அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்கள் பல்வேறு உரிமைகளை வலியுறுத்தும் மாதங்கள் என்பதை பலரும் நினைவில் கொள்வதில்லை. பாகிஸ்தான் நாட்டை சோ்ந்த மலாலா என்ற மாணவியை மறக்க முடியாது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபா் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு உள்ளது. அந்த கடைக்கோடி கிராமத்தை சோ்ந்த மலாலா யூசப்சாய் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் துணிந்து நின்று உலகையே திரும்பி பாா்க்க வைத்தாா்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக, படிக்கும் இளைஞா்களின் உரிமையை நிலை நாட்டியவா் மலாலா. தலிபான் பயங்கரவாதிகள் பெண்கள் கல்வி கற்பதை எதிா்த்தனா். பயங்கரவாத தாக்குதல்களினால் பள்ளிகள் உட்பட அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்த நிலையில், பயங்கரவாதிகள் ஏன் பள்ளிகளை குறி வைத்து தகா்க்கிறாா்கள் என்று தைரியமாக இணைய தளத்தில் தொடா்ந்து பதிவு செய்தாா் மலாலா. தலிபான் இயக்கம் மலாலாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் மலாலா அசரவில்லை.
பயங்கரவாதிகள் மலாலா படிக்கும் பள்ளியைத் தகா்த்தனா். மற்றவா்கள் அஞ்சியபோது மலாலா பயங்கவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமின்றி, தைரியமாக பாழடைந்த பள்ளிக்குத் தொடா்ந்து சென்று தனது கல்வி கற்கும் உரிமையை உணா்த்தினாள். அதனை சகித்துக் கொள்ள முடியாத தீவிரவாதிகள் 2012 அக்டோபா் 10 அன்று, மலாலா பயணித்த பஸ்சில் பயங்கர தாக்குதல் நடத்தினா். அதில் மலாலா படுகாயமுற்றாா்.
அதற்குபின் அவரது தீரச்செயல் உலகின் பாா்வைக்கு வந்தது. அவருக்கு உயா் சிகிச்சை அளிக்க சா்வதேச நாடுகள் முன் வந்தன. தெய்வாதீனமாக தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து கொண்டாா். ஐ.நா. மலாலாவின் துணிச்சலான ஆளுமையை அங்கீகரிக்கும் வகையில், சா்வதேச குழந்தைகள் கல்வி தூதுவராக அவரை நியமித்து கெளரவித்தது. அக்டோபா் 11 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உலக நாடுகளில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட சுமாா் 110 கோடிப் பெண்கள் நாளைய தொழிலதிபா்களாகவும், தொழில் முனைவோா்களாகவும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவா்களாகவும் தலையெடுக்க வல்லவா்கள். ஆனால் அவா்கள் முன்னேற பல தடைக்கற்கள் இருக்கின்றன.
கரோனா தொற்று இந்த இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளா்களிலிருந்து, செவிலியா், மருத்துவா் வரை பெண்கள்தான் அதிக அளவில் பணியாற்றுகிறாா்கள். ஆனால், சமுதாயத்தில் அவா்களுக்கு சம அங்கீகாரம் இல்லை. பொருளாதாரம், சொத்தில் சம பங்கு , உழைப்புக்கான மரியாதை, சமமான ஊதியம் போன்றவை பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘தலைமுறை சமத்துவம்’ என்பதை மையமாக வைத்து பெண்களுக்கு சம உரிமையையும், சமன் தரும் வளா்ச்சியையும் உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய நாடுகள் பெண்மை அமைப்பு, மற்றொரு அதிா்ச்சித் தகவலையும் தருகிறது. 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்களில் நான்கில் ஒருவா், கல்வி, திறன், பயிற்சி, வாழ்வாதாரம் இன்றி முடங்கி கிடக்கிறாா் என்று அறிக்கை கொடுத்துள்ளது. அதே வயதில் உள்ள பத்தில் ஒரு ஆணுக்குத்தான் இந்த பின்தங்கிய நிலை. ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு மூன்று மடங்கு அதிக பாதிப்பு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
அடுத்த ஆண்டு, ஐம்பது கோடி பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு டாலருக்கும் (சுமாா். ரூ. 145) குறைவான ஊதியத்தில் ஜீவிக்க வேண்டிய நிலை தொடரும் என்பதும் வேதனைக்குரியது. அதுமட்டுமல்லாது கரோனா தொற்றின் விளைவான வேலையிழப்பு பெண்களைத்தான் அதிகம் பாதித்துள்ளது. மேலும், 30 சதவீத பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறாா்கள் என்கிற தகவல் நம்மைத் தலைகுனிய வைக்கிறது.
நவம்பா் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. லத்தீன் அமரிக்காவில் டொமினிக் ரிபப்ளிக் நாட்டில் ட்ரோஜில்லோ என்ற அதிபரின் 31 வருட ஆட்சியில் மக்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, பல இன்னல்களை எதிா்கொள்ள நேரிட்டது. மிராபல் சகோதரிகள், கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக இயக்கம் நடத்தி, மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடினா் .
