜி காலத்துக் காங்கிரஸ் அப்படிப்பட்ட காங்கிரஸ். நேருஜியின் காலத்து காங்கிரஸ், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு, சுதந்திரப் போராட்டத்தைவிட கடுமையாகப் பாடுபட்டது. ஐந்தாண்டுத் திட்டங்கள், அரசு தொழில் நிறுவனங்கள், பக்ரா நங்கல் முதலிய அணைக்கட்டுகள் என விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்வதற்கான எல்லாக் கதவுகளையும் நேருஜி திறந்து விட்டார்.
அணிசேரா மூன்றாம் உலக நாடுகளின் அமைப்பு உருவாக அவர்தான் அடித்தளமிட்டவர். அதனால், அவருடைய தேசியத் தலைமை உலகத் தலைமையாகவும் விரிந்தது.
இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியைப் பற்றி தொலைநோக்கோடு அப்போதே சிந்தித்த காந்திஜி, ""சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ், அந்த லட்சியத்தில் வெற்றி பெற்று விட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடுங்கள். அதற்குப் பதிலாக "லோக் சேவா சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, தேச அபிவிருத்திக்குப் பாடுபடுங்கள்'' என்று சொன்னார்.
இந்தியாவில் தேசியத் தலைமையை ஏதேனும் ஓர் அரசியல் கட்சியால்தான் உருவாக்க முடியும். இந்தியாவில் காந்திஜி, நேரு, இந்திரா காந்தி ஆகிய தேசியத் தலைமைகளுக்குப் பிறகு, ஜோதிபாசுவோ வாஜ்பாயோ அதை நிரப்பியிருக்க முடியும். ஆனால், அது நிகழவில்லை. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தலைமையைக் கடந்து கொண்டிருக்கிறாரா என கூர்நோக்கில் காணவேண்டியுள்ளது.
நரேந்திர மோடிக்கு எதிராக உள்ள, அவரைவிட வயதில் மூத்த சரத் பவாரோ, முலாயம் சிங் யாதவோ, சோனியா காந்தியோ, சீத்தாராம் யெச்சூரியோ பிரதமர் மோடியைவிட பிரகாசமாகத் தெரியவில்லை.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இதுவரையிலான ஆறாண்டு காலத்திற்குள் அவர் செய்த மகத்தான சாதனைகளாக 11 கோடி ஏழை இந்தியர்களுக்கு கட்டித் தரப்பட்ட கழிப்பறைகள், ஒன்பது கோடி விளிம்புநிலை மக்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு உருளைகள், 32 கோடி பாமர மக்களுக்கு தொடங்கித் தந்த வங்கிக் கணக்குகள், இஸ்லாமிய பெண்களை "முத்தலாக்'கிலிருந்து செய்த விடுதலை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம், குடும்ப மருத்துவ சிகிச்சைக்கு ஐந்து லட்ச ரூபாய் போன்றவை நினைவுகூரத்தக்கவை.
இதற்கெல்லாம் மேலாக, பாகிஸ்தானோ சீனாவோ இந்தியாவை மிரட்டி அடிபணிய வைக்க முடியாமல், இந்திய ராணுவத்தை அவர் பலப்படுத்தியுள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
சாதனையாளராக அவர் திகழ்ந்தாலும், அவரைத் தேசியத் தலைவராக ஒப்புக்கொள்ள முடியாமல் தடுக்கும் காரணிகளையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
மிக உச்சத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல்களில் படு தோல்வி அடைந்து பலவீனமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ப. சிதம்பரம் முதலிய 23 தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைமையை விமர்சித்து கடிதம் எழுதினர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்வியையும்விடப் பெருந்துயரம் இது.
காங்கிரஸ் கட்சி குடும்பக் கட்சியாக, வாரிசுக் கட்சியாக தன்னை வடிவமைத்துக் கொண்டதுதான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம் எனப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய அரசியல் என்பது வாரிசு அரசியல்தான். குடும்ப அரசியல்தான். இதை மாற்ற முடியாது' என்று கூறினார். அதற்கு அவர் கூறிய இரண்டு உதாரணங்களில் ஒன்று, "தமிழ்நாட்டில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்' என்பது.
சோனியா காந்தி எழுபது வயதைக் கடந்தவர். உடல் நலம் குறைந்தவர். காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நடத்தி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பாமல், தனது மகனையே கட்சித் தலைவராக நியமித்தார். அவருடைய மகன் தலைமையில்தான் காங்கிரஸ் சென்ற தேர்தலை சந்தித்தது; தோல்வி அடைந்தது.
அத்தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். அதன்பிறகு 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சித் தகுதிக்கு வரையறை செய்யப்பட்டுள்ள 55 இடங்களைக்கூட அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை.
அண்மையில் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பையே குறைத்து, அந்தக் கட்சியையும் சரிவைச் சந்திக்கச் செய்துவிட்டது காங்கிரஸ். தன்னாலும் எழுந்திருக்க முடியவில்லை; மற்றவர்களுக்கும் உதவ முடியவில்லை.
பிகாரில் தேர்தல் நடந்தபோது, இரண்டு நாட்கள்தான் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார். அதற்கு முன்பு சிம்லாவில் இன்பச் சுற்றுலா சென்றதாக காங்கிரஸ் கட்சிக்காரர்களே அவர் மீது குற்றம் சாட்டினர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அண்மையில் எழுதிய புத்தகத்தில், "ராகுல் பதற்றத்துடன் இருப்பவர். ஆசிரியரைத் திருப்திப்படுத்தும் மாணவரைப் போல செயல்படுபவர்' என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி "அவருக்கு எதிலும் ஆழ்ந்த விஷய ஞானம் கிடையாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கு இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, நரேந்திர மோடியைப்போல கீழ் மட்டத்திலிருந்து உருவானவர் அல்ல. வாரிசு அரசியலை நம்புகிறவர். காஷ்மீர் பிரச்னையில் ஒமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் அரசியல் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது பற்றிப் பேசுகையில், "அதனை சீன உதவியோடு மீண்டும் இந்தியாவில் உருவாக்குவோம்' என்று பகிரங்கமாகப் பேசினர். ராகுல் காந்தியின் காங்கிரஸ் அதனைக் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டாமா?
தேசியத் தலைமையைத் தரத்தக்க நிலையில் தற்போது இருப்பது காங்கிரஸா? பி.ஜே.பி.-யா?
கட்டுரையாளர்: பத்திரிகையாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 400 போ்

தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்கள் பொருத்த மாநகராட்சி திட்டம்

நவாஸ்கனி தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: ஓ.பன்னீா்செல்வத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

‘தைவான் சுதந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது’: ஷி ஜின்பிங்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