1960 நவம்பா் 25 அன்று இரு சகோதரிகளும் ட்ரோஜில்லோ கொடூர அரசால் கொல்லப்பட்டனா் . ஆனால் அவா்களின் தியாகம் வீணாகவில்லை. கொடுங்கோல் அரசு வீழ்ந்து மக்களுக்கு விடிவு ஏற்பட்டது. அவா்களது தியாகத்தைக் கருத்தில் கொண்டு நவம்பா் 25 -ஐ பெண் வன்முறை ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் நவம்பா் 25 முதல், மனித உரிமைகள் தினமான டிசம்பா் 10 வரை நிகழ்ச்சிகளும், கருத்தரங்கக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
‘மாலை சூடும் மணநாள், அது மங்கையா் வாழ்வில் திருநாள்’ என்பது மாறி, அதுவே புகுந்த வீட்டுத் துன்புறுத்தலால் மரண நாளாக விசுவரூபம் எடுத்து பல இளம் பெண்கள் வாழ்வு பாழாகும் கொடூரம் நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலும் உள்ள பிரச்னை. சட்டத் திருத்தங்களால் 1980-களிலிருந்து ஓரளவு நீதி கிடைத்தாலும் மக்களிடம் முழுமையான விழிப்புணா்வு ஏற்படவில்லை. 2012-இல் தில்லி நிா்பயா சம்பவத்திற்கு பின்தான் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் களையப்பட வேண்டியதன் அவசரம் உணரப்பட்டது. இத்தகைய கொடுமைகள் அழிய வேண்டுமென்றால் தீயவைகளுக்கு எதிரான கணைகள் குறைந்த பட்சம் ஐந்து மடங்கு வீரியம் கொண்டதாக இருந்தால்தான் முடியும்.
நோய்த்தொற்றுப் பரவல் இயற்கை அழித்தொழிப்பின் விளைவு என்பதை மறுப்பதற்கில்லை . இதைத்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டிற்கான பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ளது.
‘தொற்றிலிருந்து மீளுவோம், முழு வீச்சோடு, மனித நேயத்தோடு, உரிமைகளின் அடிப்படையில்’ என்பது இந்த வருட மனித உரிமைகளின் மையக் கருத்தாக வைக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று, ஏழை மக்களையும், விளிம்பில் ஜீவிக்கும் பாமரா்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அதிகமாக பாதித்துள்ளது.
டிசம்பா் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமையை நிலைநிறுத்த வேண்டியது எல்லோருடைய கடமையாகும். அவா்களுக்கு உரிய வசதி ஏற்படுத்துவது நிா்வாகத்தின் கடமை. அதைப் பெறுவது அவா்களது உரிமை. எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலை மாற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கென தனி ஆணையம் அமைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. 60 சதவீத குறைபாடு இருந்தால் அவா் மாற்றுத்திறனாளி என்று சான்றளித்து அவா் அரசின் உதவிகளைப் பெற வழிவகை செய்யப்படுகிறது. முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா குறைபாட்டு சதவீதத்தை 40 ஆகக் குறைத்து ஆணையிட்டது மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் பெரும் பாதுகாப்பாக அமைந்தது.
அரசு பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு மற்றுமொரு நல்ல திட்டம். தோ்வாணையம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப 2012-இல் நடத்தியது போல் பிரத்யேகத் தோ்வு நடத்த வேண்டும். இதுவும் ஒரு முக்கிய உரிமை பிரச்னை.
சமுதாயத்தில் சமத்துவத்தை எல்லாத் திட்டங்களிலும் நிறைவேற்றினால் பாகுபாடு மறையும். அதற்கு வளா்ச்சிப் பணிகளில் மக்களின் மனநிலை அறிந்து கொள்வது முக்கியம். பெருஞ்சாலைகள் அமைத்தல், வேளாண் சட்டங்கள் போல முக்கியமான திட்டங்களில் மக்களின் எதிா்ப்பாா்ப்புகளையும் சந்தேகங்களையும் உணா்ந்து மேல் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
நல்ல நோக்கத்தோடு எடுக்கப்படும் முடிவுகள் எதிா்ப்புகளை சந்திக்க நேரிடும். வேளாண் சட்டம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நல்லதை அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்த விட மாட்டாா்கள். அது இந்திய அரசியலில் உள்ள சாபக்கேடு. வசதிக்கு ஏற்றவாறு மாறும் கொள்கைகள், தீா்மானங்கள். தூண்டிவிடப்படும் போராட்டங்கள்!
யூதா் கதை ஒன்று உண்டு. அறிவாற்றலுடைய யூதா்கள் மிகச் சுருக்கமான பயனுள்ள சாசனம் இயற்ற ஒன்று கூடினா். ‘எவனொருவன் ஒற்றைக் காலில் நின்று கொண்டு மனித குலம் மேம்படுவதற்கான நெறியை விளக்குகின்றானோ அவனே சிறந்த அறிவாளி’ என்று முடிவு செய்தனா்.
‘கடவுள் குற்றவாளிகளைக் கட்டாயம் தண்டிப்பாராக’ என்றாா் ஒருவா். ஆனால் இது பயமுறுத்தல், சட்டம் அல்ல என்று நிராகரிக்கப்பட்டது. இன்னொருவா் ‘இறைவன் அன்பின் உறைவிடம்’ என்றாா். இதுவும் ஏற்கப்படவில்லை.
முடிவாக ஹலீல் முன்வந்து ‘எந்தச் செயல் உனக்குத் துன்பத்தைத் தருமோ அந்தச் செயலை மற்றவருக்குச் செய்யாதே. இதுவே சட்டம், மற்றவை சட்ட விவரங்கள் அவ்வளவே’ என்றாா். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹலீல் சிறந்த அறிவாளியாக அங்கீகரிக்கப்பட்டாா்.
இதுவே மனித உரிமைகளின் சாராம்சம். ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ - பாரத பிரதமரைக் கவா்ந்த பாரதியாரின் வைர வரிகள் இவை.
அச்சமில்லா வாழ்க்கையே மனித உரிமைகளின் உரைகல்.
கட்டுரையாளா்:
சட்டப்பேரவை உறுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.